'2 மாதத்திற்கு முன்பு எடுத்த முடிவு' - உறுப்பு தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்

மூளைச்சாவு, உறுப்பு தானம், கெளரவ் தவே

பட மூலாதாரம், Sameer Khan

    • எழுதியவர், சமீர் கான்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 25 வயதான கௌரவ் தவே, மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படுவதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்.

அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்த பிறகு, ஆழ்ந்த துயரத்தில் இருந்த அவரது தாய் கவிதா தவேவுக்கு, மகன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த அந்த விருப்பம் நினைவுக்கு வந்தது.

மகனின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்தனர். அந்த முடிவால் ஆறு பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

கௌரவ் தவேவின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தற்போது பிறருக்கு பயனளித்துள்ளன.

உடல் உறுப்பு தானத்தைப் பாராட்டும் வகையில், மத்தியப் பிரதேச முதல்வரின் உத்தரவின்பேரில், அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜூலை 13-ஆம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவைத் தொடர்ந்து, கௌரவ் தவே இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், ஜூலை 26-ஆம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தங்கள் மகனின் அகால மரணம், அந்தக் குடும்பத்திற்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தபோது கௌரவ் கூறிய ஒரு விஷயம் அவரது பெற்றோருக்கு நினைவுக்கு வந்தது.

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் கௌரவின் தந்தை சதீஷ் தவே, "சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம். அப்போது, தனக்கு ஏதாவது நேர்ந்தால் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும் என்று கௌரவ் தனது தாயிடம் கூறினார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தபோது, அவரது தாய்க்கு மகன் கூறிய அந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன," என்றார்.

அந்தச் சமயத்தில், இந்தூரில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உறுப்பு தானம் தொடர்பாகச் செயல்பட்டு வரும் சமூக அமைப்பான 'முஸ்கான்' அமைப்பின் தன்னார்வலர்களும் அந்தக் குடும்பத்தைச் சந்தித்தனர். உறுப்பு தானத்துக்கான நடைமுறைகள் குறித்து அவர்கள் விளக்கி, அதற்குக் குடும்பத்தினரின் ஒப்புதலைப் பெற உதவினர்.

மகனின் விருப்பத்தையும், அந்த அமைப்பின் ஆலோசனையையும் தொடர்ந்து, தவே தம்பதியினர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர். அவர்களின் அந்த ஒரு முடிவு, ஆறு பேரின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மூளைச்சாவு, உறுப்பு தானம், கெளரவ் தவே

பட மூலாதாரம், Sameer Khan

படக்குறிப்பு, மகனை இழந்த துயரத்தில் இருந்தாலும், அவரது உறுப்புகள் பலருக்கு வாழ்வளித்திருக்கிறது குடும்பத்தினருக்கு நிம்மதியளிக்கிறது
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மகனை இழந்த துயரத்தில் இருந்தாலும், அவரது உடல் உறுப்புகள் பலரின் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கையாக மாறியிருப்பது தமக்கு ஆறுதலாக இருப்பதாக கௌரவ் தவேவின் தந்தை சதீஷ் தவே கூறுகிறார்.

"குடும்பத்தினரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலின் அடிப்படையில், இந்த உறுப்புகளை யாருக்கு வழங்குவது என்பது முடிவு செய்யப்பட்டது" என்று கௌரவ் தவேவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் சுஷில் ஜெயின் தெரிவித்தார்.

கௌரவ் தவேவின் இதயம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது கல்லீரல் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்குப் பொருத்தப்பட்டது. மேலும், அவரது இரண்டு சிறுநீரகங்களும் இந்தூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.

அவரது கண்களும் பார்வை இழந்திருந்த இருவருக்குத் தானமாக வழங்கப்பட்டன. நுரையீரல்களை சென்னைக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்தாலும், போக்குவரத்துச் சிக்கல்களால் அது சாத்தியமாகவில்லை.

கௌரவ் தவே, திரைப்படங்களுக்கான நடிகர் தேர்வு இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

"கௌரவ் அனைவருடனும் எளிதில் பழகக்கூடியவர். பெரிய கனவுகளைக் கொண்ட இளைஞர். கடந்த 17 ஆண்டுகளாக எனது நண்பராக இருந்தார். வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. இறந்த பிறகும், அவர் செய்த உறுப்பு தானம் அவரை உண்மையிலேயே ஒரு பெரிய மனிதராக நினைவுகூரச் செய்துள்ளது. இன்று சமூக ஊடகங்களில் பலர் அவரை நினைவுகூர்ந்து காணொளிகளைப் பகிர்ந்து வருகின்றனர்," என்று அவரது நண்பர் தனய் ஜோஷி தெரிவித்தார்.

'’உறுப்புகளைத் தானம் செய்ய எடுத்த முடிவு, கௌரவின் மறைவுக்குப் பிறகும் அவரது உறுப்புகள் பலரின் வாழ்க்கைக்கு நம்பிக்கையளித்து வருகின்றன என்ற ஆறுதலை அவரது பெற்றோர்களுக்கு வழங்கியுள்ளது," என்று தனய் ஜோஷி தெரிவித்தார்.

மூளைச்சாவு, உறுப்பு தானம், கெளரவ் தவே

பட மூலாதாரம், Sameer Khan

படக்குறிப்பு, பெற்றோர் மற்றும் சகோதரியுடன் கௌரவ் தவே

இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக, கௌரவ் தவேவின் இதயத்தைப் பெற அகமதாபாத்திலிருந்து மருத்துவக் குழு ஒன்று இந்தூருக்கு வந்தது.

சிறப்பு ஏற்பாடுகளின் மூலம், கௌரவ் தவேவின் இதயம் வெறும் 171 நிமிடங்களில் அகமதாபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் நோயாளி ஒருவருக்குப் பொருத்தப்பட்டது. இதற்காக விமான நிலைய அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

உறுப்புகளை மருத்துவமனைகளுக்கு தடையின்றி கொண்டு செல்லும் வகையில், இந்தூர் போக்குவரத்து காவல்துறை இரண்டு சிறப்பு போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்கியது.

ஜூலை 27 காலை 8.02 மணிக்கு, அப்போலோ மருத்துவமனையிலிருந்து விமான நிலையம் வரை முதல் சிறப்பு வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பாதை வெறும் 13 நிமிடங்களில் கடக்கப்பட்டது.

இரண்டாவது சிறப்பு வழித்தடம் காலை 9.15 மணிக்கு சோயித்ராம் மருத்துவமனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பயணம் 16 நிமிடங்களில் நிறைவடைந்தது.

உறுப்புகளை தடையின்றி கொண்டு செல்லும் வகையில், அந்த வழித்தடங்களில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு