வாழ்க்கைத் துணையின் குறட்டை உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கக் கூடும்? பிரச்னையும் தீர்வும்

குறட்டைச் சத்தம், உடல்நலம், ஆரோக்கியம், குறட்டை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எல்லா கிப்ளிங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

குறட்டை விடும் துணையுடன் தூங்கி, அடுத்த நாள் மனஅழுத்தம், கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது மறதி போன்ற பிரச்னைகளை நீங்கள் அனுபவித்ததுண்டா?

குறட்டை விடுவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்று என்பதால், பெரும்பாலானோர் அதை ஒரு தொந்தரவாக மட்டுமே கருதி சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். ஆனால், குறட்டை விடுபவரின் அருகில் தூங்குவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தூங்கும் போது நமது மேல் சுவாசப்பாதையில் உள்ள மென்மையான திசுக்களில் ஏற்படும் அதிர்வுகளால் குறட்டை ஏற்படுகிறது என பல் மற்றும் தூக்க மருத்துவ நிபுணரான கிளாரி சைமன் விளக்குகிறார்.

பிரிட்டன் மக்களில் 40% பெரியவர்கள் குறட்டை விடுகின்றனர். இதில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரிட்டிஷ் குறட்டை மற்றும் தூக்க மூச்சுத்திணறல் சங்கம் (பிஎஸ்எஸ்ஏஏ) கூறுகிறது.

குறட்டை விடும் துணையுடன் இருப்பவர்களில் 75% பேரின் தூக்கம் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் தூக்க ஃபவுண்டேஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் துணையானவர் எப்படி பாதிக்கப்படுகிறார், அதற்கு என்ன தீர்வு என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

கவனச்சிதறல் மற்றும் நினைவாற்றல்

குறட்டை சத்தத்தால் பாதிக்கப்படும் துணை, தங்களுக்குத் தேவையான தூக்கத்தைப் பெறுவதற்காக வேறு வழியின்றி தனி அறைக்குச் சென்று தூங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று ஏராக்ஸ் ஹெல்த்-ன் தூக்க நிபுணர் மற்றும் பல் மருத்துவரான பேராசிரியர் அமா ஜோஹல் விளக்குகிறார்.

"மனிதர்களாகிய நாம், போதிய தூக்கம் இல்லாமல் உடல்ரீதியாக சரியாக செயல்பட முடியாது" என்றும் அவர் கூறுகிறார்.

குறட்டைச் சத்தம், உடல்நலம், ஆரோக்கியம், குறட்டை

பட மூலாதாரம், Professor Ama Johal

படக்குறிப்பு, குறட்டையால் ஏற்படும் பாதிப்புகளை பல தம்பதிகள் மிக நீண்ட காலமாக சகித்துக் கொள்கிறார்கள் என்று பேராசிரியர் அமா ஜோஹல் கூறுகிறார்.

இரவில் நமது தூக்கம் பொதுவாக ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் குறிப்பிட்ட சுழற்சி முறையில் பல்வேறு கட்டங்களை கடந்து செல்கிறது. இந்த சுழற்சியின் ஆழ்ந்த தூக்க நிலை, உடலை புத்துணர்ச்சியடையச் செய்வதற்கு மிகவும் முக்கியமானது.

தூக்கம் அடிக்கடி தடைபட்டால், உங்களால் அந்த ஆழ்ந்த தூக்க நிலைக்கு செல்ல முடியாது. இதனால் படுக்கையில் நீண்ட நேரம் செலவிட்டாலும், நீங்கள் எழும்போது உடல் சோர்வாகவே இருக்கும் என்று பிஎஸ்எஸ்ஏஏ விளக்குகிறது.

நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் மூளை பகலில் நடந்த தகவல்களைச் சீர்படுத்தி சேமித்து வைக்கிறது. துணையின் குறட்டை சத்தத்தால் அடிக்கடி விழித்துக்கொண்டு சீரற்ற தூக்கத்தைப் பெறுவது, மூளையின் இந்தச் செயல்பாட்டைத் தடைசெய்து உங்கள் கவனத்தையும் நினைவாற்றலையும் பாதிக்கும்.

இத்தகைய தூக்கம் ஹார்மோன் உற்பத்தியைப் பாதிக்கிறது. இது உங்களின் ஆற்றல் மற்றும் உத்வேகத்தை குறைக்கிறது.

குறட்டைச் சத்தம், உடல்நலம், ஆரோக்கியம், குறட்டை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் அமைப்புகளை சீராக்குவதிலும் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் கெடும்போது, இந்த அமைப்புகளின் சமநிலை சீர்குலைந்து, உங்களுக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்துவதோடு, மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறனையும் குறைக்கிறது.

29 வயதான மெக் வாரன் என்ற பெண்ணும் தனது முன்னாள் துணையின் குறட்டையால் தூக்கம் கெட்டு இதே போன்ற ஓர் அனுபவத்தைச் சந்தித்துள்ளார்.

"குறட்டை சத்தத்தால் விழித்தெழுந்த பிறகு, எந்த ஒரு சிறு சத்தத்திற்கும் பதறும் ஒரு உச்சக்கட்ட விழிப்பு நிலையில் இருப்பதை நான் உணர்வேன்" என்று அவர் கூறுகிறார்.

ஒரு தொண்டு நிறுவன ஊடக அதிகாரியான மெக், இரவு முழுவதும் அடிக்கடி தன் துணையை தட்டி எழுப்பி, ஒரு பக்கமாகத் திரும்பிப் படுக்கச் சொல்வார்.

"காலையில் விழிக்கும்போதெல்லாம் ஒருவித குழப்பமான, மந்தமான உணர்வுடன் இருப்பேன்; சில நேரங்களில் 'ஹேங்ஓவர்' உணர்வில் விழிப்பது போலவும் இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

குறட்டைப் பிரச்னை அவர்களின் உறவைச் சோதித்தது. "நாங்கள் ஒன்றாக வாழ்வதாக இருந்தால், தாங்க முடியாத அளவிற்கு குறட்டை சத்தம் வரும் இரவுகளில் தூங்குவதற்கென தனியாக ஒரு படுக்கையறை கட்டாயம் வேண்டும் என்று நான் எப்போதும் சொல்வேன்" என மெக் விவரிக்கிறார்.

துணையின் குறட்டையால் தூக்கம் கெடும்போது அது எரிச்சல், வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும், மேலும் தனித்தனி அறைகளில் தூங்குவது என்று முடிவெடுத்தால், அது தாம்பத்திய நெருக்கத்தையும் குறைக்கும் என்று சைமன் கூறுகிறார்.

குறட்டைச் சத்தம், உடல்நலம், ஆரோக்கியம், குறட்டை

பட மூலாதாரம், Meg Warren

படக்குறிப்பு, தன் முன்னாள் துணையின் குறட்டையால் இரவில் தூக்கம் கெட்டதால், தான் 'மந்தமாகவும் குழப்பமாகவும்' உணர்ந்ததாக மெக் வாரன் கூறுகிறார்.

52 வயதான பத்திரிகையாளரான அன்னா-லூயிஸ் டியர்டன், தன் துணையின் குறட்டை காரணமாகச் சில நேரங்களில் தனி அறையில் தூங்குவதாகக் கூறுகிறார்.

குறட்டைச் சத்தம் அதிகமாக இருக்கும்போது, தகுந்த ஓய்வு எடுக்க இந்த மாற்று வழி அவருக்கு உதவுகிறது.

குறட்டைச் சத்தம், உடல்நலம், ஆரோக்கியம், குறட்டை

பட மூலாதாரம், Anna-Louise Dearden

படக்குறிப்பு, தன் துணையின் குறட்டைச் சத்தம் காரணமாக, சில நேரங்களில் தான் வேறு ஒரு அறையில் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அன்னா-லூயிஸ் டியர்டன் கூறுகிறார்.

"இரவில் சரியாகத் தூங்காமல் விழித்தெழுந்தால், நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள், அதிக எரிச்சலையும் உணர்வீர்கள்," என்கிறார் அன்னா-லூயிஸ்.

முன்பு துணையின் குறட்டை சத்தத்தால் அவர் இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வார். ஆனால் இப்போது காதுகளில் இயர் பிளக் அணிந்துகொள்வது பெரும் குறட்டை சத்தத்திலிருந்து காப்பாற்றி, நன்றாகத் தூங்க உதவுவதாக அவர் கூறுகிறார்.

மருத்துவர் உதவியை எப்போது நாட வேண்டும்?

இதற்கான தீர்வுகள் உள்ளன என்று சைமன் மற்றும் ஜோஹல் இருவருமே கூறுகிறார்கள். ஆனால் முதலில், உங்கள் துணை சாதாரணமாகத்தான் குறட்டை விடுகிறாரா அல்லது 'ஸ்லீப் அப்னியா' (தூக்க மூச்சுத்திணறல்) என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை வேறுபடுத்தி அறிவது அவசியம்.

"தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறு போன்ற உள் பிரச்னைகளைக் கண்டறியாமல், இரவில் குறட்டை சத்தத்தை மட்டும் தற்காலிகமாகக் குறைக்க முயற்சிப்பது தவறான அணுகுமுறையாகும்" என்று சைமன் கூறுகிறார்.

தூக்கத்தின் போது மூச்சு விடுவது அடிக்கடி தடைபடுவது, பின்னர் மீண்டும் தொடர்வது 'ஸ்லீப் அப்னியா' எனப்படும். மூச்சு விடுவதில் இடைவெளி, இரவில் மூச்சுத் திணறுவது, அடிக்கடி விழிப்பது மற்றும் காலையில் எழுந்தவுடன் தலைவலிப்பது ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

இந்தப் பிரச்னை இருந்தால், உங்களுக்கு 'கன்டினியூயஸ் பாசிட்டிவ் ஏர்வே பிரஷர்' (சிபிஏபி) இயந்திரத்தைப் பயன்படுத்தவோ அல்லது சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவோ பரிந்துரைக்கப்படலாம் என்று சைமன் விளக்குகிறார்.

சாதாரண குறட்டைக்கு, உடல் எடையைக் குறைத்தல், புகைப்பிடிப்பதை நிறுத்துதல், தூங்குவதற்கு முன் மது அருந்துவதைக் குறைத்தல் அல்லது ஒரு பக்கமாகத் திரும்பிப் படுப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் நல்ல பலனைத் தரும் என்கிறார் அவர்.

உங்கள் துணை, ஒரு பொது மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெறவும் அல்லது இதற்கென ஒரு சிறப்பு மருத்துவரை அணுகவும் நீங்கள் பரிந்துரைக்கலாம்.

குறட்டைக்கு மூக்கடைப்பு அல்லது ஒவ்வாமைதான் காரணம் என்றால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கலாம் அல்லது கீழ் தாடையை லேசாக முன்னோக்கித் தள்ளி சுவாசப்பாதையைத் திறந்து வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வாய் உறை அணியப் பரிந்துரைக்கலாம்.

பல தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் குறட்டைப் பிரச்னையை 'மிக நீண்ட காலமாக' அப்படியே பொறுத்துக்கொண்டு வாழ்கிறார்கள், இது அவர்களின் உறவையும் நலனையும் பாதிக்கிறது என்று ஜோஹல் கூறுகிறார்.

"இதற்கு உரிய மருத்துவ உதவி இருக்கிறது, அதைத் தேடிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதில் முக்கியமானது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு