வீட்டு சுவருக்குள் கிடைத்த தங்கம் - 1 கோடி டாலர் மதிப்பிலான புதையல் யாருக்கு சொந்தம்?

பட மூலாதாரம், Dendermonde Local Police
- எழுதியவர், நிக் பீக்
- பதவி, ஐரோப்பிய செய்தியாளர்
- எழுதியவர், மயா டேவிஸ்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
வீட்டின் சுவர்களுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் நாணயங்களை தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெல்ஜியத்தில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அடித்தள சுவர்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த தோராயமாக 1 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கச் சேமிப்பைக் கண்டறிந்துள்ளனர்.
கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டில், புதிய கழிவு நீர் குழாய்களைப் பதிப்பதற்காகத் துளையிடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, இந்தத் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் அடங்கிய மறைக்கப்பட்ட புதையல் அவர்களுக்குக் கிடைத்ததாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தங்கம் யாருக்குச் சொந்தமாகும் என்பதில் கவனம் குவிந்துள்ளது. அதைக் கண்டுபிடித்த தொழிலாளர்களும், அந்த வீட்டின் உரிமையாளரான உள்ளூர் தொண்டு நிறுவனமும் அதைக் கோருவதற்கான வாய்ப்புள்ளது.
இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதோடு, மேலும் புதையல் தேடும் ஆசையில் அந்த இடத்திற்குச் செல்ல நினைப்போருக்கு உள்ளூர் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த இடம் முழுமையாகச் சோதிக்கப்பட்டு, தங்கம் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கட்டடத்தின் அடித்தளப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தொழிலாளர்கள் இந்தப் புதையலைக் கண்டெடுத்தனர். அந்தத் தொழிலாளர்களில் கோடைக்கால வேலைக்காகச் சேர்க்கப்பட்ட 18 வயது இளைஞர் ஒருவரும் அடங்குவார்.
"எங்கள் முதல் எதிர்வினை நம்ப முடியாததாகவும் வியப்பாகவும் இருந்தது" என்று கோபி என்ற அந்த மாணவர் பெல்ஜிய பொது ஊடகமான வி.ஆர்.டி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"முதலில் அவை ஒரு யூரோ நாணயங்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், அதன் பிறகு அங்கு ஒரு தங்கக் கட்டி இருப்பதையும் பார்த்தோம். அப்போதுதான் அது பெரிய விஷயம் என்பதைப் புரிந்துகொண்டோம்."

பட மூலாதாரம், Dendermonde Local Police
'வைத்துக் கொள்வது திருட்டாகிவிடும்'
இதைத் தொடர்ந்து, தாங்கள் கண்டெடுத்த புதையல் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததோடு, அதைத் தாங்களே வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் அவர்கள் விளக்கினர்.
"அங்கு ஏராளமான நாணயங்களும் தங்கக் கட்டிகளும் உள்ளன; அவற்றை எங்கும் மறைத்து வைக்கவே முடியாது" என்று அந்த இடத்தின் மேலாளரான மாரியோ வி.ஆர்.டி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"அது மட்டுமின்றி, அது திருட்டாகிவிடும்" என்றார் அவர். கோபியும் அதை ஆமோதித்து, "9 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ளது: அதைச் எளிதில் மறைக்கவே முடியாது" எனக் குறிப்பிட்டார்.
தற்போது இந்தச் சொத்து 'சிஏடபிள்யூ ஊஸ்ட்-விளாண்டரென் (CAW Oost-Vlaanderen) என்ற அமைப்புக்குச் சொந்தமானது. இது சுமார் 47,000 மக்கள் தொகை கொண்ட ஃபிளெமிஷ் நகரமான டெண்டெர்மொண்டேவில் சமூக உதவி சேவைகளை வழங்கி வருகிறது.
இதன் இயக்குநர் கீர்ட் ஹில்லார்ட் கூறுகையில், தனது முதல் எதிர்வினை "வியப்பும் ஆச்சரியமும்" கலந்ததாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தத் தங்கம் இறுதியில் அந்தத் தொண்டு நிறுவனத்தின் பணிகளுக்கும், "நாங்கள் தினமும் எதிர்கொள்ளும் மாபெரும் தேவைகளை" பூர்த்தி செய்வதற்கும் உதவும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், Dendermonde Local Police
புதையலைத் தேடும் ஆசையில் கட்டுமானப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று உள்ளூர் காவல்துறையினர் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
தங்க நாணயத்தின் படம் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தின் பிரதான படமாக மாற்றியுள்ள உள்ளூர் காவல்துறை, இந்தக் கண்டுபிடிப்பு "சரியான இடத்தை" அடைந்து மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
பெல்ஜிய சட்டத்தின்படி, சரியான உரிமையாளர் தனது புதையலைக் கோருவதற்கு ஐந்து ஆண்டுகள் அவகாசம் உள்ளது. இருப்பினும், வழக்கைத் தொடங்கியுள்ள உள்ளூர் வழக்கறிஞர், அந்த உரிமையாளர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்றார்.
யாரும் உரிமை கோரவில்லை என்றால், மற்றொருவரின் சொத்தில் மறைந்திருக்கும் புதையல், அதைக் கண்டுபிடித்தவருக்கும் சொத்து உரிமையாளருக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும் என்று குடிசார் சட்டம் கூறுகிறது.
ஆயினும், புதையலுக்கும் குற்றச் செயல்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை எனக் கண்டறியப்பட்டால் மட்டுமே இது பொருந்தும்.
உரிமையாளர் முன்வருவதற்காக கட்டுமான நிறுவனமும் தொண்டு நிறுவனமும் இப்போது 1,823 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. யாரும் உரிமை கோரவில்லை என்றால், இந்த மௌனம் நிச்சயமாகத் தங்கமாக மாறும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































