'2 சளி மருந்திலும் பாராசிட்டமால்' - அதிக அளவு உட்கொண்டதால் மீண்டும் நடக்கவும் பேசவும் கற்ற கல்லூரி மாணவர்

ரைலி லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் ஆறு வாரங்கள் சிகிச்சை பெற்ற
படக்குறிப்பு, ரைலி லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் ஆறு வாரங்கள் சிகிச்சை பெற்றார்
    • எழுதியவர், அன்டோனியா மேத்யூஸ்
    • பதவி, பிபிசி
    • எழுதியவர், ஆஸ்கர் எட்வர்ட்ஸ்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பாராசிட்டமால் மருந்தை தவறுதலாக அளவுக்கு அதிகமாக எடுத்ததால் உடல் உறுப்புகள் செயலிழந்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்ற மாணவரின் பெற்றோர், அந்தச் சம்பவம் தங்களுக்கு ஏற்படுத்திய வேதனையைப் பகிர்ந்துள்ளனர். மேலும், நிலைமை எப்படி இவ்வளவு வேகமாக மோசமடைந்தது என்பது தங்களுக்கே புரியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த 20 வயதான ரைலி லுபாஸுக்கு 2025 மார்ச் மாதம், பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது கடுமையான சளி ஏற்பட்டது. அப்போது, தாம் எடுத்துக்கொண்ட இரண்டு மருந்துகளிலும் பாராசிட்டமால் இருப்பது தெரியாமல் அவற்றை உட்கொண்டார்.

இதையடுத்து உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்ற அவர், பல வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். பின்னர் அதிலிருந்து குணமடைந்த அவர், நடக்கவும் பேசவும் மீண்டும் கற்றுக்கொண்டார்.

மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு "லேபிளை கவனமாகப் படிக்க வேண்டும் "என்றும், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றும் ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ் அமைப்பின் வேல்ஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

ரைலி, பாத் பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் மீடியா படித்து வந்தார். வசந்த காலத்தில் அவருக்கு சளி ஏற்பட்டது. அப்போது அது "பெரிதாக ஒன்றுமில்லாதது போல" இருந்ததாக அவர் கூறினார்.

"முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதனால் நான் இரண்டு மருந்துகளை வாங்கினேன்.

"அந்த இரண்டு மருந்துகளிலும் பாராசிட்டமால் இருந்தது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

பாராசிட்டமால் மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. ஆரம்ப அறிகுறிகளில் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகியவை இருக்கலாம்.

வயிற்றில் வலி ஏற்படத் தொடங்கியபோது ரைலி உதவி கேட்டு தொலைபேசியில் அழைத்தார்.

பாத் நகரில் உள்ள ராயல் யுனைடெட் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது பெற்றோரான கிறிஸ் மற்றும் கேட் லுபாஸ் தங்கள் மகனுடன் இருக்க நியூபோர்ட்டில் இருந்து மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஆரம்பத்தில் மருத்துவர்கள் ரைலிக்கு ஹெபடைட்டிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியதாக கிறிஸ் தெரிவித்தார்.

"சில மணி நேரங்களுக்குப் பிறகு, அதிகாலை 1.30 மணியளவில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூறினர். அப்போது அவர்களால் சொல்ல முடிந்ததெல்லாம், தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான்," என்று அவர் கூறினார்.

ரைலியின் பெற்றோருக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
படக்குறிப்பு, ரைலியின் பெற்றோருக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ரைலியின் கல்லீரல் செயலிழக்கும் நிலையை நோக்கிச் செல்வதாக அவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, ஒரு கட்டத்தில் அவர் குழப்பமான நிலையில் இருந்ததுடன், இல்லாதவற்றையும் பார்க்கத் தொடங்கினார்.

"அன்று மாலை 6 மணியளவில் அவர் மயக்க நிலையில் இருந்தார். உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடனும், டயாலிசிஸ் சிகிச்சையுடனும் இருந்தார். அவரது பல உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன," என்று கிறிஸ் கூறினார்.

"நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை அங்கிருந்த மருத்துவ ஊழியர்களால் இறுதியாக எங்களிடம் கூற முடிந்தது."

ரைலியின் மூளையைச் சுற்றியுள்ள திரவம் தொடர்பான நிலை மருத்துவ ஊழியர்களைக் கவலையடையச் செய்தது. அவரது நுரையீரலும் சிறுநீரகங்களும் செயல்படுவதையும் நிறுத்திவிட்டன.

"நாங்கள் மிகவும் வேதனையடைந்தோம். இது எப்படி இவ்வளவு வேகமாக நடந்தது என்றே எங்களுக்குப் புரியவில்லை," என்று கிறிஸ் மேலும் கூறினார்.

அதற்குள் ரைலியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு கொண்ட லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜ் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

அங்கு, ரைலி எவ்வளவு பாராசிட்டாமால் எடுத்துக்கொண்டார் என்று அவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் கேட்டனர். இதையடுத்து அவர்கள் அவர் எடுத்த இரண்டு மருந்துகளையும் கண்டுபிடித்து, என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டனர்.

"இதனால் உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், கடைசியில் என்ன காரணம் என்பது தெரிந்தது." என்று கிறிஸ் கூறினார்.

முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடிக்கடி சளி ஏற்படுவதால், ரைலி மருந்தை வாங்கியதாகக் கூறினார்.
படக்குறிப்பு, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடிக்கடி சளி ஏற்படுவதால், ரைலி மருந்தை வாங்கியதாகக் கூறினார்.

ரைலி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்தபோது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதை மருத்துவர்கள் கவனிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் அவரது பெற்றோரிடம், ஏற்பட்ட பாதிப்பு "மீள முடியாததாக இருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

"அவரது கல்லீரலில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்," என்று கிறிஸ் கூறினார்.

"இரண்டு நாட்களுக்கு ரைலியின் உடல்நிலையை நாங்கள் மிகவும் கவனமாகக் கண்காணித்தோம். தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு டயாலிசிஸ் மற்றும் உயிர் காக்கும் கருவிகளின் உதவி அவருக்குத் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது."

ரைலி மீண்டும் நடக்கவும் பேசவும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் மொத்தம் ஆறு வாரங்கள் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் நியூபோர்ட்டில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

"அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பார்த்து நாங்கள் ஆச்சரியமடைந்தோம்," என்று கிறிஸ் கூறினார்.

"அவருக்கு டிரக்கியோஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், மீண்டும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பல உடல் உறுப்புகள் செயலிழந்திருந்ததால், மீண்டும் நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

"ஆனால், அவர் மீண்டும் எழுந்து உயிருடன் இருப்பதைப் பார்ப்பதே நம்ப முடியாததாக இருந்தது."

ரைலி குணமடைந்ததற்கான "துல்லியமான காரணம் எதுவும் இல்லை" என்று கிறிஸ் கூறினார். எனினும், அவரது உடல்நலமும் இளம் வயதும் இதில் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

ரைலி தற்போது முழுமையாகக் குணமடைந்து, மீண்டும் ஒரு மதுபான விடுதியில் மதுபானங்களைப் பரிமாறும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது பெற்றோர், கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நிதி திரட்டவும், பாராசிட்டாமால் மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கோவர் தீபகற்பம் வழியாக 31 மைல்கள் (50 கி.மீ.) மலையேற்றம் செய்தனர்.

"எல்லாமே இவ்வளவு வேகமாக மோசமடைந்தது நம்ப முடியாததாக இருந்தது," என்று ரைலி கூறினார்.

"ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், வயிற்றில் வலி ஏற்பட்டபோது, வயிற்றில் ஏதோ தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்துவிட்டேன். அதனால், என் கல்லீரலில் ஏற்பட்ட வலியைத் தனியாகக் கவனிக்கவில்லை.

"இந்த நிலையிலிருந்து நான் நலமாக மீண்டு வந்ததற்கு மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்."

பிரிட்டனில் ஆண்டுதோறும் சுமார் 6,300 டன் பாராசிட்டாமால் விற்பனை செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, பிரிட்டனில் ஆண்டுதோறும் சுமார் 6,300 டன் பாராசிட்டாமால் விற்பனை செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டு வேல்ஸில் பதிவான 27 மரணச் சான்றிதழ்களில் பாராசிட்டாமால் உட்கொண்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ் அமைப்பின் வேல்ஸ் பிரிவு தலைவரும் மருத்துவருமான டாக்டர் வில் மெக்கின்டோஷ் கூறுகையில், இளைஞர்கள் தற்செயலாக பாராசிட்டாமாலை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது "மிகவும் அரிதான சம்பவம்" என்றார்.

எனினும், பாராசிட்டாமால் உள்ள இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒரே நேரத்தில் தெரியாமல் எடுத்துக்கொண்டால், சிறிய அளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக, வேலை மற்றும் படிப்பு என இரண்டையும் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு இருக்கும் அழுத்தம், உடல்நிலை சரியில்லாதபோதும் "தொடர்ந்து செயல்பட வேண்டும்" என்பதற்காக தேவைக்கு அதிகமாகக் கடைகளில் கிடைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வழிவகுக்கலாம் என்று மெக்கின்டோஷ் கூறினார்.

"குறிப்பாக வைரஸ் தொற்றுகள் போன்ற உடல்நலப் பிரச்னைகள் தீவிரமானவையாக இல்லாவிட்டாலும், போதுமான ஓய்வு எடுப்பதும் முக்கியம்," என்று அவர் கூறினார்.

விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், ஓய்வெடுப்பதன் முக்கியத்துவம் சில நேரங்களில் "குறைத்து மதிப்பிடப்படுகிறது" என்று மெக்கின்டோஷ் கூறினார்.

"இதுபோன்ற பல உடல்நலப் பிரச்னைகளுக்கு, மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன், சிறிது நேரம் ஓய்வெடுத்து உடல் தானாகவே அந்தப் பிரச்னையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பையும் அளிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

உள்ளூர் மருந்தகங்கள் அதிக அளவில் மருந்துகளை விற்பனை செய்வதில் "மிகவும் கவனமாக" இருப்பதாகவும், அதனால் விற்பனை செய்யப்படும் பாராசிட்டாமால் மருந்தின் அளவுக்கு "அடிக்கடி கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும்" அவர் கூறினார்.

குறிப்பாக, உடல் எடை குறைவாக உள்ள வயதானவர்களுக்கு பாராசிட்டாமாலை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து மருத்துவர்களும் தற்போது அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாக அவர் கூறினார்.

"இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது, அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இருக்கலாம்; ஆபத்துகளும் அதிகம். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் முடிந்தவரை குறைவாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

மருந்துகளின் லேபிள்களை கவனமாகப் படிக்க வேண்டும் என்றும், மருந்தாளுநர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுடன், தேசிய சுகாதார சேவையின் இணையதளத்திலும் தகவல்களைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு