'மாட்டின் இதயம், கல்லீரல், தேன்' - நார்வே வீரர் ஹாலாண்டின் உணவு, வாழ்க்கை பற்றிய 5 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டாரியோ ப்ரூக்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நார்வே அணி கடைசியாக 1998-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்றது. அப்போது எர்லிங் ஹாலாண்ட் பிறந்திருக்கக்கூட இல்லை.
ஆனால் இன்று அந்த அணி, ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் ஹாலண்ட் இரண்டு கோல்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில், 1.94 மீட்டர் உயரமுள்ள இவர், நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்களின் விருதைப் பெற அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே ஆகிய இருவருடன் போட்டியிடுகிறார்.
செனகலுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்த பிறகு ஹாலண்டு சிரித்துக் கொண்டே இவ்வாறு கூறினார்: "எனக்குத் தெரியவில்லை, கோல் அடிப்பதுதான் எனது சிறப்பு என்று நினைக்கிறேன்... அது இயல்பாகவே அப்படி அமைகிறது."
நார்வே அணி வரலாற்றிலேயே முதன்முறையாக கால் இறுதிக்குத் தகுதி பெற்று ஏற்கெனவே சாதனை படைத்துவிட்டது. எனினும், வரும் 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினால், அது இன்னும் ஒரு மிகப்பெரிய சாதனையாக அமையும்.
இதற்காக நார்வேயின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் மீண்டும் ஹாலாண்ட் மீதே உள்ளது. அவரைப் பற்றி நீங்கள் அறிந்திராத 5 சுவாரசியமான விஷயங்களைத் தெரிந்துக் கொள்வோம்.
1. பிரிட்டனில் பிறந்தவர்

பட மூலாதாரம், Getty Images
ஹாலாண்ட் 2000-ஆம் ஆண்டு பிரிட்டனின் லீட்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையான ஆல்ஃப்-இங்கே ஹாலாண்ட், நார்வே தேசிய அணிக்காக விளையாடியவர். அவர் 1994-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் நார்வே அணிக்காக பங்கேற்றிருந்தார். அந்தக் காலத்தில் அவர் பிரிட்டனின் 'லீட்ஸ் யுனைடெட்' அணிக்காக கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
எர்லிங் ஹாலண்டுக்கு 4 வயதாக இருக்கும்போதே, அவருடைய குடும்பம் நார்வேயின் தென்பகுதியில் உள்ள தங்களின் சொந்த ஊரான பிரைனேவிற்குத் திரும்பியது. அங்குதான் சிறு வயதிலேயே ஹாலாண்ட் கால்பந்து விளையாடத் தொடங்கினார். அத்துடன், நீளம் தாண்டுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பிற விளையாட்டுகளையும் விளையாடினார்.
"எர்லிங்கை நான் முதன்முதலாக பார்த்தது அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது. தன்னைவிட ஒரு வயது மூத்த சிறுவர்களுடன் நடைபெற்ற உட்புறப் பயிற்சியில் அவர் இணைந்தார்" என்று பயிற்சியாளர் ஆல்ஃப் இங்க்வே பெர்ன்ட்சன் 'கோல்' இணையதளத்திடம் கூறினார்.
"அவர் பந்தைத் தொட்ட முதல் இரண்டு முறையுமே கோலாக மாறியது. இதற்கு முன்பு அவர் எந்தவொரு கிளப்பிலும் விளையாடியதில்லை என்றபோதிலும், விளையாடத் தொடங்கிய முதல் கணத்திலிருந்தே அவர் மிகவும் அசாத்தியமான திறமையோடு விளங்கினார்."
"மற்ற வீரர்களைவிட ஒரு வயது இளையவராக இருந்ததால் அவர் சற்று குள்ளமாக இருந்தார். ஆனால் எதிரணி வீரர்கள் உயரமாக இருந்தாலும் அவர் தொடர்ந்து கோல்கள் அடித்தார். அவருக்கு 11 அல்லது 12 வயதாக இருந்தபோதே அவர் பெரிய உயரத்தை அடைவார் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. தேசிய அணியில் விளையாடும் திறமை அவரிடம் இருப்பதையும் அப்போதே உணர்ந்தோம்," என்றும் பெர்ன்ட்சன் தெரிவித்தார்.
15 வயதில், நார்வேயின் பிரைன் எஃப்.கே அணிக்காக ஹாலாண்ட் விளையாடத் தொடங்கினார்.
அவரது அசாத்திய கோல் அடிக்கும் திறன், அவரை நார்வேயின் மற்றொரு கிளப்பான மோல்டே எஃப்.கே-விற்குக் கொண்டு சேர்த்தது. இந்த கிளப்பை புகழ்பெற்ற முன்னாள் நட்சத்திர வீரர் ஒலே குணார் சொல்ஷியார் வழிநடத்தினார். இவர் ஹாலாண்டின் வழிகாட்டிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
ஆஸ்திரிய கிளப்பான ரெட் புல் சால்ஸ்பர்க்கில் விளையாடிய காலத்தில்தான், ஹாலாண்ட் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார், அதன் பின்னர் ஜெர்மனியின் பொருசியா டார்ட்மண்ட் கிளப்பில் தனது இடத்தை வலுப்படுத்திக் கொண்டார்.
இன்று, அவர் பிரிட்டனின் மான்செஸ்டர் சிட்டி கிளப்பின் மிக முக்கிய நட்சத்திர வீரராக விளங்குகிறார்.
2. தேசிய அணிக்காக கோல்களைக் குவிக்கும் இயந்திரம்

பட மூலாதாரம், Getty Images
இந்த உலகக் கோப்பையில், ஹாலாண்ட் ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளை மட்டுமல்லாமல், இத்தொடரில் விளையாடும் தங்கள் கனவை நனவாக்க முடியாமல் போன முன்னாள் வீரர்கள் அனைவரின் கூட்டுச் சுமையையும் சேர்த்துத் தன் தோள்களில் சுமக்கிறார்.
1994 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து உலகக் கோப்பைத் தொடர்களுக்குத் தகுதி பெற்றதைத் தவிர, முக்கிய சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் நார்வே நீண்ட இடைவெளியைச் சந்தித்துள்ளது. கடைசியாக அவர்கள் ஒரு முக்கியத் தொடரில் பங்கேற்றது 'யூரோ 2000' போட்டியில்தான்.
ஆனால் இப்போது அவர்களிடம் முக்கியமான நட்சத்திர வீரர் இருக்கிறார். சமீப காலங்களில் இவரது புகழ் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஹாலாண்ட் தனது கடைசி 14 சர்வதேசப் போட்டிகளிலும் கோல் அடித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் மட்டும் அவர் மொத்தம் 27 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, அவர் விளையாடிய 54 சர்வதேசப் போட்டிகளில் 62 கோல்களை அடித்துள்ளார். அதாவது சராசரியாக ஒவ்வொரு 71 நிமிடங்களுக்கும் 1 கோல் வீதம் அடித்து அசத்தியுள்ளார்.
3. ஹாலாண்டின் ஆச்சரியமூட்டும் உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images
ஆடுகளத்திற்கு வெளியே, ஹாலாண்ட் தனது வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை குறித்த விவரங்களை சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகிறார்.
இந்த இளம் வீரர் தினமும் சுமார் 6,000 கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்கிறார். அவரது உணவில் மாட்டின் இதயம், கல்லீரல், பதப்படுத்தப்படாத தேன் மற்றும் பால் போன்ற புரதச் சத்து மூலங்கள் இடம்பெறுகின்றன.
"என்னால் முடிந்தவரை என்னைச் சிறந்த ஒருவராக மாற்றிக்கொள்ளத் தேவையான அனைத்தையும் நான் செய்கிறேன்" என்று அந்த இளம் வீரர் காணொளி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், இரவு நேரத்தில் அனைத்து மின்னணு சாதனங்களையும் அணைத்துவிடுவது மற்றும் குறைந்தது 10 மணிநேரம் தூங்குவது போன்ற மிகக் கடுமையான பழக்கவழக்கங்களையும் அவர் பின்பற்றுகிறார்.
ஆனால் இது அவருக்குப் புதிய ஒன்றல்ல. அவர் ஆஸ்திரியாவின் ரெட் புல் சால்ஸ்பர்க் கிளப்பில் இருந்தபோது, இளம் வயதிலேயே தனது உடல்நலம் மற்றும் திறன் மேம்பாட்டில் அவர் காட்டிய அக்கறை சக வீரர்களை வியப்பில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.
"அவர் மிக உயர்தர தொழில்முறை வீரர். நாங்கள் பயணங்களின்போது சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் தூங்கிக் கொண்டிருப்பார் அல்லது உணவுப் பழக்கத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றிய அறிவியல் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருப்பார். தனது திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல எந்தச் சிறிய விஷயத்தை மேம்படுத்தலாம் என்பதையே எப்போதும் தேடிக் கொண்டிருப்பார்'' என அவரது முன்னாள் சக வீரரான மாக்சிமிலியன் வோபர், டேசன் சேனலில் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
4. பிராட்-ஆக இருப்பதில் பெருமை
லீட்ஸ் நகரில் பிறந்ததால் ஹாலாண்ட் இங்கிலாந்து அணிக்காக விளையாடி, ஐரோப்பிய மற்றும் உலகக் கால்பந்தின் உச்சகட்ட நிலைகளை எளிதாக எட்டியிருக்க முடியும். ஆனால், அவர் அத்தகையதொரு வாய்ப்பை ஒருபோதும் பரிசீலிக்கவில்லை.
"உலகப் புகழ்பெற்ற நட்சத்திரமாகத் திகழ்ந்தாலும், ஹாலாண்ட் இப்போதும் அதே இயல்புடன்தான் இருக்கிறார்," என்று நார்வே நாட்டு விளையாட்டுப் பத்திரிகையாளர் ஆண்ட்ரியாஸ் கோர்சுண்ட் பிபிசி ஸ்போர்ட்ஸிடம் தெரிவித்தார்.
"தனது பின்னணி என்ன என்பதை அவர் நன்கு அறிவார். ரோகாலண்டில் உள்ள தனது சிறிய சொந்த ஊருக்கு அடிக்கடி சென்று வருவார். தனது வேர்களைக் குறித்து அவர் மிகுந்த பெருமை கொள்கிறார்; அதேவேளையில், தேசிய அணிக்காக விளையாடும்போது நார்வே ஊடகங்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறார்."
நார்வேயின் வைக்கிங் வரலாற்றிலிருந்து உத்வேகம் பெறும் அவர், தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் அளவற்ற பெருமிதம் கொள்கிறார்.
தனது வேர்களுடனான இந்தத் தொடர்பின் காரணமாகவே, தேசிய அணிச் சீருடையின் பின்புறத்தில் தனது முழுப் பெயரான 'பிராட் ஹாலாண்ட்' என்பதை அவர் இடம்பெறச் செய்துள்ளார். 'பிராட்' என்பது அவரது தாயாரின் குடும்பப் பெயராகும். தாயின் பெயரையும் தந்தையின் பெயரையும் இணைப்பது நார்வே நாட்டின் பாரம்பரிய வழக்கமாகும்.
"நார்வேயைப் பொறுத்தவரை ஹாலாண்ட் மிக முக்கியமானவர்" என்று கோர்சுண்ட் குறிப்பிடுகிறார்.
"உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் துறையில் அவர் முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒரு நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். வெறும் 55 லட்சத்திற்கும் சற்று அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு, உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரை உருவாக்கியிருப்பது ஒரு மகத்தான சாதனையாகும்."

பட மூலாதாரம், Getty Images
5. நார்வே நாட்டவருக்கு இல்லாத ஒரு தனித்துவமான ஆளுமை
தனது 1.95 மீட்டர் உயரத்தாலும், நீண்ட பொன்னிற முடியாலும், ஹாலாண்ட் கால்பந்து உலகில் மிகவும் எளிதில் அடையாளம் காணக்கூடிய வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
மான்செஸ்டர் சிட்டி கிளப்பில் அவர் விளையாடிய காலத்தில்தான் அவரது வசீகரிக்கும் ஆளுமை மிளிரத் தொடங்கியது;. மேலும் சில நேரங்களில் முற்றிலும் பிரிட்டன் பாணியில் அமைந்த அவரது நகைச்சுவை உணர்வு, ரசிகர்களின் அன்பை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.
ஹாலாண்ட் தனது யூடியூப் சேனலில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதுதவிர, 'விகுயின்ஸ்' என்ற அனிமேஷன் திரைப்படத்தில் 'ஹாலாண்ட்' என்று பெயரிடப்பட்ட ஒரு வைக்கிங் கதாபாத்திரத்திற்கு அவர் குரல் கொடுக்கிறார்.
"ஒரு விதத்தில், எர்லிங் முற்றிலும் ஒரு வழக்கமான நார்வேக்காரர் அல்ல என்று நான் நினைக்கிறேன்," என்று நார்வே பத்திரிகையாளர் லார்ஸ் சிவர்ட்சன் கூறினார். "அவர் தன்னம்பிக்கை உடையவர், மேலும் சில சமயங்களில் சற்று முரட்டுத்தனமாகவும் இருப்பார். அவர் தனது மதிப்பையும், திறமையையும் அறிவார், மேலும் தன் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்."
"ஸ்காண்டிநேவியாவில் பணிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கலாசாரம் உள்ளது. ஆனால் எர்லிங் ஹாலந்து பெஞ்சில் அமர வைக்கப்பட்டால்கூட அதைப் பற்றி வெளிப்படையாகப் புகார் கூறுவார். எனவே நார்வே மக்களுக்கு அவர் சற்றே மாறுபட்ட ஒரு மனிதர்... இதுவே அவரை எங்களுக்கு ஒரு சுவாரசியமான ஹீரோவாகக் காட்டுகிறது."
அவரது புகழுடன் சேர்த்து, ஒரு சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கான பிற விஷயங்களும் வந்துள்ளன. அதாவது அவரது ஜெர்சி சட்டைகளின் விற்பனை அதிகரிப்பு, உலகக்கோப்பை மீதான கூடுதல் ஆர்வம் மற்றும் இளைய தலைமுறைக்கான உந்துதல் ஆகியவை.
"நம் நாட்டில் நாம் வழக்கமாகப் பார்க்கும் விளையாட்டு ஹீரோக்களை விட, அவர் இப்போது முற்றிலும் மாறுபட்ட நட்சத்திர அந்தஸ்தில் உள்ளார்" என்கிறார் சிவர்ட்சன். "இருப்பினும், களத்தில் இந்த அசாத்திய சாதனைகளைப் படைக்கும் ஒரு வீரன் நம் மண்ணைச் சேர்ந்தவன் என்பதில் நார்வே மக்களிடையே எல்லையற்ற பெருமிதம் நிலவுவதை உங்களால் உணர முடியும்."
கூடுதல் தகவல்: ஜெஸ் ஆண்டர்சன் மற்றும் அத்வைத் ராஜன், பிபிசி ஸ்போர்ட்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































