காணொளி: மும்பையில் காவல்துறை வாகனத்தை தனி ஆளாக வழிமறித்த 'வைரல்' பெண் யார்?
தனி ஆளாக பெண் ஒருவர் போலீஸ் வாகனத்தை வழிமறித்த இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மும்பையின் சிவாஜி பார்க் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்தக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. சாம்பல் நிற ஹூடி அணிந்திருந்த அந்தப் பெண், கைகளை நீட்டி வாகனத்தைத் தடுத்து நிறுத்த்துகிறார். அவரது பெயர் ரியா யாதவ்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, *காக்ரோச் ஜனதா கட்சி* டெல்லியில் நடத்திய போராட்டத்தில் ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து மும்பையிலும் மாணவர்கள் பேரணி நடத்தினர்.
சேனா பவன் பகுதியில் சில மாணவர்களை போலீசார் காவலில் எடுத்தனர். அப்போது, காவலில் எடுக்கப்பட்ட மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் போக்குவரத்து நெரிசலைக் கடந்து செல்ல முயன்றபோது, ரியா அதன் முன் சென்று நின்றார். அவரது செயலைக் கண்டு மற்றவர்களும் முன்வந்து அவருடன் இணைந்தனர்.
வாகனம் தடுக்கப்பட்டதால் பின்னால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இறுதியில், காவலில் எடுக்கப்பட்டவர்களை வெளியே செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தற்போது பல இடங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சிவாஜி பார்க் பகுதியில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியிருந்தாலும், அதற்கான அனுமதி பெறப்படவில்லை என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 1,500 போராட்டக்காரர்கள் அங்கு கூடியிருந்ததாகவும், அவர்கள் அமைதியான முறையில் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறினர். சுமார் 200 போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



