குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால் உங்கள் உடல் சீக்கிரம் முதுமையடையுமா?

குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால் உங்கள் உடல் சீக்கிரம் முதுமையடையுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிகக் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ தூங்கும் நபர்களிடம் முதுமையின் அறிகுறிகள் முன்கூட்டியே தென்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • எழுதியவர், ரௌனக் பைரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. பொதுவாக, 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானதாகக் கருதப்படுகிறது.

ஆனால் ஒருவர் இதைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால், அது அவரது உடல்நலத்தையும் உடலின் முதுமை அடையும் செயல்முறையையும் பாதிக்கக்கூடும்.

நேச்சர் இதழில் வெளியான ஆய்வில், மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்குபவர்களிடம் முதுமைக்கான அறிகுறிகள் முன்கூட்டியே தென்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினி நரம்பியல் விஞ்ஞானி ஜென்ஹாவ் வென் மற்றும் அவரது குழுவினர், பிரிட்டனின் பயோபேங்கில் இடம்பெற்றுள்ள கிட்டத்தட்ட 5 லட்சம் பேரின் உடல்நலத் தரவுகளை ஆய்வு செய்தனர்.

ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் தூங்கியவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கியவர்களிடம் முதுமைக்கான அறிகுறிகள் அதிகமாகக் காணப்பட்டன.

எனினும், ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் தூங்குவது நேரடியாக உடல்நலத்தை மேம்படுத்துகிறது அல்லது முதுமை அடையும் செயல்முறையைத் தாமதப்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை.

பல சந்தர்ப்பங்களில், தூங்கும் நேரத்துக்கும் முதுமை அடைவதற்கும் இடையே 'U' வடிவிலான தொடர்பு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதாவது, இயல்பான அளவு தூங்கியவர்கள் சிறந்த உடல்நலத்துடன் இருந்தனர். அதேவேளையில், மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கியவர்களிடம் முதுமைக்கான அறிகுறிகள் அதிகமாக இருந்தன.

எனினும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஒரே அளவு தூக்கம் தேவைப்படுவதில்லை என்றும் ஆய்வு காட்டுகிறது. உதாரணமாக, இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை 6 மணி நேரத் தூக்கம் சிறந்ததாகவும், மூளையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை 8 மணி நேரத் தூக்கம் சிறந்ததாகவும் கண்டறியப்பட்டது.

தூங்கும் நேரத்துக்கும் முதுமைக்கும் தொடர்பு உள்ளதா அல்லது முதுமை அடைவதே தூக்கத்தைப் பாதிக்கிறதா?

இதுகுறித்து ஆய்வாளர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, இரண்டுமே ஒன்றையொன்று பாதிக்கின்றன" என்கிறார்.

அதாவது, தூக்கம் உடல்நலத்தையும் முதுமை அடையும் செயல்முறையையும் பாதிக்கலாம். அதேநேரத்தில், உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களும் ஒருவரின் தூக்க நேரத்தைப் பாதிக்கக்கூடும்.

வயதுக்கு ஏற்ப மாறும் தூக்கச் சுழற்சி

பிறந்த குழந்தை சுமார் 18 முதல் 20 மணி நேரம் வரை தூங்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிறந்த குழந்தை சுமார் 18 முதல் 20 மணி நேரம் வரை தூங்கக்கூடும்.

நரம்பியல் நிபுணர் மருத்துவர் பிரதீக் கிஷோர், வயதுக்கும் தூக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் தெரிவித்தார். அவரது கூற்றின்படி, இளம் வயதினருக்கு இயல்பாக 6 முதல் 8 மணி நேரம் தூங்கும் பழக்கம் இருக்கும், வயதாகும்போது தூங்கும் நேரம் குறையத் தொடங்குகிறது.

நரம்பியல் நிபுணர் மருத்துவர் ஜோதி சர்மாவும் இதை ஒப்புக்கொள்கிறார். அவரைப் பொறுத்தவரை, பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 18 முதல் 20 மணி நேரம் வரை தூங்கக்கூடும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க தூங்கும் நேரம் குறைகிறது. பெரியவர்களுக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானதாகக் கருதப்படுகிறது.

"இதைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால், உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்."

அதிகமாகவோ குறைவாகவோ தூங்குவது உடலின் முதுமையை வேகப்படுத்துமா?

போதுமான அளவு தூங்காதது முதியவர்களின் செல்களில் முதுமையடையும் செயல்முறையை விரைவுபடுத்தக்கூடும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போதுமான அளவு தூங்காதது முதியவர்களின் செல்களில் முதுமையடையும் செயல்முறையை விரைவுபடுத்தக்கூடும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தூங்கும்போது, உடலைச் சீரமைக்க உதவும் பல முக்கியமான ஹார்மோன்களும் நொதிகளும் செயல்படத் தொடங்குகின்றன. போதுமான தூக்கம் இல்லாதபோது உடலில் அழற்சி ஏற்படலாம் என மருத்துவர் பிரதீக் கிஷோர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, இதனால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

"மேலும், தூக்கமின்மை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பாதிக்கக்கூடும். இதனால் சிறுநீரகத்திலும் மூளையிலும் பிரச்னைகள் ஏற்படலாம்."

நேச்சர் இதழில் வெளியான ஆய்வும், மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்குவது உடலின் உறுப்புகளைப் பாதித்து, முன்கூட்டியே முதுமை அடைவதற்கு வழிவகுக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது. எனினும், இந்த முடிவுகளை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கு முந்தைய ஆய்வுகளும் தூக்கமின்மைக்கும் முதுமைக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலிஸ் (UCLA) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஒரே ஒரு இரவு போதுமான அளவு தூங்காமல் இருப்பதே வயதானவர்களின் செல்களில் முதுமை அடையும் செயல்முறையை வேகப்படுத்தக்கூடும் என்று கண்டறியப்பட்டது. தூக்கமின்மை பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயத்துடனும் தொடர்புடையது என அந்த ஆய்வு கூறியது.

இந்த ஆய்வில் 61 முதல் 86 வயதுக்குட்பட்ட 29 முதியவர்கள் பங்கேற்றனர். நான்கு இரவுகளுக்கு அவர்களுக்கு வெவ்வேறு தூக்க முறைகள் வழங்கப்பட்டன. ஒரு இரவில், அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை, வெறும் 4 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு காலையும் அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளைச் சேகரித்து, அதில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்தனர். தூக்கம் குறைக்கப்பட்ட காலத்துக்குப் பிறகு, உடலில் உள்ள சில செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த மாற்றங்கள் செல்கள் சேதமடைவதுடனும், முன்கூட்டியே முதுமை அடைவதுடனும் தொடர்புடையவை.

"வயதானவர்களில், ஒரே ஒரு இரவு போதுமான அளவு தூங்காமல் இருப்பதே முதுமை அடையும் செயல்முறையை வேகப்படுத்தும் குறிப்பிடத்தக்க உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்" என்று இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் கசின்ஸ் உளவியல்-நரம்பியல் நோயெதிர்ப்பியல் மையத்தின் உதவிப் பேராசிரியருமான ஜூடித் கரோல் தெரிவித்துள்ளார்.

தூக்கத்துடன் இதயத்துக்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்பு

தூக்கமின்மை உடலை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கக்கூடும்.

"மூளை ஒரு கணினியைப் போல செயல்படுகிறது. நாம் தூங்கும்போதுகூட அது செயல்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த நேரத்தில், அன்றைய தினம் நாம் பெற்ற நினைவுகளை அது ஒழுங்குபடுத்துகிறது. இதையே நினைவுகளை நிலைநிறுத்துதல் என்கிறோம். மேலும், தூங்கும்போது மூளையில் சேரும் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுகின்றன" என்று மருத்துவர் ஜோதி சர்மா தெரிவித்தார்.

மூளைக்கும் இதயத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உடலின் பல்வேறு செயல்பாடுகளை மூளை கட்டுப்படுத்துகிறது என மருத்துவர் பிரதீக் கிஷோர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி மூளைக்குப் போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், அது இதயத்தின் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, வெறும் படுக்கையில் படுத்திருப்பதை விட தரமான தூக்கம் மிகவும் முக்கியமானது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிபுணர்களின் கூற்றுப்படி, வெறும் படுக்கையில் படுத்திருப்பதை விட தரமான தூக்கம் மிகவும் முக்கியமானது.

"படுக்கையில் செலவிடும் நேரத்தைவிட தூக்கத்தின் தரம் முக்கியமானது. ஒருவர் 8 மணி நேரம் படுக்கையில் இருந்தாலும், அடிக்கடி விழித்துக்கொண்டிருந்தாலோ அல்லது தூக்கம் இடையூறு அடைந்தாலோ, அவருக்கு போதுமான ஓய்வு கிடைக்காது" என்கிறார் பிரதீக் கிஷோர்.

ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறியாக பலர் குறட்டையை நினைக்கின்றனர். ஆனால், குறட்டை விடுவது தூக்கம் மீண்டும் மீண்டும் தடைபடுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர் ஜோதி சர்மா கூறுகிறார்.

அதேபோல், "அதிக நேரம் தூங்குவதும் தரமற்ற தூக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். இது மன அழுத்தத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும். சில சந்தர்ப்பங்களில், பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கலாம்."

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கிறிஸ்டின் யாஃபேவின் கூற்றுப்படி, மூளையின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதும் விழிப்பதும், உடற்பயிற்சி செய்வதும், தூங்குவதற்கு முன்பு காஃபீன் மற்றும் மதுவைத் தவிர்ப்பதும், மனதைத் தளர்வடையச் செய்யும் பயிற்சிகளை மேற்கொள்வதும் உதவியாக இருக்கும்.

தூக்கத்தை மொபைல் போனை சார்ஜ் செய்வதுடன் மருத்துவர் ஜோதி சர்மா ஒப்பிடுகிறார். "மொபைல் போனுக்கு சார்ஜ் இல்லாவிட்டால் அது சரியாகச் செயல்படாது. அதேபோல், போதுமான தூக்கம் இல்லாவிட்டால் அடுத்த நாள் மூளையால் திறம்பட செயல்பட முடியாது."

உங்களுக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

தூங்கி எழுந்த பிறகு பல நேரங்களில் உங்கள் உடல் வலிக்கிறது என்றால், அது உங்களுக்குத் தரமான தூக்கம் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தூங்கி எழுந்த பிறகு பல நேரங்களில் உங்கள் உடல் வலிக்கிறது என்றால், அது உங்களுக்குத் தரமான தூக்கம் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடும். இதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வழி, ஒரு நாள் அலாரம் வைக்காமல் தூங்கச் சென்று, உடல் இயல்பாக எப்போது விழித்துக்கொள்கிறது என்பதைப் பார்ப்பது என மருத்துவர் ஜோதி சர்மா கூறுகிறார்.

"விழித்தெழும்போது புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பதாக உணர்ந்தால், உங்கள் உடலுக்குத் தேவையான அளவு தூக்கம் கிடைக்கிறது என்பதற்கான அறிகுறியாக அது இருக்கலாம்."

தூங்கி எழுந்த பிறகு உடல்வலி அல்லது தலைவலி ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

இதுகுறித்து மருத்துவர் ஜோதி சர்மா கூறுகையில், "நீங்கள் தூங்கியிருந்தாலும், அந்தத் தூக்கம் தரமானதாக இல்லை என்பதற்கான தெளிவான அறிகுறி இது. உங்கள் தூக்கம் இடையூறு அடைந்திருக்கலாம் அல்லது உங்களால் வசதியாகத் தூங்க முடியாமல் போயிருக்கலாம்" என்கிறார்.

எனினும், தொடர்ந்து தூக்கப் பிரச்னைகள் இருந்தாலோ, அதிகமாகக் குறட்டை விட்டாலோ, போதுமான அளவு தூங்கிய பிறகும் பகல் முழுவதும் சோர்வாக உணர்ந்தாலோ, மருத்துவரை அணுகுவது முக்கியம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு