கால்பந்து விளையாட்டில் ஹெட்டிங் செய்வது மூளையை பாதிக்குமா? புதிய ஆய்வில் தகவல்

கால்பந்து விளையாட்டில் ஹெட்டிங் செய்வது மூளையை பாதிக்குமா? புதிய ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Loughborough University

    • எழுதியவர், டான் ரோன்
    • பதவி, விளையாட்டு ஆசிரியர், பிபிசி ஸ்போர்ட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கால்பந்து விளையாட்டில் பந்தை தலையால் முட்டும் ஹெட்டிங் செயல்பாட்டால் ஏற்படும் மூளை பாதிப்புகளைக் குறைக்க, எதிர்காலத்தில் கால்பந்துகள் மறுவடிவமைப்பு செய்யப்படலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கால்பந்து வீரர்கள் பந்தை ஹெட்டிங் செய்யும்போது, அது மூளைக்குள் ஆற்றலைக் கடத்தும் ஓர் அழுத்த அழையை (pressure wave) உருவாக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ராணுவத் துப்பாக்கிச் சூடு, வெடிப்புகளின்போது ஏற்படும் அழுத்த அலைகளுக்கு "இணையானதாக" இந்த ஆற்றல் பரிமாற்றம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

'தி ஃபுட்பால் அசோசியேஷன்' அமைப்பின் ஆதரவுடன், லஃப்ரோ பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சில கால்பந்துகள் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது 55 மடங்கு அதிக அழுத்த அலையை உருவாக்கக்கூடும் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வுக்காக, கடந்த 100 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கால்பந்துகளை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். உண்மையான கால்பந்து போட்டிகளின்போது காணப்படும் வேகத்தில் இந்தப் பந்துகளைப் பயன்படுத்தி, மனிதத் தலையைப் பிரதிபலிக்கும் மேம்பட்ட செயற்கைத் தலை மாதிரியில் அவற்றின் தாக்கத்தை ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.

இந்த மாதிரியின் உள்ளே ஆய்வுக் குழு ஒரு சிறப்பு அழுத்த உணரியை (pressure sensor) பொருத்தினர். இந்த உணரியைப் பயன்படுத்தி, இதற்கு முன் பதிவு செய்யப்படாத ஓர் அழுத்த அலையை அவர்கள் கண்டறிந்தனர். இந்த அலை மூளையின் முன்பகுதிக்கு ஆற்றலைச் செலுத்துகிறது. அடுத்தடுத்து நிகழும் குறைந்த அளவிலான ராணுவ வெடிப்புத் தாக்கங்கள் குறித்த ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில், தங்கள் கண்டுபிடிப்புகள் கவலைக்குரியதாக இருப்பதாக ஆய்வுக் குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளர் முனைவர் இயுவான் பிலிப்ஸ் பிபிசி ஸ்போர்ட்டிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "மீண்டும் மீண்டும் நிகழும் குறைந்த அளவிலான ராணுவ வெடிப்பு ஆய்வுகள் குறித்த தகவல்களின் அடிப்படையில், நாங்கள் அளவிடும் சிக்னல்களின் அளவு, அத்தகைய சில சூழல்களில் கவலைக்குரியதாக இருக்கக்கூடும் என்று உறுதியாக நம்புகிறோம்," என்றார்.

"இதன் பொருள், கால்பந்தை தலையால் முட்டிய உடனேயே வீரர்களுக்கு அறிகுறிகள் தென்படும் என்பதல்ல. ஆனால் காலப்போக்கில் தொடர்ந்து ஏற்படும் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளும்போது அளவிடப்பட்ட ஆற்றலின் அளவு முக்கியமானதாக இருக்கக்கூடும்" என்று அவர் விளக்கினார்.

முனைவர் பிலிப்ஸின் கூற்றுப்படி, "உடனடி அறிகுறிகள் தென்படும் நிகழ்வுகளில் அல்லாமல், மாறாகக் குறைந்த அளவிலான ஆய்வுகளில் காணப்படும் சூழல்களில், நாங்கள் கணக்கிட்ட அளவுகள் இதற்கு வித்திடலாம் என்று உறுதியாக நம்புகிறோம்."

மூளைக்குக் கடத்தப்படும் ஆற்றலின் அளவு பல காரணிகளைச் சார்ந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். கால்பந்தின் வடிவமைப்பு, பந்து நகரும் வேகம், பந்து உலர்ந்த நிலையில் உள்ளதா அல்லது ஈரப்பதத்துடன் இருக்கிறதா என்பன போன்ற காரணிகள் இதில் அடங்கும்.

லஃபோரோ பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் தொழில்நுட்ப நிபுணரான பேராசிரியர் ஆண்டின் ஹார்லேண்ட், வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட கால்பந்துகளில் ஆற்றல் பரிமாற்றம் அதிகமாகவும் குறைவாகவும் இருந்ததைக் காண முடிவதாகக் கூறினார்.

மேலும், "காலப்போக்கில் கால்பந்துகளால் கடத்தப்படும் ஆற்றலின் அளவு அதிகரித்தது அல்லது குறைந்தது என்பதைக் காட்டக்கூடிய தெளிவான போக்கு எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.

கால்பந்து மோதும்போது தலை வழியாக ஆற்றல் கடத்தப்படுவதைப் பரிசோதிக்க, விஞ்ஞானிகள் ஒரு மாதிரி தலையைப் பயன்படுத்தினர்

பட மூலாதாரம், Loughborough University

படக்குறிப்பு, கால்பந்து மோதும்போது தலை வழியாக ஆற்றல் கடத்தப்படுவதைப் பரிசோதிக்க, விஞ்ஞானிகள் ஒரு மாதிரி தலையைப் பயன்படுத்தினர்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதோடு அவர், "அதிக ஆற்றல் கொண்ட அழுத்த அலைகளின் பரிமாற்றம் என்பது பழைய தோல் கால்பந்துகளில் மட்டுமே இருந்த பிரச்னை அல்ல என்பதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே, இந்த வகையான ஆற்றல் பரிமாற்றத்திற்கும் மூளை நோய்களுக்கும் தொடர்பு இருந்தால், நவீன கால்பந்துகளின் வருகையால் இந்தப் பிரச்னை மறைந்துவிடவில்லை என்றே அர்த்தம்" என்று குறிப்பிட்டார்.

மூளைக் காயங்கள் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற அழுத்தம் கால்பந்து விளையாட்டின் மீது அதிகரித்து வரும் சூழலில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. அதே வேளையில், கால்பந்தை அடிக்கடி தலையால் முட்டி ஹெட்டிங் செய்வதற்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நரம்புச் சிதைவு நோய்களுக்கும் இடையே இருக்கும் சாத்தியமான தொடர்பு குறித்தும் மீண்டும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

முன்னாள் கால்பந்து வீரர் கார்டன் மெக்குயினின் மரணத்திற்கு வழிவகுத்த மூளை நோய்க்கு, அவர் அடிக்கடி பந்தை ஹெட்டிங் செய்தது ஒரு காரணமாக இருந்திருக்க "வாய்ப்புள்ளது" என்று கடந்த ஜனவரி மாதம் ஒரு மூத்த மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

மெக்குயினுக்கு 'வாஸ்குலர் டிமென்சியா' மற்றும் 'நாள்பட்ட அதிர்வு சார்ந்த மூளைச் சிதைவு நோய் (CTE)' இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. சி.டி.இ என்பது தலையில் ஏற்படும் தொடர்ச்சியான தாக்கங்களுடன் தொடர்புடைய ஒரு மூளை பாதிப்பு. அவர் 2023இல் தனது 70வது வயதில் காலமானார்.

பல ஆண்டுகளாக நரம்பியல் பிரச்னைகளால் அவதிப்பட்டு உயிரிழந்த முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜெஃப் ஆஸ்டில்தான், கால்பந்தை அடிக்கடி ஹெட்டிங் செய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளே மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என்று அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் கால்பந்து வீரராகக் கருதப்படுகிறார்.

மூளைக்குச் செல்லும் ஆற்றலின் அளவைக் குறைக்க உதவும் வகையில் சிறந்த கால்பந்து வடிவமைப்புகள் மற்றும் பரிசோதனை முறைகளை உருவாக்க, இந்த ஆய்வு முடிவுகள் விஞ்ஞானிகளுக்கும் கால்பந்து நிர்வாகிகளுக்கும் உதவும் என்று முதன்மை ஆய்வாளர் முனைவர் இயுவான் பிலிப்ஸ் கூறினார்.

"மூளைக்குள் செல்லும் ஆற்றல் பரிமாற்றத்தைக் குறைக்கும் வகையிலான பந்து வடிவமைப்புகள் மற்றும் பரிசோதனை விதிமுறைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை இந்த ஆய்வு முடிவுகள் வழங்குகின்றன" என்றார் அவர்.

மேலும், "ஓய்வுபெற்ற கால்பந்து வீரர்களிடம் காணப்படும் நோய்களுக்கான சாத்தியமான காரணங்களை ஆய்வாளர்கள் இன்னும் ஆழமாக ஆராய்வதற்கு உதவும் பயனுள்ள தகவல்களை இந்த ஆய்வு முடிவு வழங்குவதாகத் தாங்கள் நம்புவதாகவும்" அவர் குறிப்பிட்டார்.

கால்பந்து விளையாட்டில் ஹெட்டிங் செய்வது மூளையை பாதிக்குமா? புதிய ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் கால்பந்து வீரர்களின் விளையாட்டு வாழ்க்கை குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கால்பந்தை அடிக்கடி தலையால் முட்டுவதற்கும் மூளை தொடர்பான நோய்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை மட்டுமே தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இருப்பினும், அப்படி ஹெட்டிங் செய்யும்போது ஏற்படும் தாக்கத்தின் எந்தப் பகுதி மூளைக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. இதற்கான முழுமையான விடையைக் கண்டறிய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்தப் புதிய கண்டுபிடிப்பு முக்கியமானது என்று முதன்மை ஆய்வாளர் முனைவர் இயுவான் பிலிப்ஸ் கருதுகிறார். ஏனெனில், இது இதற்கு முன் ஒருபோதும் அளவிடப்படாத ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்த விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.

அதோடு, "மிக முக்கியமாக, கால்பந்தின் வடிவமைப்பிலேயே மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்பை இந்தக் கண்டுபிடிப்பு அளிக்கிரது. நாங்கள் அளவிட்ட ஆற்றல் பரிமாற்றமானது, பந்து தலையில் படும்போது ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கத்தில் இருந்தும், வீரரின் தலை பின்னோக்கி நகர்வதில் இருந்தும் மாறுபட்டது. இந்த ஆற்றல் பரிமாற்றம் மோதலின் ஆரம்பத்திலேயே நிகழ்கிறது. இது மூளைக்குள் நுழையும் ஒரு குறுகிய, தனித்துவமான ஆற்றல் துடிப்பைப் போன்றது" என்று அவர் விளக்கினார்.

கடந்த 2019ஆம் ஆண்டில், 'ஃபீல்ட்' ஆய்வு என்ற பெயரில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்பந்து சங்கம், தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கம் ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்ட இந்த ஆய்வில், கால்பந்து வீரர்களுக்கு நரம்பு மண்டலம் சிதைவடையும் நோய்கள் (மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய்கள்) ஏற்படுவதற்கான வாய்ப்பு 3.5 மடங்கு அதிகம் என்பது கண்டறியப்பட்டது.

அந்த ஆய்வுக்குப் பிறகு, 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கால்பந்து போட்டிகளில் பந்தை தலையால் முட்டுவதற்கு படிப்படியான தடையை கால்பந்து சங்கம் அறிமுகப்படுத்தியது. மேலும், ஹெட்டிங் செய்வதால் ஏற்படும் அபாயங்களை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள வலுவான, நம்பகமான ஆய்வுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

பயிற்சியின்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பந்தை தலையால் முட்டுவதைக் குறைக்குமாறு கால்பந்து கிளப்புகளுக்கு கால்பந்து சங்கம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதில், ஃப்ரீ-கிக், கார்னர் கிக் போன்றவற்றில் இருந்து அதிவேகமாக வரும் பந்துகளைத் தலையால் ஹெட்டிங் செய்வதைக் கட்டுப்படுத்துவதும் அடங்கும்.

ஸ்காட்லாந்தின் கால்பந்து சங்கம் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, தொழில்முறை வயது வந்தோருக்கான போட்டிகள் நடப்பதற்கு முந்தைய நாளிலும், போட்டி முடிந்த மறுநாளும் பந்தை தலையால் முட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து சங்கத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான சார்லோட் கோவி இதுகுறித்துப் பேசுகையில், "இந்தப் புதிய சுயாதீன ஆய்வு நமக்குப் புதிய, இதுவரை அறியப்படாத தகவல்களை வழங்குகிறது. மிகவும் சிக்கலான இந்தப் பிரச்னையை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கான எங்கள் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது" என்று கூறினார்.

மேலும் அவர், "இந்த ஆய்வின் முடிவுகள், ஃபிஃபா, யுஇஎஃப் ஏ ஆகியவற்றுடனும் பகிரப்பட்டுள்ளன. இந்த முக்கியமான துறையில் கூடுதல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் உலகளாவிய அணுகுமுறைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்கிறோம்" என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு