ஔரங்கசீப் ஆட்சி எப்படி இருந்தது? புதிய புரிதலை வழங்கும் வரலாற்று ஆவணங்கள்

ஔரங்கசீப், அக்பராத் ஆவணங்கள், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Heritage Images via Getty Images

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஐரோப்பா நாளிதழ்களை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், முகலாய ஆட்சியில் இருந்த இந்தியா குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காகத் தனக்கென ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருந்தது.

16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத்தர்கள், முகவர்கள், செயலாளர்கள் அடங்கிய பெரிய குழுக்கள் 'அக்பராத்' எனப்படும் சிறு செய்தி அறிக்கைகளைத் தயாரித்தன. அவற்றில் அரசவை, ராணுவப் படையெடுப்புகள், அரசாங்க நியமனங்கள், நிதிநிலை மற்றும் வதந்திகள், கிசுகிசுக்கள் போன்ற தகவல்கள் அடங்கியிருந்தன.

இந்தச் செய்தி அறிக்கைகள், எளிதில் சேதமடையக்கூடிய காகிதத் தாள்களில் பெரும்பாலும் அவசரமான கையெழுத்தில் பாரசீக மொழியில் எழுதப்பட்டன. அவை ஒரே நேரத்தில் உளவு அறிக்கைகள், அதிகாரபூர்வ அரசாங்கத் தகவல்தொடர்புகள், வழக்கமான செய்தி அறிக்கைகள் எனப் பல நோக்கங்களுக்காகப் பயன்பட்டன.

ஒவ்வொரு நாளும், நூற்றுக்கணக்கான, சில நேரங்களில் ஆயிரக்கணக்கான இத்தகைய அறிக்கைகள் முகலாய பேரரசரின் அரசவைக்கும் மாகாண அரசவைகளுக்கும் இடையே பயணித்தன. அவை பரந்த முகலாய பேரரசை இணைப்பில் வைத்திருக்க உதவின.

அக்பராத் ஆவணங்கள்

அதன் உச்சகட்டத்தில், அந்தப் பேரரசு இந்திய துணைக் கண்டத்தின் பெரும் பகுதியையும் உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கையும் ஆண்டது. இந்த அறிக்கைகளில் பல, அரசாங்க அதிகாரிகளுக்கு முன்பாக உரக்க வாசிக்கப்பட்டன. இதன் மூலம், அரசவையில் இருந்து வரும் முக்கியச் செய்திகள் பேரரசின் தொலைதூரப் பகுதிகளைச் சென்றடைய முடிந்தது.

பல தசாப்தங்களாக, இந்தச் செய்தி அறிக்கைகள், அரச ஆணைகள் மற்றும் நிர்வாகப் பதிவேடுகளைக் கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்கங்கள், இந்தியா மற்றும் பிரிட்டன் முழுவதும் உள்ள நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த ஆவணங்கள் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் அறிந்திருந்தனர். ஆனால் ஒரு சிலரே அவற்றை விரிவாக ஆய்வு செய்தனர்.

அத்தகைய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவர், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பெர்க்லி கிளையைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான முனிஸ் டி. ஃபரூக்கி.

2007ஆம் ஆண்டு தொடங்கி, இந்தியா மற்றும் பிரிட்டனில் உள்ள அனைத்து ஆவணக் காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் முகலாய காலப் பதிவேடுகளின் ஒரு பெரிய தொகுப்பான 'அக்பராத்-இ தர்பார்-இ முஅல்லா' (மேன்மைமிகு அவையின் செய்தி மடல்கள்) என்பதை அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கவனமாக ஆய்வு செய்தார்.

கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 6,500க்கும் மேற்பட்ட பக்கங்களை ஆய்வு செய்த முனிஸ் டி. ஃபரூக்கி, பல்லாயிரக்கணக்கான செய்திக்குறிப்புகள் வாயிலாக முகலாய இளவரசர்கள், படைத்தளபதிகள், அரசவை அதிகாரிகள், அரச குடும்பப் பெண்கள், அரசவை ஊழியர்கள் மற்றும் பல முக்கிய நபர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தார்.

ஔரங்கசீப், அக்பராத் ஆவணங்கள், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Royal Asiatic Society of Great Britain and Ireland

படக்குறிப்பு, பாரசீக மொழியில் எழுதப்பட்ட முகலாய அக்பராத் பக்கங்களின் கையெழுத்துப் பிரதி

ஔரங்கசீப் கால வரலாற்று ஆவணங்கள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவரது இந்த ஆய்வின் விளைவாக, 'ஆலம்கீர்' என்ற அரசப் பெயராலும் அறியப்படும் ஔரங்கசீப் மற்றும் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த முகலாயப் பேரரசு குறித்த ஒரு புதிய வரலாற்று நூல் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தியாவின் மிகவும் விவாதத்திற்குரிய முகலாய ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றிய புதிய புரிதலை வழங்குவது மட்டுமின்றி, உலகின் மிகச்சிறந்த நவீன காலத்திற்கு முந்தைய பேரரசுகளில் ஒன்று உண்மையில் எவ்வாறு செயல்பட்டது என்பதையும் இந்த நூல் அரிய கோணத்தில் காட்டுகிறது.

இன்று, இந்த முகலாய செய்திக்குறிப்புகள் லண்டன், பிகானீர், சீதாமௌ, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள குறைந்தது நான்கு முக்கியத் தொகுப்புகளாக பாதுகாக்கப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற இன்னும் பல ஆவணங்கள் தனிப்பட்ட சேகரிப்புகளில் இருக்கக்கூடும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

அத்தகைய ஒரு தொகுப்பு, ஜெய்ப்பூர் கோட்டையின் அடித்தளத்தில் கட்டுகளாகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியும் தொல்பொருள் ஆர்வலருமான ஜேம்ஸ் டாட், இந்தச் செய்திக் குறிப்புகளில் பலவற்றை இரவலாகப் பெற்றார்.

1823இல் அவர் பிரிட்டனுக்கு சென்றபோது, அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை. பின்னர், அந்தத் தொகுப்பை ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் நூலகத்திற்கு அவர் நன்கொடையாக அளித்தார்.

இருப்பதிலேயே, மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க தொகுப்பு தற்போது கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 21 தொகுதிகள் உள்ளன, இவை 1658 முதல் 1707 வரை முகலாயப் பேரரசை ஆட்சி செய்தவரும், பேரரசை கணிசமாக விரிவுபடுத்திய கடைசி மாபெரும் பேரரசருமான ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தை உள்ளடக்கியவை.

இந்தத் தொகுதிகள் ஒரு காலத்தில், முன்னோடி இந்திய வரலாற்றாசிரியரும் ஔரங்கசீப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவருமான சர் ஜதுநாத் சர்க்காரின் தனிப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

ஔரங்கசீப், அக்பராத் ஆவணங்கள், இந்தியா, வரலாறு

ஔரங்கசீப் கால இந்தியா எப்படி இருந்தது?

மேலோட்டமாகப் பார்க்கையில், இந்த ஆவணங்களில் பலவும் சாதாரணமானவையாகத் தோன்றலாம். அரசு நியமனங்கள், தகராறுகள், ராணுவ நகர்வுகள், பரிசுகள், நோய்கள் மற்றும் எண்ணற்ற சிறிய நிர்வாக விவகாரங்கள் குறித்த விவரங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், இந்தச் செய்திக் குறிப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து வாசிக்கும்போது, அவை மிகவும் மதிப்புமிக்கவையாக மாறுகின்றன. ஃபரூக்கியின் கூற்றுப்படி, முகலாயப் பேரரசு தனது சொந்த விவகாரங்களை எவ்வாறு கண்காணித்து நிர்வகித்தது என்பது குறித்த அரிய மற்றும் ஏறக்குறைய தொடர்ச்சியான பதிவுகளை இவை வழங்குகின்றன.

பேரரசராக ஔரங்கசீப்பின் முதல் 20 ஆண்டுகளைச் சார்ந்த எஞ்சியிருக்கும் ஆவணங்கள் முழுமையற்றவையாக உள்ளன. ஆனால், 1680களின் தொடக்கத்தில் இருந்தே ஏராளமான அறிக்கைகள் பாதுகாத்து வைக்கப்பட்டு, கிடைத்துள்ளன.

இவை, பல ஆண்டுகளாக நிகழ்ந்த நிகழ்வுகளை ஏறக்குறைய அன்றாட அடிப்படையில் அறிந்துகொள்ளும் வாய்ப்பை வரலாற்று ஆசிரியர்களுக்கு வழங்குகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், ஔரங்கசீப்பின் ஏறக்குறைய 50 ஆண்டு கால ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு காலப்பகுதியை விளக்குவதற்கு இந்த ஆவணங்கள் உதவுகின்றன.

முனிஸ் டி. ஃபரூக்கி தனது பணிவாழ்வின் பெரும்பகுதியை 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய முகலாயப் பேரரசை ஆய்வு செய்வதிலேயே கழித்துள்ளார். அந்தப் பேரரசு தனது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த அதே வேளையில், காலப்போக்கில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்த வீழ்ச்சியை நோக்கியும் மெல்ல நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

'அக்பராத்' எனப்படும் ஆவணங்கள், அந்தக் காலகட்டத்தைப் புரிந்துகொள்வதற்கான முற்றிலும் புதியதொரு கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கின.

"அக்பராத் ஆவணங்களைக் கொண்டு பணியாற்றிய என் அனுபவம் முழுவதும், அடுத்தடுத்து நிகழ்ந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளின் நீட்சியாகவே அமைந்திருந்தது. அக்காலத்தில் நிலவிய தகவல் பரிமாற்றச் சூழலின் செறிவும் விரிவும் என்னை இன்றும் வியக்க வைக்கின்றன," என்று ஃபரூக்கி கூறினார்.

ஔரங்கசீப், அக்பராத் ஆவணங்கள், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, முகலாயர் காலத்துச் செய்தி அறிக்கைகளின் எஞ்சியிருக்கும் தொகுப்புகளிலேயே மிகவும் செழுமையானது கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

'முகலாய பேரரசு முழுவதுமான நடப்புகள் பற்றிய புரிதல் இருந்தது'

ஃபரூக்கி ஆய்வு செய்த செய்தி அறிக்கைகள் ஜெய்ப்பூர் அரசருக்காகத் தயாரிக்கப்பட்டவை. முகலாய பேரரசு முழுவதும் இருந்த நூற்றுக்கணக்கான பிரபுக்கள், இளவரசர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரும் தங்கள் சொந்தத் தூதர்கள் மூலம் இத்தகைய அறிக்கைகளைப் பெற்றிருப்பார்கள் என்று அவர் கருதுகிறார். இவையனைத்தும் இணைந்து, நவீன காலத்தின் தொடக்கக் கட்டத்தில் இருந்த மிகச் சிறந்த தகவல் வலைப்பின்னல்களில் ஒன்றை உருவாக்கின.

"இத்தகைய செழுமையான அறிவு சேகரிப்பு மற்றும் பரிமாற்ற முறையை உருவாக்கிய அந்தச் சூழலைப் பற்றி நினைக்கும்போதே எனக்கு வியப்பு ஏற்படுகிறது," என்று ஃபரூக்கி கூறுகிறார்.

ஃபரூக்கியின் கூற்றுப்படி, சேகரிக்கப்பட்ட தகவல்களின் பெருமளவைக் காணும்போது, அந்தக் காலகட்டத்திலேயே முகலாய பேரரசு தனது பரந்த ஆட்சிப் பகுதி முழுவதும் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து மிகச் சிறந்த புரிதலைக் கொண்டிருந்தது புலனாகிறது.

தமக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் செயல்படுவதில் பேரரசு எப்போதும் ஒரே மாதிரியான வெற்றியைப் பெற்றிருக்கவில்லை என்று அவர் கருதுகிறார். இருப்பினும், செய்திகளைச் சேகரிக்கும் அதன் திறன் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. "சில நேரங்களில் அது நன்மை பயப்பதாகவும், சில நேரங்களில் தீமை விளைவிப்பதாகவும் அமைந்தது."

புதிய புரிதலை வழங்கும் வரலாற்று ஆவணங்கள்

அந்த ஆவணங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்தபோது, தனது முந்தைய நம்பிக்கைகள் பலவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக ஃபரூக்கி கூறுகிறார்.

உதாரணமாக, ஔரங்கசீப்பின் ஆட்சியுடன் பெரும்பாலும் தொடர்புபடுத்தப்படும் பெரிய அளவிலான மதமாற்றங்கள் குறித்த சான்றுகள் மிகக் குறைவாகவே இருந்ததை அவர் கண்டறிந்தார். வரலாற்றாசிரியர்கள் முன்பு கருதியதைவிட, அரச அந்தப்புரமும் முகலாய அரசவையில் இருந்த அதிகாரிகளும் அரசியல் ரீதியாக அதிக செல்வாக்குடன் இருந்ததையும் அவர் கண்டறிந்தார்.

அந்த ஆவணங்கள் ஔரங்கசீப்பை, ஃபரூக்கி எதிர்பார்த்ததைவிடக் குறைவான தனிமை மற்றும் குறைவான கண்டிப்பு கொண்ட ஒருவராகவே காட்டின. அத்துடன், சீக்கியர்கள் போன்ற குழுக்கள் குறித்த எதிர்மறையான குறிப்புகள் அவர் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாகவே இருந்தன.

இது நீண்டகாலமாக நிலவி வந்த சீக்கிய மரபுக்கு முரணாக இருந்தது. ஏனெனில், 1711ஆம் ஆண்டில் இருந்தே சீக்கிய ஆன்மீகத் தலைவர்களும் ஒட்டுமொத்த சீக்கிய சமூகமும் துன்புறுத்தியதற்கு ஔரங்கசீப்பே காரணம் என்று அந்த மரபு கருதி வந்தது. ஃபரூக்கியின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் சில, ஏதோவொரு தனிப்பட்ட பரபரப்பான ஆவணத்தில் இருந்து கிடைக்கவில்லை. மாறாக, பல்வேறு பதிவுகளில் ஒரே மாதிரியான விவரங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றதைக் கவனித்ததன் மூலமே அவை கிடைத்தன.

ஔரங்கசீப், அக்பராத் ஆவணங்கள், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images

செல்வாக்குடன் திகழ்ந்த ஔரங்கசீப்பின் மகள்

செய்திக் குறிப்புகளில் மீண்டும் மீண்டும் இடம்பெற்ற ஒரு பெயர் ஜினத்-உன்-நிசா. இவர் ஔரங்கசீப்பின் மகள். வரலாற்று ஆசிரியர்களுக்கு அவரைப் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், முகலாய அரசவையில் அவர் வகித்த பங்கு குறித்து மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருந்தது. ஆனால், ஃபரூக்கி தொடர்ந்து வாசித்தபோது, பக்கம் பக்கமாக அவரது பெயர் இடம்பெற்று இருப்பதைக் காண முடிந்தது.

சில வாரங்களிலேயே, ஜினத்-உன்-நிசா அரச குடும்பத்தின் ஒரு சாதாரண உறுப்பினர் மட்டுமல்ல, வரலாற்றாசிரியர்கள் முன்பு கருதியதைவிட முகலாய அரசவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபர் என்பதை ஃபரூக்கி உணர்ந்துகொண்டார்.

ஜினத்-உன்-நிசா வெறும் ஒரு முகலாய இளவரசி மட்டுமல்ல. முனிஸ் டி. ஃபரூக்கியின் கூற்றுப்படி, அவர் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்தார். தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் வயதானவராகவும் அரசியல் ரீதியாக பலவீனமான நபராகவும் இருந்த தனது தந்தை ஔரங்கசீப்புக்கு, அவர் "மிகவும் செல்வாக்கு மிக்க, முக்கியமான அரசியல் அரணாக" விளங்கினார்.

வரலாற்று ஆவணங்களில் அவரது பெயரைத் திரும்பத் திரும்பக் கண்ட பிறகு, ஃபரூக்கி அவரைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் குறித்துக் கொள்ளத் தொடங்கினார். காலப்போக்கில், முகலாய அரச அந்தப்புரம் குறித்த அவரது ஆராய்ச்சியில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக ஜினத்-உன்-நிசா மாறினார்.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் ஃபரூக்கியை தனது முந்தைய நம்பிக்கைகள் பலவற்றையும் கேள்விக்கு உள்ளாக்க வைத்தது. "1990களில் (நான் முதன்முதலில் 'அக்பராத்' பற்றிக் கேள்விப்பட்டபோது) எனக்குள் நான் கொண்டிருந்த பல கதைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது," என்று அவர் கூறுகிறார்.

ஃபரூக்கியின் கூற்றுப்படி, அக்பராத் ஆவணங்கள், ஔரங்கசீப் மட்டுமின்றி ஒட்டுமொத்த முகலாய பேரரசையும் புதிய கண்ணோட்டத்தில் அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கின.

இவற்றை அறியும்போது, இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது: பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் ஏன் அக்பராத் ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்வதில் இருந்து விலகியே இருந்தனர்?

பல ஆராய்ச்சியாளர்கள் ஏன் தயங்குகிறார்கள் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதாக ஃபரூக்கி கூறுகிறார். தனது ஆய்வுப் பணியின் ஆரம்பக் கட்டத்தில், மற்றொரு பெரிய முகலாய ஆவணத் தொகுப்பை ஆய்வு செய்ய முயன்று ஏழு வாரங்கள் விரக்தியுடன் கழித்தார். இறுதியில், அந்தத் தொகுப்பைக் கையாள்வது மிகவும் கடினமாக இருந்ததால் அவர் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

ஔரங்கசீப், அக்பராத் ஆவணங்கள், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

ஔரங்கசீப் பற்றிய புதிய வரலாற்று விவாதங்கள் தொடர்வது ஏன்?

அந்த அனுபவம், பெரிய மற்றும் ஒழுங்கமைக்கப்படாத ஆவணத் தொகுப்புகளை ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு அவரைத் தவிர்க்க வைத்தது.

அக்பராத் ஆவணங்களும் அத்தகையதொரு சவாலையே முன்வைத்தன. "அதில் எதையாவது தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்றது," என்று ஃபரூக்கி கூறுகிறார்.

அந்தத் தொகுப்பில் பொருளடக்கம் எதுவும் இல்லை; அதில் பல்லாயிரக்கணக்கான குறிப்புகள் உள்ளன. இதனால், பயனுள்ள தகவல்களைக் கண்டறியவோ அல்லது முக்கியமான போக்குகளைப் புரிந்துகொள்ளவோ, வரலாற்று ஆசிரியர்கள் பக்கம் பக்கமாக வாசிப்பதற்கு மிகுந்த பொறுமையும், உறுதியும், நேரமும் செலவிட வேண்டியுள்ளது.

ஃபரூக்கியின் கூற்றுப்படி, ஔரங்கசீப் தொடர்ந்து புதிய வரலாற்று விவாதங்களை உருவாக்குவதற்கான காரணங்களில் ஒன்று, அவரது ஆட்சிக்காலம் குறித்த ஏராளமான ஆவணங்கள் இன்றும் எஞ்சியிருப்பதே. இவை வரலாற்று ஆசிரியர்களுக்கு ஆய்வு செய்வதற்கான புதிய சான்றுகளையும் புதிய கண்ணோட்டங்களையும் தொடர்ந்து வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தொடக்ககால முகலாய பேரரசர்கள் மிகக் குறைவான வரலாற்று ஆவணங்களையே விட்டுச் சென்றிருந்த நிலையில், ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலம் குறித்த ஏராளமான ஆவணங்கள் கிடைக்கின்றன. அரசுப் பதிவுகள், தனிப்பட்ட கடிதங்கள், பிராந்திய வரலாறுகள், வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகள், கவிதைகள், ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் ஆவணங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.

முனிஸ் டி. ஃபரூக்கி கூற்றுப்படி, 'அக்பராத்' அவரது ஆராய்ச்சிக்கு ஒரு முக்கிய ஆதாரமாக அமைந்தன. இருப்பினும், இவை இன்னும் ஆழமாக ஆராயப்படாத மிகப்பெரிய வரலாற்று ஆவணத் தொகுப்பின் ஒரு பகுதி மட்டுமே என்று அவர் குறிப்பிடுகிறார்.

"துணிச்சலான வரலாற்று ஆசிரியர்கள் வந்து பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கும் ஏராளமான ஆவணங்களின் அடிப்படையில், டஜன்கணக்கான அல்லது அதற்கும் மேலான புத்தகங்களை எழுத முடியும்," என்று ஃபரூக்கி கூறுகிறார்.

கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் இருந்த அந்த ஆவணத் தொகுப்பை ஃபரூக்கி முதன்முதலில் திறந்து பார்த்தபோது, அது எவ்வளவு மதிப்புமிக்கதாக அமையப் போகிறது என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

"முதல் தொகுதியின் முதல் பக்கத்தைத் திருப்பியவுடனேயே, இந்தத் தொகுப்பு எவ்வளவு சிறப்பான ஒரு வரலாற்று ஆதாரம் என்பதை நான் உணர்ந்தேன்," என்று அவர் நினைவு கூர்கிறார்.

"நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட அல்லது மிகக் குறைவாகவே கவனிக்கப்பட்ட பல வரலாற்று நிகழ்வுகளை நான் உடனடியாகக் கண்டேன்."

அந்த ஆவணங்களில் உள்ளவற்றில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தனது ஆய்வு ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கருதுகிறார். "இன்னும் ஆராயப்பட வேண்டியவை ஏராளமாக உள்ளன," என்கிறார் அவர்.

ஃபரூக்கியின் கருத்துப்படி, எஞ்சியிருக்கும் முகலாய ஆவணங்களில் இன்னும் சொல்லப்படாத பல கதைகள் உள்ளன, முகலாய பேரரசைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற, எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் தொடர்ந்து அவற்றை ஆராய்வார்கள் என்று அவர் நம்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு