'அவசர மருந்துகளை கொண்டு செல்ல முடியும்' - மீட்புப் பணிகளுக்கு தயாராகும் கரப்பான்பூச்சிகள்; புதிய ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

பாராபோர்க், சைபோர்க், கரப்பான்பூச்சிகள்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஒரு பிரமாண்ட கரப்பான்பூச்சி உங்களை நோக்கி ஓடி வருவது உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த ஊர்ந்து செல்லும் பூச்சிகள் ஒரு நாள் மீட்புப் பணிகளில் வெளிச்சம் பெறாத ஹீரோக்களாக உருவெடுக்கக்கூடும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவும் 'சைபோர்க்' கரப்பான்பூச்சிகளை உருவாக்கியுள்ளனர். இவை 'பாராபோர்க்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. பாராமெடிக் சைபோர்க்குகள் என்பதன் சுருக்கம் தான் இந்தச் சொல்.

வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள நிலத்தைத் தோண்டி வாழும் பிரமாண்ட கரப்பான்பூச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். 8.5 செமீ வரை வளரக்கூடிய இவை உலகின் அதிக எடை கொண்ட கரப்பான்பூச்சி வகையாகும்.

ஒவ்வொரு பூச்சியின் மீதும், கேமரா அல்லது மருந்தைச் செலுத்துவதற்கான ஊசி போன்ற கருவி அடங்கிய ஒரு சிறிய முதுகுப் பை பொருத்தப்பட்டிருந்தது.

பாராபோர்க், சைர்க், கரப்பான்பூச்சிகள்

பட மூலாதாரம், Reuters

மின் சமிக்ஞைகளைச் சுமந்து செல்லும் சிறிய எலக்ட்ரோடுகள் கரப்பான் பூச்சியின் உடலில் பொருத்தப்பட்டன. பின்னர் ஆபரேட்டர்கள் அதன் நரம்பியல் மண்டலத்தில் சிறிய சமிக்ஞைகளை அனுப்ப முடியும். இதன் மூலம் தொலைதூரத்தில் இருந்தே அவற்றை கேமிங் கன்ட்ரோலர் மூலம் இயக்க முடியும்.

நோயாளிக்கு நெருக்கமாக இருக்கிறபோது மருந்துகள் அடங்கிய ஊசியைச் செலுத்த முடியும்.

இந்த ஆய்வை எழுத உதவிய பயோரோபாடிக்ஸ் பொறியாளர் தாங் வோ-டோவன் கூறுகையில், "முதலில் பூச்சியை மயக்கமூட்டுவோம் (தற்காலிகமாக உறங்க வைப்பது). இதனைச் செயல்படுத்தும் நடைமுறையில் அவை எதுவும் உணராமல் இருப்பதை உறுதி செய்ய அவற்றின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும்." என்றார்.

இறுக்கமான இடைவெளிகளில் நுழைந்து, சிரமமான பரப்புகளில் நகர்ந்து, கடினமான சூழல்களில் உயிர்வாழ்வதால் கரப்பான்பூச்சிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. உண்மையான ரோபோக்களை விட இவற்றுக்கு மிகக் குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது.

இந்த ஊசி முறை மனிதர்களிடம் பரிசோதிக்கப்படவில்லை. எனினும் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகச் சூழலில் சிலிக்கான் இலக்குகள் அல்லது பன்றித் தோல் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பாராபோர்க், சைபோர்க், கரப்பான்பூச்சிகள்

பட மூலாதாரம், Reuters

ஆய்வக பரிசோதனைகளின்போது, ஒரு 'அப்சர்வர்' கரப்பான்பூச்சி ஒரு இலக்கை கண்டுபிடிக்க கேமராவைப் பயன்படுத்தியது. இன்னொரு கரப்பான்பூச்சி ஊசி செலுத்தும் உபகரணத்தைப் பயன்படுத்தி, தொலை தூரத்திலிருந்து வழிகாட்டுதல் வழங்கும்போது மருந்தைச் செலுத்தியது.

இந்தக் கரப்பான்பூச்சிகள் அவர்களின் அனைத்து சோதனைச் சாவடிகளையும் அடைந்தன. ஒட்டுமொத்தமாக மருந்தைச் செலுத்தும் முயற்சிகளில் 72 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தன.

ஒரு பூச்சி அதன் இலக்கிலிருந்து 15 செ.மீ. தொலைவிலிருந்து ஊசியைச் செலுத்தும்போது அவை வெற்றியடையும் விகிதம் 95% வரை உயர்ந்தன.

இந்தப் பூச்சிகள் ஒரு கட்டத்தில் சரிந்து விழுந்த கட்டடங்கள் அல்லது குகைக்குள் சிக்கியிருக்கும் மனிதர்களைச் சென்றடையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரப்பான்பூச்சிகள்

பட மூலாதாரம், The University of Queensland

படக்குறிப்பு, ஒவ்வொரு பூச்சியின் மீதும், கேமரா அல்லது மருந்தைச் செலுத்துவதற்கான ஊசி போன்ற கருவி அடங்கிய ஒரு சிறிய முதுகுப் பை பொருத்தப்பட்டிருந்தது.

காயமடைந்த ஒருவரை மனித மீட்புக் குழுவினர் சென்றடைய முயற்சித்துக் கொண்டிருக்கும்போதே, கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள் அல்லது பாம்புக்கடிகளுக்கான அவசர மருந்து பொருட்களை இவைகளால் கொண்டு வந்து சேர்க்க முடியும்.

தடைபட்ட சமிக்ஞைகள், ஆபத்தான நிலப்பரப்பு மற்றும் ஊசிகளைப் பாதுகாப்பாகச் செலுத்துவதை உறுதி செய்தல் உள்ளிட்ட சிக்கல்களை ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஆராய வேண்டும்.

இறுதியில், விஞ்ஞானிகள் பேரிடர் பகுதிகளுக்கு பாராபோர்க் கூட்டங்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்; அவற்றில் சில, உயிர் பிழைத்தவர்களைத் தேடவும், மற்றவை மருந்துகளை எடுத்துச் செல்லவும் அமைக்கப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு