இடைத்தேர்தலில் மதுராந்தகம் - 85.99% , தாராபுரம் - 80.31% வாக்குகள் பதிவு

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நிறைவடைவதற்கு முன்பே வந்துவிட்ட வாக்காளர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களை அலுவலர்கள் பாதுகாப்பாக சீல் வைத்தனர்.
மதுராந்தகத்தில் 85.99% , தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் (இரவு 7.30 மணியளவில்)தெரிவிக்கப்பட்டிருந்தது.
தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என முக்கிய அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளதால், இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இதே போல் புதுச்சேரி தட்டாஞ்சாவடியிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அங்கு மாலை 7.30 மணியளவில் 80.81% வாக்குகள் பதிவாகியிருந்தது.
தேர்தல் பணியாளர் மாற்றம்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொழிஞ்சிவாடி பகுதியில் வாக்குச்சாவடி மையத்துக்குள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க பிரசாரம் செய்ததாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தேர்தல் பணியாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய தாராபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜா, "தேர்தல் பணியாளர்களில் ஒருவர் மீது திமுகவினர் புகார் அளித்தனர். மூதாட்டி ஒருவர் வாக்களித்த வந்த போது அவரிடம் விசில் சின்னத்தை அழுத்துமாறு கூறியதாக புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பணியாளரை மாற்றி, மற்றொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
அந்த மூதாட்டி புகார் ஏதும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மூதாட்டி வாக்களித்து வெளியே வந்த பிறகு, இந்த விவகாரம் குறித்து வாக்குச்சாவடி மையத்தில் திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரிகளின் விளக்கத்துக்கு பிறகு வாக்குப் பதிவு மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.
தவெக வேட்பாளர் சத்யபாமா மீது திமுகவினர் புகார்

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களில் சத்யபாமா பேசியதாக சொல்லி பகிரப்படும் வீடியோவை குறிப்பிட்டு, திமுகவின் துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின் புகார் வழங்கியிருந்தார். அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று சத்யபாமா செவ்வாய்கிழமை காலை தெரிவித்திருந்தார்.
"தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தந்த அமைச்சர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் தங்குவதற்கு 14 லட்சம் செலவு செய்ததாக அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 77வது பிரிவின்படி ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் செலவு செய்யலாம் என்று கூறுகிறது. செய்யப்படும் செலவுகளுக்கு உரிய அதிகாரிகளிடம் தினந்தோறும் கணக்கு காட்ட வேண்டும்" என்று செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்டின் தெரிவித்தார்.
''வீடியோவில் குறிப்பிடப்படும் செலவுத் தொகை, சத்யபாமா சமர்ப்பித்த கணக்குடன் ஒத்துப் போகிறதா என்று சரி பார்த்து, இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் அவர் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரப்பட்ட வீடியோவில் இருப்பது சித்தரிக்கப்பட்டவை என்று தவெக வேட்பாளர் சத்யபாமா தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, "இவ்வாறான வீடியோ வெளியான பிறகு, எவரும் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்" என்று ஆஸ்டின் பதிலளித்தார்.
த.வெ.க - அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

தாராபுரம் தொகுதியில் வீராச்சிமங்கலம் கன்னிமார் கோவில் பகுதி வாக்குச்சாவடி அருகே தமிழக வெற்றி கழகத்தினருக்கும் , அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வெளியூரில் இருந்து வாக்கு சேகரிக்க வந்தவர்கள் விதிகளை மீறி தொகுதிக்குள் இருந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தவெக, அதிமுக, திமுக கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாராபுரம் அதிமுக வேட்பாளர் பானுமதியின் ஆதரவாளர்கள், த.வெ.க-வினரின் வாகனங்களைச் சூழ்ந்து சோதனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட எலப்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா திடீரென பழுதானதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட தண்டரைபுதுச்சேரியில் உள்ள வாக்குச் சாவடியில் குறிப்பிட்ட கட்சியின் சின்னத்தில் அடையாள மை இருந்ததாக புகார் எழுந்தது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அந்த இயந்திரம் மாற்றப்பட்டு புதிய இயந்திரம் வைக்கப்பட்டது. சுமார் அரைமணி நேர தாமதத்துக்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதே போன்று, தாராபுரம் கொட்டாப்புளிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 128-வது வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
தாராபுரம் அடுத்த குண்டடம் மானூர்பாளையத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில் 10 நிமிடம் தாமதமாக வாக்குபதிவு தொடங்கியது.
2 தொகுதிகளிலும் ஏன் இடைத்தேர்தல்?
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பின்னர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் காலியாகின. இதையடுத்து இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்பு அதிமுக சார்பில் வெற்றி பெற்று ராஜிநாமா செய்தவர்கள் என்பதால், அவர்களின் அரசியல் நிலைப்பாடு இந்தத் தேர்தலின் முக்கியப் பிரசாரப் பொருளாக மாறியுள்ளது.
தவெக வேட்பாளர்கள் கட்சி மாறி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக திமுகவும் அதிமுகவும் விமர்சித்துள்ளன. அதேவேளையில், தங்களது வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று தவெக தரப்பு பிரசாரம் செய்துள்ளது.
யார் யார் போட்டி?
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சரும் அக்கட்சித் தலைவருமான விஜய் பிரசாரம் செய்தார். மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் அவர் சாலைப் பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார்.
தாராபுரத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது சத்யபாமாவை ஆதரித்து விஜய் ரோட்ஷோ நடத்தினார். ஹெலிகாப்டரில் தாராபுரம் வந்த அவர், பல்வேறு பகுதிகள் வழியாக சாலைப் பேரணி மேற்கொண்டார்.
அப்போது பேசிய விஜய், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திக்க வருபவர் தான் அல்ல என்றும், தனது சொந்தங்களாகக் கருதும் மக்களை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன் என்றும் கூறினார்.
சத்யபாமா குறித்து திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசுவதை ஏற்க முடியாது என்றும், தன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் குடும்பப் பெண்களைப் பற்றி பேசினால் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் ஏன் முக்கியம்?
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அந்த அரசுக்கு முக்கியமான சோதனையாகப் பார்க்கப்படுகிறது.
தவெக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம் அரசுக்கு மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க முடியும் என்று அக்கட்சியின் தரப்பு கருதுகிறது. மறுபுறம், தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதன் மூலம் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்துள்ளன.
இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.
பிரசாரம் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகளின்படி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பிரசார நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,04,926 பேர் ஆண்கள், 1,08,797 பேர் பெண்கள், 65 பேர் மூன்றாம் பாலினத்தவர். வாக்களிக்க 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,07,285 பேர் ஆண்கள், 1,16,013 பேர் பெண்கள், 8 பேர் மூன்றாம் பாலினத்தவர். இங்கு 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் போட்டி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (அக்டோபர் 6) நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
முதலமைச்சர் என். ரங்கசாமி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் இ. விநாயகம், திமுக சார்பில் கே. சேதுசெல்வம் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தொகுதியில் சுமார் 27 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து செய்தியாளர் சேவியர் செல்வகுமாரும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து செய்தியாளர் விஜயானந்த் ஆறுமுகமும் களத் தகவல்களை வழங்கி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


































