ஹோர்மூஸ் நீரிணை: அமெரிக்கா, இரானின் மோதலால் இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்

ஹோர்மூஸ் நீரிணை: அமெரிக்கா, இரானின் மோதலால் இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்களை நெருங்கியுள்ளது.

அமெரிக்கா செவ்வாய்க்கிழமையன்று இரானிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதே வேளையில், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சௌதி அரேபியாவின் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்கினர். மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இது ஒரு புதிய மற்றும் கடுமையான மோதலாகக் கருதப்படுகிறது.

பாரசீக வளைகுடாவில் நடக்கும் அமெரிக்கா-இரான் மோதல், ஏமனில் சௌதி அரேபியாவுக்கும் ஹூத்திகளுக்கும் இடையிலான மோதல் உள்ளிட்ட மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் பிரச்னைகள், தொடர்ந்து வரும் ரஷ்யா-யுக்ரேன் போர் ஆகியவைதான் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை உயர்த்துவதற்கான முக்கிய காரணங்களாகும்.

கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்கப் போர்க் கப்பலைக் குறிவைத்து இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதற்குப் பதிலடியாக, ஐந்து இரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் அழித்துள்ளதாக அமெரிக்க சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

'இந்தியாவின் சிக்கல்கள் அதிகரிக்கும்'

கச்சா எண்ணெய் விலையேற்றம் இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரிக்கும். இது இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையாக அமையும்.

இந்தியா தனது ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதே அளவு எண்ணெயை வாங்குவதற்கு இந்தியா அதிக டாலர்களை செலவிட வேண்டியிருக்கும்.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் நேரடியாக பாதிக்கப்படுகிறது. எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து, அது வர்த்தக சமநிலை மற்றும் ரூபாய் மதிப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடுமென பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக எரிபொருள், போக்குவரத்து மற்றும் பிற எரிசக்தி சார்ந்த செலவுகள் அதிகரித்து, அது உள்நாட்டு பணவீக்கத்தையும் பாதிக்கலாம். தற்போது, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலைகள் மூன்று மாதங்களுக்கும் மேலாக எவ்வித மாற்றமுமின்றி உள்ளன. கடைசியாக மே 25 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.61, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.71 என உயர்த்தப்பட்டது.

இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எரிபொருள் நிறுவனங்களின் லாப விகிதங்கள் குறையும். மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வின் முழு சுமையையும் நுகர்வோர் மீது உடனடியாக சுமத்த முடியாததால், இந்நிறுவனங்கள் ஏற்கெனவே தொடர் இழப்புகளைச் சந்தித்து வருவதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை, அமெரிக்கா-இரான், சௌதி அரேபியா, கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெற்கு இரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக நகருக்கு அருகில், ஹோர்மூஸ் நீரிணையை ஒரு கப்பல் கடந்து செல்கிறது.

தொடரும் பரஸ்பர தாக்குதல்கள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இரானின் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குவது, விநியோக நெருக்கடியைத் தீவிரப்படுத்துவதோடு, உலகப் பொருளாதாரங்களில் பணவீக்கத்தையும், பத்திரச் சந்தைகளில் வீழ்ச்சியையும் தூண்டுகிறது.

சென்ட்காம் தகவல்படி, தாக்குதலுக்கு உள்ளான கப்பல்கள் ஐஆர்ஜிசி மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளுக்கு நிதியளிக்கும் இரானின் ரகசிய வலையமைப்பின் ஒரு பகுதி. தாக்குதலுக்கு முன்பு கப்பல் குழுவினரை கப்பலை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது. இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே இந்தக் கப்பல்கள் தாக்கப்பட்டன.

இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்ட அமெரிக்க போர்க் கப்பல் தாக்கப்படவில்லை என்றும், அமெரிக்க வீரர்கள் எவரும் காயமடையவில்லை என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் அமெரிக்கா எட்டு இரானிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இரண்டு அமெரிக்க போர்க் கப்பல்கள் மீது இரான் ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து, தாங்கள் மூன்று இரானிய கச்சா எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக அமெரிக்கா சனிக்கிழமையன்று தெரிவித்தது. ஒரு கப்பலும், ஏவுகணை அழிப்புக் கப்பலும் ஐஆர்ஜிசி-யின் தாக்குதலில் இருந்து தப்பியதாக சென்ட்காம் கூறியது.

இரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இரண்டு அமெரிக்க போர்க் கப்பல்களையும் எட்டு எண்ணெய்க் கப்பல்களையும் தாங்கள் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளதாக இரானிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை, அமெரிக்கா-இரான், சௌதி அரேபியா, கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்ச் 8, 2026 அன்று அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு, இரானின் தெஹ்ரானில் உள்ள ஷஹ்ரான் எண்ணெய்க் கிடங்கில் இருந்து புகை எழுகிறது.

மேலும், ஹோர்மூஸ் நீரிணையின் "கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற பகுதியைக் கடக்க முயன்ற" 10 கப்பல்களைத் தாக்கியதாகவும் அது கூறியுள்ளது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் அல்-அஸ்ராக் விமானப் படை தளத்தின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்தக் குழு புதன்கிழமை அதிகாலையில் தெரிவித்துள்ளது. பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் மையங்கள், தயார்நிலை வசதிகள் மற்றும் போர் விமானங்களின் தங்குமிடங்கள் ஆகியவை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அது கூறியது.

இந்தப் பகுதியில் இருந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத் தடைகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்த ஆண்டின் மீதமுள்ள மாதங்கள் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான கச்சா எண்ணெய் விலை கணிப்புகளை சந்தை பகுப்பாய்வாளர்கள் உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.

சீனாவின் அதிகரிக்கும் எண்ணெய்த் தேவை மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் காரணமாக விரைவில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்களை தாண்டும் என்று யூரேசியா குரூப் எச்சரித்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்திற்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், சௌதி அரேபியா மீதான தாக்குதல்களை ஹூத்திகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் சௌதி அரேபியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள முனையங்களில் இருந்து எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டு செல்வது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு