மும்பையில் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்யக் கோரி சிஜேபி போராட்டம் நடத்தியபோது என்ன ஆனது?

காக்ரோச் ஜனதா கட்சி, ஞானேஷ் குமார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையை நிறுத்த வேண்டும்" எனக் கோரி வெள்ளிக் கிழமை (அக்டோபர் 2) டெல்லி, மும்பை, பாட்னா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மும்பையில் சிவாஜி பார்க் அருகில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிபிசி மராத்தி செய்தியின்படி, சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, "காந்தி இந்த நாட்டின் ஆன்மா என்றால், அம்பேத்கர் இந்த நாட்டின் முதுகெலும்பு. பாபாசாகேப் அம்பேத்கரும் நேருவும்தான் நமக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கினர்" என்று கூறினார்.

மும்பையில் நடந்த இந்தப் போராட்டத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி, அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்ட பல மும்பை கலைஞர்களும் கலந்து கொண்டனர். ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியன்று மும்பையில் போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது.

மாணவர் அமைப்புகள், ஆம் ஆத்மி கட்சி மற்றும் சமூக அமைப்புகள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த நிலையில், காக்ரோச் ஜனதா கட்சி மும்பையில் உள்ள சிவாஜி மைதானத்தில் வெள்ளிக் கிழமை மாலையில் மக்களை ஒன்று கூடுமாறு கேட்டுக் கொண்டது.

மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற சிஜேபி போராட்டத்தில் திரைப்பட நடிகை ஷபானா ஆஸ்மியும் இசையமைப்பாளர் விஷால் தத்லானியும் கலந்து கொண்டனர். அங்கு திரண்டிருந்த ஏராளமான போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பிடிஐ செய்திப்படி, சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே பேசுகையில், "இந்த அரசு மிகவும் திறனற்றதாக இருப்பதால், இரண்டு மாதங்களில் நாங்கள் இரண்டாவது முறையாக போராட்டம் நடத்த வேண்டியதாகிவிட்டது." என்று கூறினார்.

நடிகர் நசிருதீன் ஷாவும் அபிஜித் திப்கேவுக்கு ஆதரவு தெரிவிக்க சிவாஜி பூங்காவிற்கு வந்தார்.
படக்குறிப்பு, நடிகர் நசிருதீன் ஷாவும் அபிஜித் திப்கேவுக்கு ஆதரவு தெரிவிக்க சிவாஜி பூங்காவுக்கு வந்திருந்தார்.

ஷபானா ஆஸ்மி பேசுகையில், "வாக்களிப்பது நமது உரிமை. அது நமது குரல். ஆனால் நமது வாக்கு நம்மிடமிருந்து பறிக்கப்பட்டால் நாம் என்ன செய்வோம்? அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம். எந்தத் தவறுகளையும் நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். இது நமது நாடு. நமது அரசியலமைப்பு நமக்கு இந்த உரிமையை வழங்கியுள்ளது" என்றார்.

இதற்கிடையே, திரைப்பட இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான விஷால் பரத்வாஜ் சிவாஜி பூங்காவை வந்தடைந்தார். அப்போது பேசிய அவர், "நான் ஆதரவு தெரிவிக்க இங்கு வந்துள்ளேன். இதுவொரு தனிப்பட்ட விஷயம், நடப்பது தவறு என்று ஒருவரது மனதில் தோன்றினால், அவர் ஆதரவளிக்க முன்வர வேண்டும்" என்றார்.

அபிஜித் திப்கே உடன் இசையமைப்பாளர் விஷால் தத்லானி
படக்குறிப்பு, அபிஜித் திப்கே உடன் இசையமைப்பாளர் விஷால் தத்லானி
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டெல்லியில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. மேலும் டெல்லி மெட்ரோ நிறுவனம் 10க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களை மூடியது.

இதற்குப் பிறகும், பெருந்திரளான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்திற்காக ஜந்தர் மந்தரை அடைய முயன்றுகொண்டே இருந்ததால், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இருப்பினும், வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "இறுதியாக, எம்பி சஞ்சய் சிங், ஜர்னைல் சிங், சஞ்சீவ் ஜா மற்றும் இதர ஆம் ஆத்மி தொண்டர்கள் துவாரகா காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து இந்திய மாணவர் அமைப்பின் (ஐசா - AISA) தலைவர் நேஹா போரா கூறுகையில், "ஜந்தர் மந்தர்-2 இன்னும் முடியவில்லை, இதுவொரு தொடக்கம் மட்டுமே, நாங்கள் நாளை மதியம் 1 மணிக்கு மீண்டும் வருகிறோம்" என்றார்.

சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாலை 7 மணியளவில் நானும் எனது சக தோழர்கள் அனைவரும் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டோம், கைது நடவடிக்கை குரலை அடக்கிவிட முடியாது. இயக்கம் தொடர்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

இது 'ஜந்தர் மந்தர் 2'-ன் தொடக்கம் என்று நேஹா போரா கூறியுள்ளார்.
படக்குறிப்பு, இது 'ஜந்தர் மந்தர் 2'-ன் தொடக்கம் என்று நேஹா போரா கூறியுள்ளார்.

நூற்றுக்கணக்கானோர் கைது

முன்னதாக யோகேந்திர யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லி காவல்துறை கைது செய்யப்பட்ட எங்களது தோழர்களை வெவ்வேறு காவல் நிலையங்களில் வைத்துள்ளனர். நாங்கள் முதலில் நியூ பிரண்ட்ஸ் காலனிக்கும், பின்னர் காளிந்தி குஞ்ச் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டோம்."

"டெல்லி ஒரு ராணுவ முகாம் போல மாற்றப்பட்டு, இன்று கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட விதம் பிரிட்டிஷ் காலத்தை நினைவூட்டுகிறது. அடக்குமுறையால் இயக்கங்கள் சோர்வடைவதில்லை. அவர்களின் உறுதிப்பாடு வலுவடையவே செய்கிறது," என்று கூறியிருந்தார்.

ஆர்ஜேடி-யின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜாவும் இந்தப் பதிவை பகிர்ந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தச் செல்வதற்கு முன்பாக, ஆர்ஜேடி மாநிலங்களவை உறுப்பினரான மனோஜ் ஜா உள்படப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ஜேடியின் ராஜ்யசபா எம்பி மனோஜ் ஜாவையும் போலீசார் கைது செய்தனர்.
படக்குறிப்பு, ஆர்ஜேடி-யின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டார்

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அதிஷி டெல்லி பெண்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சௌரப் பரத்வாஜ், எம்.பி சஞ்சய் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ஐசா தலைவர் நேஹா போராவை காவல்துறையினர் கைது செய்தனர். சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியும் கைது செய்யப்பட்டவர்களில் அடக்கம். ஜந்தர் மந்தர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்ததாக காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இடதுசாரி மாணவர் அமைப்புகளான ஐசா, எஸ்எஃப்ஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் தொண்டர்களும் காலையிலேயே ஜந்தர் மந்தரை அடையத் தொடங்கினர்.

இருப்பினும், அக்டோபர் 2 அன்று ஜந்தர் மந்தரில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடத்தத் திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.

காவல்துறையின் அனுமதி இல்லையென்றாலும், ஏராளமான போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை அடைய முயன்றனர்.
படக்குறிப்பு, காவல்துறை அனுமதி இல்லையென்றாலும், ஏராளமான போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை அடைய முயன்றனர்.

வியாழக்கிழமை மாலை ஜந்தர் மந்தரை சுற்றி 163வது பிரிவு விதிக்கப்பட்டு இருப்பதாக டெல்லி காவல்துறை அறிவித்தது. அந்தப் பகுதியில் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், "மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, இணையம் முடக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரை காவல்துறையினர் சுற்றி வளைத்து மக்களைக் கைது செய்து வருகின்றனர்" என்றார்.

மும்பையில் சிஜேபி போராட்டம்

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே, அக்டோபர் 2ஆம் தேதி மாலை 4 மணிக்கு மும்பை சிவாஜி பூங்காவில் சிறை நிரப்பும் (ஜெயில் பரோ) இயக்கத்தை அறிவித்தார்.

இந்த இயக்கத்திற்காக சிவாஜி பூங்காவில் பெருந்திரளான சிஜேபி ஆதரவாளர்கள் திரண்டு, தங்கள் கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்கை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
படக்குறிப்பு, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்கை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே மக்கள் சிவாஜி பூங்காவை அடையத் தொடங்கிவிட்டதாகவும், அக்டோபர் 2 அன்று மும்பை வரலாறு படைக்கும் என்றும் காக்ரோச் ஜனதா கட்சி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

சீசன் 2 தொடங்கியதாக சிஜேபி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. போராட்டங்களைக் கருத்தில் கொண்டு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில், ஏராளமான போராட்டக்காரர்கள் சிவசேனா பவனில் இருந்து சிவாஜி பூங்காவை நோக்கி சாலையில் பேரணியாகச் சென்றனர்.

சிஜேபி இயக்கம் குறித்து சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு தலைவர் ஆதித்ய தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில், "ஜனநாயகத்தை மீட்டெடுக்க மும்பை முன்வருகிறது. இந்த சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவளிக்க அனைவரும் இங்கு வருகை தருவீர்கள் என்று நம்புகிறேன்" என்று எழுதியிருந்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
படக்குறிப்பு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

"பாஜகவின் சர்வாதிகார ஆட்சி நமது வாக்கையும் குரலையும் பறித்துவிட்டது, அதை நாம் மீண்டும் பெற வேண்டும். இது அரசியல் சார்ந்த விஷயமல்ல, நாடு சார்ந்த விஷயம். இது நமது ஜனநாயகம், நமது வாக்கு மற்றும் நமது அரசியலமைப்பு பற்றிய விஷயம். ஞானேஷ் குமார் வெளியேற வேண்டும்," என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி திட்டமிட்ட போராட்டத்திற்கு மும்பை காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாக திப்கே முன்னதாகக் கூறியிருந்தார். பின்னர் காந்தி ஜெயந்தியன்று தனது "ஜெயில் பரோ அந்தோலன்" அமைப்பு தொடங்குமென அவர் அறிவித்தார்.

இருப்பினும், 2013 பம்பாய் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், "சிவாஜி பூங்காவில் எந்தவொரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்க தங்களுக்கு அதிகாரம் இல்லை" என்று மும்பை காவல்துறை தெளிவுபடுத்தியது. மேலும் அந்தப் பகுதி அமைதி மண்டலம் (Silence Zone) என்றும் காவல்துறை தெரிவித்தது.

இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களைக் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
படக்குறிப்பு, இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களைக் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்

போராட்டம் குறித்த அறிவிப்பு

முன்னதாக, காக்ரோச் ஜனதா கட்சி, மாணவர் அமைப்புகள், ஆம் ஆத்மி கட்சி மற்றும் பல அமைப்புகள் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 அன்று போராட்டம் அறிவித்திருந்தன. சிஜேபி மும்பையில் தனது போராட்டத்தை அறிவித்த நிலையில், பிற அமைப்புகள் அக்டோபர் 2ஆம் தேதி டெல்லி உள்ள ஜந்தர் மந்தரை அடையுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

அனைத்து இந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திட்டமிட்டிருந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும், தடையையும் மீறி ஒன்றுகூட அமைப்புகள் திட்டமிட்டிருந்தன.

ஆம் ஆத்மி கட்சியும் போராட்டத்தில் இணையுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்தது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-வும் டெல்லி முன்னாள் முதல்வருமான அதிஷி மக்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜந்தர் மந்தரை அடையுமாறு கேட்டுக்கொண்டார்.

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பாட்னாவில் நடைபெற்ற போராட்டம்
படக்குறிப்பு, ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பாட்னாவில் நடந்த போராட்டம்

"அக்டோபர் 2, 2026 அன்று காலை 10 மணிக்கு ஜந்தர் மந்தருக்கு செல்வோம்" என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார்.

மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் டெல்லி காவல்துறையை விமர்சித்து இன்ஸ்டாகிராமில், "மோதி/ஷா உத்தரவின் பேரில், ஜந்தர் மந்தர் போராட்டத்தை தடுப்பதற்காக டெல்லி காவல்துறை மத்திய டெல்லியை முற்றிலுமாக மூடியுள்ளது" என்று கூறியுள்ளார்.

அதோடு, "11 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இணையம் முடக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் முழுதாக காவல்துறையால் சூழப்பட்டு மக்கள் கைது செய்யப்படுகின்றனர். அதில், எம்.பி. மனோஜ் ஜாவும் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு