சிறுமியின் பின்புறத்தை பிடித்து அத்துமீறியதாக கூறப்படும் ரோபோ பறிமுதல் - இயக்கியது யார்?

பட மூலாதாரம், North Rhine Westphalia Police Cologne
- எழுதியவர், ஆங்கஸ் தாம்சன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு ரோபோவைக் கட்டுப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்கள் குறித்து ஜெர்மனி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கொலோன் நகரில், சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான அந்த ரோபோவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த ரோபோ சிறுமியின் பின்புறத்தைப் பிடித்ததுடன், முன்னும் பின்னும் அசைந்து உடல் அசைவுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அலறியபடி அங்கிருந்து விலகிச் சென்றார்.
ரோபோவின் 16 வயது உரிமையாளரும், அவருடன் இருந்த 19 வயது இளைஞரும் இந்தச் சம்பவத்தைச் சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பியதுடன், அதுகுறித்துக் கருத்துகளையும் தெரிவித்ததாக நம்பப்படுவதாக வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையின்படி, சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு சற்று முன்பு, தனது தோழிகளுடன் இருந்த சிறுமியை அந்த 120 செ.மீ. (3.9 அடி) உயரமுள்ள ரோபோ பின்னால் இருந்து நெருங்கியுள்ளது.
நகரின் மையப்பகுதிக்கு அருகே உள்ள துரித உணவகத்தின் முன்பாக அந்தச் சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவசரகால சேவைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்தச் சிறுவனும் அவருடன் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 19 வயது இளைஞரும் அருகிலுள்ள ஒரு தெருவில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சிறுவன் காரின் பின்புறத்தில் வைத்திருந்த ரோபோவும் அங்கு கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படத்தில், அந்த ரோபோ கருப்பு நிற மீசை, தங்க நிறச் சங்கிலி மற்றும் வெள்ளை நிற உள்ளாடை போன்ற மேலாடையை அணிந்திருந்தது.
ரோபோவுடன் சேர்த்து, சந்தேகத்துக்கு இடமான நபர்களுக்குச் சொந்தமான இரண்டு மொபைல் போன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவம் நடந்தபோது ரோபோவின் அசைவுகளை யாரேனும் வேண்டுமென்றே கட்டுப்படுத்தினார்களா என்பதைக் குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மற்றொரு பதிவில், இந்த வழக்கு குறித்து சமூக ஊடகங்களில் சிலர் வெளியிடும் கருத்துகள் "எல்லை மீறுவதாக இருக்கலாம். மிக மோசமான சூழலில், அவை குற்றச் செயலாகவும் கருதப்படலாம்" என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































