'அந்த அமைதிதான் என் தாயை கொல்கிறது' - ஏர் இந்தியா விபத்தில் 4 பேரை இழந்த குடும்பத்தின் ஓராண்டு துயரம்

 ஜாவேத், அவரது மனைவி மரியம் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள்

பட மூலாதாரம், Imtiyaz Ali

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஏர் இந்தியா விமான விபத்தில் ஜாவேத், அவரது மனைவி மரியம் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்தனர்.
    • எழுதியவர், ஜோயா மதீன்
    • பதவி, மும்பை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இம்தியாஸ் அலியின் சகோதரர் ஜாவேத், அண்ணி மரியம் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் விமான விபத்தில் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில், நாம் சந்திக்கலாமா என்று கேட்பதற்காக நான் அவரை அழைத்தபோது, முதலில் மும்பையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்தோம்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, தனது முடிவை மாற்றிக்கொண்ட அவர், "அதற்குப் பதிலாக நாம் ஹோட்டலில் சந்திக்கலாம்" என்றார்.

பின்னர், மும்பையிலுள்ள ஒரு ஹோட்டலின் மங்கலான வெளிச்சத்தில் அமர்ந்து, அதற்கான காரணத்தை அவர் விளக்கினார்.

ஜாவேத்தும் அவரது குடும்பத்தினரும் பிரிட்டனில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இம்தியாஸையும், குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக அடிக்கடி மும்பைக்கு வருவதுண்டு.

ஆனால் இந்த விபத்திற்குப் பிறகு, அந்த வீடு முன்பிருந்ததைப் போல இல்லை.

"ஜாவேத் இன்னும் அங்கேயே இருப்பது போல் தோன்றுகிறது" என்று நிதானமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் இம்தியாஸ் கூறினார்.

"அவன் எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடர்கிறான். பகலும் இரவும் என்னைப் பின்தொடர்கிறான்" என்று அவரது தாயார் ஃபரிதா பானோ பின்னர் இதனை இன்னும் எளிமையாக பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் வானத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில், புலனாய்வாளர்கள் தங்களின் இறுதி அறிக்கையை இன்னும் சில வாரங்களில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

விமானத்தின் காக்பிட்டில் என்ன நடந்தது, விமானம் ஏன் உந்துவிசையை இழந்தது, இந்த விபத்து மனிதத் தவறால் ஏற்பட்டதா, இயந்திரக் கோளாறா அல்லது முற்றிலும் வேறேதும் காரணமா போன்ற பதிலளிக்கப்படாத கேள்விகளுடனேயே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றன.

விபத்து நடந்ததற்குப் பிந்தைய அந்த மோசமான நாட்களில், ஆமதாபாத்தில் இம்தியாஸை நான் இதற்கு முன்பு இரண்டு முறை சந்தித்திருந்தேன், அப்போது தங்களின் அன்பிற்குரியவர்களை அடையாளம் காண்பதற்கான டிஎன்ஏ உறுதிப்படுத்தலுக்காகக் குடும்பங்கள் காத்திருந்தன.

அன்றைய நாளில், யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முயலும் ஒருவரின் திகைத்துப் போன மனநிலையுடன் அவர் பேசினார்.

"ஒருவேளை அவன் திரும்பி வந்துவிடுவான்" என்று அப்போது இம்தியாஸ் என்னிடம் கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு மும்பையில், அந்த அவநம்பிக்கை மறைந்திருந்தது. ஆனால் காத்திருப்பு தொடர்ந்தது.

என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான முடிவு இல்லாத நிலைய விவரித்த இம்தியாஸ், "இந்தக் குழப்பமும், இந்த நிச்சயமற்ற நிலையும் தான் எங்களை வேதனைப்படுத்துகிறது" என்றார்.

இடப்பெயர்வு மற்றும் தியாகங்களால் உருவான, மும்பையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பம்தான் அலியின் குடும்பம். அவர்களின் தந்தை இளம் வயதிலேயே இறந்துவிட்டார்.

அவர்களின் தாய் பல ஆண்டுகள் துபையில் பணிபுரிந்ததால், குழந்தைகளை பெரும்பாலும் மும்பையிலுள்ள அவர்களது பாட்டிதான் வளர்த்தார்.

வெளிநாட்டில் பொருளாதார நிலைத்தன்மையை தேடி தாயகத்தை விட்டு வெளியேறும், ஆனால் தங்களது குடும்பங்களுடன் உணர்வுப்பூர்வமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் பெருந்திரளான இந்தியர்களின் ஒரு பகுதியாக, ஜாவேத் இறுதியில் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தார்.

தனது சகோதரனும் தாயும் எவ்வளவு இணக்கமாக இருந்தார்கள் என்பதை இம்தியாஸ் நினைவு கூர்ந்தார்.

"நாள் முழுவதும் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்" என்று அதனை இம்தியாஸ் விவரித்தார்.

பின்னர் பேச்சை நிறுத்திய அவர், "இப்போது, அந்த அமைதிதான் என் தாயை கொல்கிறது" என்றார்.

தனது சகோதரனும் தாயும் எவ்வளவு இணக்கமாக இருந்தார்கள் என்பதை இம்தியாஸ் நினைவு கூர்ந்தார்.

பட மூலாதாரம், Imtiyaz Ali

படக்குறிப்பு, விபத்து நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு கடந்த ஆண்டு அந்தக் குடும்பம் ஒன்றாக ஈத் பண்டிகையைக் கொண்டாடியது.

விபத்து நடந்த பல நாட்களுக்குப் பிறகு, இதய நோயாளியான தங்களது தாய்க்கு உண்மை தெரியாமல் பாதுகாக்க அவர்கள் முயன்றனர்.

ஏர் இந்தியா அதிகாரிகளும் மருத்துவர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினர். ஒரு மனநல ஆலோசகர் வரவழைக்கப்பட்டார். அவரது இதயம் பலவீனமாக இருந்ததால், இந்த அதிர்ச்சி அவரையும் கொன்றுவிடக்கூடும் என்று அவர்கள் அஞ்சினர்.

எனவே, அந்தச் செய்தி துண்டு துண்டாக வழங்கப்பட்டது. முதலில், ஒரு விபத்து நடந்துவிட்டது. மரியமும் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறப்பட்டது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, மரியத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்பட்டது.

"ஜாவேத் என்ன ஆனார்?" என்றும், "குழந்தைகள் என்ன ஆனார்கள்?" ஜாவேத்தின் தாயார் கேட்டுக்கொண்டே இருந்தார்.

"நான் அவரிடம் பொய் சொன்னேன், அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்று அவரிடம் சொன்னேன்"என இம்தியாஸ் கூறினார்.

யாரும் நேரடியாகப் பேசுவதற்கு முன்பே, ஏதோ தவறு நடந்துவிட்டதை ஜாவேத்தின் தாயார் உணர்ந்துவிட்டார்.

"என் மகன் சென்ற பிறகு, இரண்டு நாட்களாக அவன் என்னை அழைக்கவில்லை, அவன் ஒருபோதும் அப்படிச் செய்ததில்லை"என்கிறார்அவர் .

உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூற முயன்றனர். ஆனால் அந்த மௌனம் அவரை நிலைகுலையச் செய்தது.

"என்னால் தூங்க முடியவில்லை" என்று கூறிய ஜாவேத்தின் தாயார், "என் மகன் எங்கே என்று நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்" என்கிறார்.

இறுதியில், உடல்நிலை சரியில்லாத ஒரு உறவினரைப் பார்க்கச் செல்வதாகக் கூறி, அவரை ஆமதாபாத்திற்கு விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

குடும்பத்தினர் கூடியிருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்த அந்த கணத்திலேயே, தனக்கு உண்மை தெரிந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார் ஜாவேத்தின் தாயார்.

"விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது என்றும், ஜாவேத் இறந்துவிட்டான் என்றும் அவரிடம் சொன்னேன்" என இம்தியாஸ் நினைவு கூர்ந்தார்.

விபத்து நடந்த பல நாட்களுக்குப் பிறகு, இதய நோயாளியான தங்களது தாய்க்கு உண்மை தெரியாமல் பாதுகாக்க அவர்கள் முயன்றனர்.

பட மூலாதாரம், Reuters

அவர் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியே நகரத்தில் கோடை வெப்பம் கடுமையாகச் சுட்டெரித்தது.

குடும்பம் முன்னோக்கிச் செல்ல முயன்றாலும், துக்கம் அவர்களின் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது என்று அவர் கூறினார்.

ஜாவேத்துக்கு பிடித்தமான உணவுகள் இன்றும் குடும்ப விருந்துகளில் இடம்பெறுகின்றன.

மிகவும் கடினமான காலகட்டம் செப்டம்பரில் வந்தது, அப்போது அவரது தாயாரின் இதய நிலைமை மோசமடைந்தது.

மருத்துவர்கள் மேலும் மூன்று ஸ்டெண்டுகளை பொருத்தினர், இதனால் மொத்த ஸ்டெண்டுகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.

மன அழுத்தம் அவரது இதய நோய், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை தீவிரப்படுத்துகிறது என்று அவர்கள் எச்சரித்தனர்.

"ஜாவேத்தை நினைத்து அவர் அழும்போது, அவரது சர்க்கரை அளவு திடீரென உயர்ந்துவிடுகிறது" என்கிறார் இம்தியாஸ்.

அதே காலகட்டத்தில், ஏர் இந்தியா மற்றும் டாடா குழும அதிகாரிகள் மீதான அவரது அதிருப்தி மேலும் ஆழமடைந்தது.

விசாரணை குறித்த தகவல்கள், உடைமைகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் உறுதியளிக்கப்பட்ட மருத்துவ ஆதரவு ஆகியவற்றைத் தேடி குடும்பத்தினர் பல மாதங்கள் காத்திருந்ததாகவும், ஆனால் பெரும்பாலும் தெளிவற்ற அல்லது தாமதமான பதில்களையே பெற்றதாகவும் அவர் கூறினார்.

ஊடகங்களின் கவனம் அல்லது பொதுமக்களின் அழுத்தத்திற்குப் பிறகே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் கருதினார்.

ஒரு கட்டத்தில், டாடா நிறுவனத்துடன் தொடர்புடைய உதவித் திட்டங்கள் மூலம் மருத்துவர்கள் ஏற்பாடு செய்த போதிலும், அவரது தாயாரை பரிசோதிக்க பல மாதங்கள் ஆனதாக அவர் கூறுகிறார்.

"நாங்கள் அவர்களை நம்பினோம், அவர்கள் எங்களுடன் நிற்பார்கள் என்று நாங்கள் நினைத்தோம்" என்று அவர் கூறுகிறார்.

குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் குறித்த கருத்துக்காக பிபிசி ஏர் இந்தியாவைத் தொடர்பு கொண்டுள்ளது.

விமான விபத்து விசாரணைகள் சிக்கலானவை மற்றும் பெரும்பாலும் பல மாதங்கள் ஆகக்கூடியவை. சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின்படி, இறுதி அறிக்கைகள் பொதுவாக ஒரு வருடத்திற்குள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த வழக்கில் விபத்து நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு ஓர் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் குடும்பங்களுக்கு, இந்தத் விவரங்கள் வேதனையை மட்டுமே அதிகப்படுத்தின.

"நாம் ஒரு நவீன நாட்டில் வாழ்கிறோம், பதில்களுக்காக நாங்கள் ஏன் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்?"என்று இம்தியாஸ் கேள்வி எழுப்புகிறார்.

இறந்துபோன பலரைப் போலவே, ஜாவேத்தும் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பல ஆண்டுகள் வெளிநாட்டில் உழைத்திருந்தார்.

சகோதரர்கள் இருவரும் சேர்ந்து துபையில் ஒரு தொழிலைத் தொடங்கவும் திட்டமிடத் தொடங்கியிருந்தனர்.

"பின்னர், வாழ்க்கையின் மிகச் சிறந்த பகுதி தொடங்குவதற்குச் சற்று முன்பு, அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்" என்று கூறினார் இம்தியாஸ்.

"இனி இந்த அறிக்கையைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்று கூறிய அவரது தாயார், "எந்த அறிக்கையாவது என் மகனைத் திரும்பக் கொண்டுவர முடியுமா?"என்று கேள்வி எழுப்புகிறார்.

அவரைப் பொறுத்தவரை, அந்த இழப்பு இப்போது சிறிய நினைவுகளில் வாழ்கிறது. ஜாவேத் ஆமதாபாத்திற்கு புறப்படுவதற்கு முந்தைய இரவு சாப்பிட்ட இரவு உணவு, "மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று அவர் நினைவு கூர்ந்தார்.

அவருடைய பேரக்குழந்தைகளின் முதல் நீண்ட நாள் வருகையைக் குறிப்பிடும் ஜாவேத்தின் தாயார், அவர்கள் "என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவ்வளவு இறுக்கமாகக் கட்டிப்பிடித்தார்கள்" என்கிறார் .

ஜாவேத்தின் அம்மா ஃபரிதா பானோ

பட மூலாதாரம், Imtiyaz Ali

படக்குறிப்பு, ஜாவேத்தின் அம்மா ஃபரிதா பானோ (நடுவில்) கூறுகையில், தன் மகன்கள் தான் தன் உயிர் என்றும், அவர்களில் ஒருவரை இழக்கும் வலியைத் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் சொல்கிறார்.

அந்தப் பயணம் முழுவதும் ஜாவேத் அவரை நன்கு கவனித்துக்கொண்டார். அவரை ஷாப்பிங் அழைத்துச் சென்று 15 புதிய ஆடைகளை வாங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

"நான் அவனிடம், 'எதற்கு? நான் என்ன திருமணத்திற்கா போகிறேன்?' என்று கேட்டேன்" என அழுதுகொண்டே கூறுகிறார் ஜாவேத்தின் தாயார் .

மும்பையில் அவர் தங்கியிருந்த கடைசி இரவில், ஜாவேத் அவரது மடியில் தலைவைத்து உறங்கினார்.

"தான் விரைவில் திரும்பி வருவதாக ஜாவேத் கூறினார்"என்கிறார் ஜாவேத்தின் தாயார்.

மாலை வேளைகளில், மும்பையின் வெப்பம் தணியத் தொடங்கும்போது, ஜாவேத் விரும்பிய உணவுகளான மட்டன் குழம்பு, மீன் வறுவல், சில நேரங்களில் மாம்பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவரது தாயார் தனியாக மயானத்திற்குச் செல்கிறார்.

அங்கு மெதுவாகக் கீழே அமர்கிறார். அவரது இதயத்தில் உள்ள ஸ்டெண்டுகள் அவரது அசைவுகளைக் கடினமாக்கியுள்ளன. பின்னர் ஜாவேத்திடம் பேசுகிறார்.

"இதோ பார், என் மகனே. நான் உன்னைப் பார்க்க வந்துள்ளேன்" என்று மென்மையாக அழைக்கிறார்.

விமான நிறுவனத்திடமிருந்து ஜாவேத்தின் சேதமடைந்த சூட்கேஸைக் குடும்பத்தினர் பெற்றுக் கொண்ட நாளன்று, அதை யாரும் திறந்து பார்க்கவில்லை.

"அது தனியாக வைக்கப்பட்டுள்ளது, நாங்கள் அதைத் தொடுவதில்லை"என்று இம்தியாஸ் கூறினார்.

இத்தகைய தருணங்களால் மன உளைச்சலுக்கு ஆளான இம்தியாஸ், பதில்களைத் தேடுவதிலேயே முழுமையாக மூழ்கிப்போனார்.

விமான நிறுவனங்களுக்கு மின்னஞ்சல்களை எழுதுவது, வழக்கறிஞர்களை நியமிப்பது, மற்றும் விபத்துக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது எனப் பல செயல்களில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில், இதிலிருந்து அவரை மீட்பதற்காக உறவினர்கள் அவரை துபைக்கு அனுப்பி வைத்தனர். பய உணர்வினால் ஏற்படும் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின.

"சில நேரங்களில் நான் நடுக்கத்துடன் விழிக்கிறேன்," என்று கூறிய அவர், "அந்தச் செய்தியை முதல்முறையாகக் கேட்பது போல உணர்கிறேன்" என்கிறார்.

இத்தகைய தருணங்களால் மன உளைச்சலுக்கு ஆளான இம்தியாஸ், பதில்களைத் தேடுவதிலேயே முழுமையாக மூழ்கிப்போனார். விமான நிறுவனங்களுக்கு மின்னஞ்சல்களை எழுதுவது, வழக்கறிஞர்களை நியமிப்பது, மற்றும் விபத்துக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது எனப் பல செயல்களில் ஈடுபட்டார்.

பட மூலாதாரம், Imtiyaz Ali

படக்குறிப்பு, ஜாவேத், மரியம் மற்றும் அவர்களது குழந்தைகளின் உடல்களைக் குடும்பத்தினர் பெறுவதற்கு முன்பு, தான் மிகுந்த வேதனையை அனுபவித்ததாக இம்தியாஸ் கூறுகிறார்.

விசாரணை அறிக்கை இறுதியாகத் தங்களுக்கு அமைதியைத் தரும் என்று இம்தியாஸ் பல மாதங்களாக நம்பினார்.

ஆனால் இறுதியில் அவரை நிலைகுலையச் செய்தது வேறொரு விஷயம்.

அடக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அவரது மூத்த சகோதரி ஜாவேத் அனுப்பியிருந்த பழைய ஆடியோ செய்தி ஒன்றை இம்தியாஸுக்கு அனுப்பினார்.

அந்த விபத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அந்தச் செய்தியில், ஜாவேத் ஒரு கனவை விவரித்திருந்தார்.

இரண்டு தேவதூதர்கள் அவருக்காக வந்ததாகவும், அவரை அழைத்துச் செல்வதற்கு முன்பு, ரோஜாக்களின் நறுமணம் வீசும் ஒரு வாசனை திரவியத்தால் அவரைக் குளிப்பாட்டியதாகவும் அவர் கனவு கண்டிருந்தார்.

"நான் கண்விழித்தபோதும், ​​என்னால் அதன் வாசனையை உணர முடிந்தது" என்று ஜாவேத் அந்தப் பதிவில் கூறியிருந்தார்.

அதைக் கேட்ட பிறகு இம்தியாஸ் கண்கள் கலங்க அமைதியாக அமர்ந்திருந்தார்.

இஸ்லாமிய மரபில், தியாக மரணம் என்பது ஆன்மீகத் தூய்மையுடன் தொடர்புடையது, மேலும் குடும்பங்கள் சில சமயங்களில் இத்தகைய மரணங்களை கண்ணியமிக்கதாக விவரிப்பதில் ஆறுதல் காண்கின்றன.

இறுதிச் சடங்கிற்குப் பிறகு, ஜாவேத் ஒரு கண்ணியமான மரணத்தைச் சந்தித்ததாக உறவினர்கள் இம்தியாஸிடம் கூறினர்.

அந்த நேரத்தில், தம்மால் அவர்களை நம்ப முடியவில்லை என்று இம்தியாஸ் கூறுகிறார்.

ஆனால், தனது சகோதரனின் குரலைக் கேட்டது ஏதோ ஒன்றை மாற்றியது.

"இதுதான் எனக்குத் தேவைப்பட்ட பதில். அவர் நிம்மதியாக இருக்கிறார்" என்று இம்தியாஸ் மெதுவாகச் சொன்னார்.

விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பதை விசாரணை இறுதியாக விளக்கக்கூடும். ஆனால், எவ்வாறு தொடர்ந்து வாழ்வது என்பதை அந்தக் குரல் பதிவு அவருக்குக் கற்றுக்கொடுத்தது.

வெளியே, இருள் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியிருந்தது.

எங்கோ ஒரு இடத்தில், ஈரப்பதமான காற்றில் தொழுகைக்கான அழைப்பு ஒலித்தது.

"இறந்தவர்களால் மட்டுமே பதிலளிக்கக்கூடிய சில கேள்விகள் இருக்கின்றன" என்கிறார் இம்தியாஸ் .

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு