இலங்கையில் மஹிந்த ராஜபக்ஸ மனைவி கைது - என்ன காரணம்?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - கிருலபனை பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்ற இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடாத்தியுள்ளனர். இதையடுத்தே, ஷிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைகளுக்காக செப்டம்பர் மாதம் 16ம் தேதி சிங்கப்பூர் நோக்கி பயணித்த ஷிராந்தி ராஜபக்ஸ, நேற்று முன்தினம் இரவு நாட்டை வந்தடைந்தார்.
அத்துடன், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு ஷிராந்தி ராஜபக்ஸ, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாணைகளுக்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை எதிர்வரும் 12ம் தேதி மாளிகாகந்தை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே, ஷிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச வங்கியொன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 100 லட்சம் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமையின் ஊடாக ஊழல் மற்றும் பொது சொத்து சட்டத்தின் கீழ் தவறு இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையிலேயே, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் ஷிராந்தி ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஸ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிரிலிய சவிய அறக்கட்டளை
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரது மனைவியான ஷிராந்தி ராஜபக்ஸ சிரிலிய சவிய என்ற அறக்கட்டளையை தொடங்கியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ உள்ளிட்ட மூவரின் பெயர்களின் ஒன்றிணைந்த நிலையில் மக்கள் வங்கியில் இந்த அறக்கட்டளைக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது.
மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையில் இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி கணக்கை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் மூவரும் தங்காலை கால்டன் வீட்டின் முகவரியை ஷிராந்தி ராஜபக்ஸ வழங்கியிருந்தார்.
குறிப்பாக பழைய தேசிய அடையாள அட்டைகளில் முதல் இரண்டு இலக்கங்களும், தாம் பிறந்த வருடத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். ஷிராந்தி ராஜபக்ஸ 1922ம் ஆண்டு பிறந்தவர் இல்லை என்பதன் அடிப்படையில், அந்த தேசிய அடையாளஅட்டை இலக்கம் போலியானது என அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

பட மூலாதாரம், Getty Images
சிடி ஸ்கேன் இயந்திர குற்றச்சாட்டு
கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் மருத்துவமனையின் தேவையாக காணப்பட்ட சிடி ஸ்கேன் இயந்திரத்தை அன்பளிப்பாக வழங்குவதற்காக, அரச வங்கியொன்றிலிருந்து நிதியை பெற்று, சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சிடி ஸ்கேன் இயந்திரத்தை சிரிலிய சவிய நிதியத்தின் ஊடாக சிறுவர் மருத்துவமனைக்கு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் ஷிராந்தி ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இரகசிய போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
எனினும், அந்த தொகை சிரிலிய சவிய நிதியத்தின் கணக்கில் இன்றும் பாதுகாப்பாக இருக்கின்றது எனவும், அதில் மோசடிகள் இடம்பெறவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பேச்சாளரான வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
சிரிலிய நிதியத்தின் டிஃபேன்டர் வாகனம் மற்றும் தாஜுடீன் கொலை
தாஜுடீனின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக, 2017ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
செஞ்சிலுவை சங்கத்தினால் சிரிலிய சவிய நிதியத்திற்கு வழங்கப்பட்ட டிஃபேன்டர் வாகனம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய டிஃபேன்டர் வாகனம், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவிக்கு சொந்தமான சிரிலிய சவிய நிதியத்திற்கு வழங்கப்பட்டிருந்ததாக செஞ்சிலுவை சங்கம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது.
எனினும், 2017ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் திணைக்களத்திற்கு முன்னிலையாகியிருக்கவில்லை.
2015ம் ஆண்டு ஜுன் மாதம் 01ம் தேதி போலீஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஸவிடம் சபாநாயகர் இல்லத்தின் வைத்து விசாரணை நடாத்தியிருந்தனர்.
இலங்கையின் ரக்பீ வீரரான தாஜுடீன் கொலை தொடர்பில் குறித்த டிஃபேன்டர் வாகனம் தொடர்புப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, இந்த சர்ச்சை எழுந்திருந்தது.
அதிசொகுசு பேருந்துகளை கால்டன் பாலர் பள்ளிக்கு வழங்கியமை
விளையாட்டு அமைச்சிற்காக பேருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறி, பல கோடி ரூபா பெறுமதியான இரண்டு பேருந்துகளை வரியின்றி இறக்குமதி செய்து, அவற்றை ஷிராந்தி ராஜபக்ஸவின் கீழ் நடாத்தி செல்லப்பட்ட கால்டன் பாலர் பள்ளிக்கு வழங்கியமையின் ஊடாக ஊழல் மற்றும் நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இதேவேளை, அரச திறைசேரியிலுள்ள தங்கங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் ஷிராந்தி ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































