'சொக்கத்தங்கம் தேவா'- நினைவுகளை பகிர்ந்த ரஜினி
தேவாவின் மறைவு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், "எனது அருமை நண்பர் தேவாவின் மறைவு அதிர்ச்சியையும் வேதைனையும் அளிக்கிறது. அவர் எனது அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் படங்களுக்கு இசையமைத்தார். அம்மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றிபெற்றன." என்று குறிப்பிட்டார்.
"படையப்பா படம் தொடங்கிய போது, ரஹ்மானை இசையமைப்பாளராக நியமிக்கலாம் என எனது நண்பர்கள் யோசனை தெரிவித்தனர். நானும் அரை மனதுடன் தேவாவிடம் சென்று இந்த விஷயத்தை சொன்னேன். அப்போது எழுந்து நின்று என் கையை பிடித்து 'தாராளமாக செய்யுங்க ரஜினி சார்' என்றார் தேவா" என ரஜினிகாந்த் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், "நீங்க தப்பா நினைத்துக்கொள்ளக் கூடாது என்று நான் சொன்னேன். அதற்கு, 'சார் உங்க கூட மூன்று படம் செய்ததே பெரிய பாக்கியம்'என்று கூறினார். அப்படிப்பட்ட கள்ளம் கபடம் இல்லாத நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் தேவா" என்றார்.
"வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் தேவா. ஆரம்ப காலத்தில் ஐந்து தம்பிகள் உடன் இணைந்து தெருத்தெருவாக கச்சேரி செய்தார். திரையுலகில் பெரிய இசையமைப்பாளராக வந்த பின்பும் தம்பிகளை கூடவே வைத்துக் கொண்டார். அந்தளவுக்கு அவர் ஒரு அருமையான குடும்பஸ்தர் தேவா" என்று அவர் கூறினார்.
"இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிபெற்றவர் தேவா. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் என்னை சந்தித்து கான்சர்ட் பண்ணலாம் என்றிருக்கிறேன், நீங்கள்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்றார். நானும் மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்தேன். அவருடைய கான்சர்ட் மிகப்பெரிய வெற்றி பெற்றது."
"சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு என்னை சந்தித்தார். அப்போது 'இளைஞர்களின் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது சார். இன்னும் 10-15 வருடங்கள் வாழ்ந்துவிட்டு சென்றுவிடுகிறேன்' என்று சொன்னார். ஆனால், ஆண்டவன் 'நீ ரொம்ப நல்லவன்பா சந்தோசமாக இருக்கும் போது வந்துவிடு என்று அவரை அழைத்துக்கொண்டார். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



