கனடாவில் உயர் கல்வி படிக்கச் சென்ற இந்தியர்களுக்கு புதிய சிக்கல் - 2 வாரங்களாக போராட்டம்

பட மூலாதாரம், Inderjit Singh/Getty
- எழுதியவர், சரப்ஜித் சிங் தாலிவால்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உள்ள கால்கரி மற்றும் எட்மான்டன் நகரங்களில் தங்களின் படிப்பை முடித்த பல சர்வதேச மாணவர்கள் (பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்) தங்களின் படிப்பிற்குப் பிந்தைய வேலை உரிமம் ரத்து செய்யப்பட்டதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடா அரசின் குடிவரவு துறை தங்களின் மனுக்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனப் பல சர்வதேச மாணவர்கள் கோரி வருகின்றனர்.
மறுபுறம் சர்வதேச மாணவர்கள் விவகாரம் கனடா மற்றும் இந்திய அரசியலிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இருப்பினும், கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தின் பிரீமியரான டேனியல் ஸ்மித், கனடாவுக்கு வந்துள்ள சர்வதேச மாணவர்கள், நிரந்தர வதிவுரிமை (பி.ஆர்) இல்லையென்றாலும் விசாக்கள் காலாவதியாகிறது என்றாலும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கனடாவின் தலைமை தணிக்கையாளர் (Auditor General of Canada) கொடுத்த அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்களில் இந்தியர்களின் பங்கு 8.1% ஆக இருந்தது. இது 2023-ஆம் ஆண்டில் 51.6% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய சிக்கல் என்ன?
மேற்கு கனடாவில் ஆல்பெர்டா மாகாணம் ஒரு முக்கியமான பிராந்தியமாகும். அதன் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் அழகிய மலைகளுக்காக உலகப் புகழ் பெற்றது. எனினும், சமீப நாட்களில் கால்கரி மற்றும் எட்மான்டன் நகரங்கள் சர்வதேச மாணவர்களின் போராட்டங்களால் செய்திகள் அதிகம் வருகின்றன.
கால்கரி மற்றும் எட்மான்டனில் உள்ள இரண்டு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்கரியின் போர்டேஜ் கல்லூரியின் கீழ் வரும் இரண்டு தனியார் கூட்டாண்மை கல்லூரிகளான சிஐஒடி மற்றும் கேம்ப்பெல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் வேலை உரிமத்திற்கான அதிக அளவிலான விண்ணங்களை கனடாவின் குடிவரவு துறை நிராகரித்து வருகிறது.
'நான்-கிரெடிட்' திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்கள் வேலை உரிமத்திற்கு தகுதியில்லாதவர்கள் என்பதே விண்ணப்பங்கள் நிராகரிப்படுவதற்கு கனடா குடிவரவு துறை முன்வைக்கும் வாதமாக உள்ளது.
தங்களின் படிப்பை முடித்துவிட்டு வேலை உரிமத்திற்காக காத்திருக்கும் சர்வதேச மாணவர்கள் இந்த முடிவுக்கு எதிராக போராடத் தொடங்கினர்.
கனடாவில் அவர்கள் படிப்பை ஆரம்பித்தபோது விதிகள் வேறாக இருந்தது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். படிப்பை முடித்து கல்விக் கட்டணமாக பல லட்சம் ரூபாய் செலவு செய்த பிறகு வேலை உரிமம் பெறுகின்ற சூழலில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது அவர்களுக்குப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
'எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது' - பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பட மூலாதாரம், Inderjit Singh
கனடாவின் கால்கரி நகரில் நெடுஞ்சாலை ஓரம் திறந்தவெளி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்வேறு மாணவர்களிடம் பிபிசி பஞ்சாபி பேசியது.
மொஹாலியைச் சேர்ந்த சுக்மானி கௌர் கூறுகையில், "நாங்கள் கனடாவின் பி.ஆர் கேட்கவில்லை. எங்களின் கனடா வேலை அனுபவத்தை வைத்து இந்தியா அல்லது இதர நாடுகளில் நல்ல வேலை தேடிக் கொள்ள படிப்பிற்குப் பிறகு இங்கு வேலை பார்ப்பதற்கான உரிமை மட்டுமே கேட்கிறோம்." என்றார்.
கால்கரி மற்றும் எட்மான்டனில் நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு வேலை உரிமம் மறுக்கப்பட்டுள்ளதாக சுக்மானி கௌர் தெரிவிக்கிறார். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள்.
மற்ற நாடுகளிலிருந்து இந்தக் கல்லூரியில் வந்து படிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எண்ணிக்கையில் மிகவும் குறைவானதே.
சுக்மானி கௌரின் கூற்றுப்படி, வேலை உரிமத்திற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் செயல்முறை ஜூலைக்குப் பிறகு தொடங்கியது. தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.
வணிக மேலாண்மை படிக்க தான் கனடா வந்ததாக சுக்மானி கௌர் கூறுகிறார். அவர் தனது இரண்டு ஆண்டு படிப்பை டிசம்பர் 2025-இல் முடித்து வேலை உரிமத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
படிக்கின்றபோது தான் கல்லூரி அட்டவணையின்படி வகுப்பிற்குச் சென்றதாகவும் கல்விக் கட்டணமாக லட்சக்கணக்கான ரூபாய் செலுத்தியதாகவும் கூறும் சுக்மானி கௌர், வேலை உரிமம் என்று வருகிறபோது மட்டும் அரசாங்கம் தனது கடமையிலிருந்து நழுவுவதாகத் தெரிவிக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகிகளிடம் சர்வதேச மாணவர்கள் பேசியதாகவும் ஆனால் அவர்களிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றும் சுக்மானி கௌர் கூறுகிறார்.
இந்தர்ஜித் சிங்கின் கதையும் சுக்மானி கௌரைப் போன்றது தான். இவர் பஞ்சாபின் மன்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர். படிப்பை முடித்த பிறகு அவருக்கும் வேலை உரிமம் மறுக்கப்பட்டது, போராட்டக் களத்தில் இரவும் பகலும் அவர் தனது குரலைப் பதிவு செய்து வருகிறார்.
பிபிசி பஞ்சாபியிடம் பேசிய இந்தர்ஜித் சிங், "2023-இல் கல்லூரியில் படிக்க பதிவு செய்தேன். அப்போது சர்வதேச மாணவர்கள் வேலை உரிமம் பெற முடியாது என்பது போன்ற நிபந்தனைகள் கிடையாது." என்றார்.
சேர்க்கையின்போது இருந்த அனைத்து நிபந்தனைகளையும் அவர் நிறைவேற்றியிருந்தார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
வேலை உரிமம் இல்லாமல் கனடாவில் வேலை செய்ய முடியாது என்ற சூழலில் வேலை பார்ப்பதற்கான உரிமை இல்லாமல் கனடாவில் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது என்பது புரியவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தர்ஜித் சிங்கின் கூற்றுப்படி, 2024-இல் அவர் கல்லூரியில் சேர்ந்தபோது, படிப்பை முடித்த பிறகு வேலை உரிமம் பெற அவர் தகுதியானவர் என கல்லூரி அதிகாரிகள் மற்றும் முகவர்களால் அவருக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தற்போது சூழ்நிலை நேர்மாறாக உள்ளது.
25 வயதான இந்தர்ஜித் சிங், தான் மீண்டும் சேருமாறு அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கிறார். அவர் இந்த ஒட்டுமொத்த செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டும், அதோடு கட்டணத்தைச் சமாளிப்பதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்தர்ஜித் சிங், "மீண்டும் படிப்பைத் தொடங்கினாலும் எதிர்காலத்தில் கனடா அரசாங்கம் வேலை உரிமம் வழங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது சூழ்நிலையை மேலும் கடினமாக்குகிறது." எனத் தெரிவிக்கிறார்.
கனடா எதன் அடிப்படையில் விண்ணப்பங்களை நிராகரிக்கிறது?

பட மூலாதாரம், Sikender Singh
படிப்பிற்குப் பிந்தைய வேலை உரிமத்திற்கான விதிகளை மேற்கோள்காட்டி 'நான்-கிரெடிட்' திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் தகுதியற்றவை என கனடாவின் குடிவரவு துறை அறிவித்துள்ளது.
கனடாவின் கல்வி விதிமுறைகளின்படி, பட்டம் மற்றும் பட்டயம் போன்ற படிப்புகள் கிரெடிட் பாடத்தின் கீழ் வருகின்றன. பொது அறிவு, புதிய திறன்களை மேம்படுத்துவதற்காக எடுக்கப்படும் படிப்புகள் 'நான்-கிரெடிட்' பாடத்தின் கீழ் வருகின்றன.
இதன்பொருள், 'நான் கிரெடிட்' பாடம் எடுத்த மாணவர் ஒருவர் மேலும் படிப்பைத் தொடர விரும்பினால் அவரின் முந்தைய கல்வி அனுபவம் அடுத்தடுத்த பட்டங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.
இந்தச் சூழலில் கிரெடிட் பாடங்கள் முடிந்த மாணவர்களின் பட்டங்கள் அடுத்தக்கட்ட கல்விக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.
வேலை உரிமம் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது?

பட மூலாதாரம், Inderjit Singh
கனடாவுக்குப் படிக்க வரும் சர்வதேச மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு வேலை உரிமம் வழங்கப்படுகிறது. இந்த உரிமத்தின் கால அளவு மாணவர் எடுத்த பாடத்தின் கால அளவைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது.
எட்டு மாதங்களுக்கு மேலாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாகவும் இருக்கும் பாடத்தை முடிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திற்கு கால அளவிற்கு நிகரான வேலை உரிமம் வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு மாணவர் ஓர் ஆண்டு படிப்பை முடித்திருந்தால் அவருக்கு ஓர் ஆண்டிற்கான வேலை உரிமம் வழங்கப்படலாம்.
இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட கால அளவிலான படிப்பை முடிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரையிலான வேலை உரிமம் பெறலாம்.
எட்டு மாதங்களுக்கும் குறைவான படிப்பைத் தொடரும் மாணவர்கள் வேலை உரிமம் பெற தகுதி பெற மாட்டார்கள்.
வேலை உரிமம் பெற ஒருவர் கனடாவில் எந்தத் துறையிலும் வேலை செய்யலாம். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் தான் வேலை செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடு கிடையாது.
கல்லூரி நிர்வாகிகளின் பதில் என்ன?

பட மூலாதாரம், Sikender Singh
மறுபுறம் போர்டேஜ் கல்லூரியின் நிர்வாகிகளும் இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
ஜூலை 21-ஆம் தேதி கல்லூரி இணையதளத்தில் வெளியான தகவல்களின்படி, சர்வதேச மாணவர்களைச் சந்தித்த கல்லூரியின் பிரதிநிதிகள் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
எனினும், வேலை உரிமம் தொடர்பான முடிவுகளை கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் ஆணையமே எடுப்பதாகவும் இந்தச் செயல்முறையில் கல்லூரிக்கு எந்தப் பங்கும் இல்லையென்றும் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக எந்தப் புதிய தகவல் கிடைத்தாலும் அது கல்லூரியின் இணையதளத்தில் பகிரப்படும் என்றும் மாணவர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகள் தொடரும் என்றும் கல்லூரி தெரிவித்துள்ளது.
மாணவர்களின் கவலைகளைப் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கும் கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தில் அரசாங்கத்திடமிருந்து தெளிவு பெற முயன்று வருவதாகவும் கூறுகிறது.
ஆனால் சட்டப்பூர்வ அறிவுரைக்குப் பிறகு, குடிவரவுக்கான 'ஆதரவு கடிதத்தை' வழங்குவதில் கல்லூரி தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது. மாணவர்கள் சட்ட மற்றும் குடிவரவு நிபுணர்களிடம் அறிவுரை பெற வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது.
ஆல்பெர்டா மாகாண மற்றும் கனடா அரசின் நிலைப்பாடு என்ன?
சர்வதேச மாணவர்கள் பி.ஆர் இல்லையென்றாலும் விசாக்கள் காலாவதியாகும் நிலையில் இருக்கிறதென்றாலும் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஆல்பெர்டா பிரிமீயர் டேனியல் ஸ்மித் தெரிவிக்கிறார்.
சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மாகாணத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இந்தப் பதிலை அளித்துள்ளார்.
இந்த நிலையில் கனடாவின் குடிவரவு துறை அமைச்சரான லேனா டெப் இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்த நேரத்தில் தனது துறை எந்தப் புதிய விதிகளையும் அமல்படுத்தவில்லையென்றும் பழைய விதிகளின் அடிப்படையிலே வேலை உரிமங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரியில், கனடாவின் குடிவரவு துறை தனியார் - அரசு கூட்டாண்மையின் கீழ் உள்ள படிப்புகளில் படித்து வரும் விண்ணப்பதாரர்கள் மே 2024-க்குப் பிறகு வேலை உரிமம் பெறும் தகுதியை இழந்துவிடுவார்கள் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்தவரும் முன்னணி வழக்கறிஞருமான ஹேரி விர்க்கிடம் சர்வதேச மாணவர்கள் பிரச்னை தொடர்பாக பிபிசி பஞ்சாபி பேசியது.
அவரது கூற்றுப்படி, வேலை உரிமம் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்போது இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 15 நாட்களுக்கு உள்ளாக மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை மறு ஆய்வு செய்யுமாறு கோர முடியும். இதன் கீழ் பல்வேறு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
அவரது அலுவலகத்தின் சார்பில் சுமார் 500 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறும் அவர், அவற்றின் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என்பது நீதிமன்றம் மற்றும் நீதிபதியைப் பொறுத்தது என்றும் தெரிவித்தார்.
விர்கைப் பொறுத்தவரை இரண்டாவது வாய்ப்பு என்பது விண்ணப்பம் ரத்தானதிலிருந்து 90 நாட்களுக்குள்ளான விண்ணப்பதாரர் அவரின் குடிவரவு நிலையைத் திருத்த முயற்சிக்கலாம். இந்தக் காலகட்டத்தில் அவரது படிப்பைத் தொடரலாம் அல்லது அவரது விசாவை சுற்றுலா விசாவாக மாற்றலாம்.
எனினும், இந்தச் சூழலில் மாணவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மறுபுறம் கனடாவைச் சேர்ந்த குடிவரவு நிபுணரான கன்வார் ஶ்ரீஹா, இது சர்வதேச மாணவர்களுக்கு எதிரான ஒரு விதமான 'மோசடி' என்று கூறுகிறார். இந்த 'மோசடி' விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த சமயத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ, இந்த விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து அரசு தெளிவான தகவல்களை வழங்கவில்லை என்று அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் கட்டணங்களுக்காகப் பெருமளவு பணத்தைச் செலவிட்டனர். ஆனால் இப்போது திடீரென அவர்களது வேலை உரிமத்துக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதில் மாணவர்களின் தவறு ஏதுமில்லை.
பஞ்சாப் அமைச்சர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Govt. of Punjab/YT
இவ்விவகாரம் குறித்து பஞ்சாப் சட்டப்பேரவையில் விளக்கமளித்த அமைச்சர் ரவ்ஜோத் சிங் கூறியதாவது: "கடந்த 3-4 வாரங்களாக, கனடாவில் சுமார் 1,500 மாணவர்கள், இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாபியர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனடா மத்திய அரசின் ஐ.ஆர்.சி.சி துறை, நமது மாணவர்களுக்குப் பெருமளவிலான வேலை உரிமங்களை (postgraduate work permits) மறுத்து வருகிறது."
"2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் சுமார் 1,500 மாணவர்கள் இதில் சேர்ந்தனர். இது இரண்டு ஆண்டு கால பட்டயப் படிப்பாகும்" என்று அவர் கூறினார்.
கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்துப் பேசுகையில், "தாங்கள் சேர்ந்தபோது, இந்தப் படிப்பு வேலை உரிமத்துக்கு தகுதியானது என்றும், படிப்பை முடித்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கான வேலை அனுமதி கிடைக்கும் என்றும் கல்லூரி நிர்வாகம் தங்களுக்குத் தெரிவித்ததாக மாணவர்கள் எங்களிடம் கூறினர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஆனால், அவர்கள் வேலை உரிமத்துக்கு விண்ணப்பிக்கத் தொடங்கியபோது, பலருக்கும் பெருமளவில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நாங்கள் இந்தப் பிரச்னையை வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்," என்றார்.
கனடா நிர்வாகம் நமது குழந்தைகளின் மீது கருணையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































