தாராபுரத்தில் முன்னிலையில் இருந்த அதிமுக 3-ஆம் இடத்துக்கு பின்தங்கியது - அடுத்தடுத்து மாறிய நிலை

தாராபுரத்தில் முன்னிலையில் இருந்த அதிமுக 3-ஆம் இடத்துக்கு பின்தங்கியது - அடுத்தடுத்து மாறிய நிலவரம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தாராபுரம் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசியல் களத்தில் நிலவிய மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டன.

முதலில் தவெக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது.

ஆரம்பத்தில் அதிமுக முன்னிலையில் இருந்த நிலையில், பின்னர் தவெக முன்னிலை பெற்றதுடன், அதிமுகவை பின்னுக்குத் தள்ளி திமுக இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதியன்று, தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

தாராபுரம் இடைத்தேர்தலில் கடந்த ஏப்ரலில் நடந்த பொதுத்தேர்தலில் இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த சத்யபாமா, தவெக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

மறுபுறம், திமுக வேட்பாளராக சுகன்யா, அதிமுக வேட்பாளராக பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் 17 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

தாராபுரம்: அதிமுக - தவெக மாறி மாறி முன்னிலை - இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் மனநிலையை காட்டுகிறதா?

ஆரம்பக்கட்ட சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதி தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். நான்காவது சுற்றின்படி, 958 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக முன்னிலையில் இருந்தது. நான்காவது சுற்று முடிவில் 10,773 வாக்குகளை அதிமுக பெற்றிருந்தது. மேலும், தவெக 9,815 வாக்குகளையும், திமுக 8906 வாக்குகளையும் பெற்றிருந்தன.

ஆனால் ஐந்தாவது சுற்றிலிருந்து தேர்தல் முடிவுகள் மாறத் துவங்கின. அந்த ஒரே சுற்றில் முந்தைய வாக்கு வித்தியாசத்தையும் கடந்து 724 வாக்குகள் அதிகம் பெற்று தவெக முன்னிலை பெற்றது. அதற்குப் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் படிப்படியாக முன்னேறி, பத்தாவது சுற்று முடிவில் 4,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை பெற்றிருந்தது.

சமீபத்திய நிலவரப்படி 21வது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா 62851 வாக்குகளையும், திமுக வேட்பாளர் சுகன்யா 53013 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 41484 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதனால் தவெக நிச்சயமாக வெற்றி பெறுமென்று தவெகவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகளில் தாராபுரம் தொகுதியும் ஒன்று. அந்தத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 2,22,406 வாக்காளர்களில், 1,99,944 பேர் வாக்களித்திருந்தனர். பதிவான வாக்குகளில் 81,100 வாக்குகள் அதாவது 32.20 சதவிகித வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றிருந்தார்.

தாராபுரம்: அதிமுக - தவெக மாறி மாறி முன்னிலை - இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் மனநிலையை காட்டுகிறதா?
படக்குறிப்பு, ஆரம்பக்கட்டத்தில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டிருந்த தவெக வேட்பாளர் சத்யபாமா தற்போது 48 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

கடுமையான போட்டி நிலவிய தாராபுரம் தொகுதி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இரண்டாவது இடம் பிடித்த திமுக வேட்பாளர் இந்திராணி 64,373 (32.20%) வாக்குகளைப் பெற்றார். ஆனால் தவெக அங்கு மூன்றாவது இடத்தையே பிடித்திருந்தது. அக்கட்சியின் வேட்பாளர் கெளரி சித்ராவுக்கு 46,438 வாக்குகளே கிடைத்திருந்தன. அது பதிவான வாக்குகளில் 23.23 சதவிகிதம். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மே 25 அன்று அதிமுக எம்.எல்.ஏ சத்யபாமா தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

பிறகு, அதே நாளில் அவர் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் அதிமுக சார்பில் வென்றவர்கள், தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் அவற்றில் இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடந்தது. இரண்டிலுமே ராஜிநாமா செய்தவர்களுக்கே தவெக சார்பாகப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி சத்தியபாமா இத்தொகுதி தவெக வேட்பாளர் ஆனார்.

அவர் பரப்புரைக்குச் சென்ற சில இடங்களில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்னணியில் திமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்படுவதாக பிபிசியிடம் அப்போது பேசிய சத்யபாமா தெரிவித்தார்.

வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளில், அவர் தவெகவினர் பற்றி பேசியதாக ஒரு காணொளி, வைரலாக பரவியது.

ஆனால், அது பொய்யான சித்தரிக்கப்பட்ட காணொளி என்று தெரிவித்தார் சத்யபாமா. அதே கருத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் கூறினர்.

தேர்தலுக்கு முன்பு பிபிசியிடம் பேசியிருந்த அதிமுக வேட்பாளர் பானுமதி, ''தாராபுரம் தொகுதியில் கடந்த முறை கிடைத்த வெற்றி இரட்டை இலை சின்னத்திற்கு விழுந்த வாக்குகளால் கிடைத்தது. அது சத்யபாமாவுக்கு விழுந்த வாக்குகள் அல்ல. அதனால் இந்த முறையும் இரட்டை இலைக்கு வாக்களித்து உங்களை வெற்றி பெற வைப்போம் என்று மக்கள் என்னிடம் கூறினர்'' என்று அவர் குறிப்பிட்டார்.

அதை மறுத்துப் பேசிய சத்யபாமா, ''இரட்டை இலைக்கு குறிப்பிட்ட சதவிகித வாக்குகள் இருந்தது உண்மைதான். ஆனால் அந்தத் தேர்தலில் எங்கள் களப்பணியும், மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையும்தான் 81 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுத் தந்தது. இந்த முறை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவேன்'' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தத் தொகுதியில் போட்டி மிகக் கடுமையாக இருந்த காரணத்தால், முதல்வர் ஜோசப் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தலா இரு முறை வந்து பரப்புரை செய்தனர், சாலை வலம் சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் தொடர் பரப்புரையில் ஈடுபட்டனர். பரப்புரை காரணமாக தொகுதியில் போட்டி கடுமையானது.

அத்துடன், கடைசி நேரத்தில் பரவிய காணொளி, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமென்று, தொகுதிக்குள் பெரும் விவாதங்கள் எழுந்தன. அதன்படியே வாக்கு எண்ணிக்கையில் முதலில் அதிமுக முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கி வருகிறது.

தாராபுரம்: அதிமுக - தவெக மாறி மாறி முன்னிலை - இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் மனநிலையை காட்டுகிறதா?

'தவெகவை வீழ்த்த கடைசி நேரத்தில் எடுத்த முயற்சி பலனளிக்காது'

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ''நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நான்காவது சுற்றில் 1000 வாக்குகள் பின் தங்கியிருந்த நிலையில், 5வது சுற்றில் அந்த வாக்குகளையும் முந்தி 724 வாக்குகள் முன்னிலை பெற்றோம். இப்போது தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறோம். இனி இதே நிலைதான் தொடரும். இந்த அரசின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. கடைசி நேரத்தில் ஏதேதோ செய்து, தவெகவை வீழ்த்த மற்ற கட்சிகள் இணைந்து முயன்றன. அது எதுவும் எடுபடாது'' என்றார் அவர்.

உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர். சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது தவெக துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.

ஆனால் இரட்டை இலை மீதான மக்களின் அபிமானம் மற்றும் தங்கள் களப் பணி காரணமாக அதிமுக மீண்டும் வெற்றி பெறுமென்று பிபிசியிடம் அக்கட்சியினர் கூறினர்.

அது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ''இப்போது பின்தங்குவதைப் பற்றி எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. நான் தாராபுரம் முழுவதும் களத்தில் வலம் வந்த வகையில், அங்குள்ள மக்கள் இரட்டை இலை மீது தீராத பற்று கொண்டிருக்கிறார்கள். அந்த அதிமுக விசுவாசம் இப்போதும் மாறாமல் இருக்கிறது'' என்றார்.

தாராபுரம்: அதிமுக - தவெக மாறி மாறி முன்னிலை - இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் மனநிலையை காட்டுகிறதா?

இந்தத் தொகுதிகள் இரண்டுமே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்ற நிலையில், திமுகவுக்கு கிடைக்கும் வாக்குகள் குறித்தும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், "இந்த இரண்டு தொகுதிகளிலும் பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தற்போது தவெக வெற்றி பெற்றால், அது பல்வேறு சந்தேகங்களை எழுப்பும்.'' என்று தெரிவித்தார்.

அதோடு,''அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மாறிய இரண்டு வேட்பாளர்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாங்கள் பிரசாரத்தின்போது இந்த இரண்டு தொகுதிகளிலும் பார்த்தோம். ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு மாறாக இருப்பது எங்களுக்கு மேலும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது" என்றார்.

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு சாதகமான போக்கு இருக்கும்தான் எனக் குறிப்பிட்ட இளங்கோவன், "ஆனால், இவை வழக்கமான இடைத்தேர்தல்கள் அல்ல. பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளிலும், அதே வேட்பாளர்கள் தற்போது வேறு கட்சியின் சார்பில் போட்டியிட்டுள்ளனர்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு