அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் ஒரு கூட்டறிக்கை வெளியிடுவது ஏன் கடினம்?

2024-ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
    • எழுதியவர், விகாஸ் பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்கா பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினராக இல்லை. இருப்பினும், செப்டம்பர் 12 மற்றும் 13இல் டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.

பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள 11 நாடுகளின் தலைவர்கள், அதாவது மாநாட்டை நடத்தும் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும், மாநாட்டில் அழைக்கப்பட்ட உறுப்பினராக சௌதி அரேபியா பங்கேற்கிறது. ஆனால், அதிபர் டிரம்பின் கொள்கைகளின் தாக்கத்தைப் போல வேறு சில விவகாரங்கள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது.

இரானில் நடைபெறும் போரும், அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் மட்டுமின்றி அதன் நட்பு நாடுகளையும் குறிவைத்து வெள்ளை மாளிகை விதிக்கக்கூடிய வரிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தலும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளைச் சீர்குலைத்துள்ளன. இதனால் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையும் உருவாகியுள்ளது.

இத்தகைய சூழலில்தான் பிரிக்ஸ் தலைவர்கள் சந்திக்கின்றனர். எனினும், அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சிக்கும் வகையிலோ அல்லது அதிபர் டிரம்பின் கொள்கைகள் மற்றும் புவிசார் அரசியலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த உத்தியை வகுக்கும் வகையிலோ பிரிக்ஸ் அமைப்பு ஒருமித்த அறிக்கையை வெளியிட வாய்ப்பில்லை.

இதற்கு ஒரு காரணம், அமெரிக்காவுக்கு எதிராக எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதில் பிரிக்ஸ் அமைப்புக்கு உள்ளேயே ஆழமான கருத்து வேறுபாடுகள் இருப்பதுதான்.

"அமெரிக்காவை கடுமையாக விமர்சிக்கும் ஒரு கூட்டறிக்கையை இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடியாது," என்று அட்லான்டிக் கவுன்சிலின் மூத்த ஆய்வாளரான மைக்கேல் குகல்மேன் பிபிசியிடம் கூறினார். விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் அமைப்பிலுள்ள நாடுகளின் நலன்கள் பெரிதும் மாறுபடுவதால், அமெரிக்க கொள்கைகள் மீதான விமர்சனம் "தெளிவற்றதாகவும் மறைமுகமாகவும்" இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

ரஷ்யாவும் இரானும் அதிபர் டிரம்புக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென வலியுறுத்தக்கூடும். ஆனால், பிரிக்ஸ் அமைப்புக்குள் நிலவும் புவிசார் அரசியல் எதார்த்தங்கள் அதைக் கடினமாக்கலாம். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான இறுதிக் கட்டத்தில் இந்தியா இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்காவை அதிருப்தியடையச் செய்யக்கூடிய எந்த அறிக்கையையும் இந்தியா விரும்பாது. அதேபோல், அமெரிக்காவை குறிவைப்பதற்காக பிரிக்ஸ் அமைப்பைப் பயன்படுத்துவதாக பார்க்கப்படுவதையும் சீனா விரும்பாது.

இவை தவிர, இந்த அமைப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இலக்கானது. அமெரிக்க ராணுவ தளங்களைத் தனது நாட்டில் கொண்டுள்ள இந்த வளைகுடா நாடு, இரானுக்கு ஆதரவாக அமையும் அறிக்கையை ஆதரிப்பதற்கான வாய்ப்பு குறைவு.

பிரிக்ஸ் விரிவடைந்ததன் மூலம் அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்கிறார் குகல்மேன். அதேநேரத்தில், ஒருமித்த கருத்தை எட்டுவது மேலும் கடினமாகியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

பிரிக்ஸ் மாநாட்டில் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக கூட்டு அறிக்கை வெளியாகுமா?

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத பல நாடுகளை நீங்கள் இப்போது உறுப்பினர்களாகச் சேர்த்திருக்கிறீர்கள்," என்று அவர் கூறினார். உலகளாவிய ஒழுங்கு குறித்து "பல்வேறு விதமான கருத்துகளையும் நிலைப்பாடுகளையும்" கொண்ட நாடுகளை ஒன்றிணைப்பதே இந்தியாவுக்கு உள்ள சவால் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக டிரம்பும் தொடர்ந்து கடுமையாகப் பேசி வருகிறார். குறிப்பாக, உலக வர்த்தகம் அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதைக் குறைக்கும் பிரிக்ஸ் நாடுகளின் முயற்சிகளை அவர் விமர்சித்து வருகிறார். இது பொதுவாக 'டாலர் ஆதிக்கத்தைக் குறைத்தல்' (de-dollarisation) என்று அழைக்கப்படுகிறது.

மாற்று நாணயத்தை உருவாக்கவோ அல்லது உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முயன்றால் பிரிக்ஸ் நாடுகள் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் பலமுறை எச்சரித்துள்ளார்.

அத்தகைய ஓர் எச்சரிக்கையில், "வலிமைமிக்க அமெரிக்க டாலருக்கு" மாற்றாக வேறு நாணயத்தை ஆதரித்தால் பிரிக்ஸ் நாடுகளுக்கு "100% (இறக்குமதி) வரி" விதிக்கப்படும் என்று 2024ஆம் ஆண்டு நவம்பரில் டிரம்ப் கூறியிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில், பிரிக்ஸ் அமைப்பால் நடைமுறையில் என்ன சாதிக்க முடியும்?

2026-ஆம் ஆண்டில் பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது, ​​இருதரப்புச் சந்திப்பில் இந்தியப் பிரதமர் மோதியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது, ​​இருதரப்புச் சந்திப்பில் இந்தியப் பிரதமர் மோதியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

பிரிக்ஸ் அமைப்பின் முன்னுள்ள வாய்ப்புகள்

கடந்த பத்து ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்பின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு அல்லது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க பிரிக்ஸ் தயங்கினாலும், இதுவரை உள்ள சாதனைகளை மேலும் வலுப்படுத்தவும், ஜி20 மற்றும் ஜி7 போன்ற அமைப்புகளுக்கு மாற்றாக உருவெடுக்க முடியும் என்பதை வெளிப்படுத்தவும் இந்தக் குழு முயலும்.

பிபிசி மானிட்டரிங்கின் ஆய்வின்படி, தற்போது உலக மக்கள் தொகையில் 49%, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40%, சர்வதேச வர்த்தகத்தில் 26% ஆகியவற்றை பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளன. பிரிக்ஸ் அமைப்பின் தெளிவான சாதனையாக இருப்பது புதிய வளர்ச்சி வங்கி. இந்த வங்கி பல பில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை உலகளாவிய தெற்கு நாடுகளில் செயல்படுத்தப்படுகின்றன.

நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகளுக்கு உதவும் வகையில், 100 பில்லியன் டாலர் மதிப்பிலான அவசரக்கால கையிருப்பு ஏற்பாட்டையும் இந்தக் குழு உருவாக்கியுள்ளது. ஆனால், அது இதுவரை பயன்படுத்திப் பரிசோதிக்கப்படவில்லை.

எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளை உள்ளூர் நாணயங்களில் எளிதாக்குவதற்கான வழிகளையும் தலைவர்கள் ஆராயக்கூடும். கடுமையான அமெரிக்கத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா மற்றும் இரானுக்கு இது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். வளரும் நாடுகளின் குரலாகத் தன்னை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவும் பிரிக்ஸ் முயலும். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த நாடுகள் கூட்டாக வலியுறுத்தக்கூடும். தற்போதைய உலகளாவிய ஒழுங்கை இந்த நிறுவனங்கள் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்று பல வளரும் நாடுகள் கருதுகின்றன.

குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை, இந்த உச்சி மாநாடு உலகளாவிய தெற்கின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தனது உரிமையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பலதரப்பு அணுகுமுறை, மேலும் பல துருவங்களைக் கொண்ட உலகம், வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் மற்றும் சுதந்திரமான உலக வர்த்தகம் உள்ளிட்ட இந்தியாவின் சொந்த வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் பலவும் பிரிக்ஸ் அமைப்பின் பரந்த செயல்திட்டத்துடன் நெருக்கமாக ஒத்துப் போகின்றன.

இரானில் நிலவும் போர் மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, இரானில் நிலவும் போர், அதன் பொருளாதார விளைவுகள் ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சவால்கள் என்ன?

ஆனால், பிரிக்ஸ் அமைப்புக்குள் சீனாவுக்கு இருக்கும் கணிசமான செல்வாக்கையும், வளரும் நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் சீனாவின் வலுவான இருப்பையும் சமாளிப்பதற்கான வழிகளையும் இந்தியா கண்டறிய வேண்டியிருக்கும்.

"உலகளாவிய தெற்கின் (Global South) தலைவராக அல்லது அதன் குரலாக" மாறுவதற்கு மோதி அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறுகிறார் குகல்மேன். ஆனால், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ஆழமான உறவுகளை ஏற்படுத்துவதில் இந்தியாவின் முயற்சிகள் "கட்டுப்படுத்தப்பட்ட வெற்றியையே" பெற்றுள்ளன. அங்கு சீனா அதிக வெற்றி பெற்றுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் பெரும்பாலான நாடுகள் வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளாக இருப்பதால், எத்தியோப்பியா, பிரேசில் மற்றும் இந்தோனீசியா போன்ற நாடுகளுடனான உறவுகளை ஆழப்படுத்தவும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தனது செல்வாக்கை வலுப்படுத்தவும் இந்தியாவுக்கு இந்த விரிவாக்கப்பட்ட அமைப்பு வாய்ப்பளிக்கிறது என்கிறார் குகல்மேன்.

இந்தியாவை பொறுத்தவரை, ஒரு கூட்டு அறிக்கையைப் பெற முடியுமா என்பதே சோதனையாக இருக்கும். பொதுவாக, ஒரு கூட்டறிக்கையை வெளியிடச் செய்வது மாநாட்டை நடத்தும் நாட்டின் ராஜ்ஜீய வெற்றிக்கான ஓர் அளவுகோலாகக் கருதப்படுகிறது. இரான் போர், அமெரிக்கா உடனான உறவுகள், உலக வர்த்தகத்தின் எதிர்காலம் ஆகிய விவகாரங்களில் நிலவும் கடுமையான கருத்து வேறுபாடுகளால் இது கடினமாக இருக்கும்.

இரான் போர் தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக மே மாதம் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கூட்டு அறிக்கையை வெளியிட முடியாமல் போனது இந்த சவாலின் தீவிரத்தை வெளிப்படுத்தியது. அதற்குப் பதிலாக, மாநாட்டை நடத்திய இந்தியா, சுருக்க அறிக்கையை (chair's summary) வெளியிட வேண்டியிருந்தது.

கடந்த 2023ஆம் ஆண்டில் ஜி20 மாநாட்டை நடத்தியபோது, ரஷ்யா-யுக்ரேன் போரால் ஆழமான பிளவுகள் ஏற்பட்டிருந்த நிலையிலும் கூட்டு அறிக்கையை வெளியிடுவதில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த அனுபவம் இந்தியாவுக்கு நம்பிக்கையை அளிக்கும்.

அதே நேரத்தில், பிரிக்ஸ் வெறும் "பேச்சுக்கான அமைப்பு" என்ற விமர்சனத்திற்கு உள்ளாகாமல் இருப்பதையும், ஏற்கெனவே செய்துள்ள சாதனைகளை முன்னிறுத்துவதையும் இந்தியா விரும்பும். இதில் உறுப்பு நாடுகள் ஒன்றுபடும் வாய்ப்பு உள்ளது.

நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை தலைவர்கள் ஆராய்வார்கள் என்றும், அதுதொடர்பாக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர். அமெரிக்கா தொடர்பான எந்தக் கருத்தும் மோதலைத் தவிர்க்கும் வகையில் மிகவும் கவனமாக வடிவமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், அமெரிக்கா இந்த மாநாட்டை உன்னிப்பாகக் கவனிக்கும்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டு டெல்லி ஒரு கோட்டை போல மாற்றப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டு டெல்லி ஒரு கோட்டை போல மாற்றப்பட்டுள்ளது.

தலைவர்கள் சந்திப்பு

பல முக்கியமான இருதரப்பு சந்திப்புகளுக்கும் இந்த உச்சி மாநாடு களமாக அமையும். சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை சந்திக்கவுள்ள நிலையில், அவர்களின் சந்திப்பு மிகுந்த கவனத்தைப் பெறும். இரு நாடுகளும் மெதுவாக உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பி வருகின்றன. எனினும், இருதரப்பும் எதிர்பார்த்ததைவிட இந்த முன்னேற்றம் மிகவும் எச்சரிக்கையுடனேயே நடைபெற்று வருகிறது.

மோதி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும் சந்திக்கவுள்ளார். அவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கியமாக யுக்ரேன் போர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் பிஷ்கெக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின்போது புதினை சந்தித்த மோதி, அமைதிக்காக பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது கருத்துகளை சிலர் ரஷ்யாவுக்கு எதிரான கண்டனமாகப் புரிந்துகொண்டனர். ஆனால், ரஷ்யா அவ்வாறு கருதவில்லை. மாறாக, மோதியின் அமைதி முயற்சிகளை ரஷ்யா வெளிப்படையாக வரவேற்றது.

புவிசார் அரசியலுக்கு அப்பால், ரஷ்யா மற்றும் சீனா உடனான இந்தியாவின் அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இடம்பெற வாய்ப்புள்ளது. இறுதியில், வெற்றிகரமான உச்சி மாநாட்டை நிறைவு செய்வதிலேயே பிரிக்ஸ் அமைப்பின் கவனம் இருக்கும். அது உலகளவில் பிரிக்ஸ் அமைப்பின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்?

மாநாட்டை நடத்தும் இந்தியாவை பொறுத்தவரை, தனது சர்வதேச செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்த முயன்று வரும் நிலையில், இது ஒரு முக்கியமான தூதரக மற்றும் புவிசார் அரசியல் சாதனையாகவும் அமையும்.

இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகள் இருப்பதாக குகல்மேன் கூறுகிறார். இரான் போரைச் சுற்றியுள்ள மத்தியஸ்த முயற்சிகளில் பாகிஸ்தானின் பங்களிப்பு உள்ளிட்ட மத்திய கிழக்கில் அதன் சமீபத்திய தூதரகப் பங்களிப்புகளால் இந்தியாவின் முக்கியத்துவம் ஓரளவு மறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

"இந்தியா தனது உலகளாவிய முக்கியத்துவத்தையும், உலகளாவிய தலைமைத்துவத்தையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முக்கியமான வாய்ப்பு இது. அதனால்தான் இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன" என்ற அவர், இந்த உச்சி மாநாடு, ஒட்டுமொத்தமாக பிரிக்ஸ் அமைப்பைவிட, மாநாட்டை நடத்தும் இந்தியாவுக்கே சில வகைகளில் "மிகவும் முக்கியமானது" என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு