இரும்புச் சத்து கிடைக்க இறைச்சி சாப்பிட வேண்டுமா? அதிகரிக்க உதவும் 5 ஆச்சர்யகரமான வழிகள்

இரும்புச்சத்தை அதிகரிக்க 5 ஆச்சர்யகரமான வழிகள்
    • எழுதியவர், மெலிசா ஹோகன்பூம்
    • பதவி, ‎
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நிறைய கீரை சாப்பிட்டால் உடல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று சிறு வயதில் நம்பினேன். இன்றும்கூட ஸ்மூத்தி, பாஸ்தா, ஆம்லெட் போன்ற உணவுகளில் கீரையைத் தவறாமல் சேர்த்துக் கொள்கிறேன்.

கீரையைப் பல்வேறு உணவுகளிலும் சேர்த்துக்கொள்ள முடியும், எளிதில் சமைக்கலாம், நார்ச்சத்தும் அதிகம் என்பதற்காக மட்டுமல்ல; அதில் இரும்புச் சத்தும் அதிகம் என்பதாலும் எனக்குப் பிடிக்கும். அப்படித்தானே?

உண்மையில், இது முற்றிலும் தவறில்லை. ஆனால், பச்சைக் கீரையில் உள்ள இரும்புச் சத்தை நம் உடல் அதிக அளவில் உறிஞ்சிக் கொள்வதில்லை.

சுமார் மூன்றில் ஒருவருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும் நிலையில், நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல; அந்த உணவை எப்படிச் சாப்பிடுகிறோம், எப்படி தயாரிக்கிறோம் என்பதும் நமக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

இரும்புச்சத்தை அதிகரிக்க 5 ஆச்சர்யகரமான வழிகள்

மிகவும் பொதுவான ஊட்டச்சத்துக் குறைபாடு

உலகிலேயே மிகவும் பொதுவான ஊட்டச்சத்துக் குறைபாடு இரும்புச் சத்துக் குறைபாடுதான். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. சோர்வு, உடல் பலவீனம், மூச்சுத் திணறல் ஆகியவை உடலில் இரும்புச் சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

நம் உடலின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் என்ற புரதத்தை உருவாக்க இந்த அத்தியாவசியத் தாது உதவுகிறது.

"சரியான உணவுப் பழக்கத்தைக் கடைபிடிப்பதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவதைத் தடுக்க முயல்வதே சிறந்தது," என்கிறார் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக் கழகத்தின் (University of East Anglia) தாது வளர்சிதை மாற்றப் பிரிவு பேராசிரியர் சூசன் ஃபேர்வெதர்-டெய்ட்.

உணவில் இருந்து இரும்புச் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்ளும் அளவைப் பொறுத்தவரை, இரும்புச் சத்து நிறைந்த எல்லா உணவுகளும் ஒரே மாதிரியானவை அல்ல.

இரும்புச்சத்தை அதிகரிக்க 5 ஆச்சர்யகரமான வழிகள்

இறைச்சி சாப்பிடாதவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உணவில் இரும்புச் சத்து இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஹீம் இரும்புச் சத்து (Heme iron) இறைச்சி மற்றும் கடல் உணவுகளில் காணப்படுகிறது. ஹீம் அல்லாத இரும்புச் சத்து (Non-heme iron) தாவர அடிப்படையிலான உணவுகளில் கிடைக்கிறது. ஹீம் இரும்புச் சத்தைவிட ஹீம் அல்லாத இரும்புச் சத்தையே நமது உடல் குறைந்த அளவில் உறிஞ்சுகிறது.

ஹீம் இரும்புச் சத்தில் சுமார் 15 முதல் 30% வரை உடலால் உறிஞ்சப்படுகிறது. ஆனால், ஹீம் அல்லாத இரும்புச்சத்தைப் பொறுத்தவரை, உணவின் வகையைப் பொறுத்து இந்த அளவு மாறுபடுகிறது. உலர்ந்த பருப்பு வகைகளில் உள்ள இரும்புச் சத்தில் சுமார் 2 சதவிகிதமும், இலைக் காய்கறிகளில் (leafy vegetables) உள்ள இரும்புச் சத்தில் சுமார் 7 முதல் 9 சதவிகிதமும் மட்டுமே உடலால் உறிஞ்சப்படுகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு, சிவப்பு இறைச்சி உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், சிலர் இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்து வருகின்றனர். ஆனால், அதற்குப் பதிலாக இரும்புச்சத்து நிறைந்த பிற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளாவிட்டால், அது இரும்புச் சத்துக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம் என்கிறார், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் யெமிசி லதுண்டே-டாடா.

நல்ல விஷயம் என்னவென்றால், அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய இரும்புச்சத்து நிறைந்த பல தாவர உணவுகள் உள்ளன. இந்த உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உடல் குறைவாக உறிஞ்சினாலும், அதை அதிகரிக்கப் பல வழிகள் உள்ளன.

இரும்புச்சத்தை அதிகரிக்க 5 ஆச்சர்யகரமான வழிகள்

1. சில கீரைகளை வேக வைக்கலாம்; மற்றவற்றை ஆவியில் வேக வைக்கலாம்

உணவைச் சமைக்கும் முறை, அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் இரும்புச் சத்தின் அளவைப் பாதிக்கக்கூடும். நான் அடிக்கடி பயன்படுத்தும் கீரையான பசலைக் கீரையில் (spinach) ஆக்சலேட்டுகள் (Oxalates) எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இவை இரும்புச்சத்துடன் பிணைந்து, அதை நமது உடல் உறிஞ்சுவதைத் தடுக்கின்றன.

ஆனால், பசலைக் கீரையைத் தண்ணீரில் வேக வைக்கும்போது இந்தச் சேர்மங்கள் வெளியேறுகின்றன. இதனால், அதிலுள்ள இரும்புச்சத்தை உடல் அதிகமாக உறிஞ்சிக்கொள்ள முடியும். இருப்பினும், இந்த முறை ஆக்சலேட் அதிகமுள்ள பசலைக் கீரை, ஸ்விஸ் சார்ட் (Swiss chard), பீட்ரூட் இலைகள் போன்ற கீரைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

கீரை வகைகளில் மற்றவையான லெட்டூஸ், முட்டைக்கோஸ், போக் சாய் (Bok choy) போன்றவற்றில் உள்ள ஆக்சலேட்டுகளை நீக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், இவற்றைப் பச்சையாகவோ அல்லது ஆவியில் வேக வைத்தோ சாப்பிடுவது, அவற்றிலுள்ள வைட்டமின் சி சத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இது இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதையும் அதிகரிக்கிறது.

2. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் வைட்டமின் சி சேர்த்துக்கொள்ளுங்கள்

உணவில் வைட்டமின் சி சேர்த்துக் கொள்வது, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

"தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதை அதிகரிப்பதில் வைட்டமின் சி முக்கியப் பங்கு வகிக்கிறது" என்கிறார் யெமிசி லதுண்டே-டாடா. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளலாம் அல்லது காலை உணவாக புளித்த மாவில் தயாரிக்கப்பட்ட பிரெட் (Sourdough bread) சாப்பிடும்போது, சிறிய அளவு ஆரஞ்சுப் பழச்சாறு அருந்தலாம்.

3. நொதித்தல் முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்

உணவுகளை நொதிக்கச் செய்வதும் (Fermentation), உடல் இரும்புச்சத்தை அதிகமாக உறிஞ்சுவதற்கு உதவும். இதற்குக் காரணம், தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளில் இயற்கையாகக் காணப்படும் ஃபைட்டிக் அமிலத்தை (Phytic acid) நொதித்தல் முறை சிதைக்கிறது.

இந்த அமிலம் உணவில் இருந்து இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதைச் சிரமமாக்குகிறது. எனவே, வழக்கமான பிரெட்டுக்கு பதிலாகப் புளித்த மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டை சாப்பிடலாம்.

இரும்புச்சத்தை அதிகரிக்க 5 ஆச்சர்யகரமான வழிகள்

4. இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட உணவுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்

பிரெட், காலை உணவாகச் சாப்பிடப்படும் தானிய உணவுகள் (Breakfast cereals) உள்ளிட்ட பல அன்றாட உணவுப் பொருட்களில் இரும்புச்சத்து செறிவூட்டப்படுகிறது (Fortified). ஆனால், உணவின் சுவை, நிறம் அல்லது நீண்ட காலம் கெடாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றைப் பாதிக்காத வகையில், உடலால் குறைவாக உறிஞ்சப்படும் இரும்புச் சத்து வகைகளையே உற்பத்தியாளர்கள் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்.

"பெரும்பாலான இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களில் இருந்து நம் உடல் இரும்புச் சத்தை சரியாக உறிஞ்சிக் கொள்வதில்லை" என்கிறார் சூசன் ஃபேர்வெதர்-டெய்ட்.

இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட உணவுகளில் இருந்து உடல் உறிஞ்சும் இரும்புச் சத்தின் அளவை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகளுக்கான தானிய உணவுகளில் (Infant cereals) இரும்புச்சத்து உறிஞ்சப்படும் அளவு மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். அது 0.6 முதல் 2.2% வரை மட்டுமே இருந்தது.

இதற்கு மாறாக, சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை மாவில் தயாரிக்கப்பட்ட பிரெட் ரோல்களில் இருந்து உடல் அதிக அளவு இரும்புச் சத்தை உறிஞ்சியது என்று அதே ஆய்வு கண்டறிந்தது. மற்றொரு ஆய்வில், சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட பிரெட்டில் இருந்து இரும்புச் சத்து உறிஞ்சப்படும் அளவு 13.6 சதவிகிதமாக இருந்தது.

5. உணவுடன் என்ன அருந்துகிறீர்கள் என்பதிலும் கவனம் செலுத்துங்கள்

உணவு சாப்பிடும்போது நாம் அருந்தும் பானங்களும்கூட, உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சும் அளவைப் பாதிக்கக்கூடும்.

ஆக்சலேட்டுகளை போலவே, பாலிஃபீனால்கள் (Polyphenols), டானின்கள் (Tannins), நார்ச்சத்து மற்றும் ஃபைட்டேட்டுகள் (Phytates) போன்ற சேர்மங்களும் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கக்கூடும் என்கிறார் யெமிசி லதுண்டே-டாடா.

காபி மற்றும் தேநீரில் டானின்கள், பாலிஃபீனால்கள் உள்ளன. எனவே, காலையில் இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட தானிய உணவுடன் காபி அல்லது தேநீர் அருந்தினால், அந்த உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் குறைவாகவே உறிஞ்சும். தேநீர் அருந்த விரும்பினால், உணவு சாப்பிட்ட குறைந்தது இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு அருந்துவது சிறந்தது என்கிறார் சூசன் ஃபேர்வெதர்-டெய்ட்.

இரும்புச்சத்தை அதிகரிக்க 5 ஆச்சர்யகரமான வழிகள்

தேவையான அளவு இருக்க வேண்டும்; அதற்கு அதிகமாகவும் இருக்கக் கூடாது

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய இரும்புச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு, உணவில் இருந்து உடல் குறைந்த அளவே இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது என்பதையும் கணக்கில் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. நீங்கள் அன்றாடம் பரிந்துரைக்கப்பட்ட அளவு இரும்புச்சத்தை உணவில் எடுத்துக்கொண்டாலும், அதில் ஒன்று முதல் இரண்டு மில்லிகிராம் அளவிலான இரும்புச்சத்தை மட்டுமே உடல் உறிஞ்சும் என்கிறார் சூசன் ஃபேர்வெதர்-டெய்ட்.

வியர்வை வெளியேறுதல், மாதவிடாய் போன்றவற்றின் மூலம் தினமும் உடலில் இருந்து இழக்கப்படும் இரும்புச்சத்தின் அளவுக்கு இது சமமாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார். எனவே, சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நாள் முழுவதும் சிறிய அளவுகளில் அவ்வப்போது சாப்பிடுவதை அவர் பரிந்துரைக்கிறார்.

இதற்குக் காரணம், ஒரே நேரத்தில் அதிக அளவு இரும்புச்சத்தை எடுத்துக் கொண்டால், உடல் அதை உறிஞ்சும் அளவு குறையக்கூடும். ஏனெனில், உடல் எவ்வளவு இரும்புச்சத்தை உறிஞ்ச வேண்டும் என்பதை மிகவும் திறமையாகக் கட்டுப்படுத்துகிறது.

இரும்புச்சத்து மாத்திரைகள் அல்லது ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக் கொள்ள நினைத்தால், முதலில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். "உடல் ஒரு சமநிலையைப் பராமரிக்க முயல்கிறது. அதனால், அளவுக்கு அதிகமான இரும்புச் சத்தை எடுத்துக்கொள்ள அது விரும்புவதில்லை."

மெலிசா ஹோகன்பூம் பிபிசியின் மூத்த சுகாதார செய்தியாளர். 'பிரெட் வின்னர்ஸ்' (Breadwinners), 'தி மதர்ஹுட் காம்ப்ளெக்ஸ்' (The Motherhood Complex) ஆகிய நூல்களின் ஆசிரியரும் ஆவார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு