டிரம்ப் புறப்பட்ட உடன் புதின் சீனா செல்வது ஏன்? உலக அதிகார மையமாக மாறுகிறதா சீனா?

பட மூலாதாரம், SPUTNIK/KREMLIN POOL/EPA/Shutterstock
- எழுதியவர், பிபிசி சீனா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று சீனாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகச் செல்லவுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்த அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். புதினின் சீனப் பயணத்தை உறுதிப்படுத்தி ரஷ்ய அதிபர் மாளிகையும் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இதற்கு முன்னதாக, மே 13 முதல் 15 வரை டிரம்ப் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார், அப்பயணம் முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த பயணத்தில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் டிரம்புடன் சென்றிருந்த போதிலும், பயணம் முடிந்த பிறகும் எந்தவொரு ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.
அதன் பின்னர், சரியாக மூன்று நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றடைவார்.
புதினும் ஷி ஜின்பிங்கும் இருதரப்பு உறவுகள், சீனா மற்றும் ரஷ்யா இடையிலான விரிவான கூட்டாண்மை மற்றும் உத்தி ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பார்கள் என்றும், முக்கியமான சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் கூட்டு அறிக்கை மற்றும் பல இருதரப்பு ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளன.
இது தவிர, சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் 'சீன-ரஷ்ய கல்வி ஆண்டு' தொடக்க விழாவிலும் கலந்து கொள்வார்கள்.

பட மூலாதாரம், Reuters
உறவை ஆழப்படுத்தும் முயற்சி
புதினின் சீனப் பயணம், நல்ல அண்டை நாடு மற்றும் நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதன் 25-வது ஆண்டு நிறைவு நாள் அன்று அமைவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 2001-ல் மாஸ்கோவில் அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் மற்றும் புதின் இடையே கையெழுத்தானது.
புதினும் ஷி ஜின்பிங்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்துகொண்டபோது கடைசியாகச் சந்தித்தனர்.
இதற்குப் பிறகு, ஜப்பானுக்கு எதிரான எதிர்ப்பு போரில் பெற்ற வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக புதின் சீனா சென்றார்.
அந்த அணிவகுப்பில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த மே மாதம், ஷி ஜின்பிங், புதினின் அழைப்பின் பேரில் மாஸ்கோவிற்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
அதிபரான பிறகு ஷி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட 11-வது பயணம் இதுவாகும், மேலும் அவர் அதிக முறை பயணித்த நாடும் ரஷ்யா தான்.
அப்போது ஷி ஜின்பிங் ஆற்றிய உரையில், சீனாவும் ரஷ்யாவும் "பிரித்து பார்க்க முடியாத நல்ல அண்டை நாடுகள், இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் உண்மையான நண்பர்கள் மற்றும் ஒருவருக்கொருவர் வெற்றியைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல பங்காளிகள்" என்று கூறினார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, புதினும் ஷி ஜின்பிங்கும் கடந்த சில ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளனர்.
ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்த உடனேயே, 2022 பிப்ரவரியில் இரு தலைவர்களும் 'வரம்பற்ற' உத்தி கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ரஷ்ய - யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேச தடைகளும் தனிமைப்படுத்துதலும் அதிகரித்தன. ஆனால் சீனா ரஷ்யாவை வெளிப்படையாக விமர்சிக்கவோ அல்லது தடைகளை ஆதரிக்கவோ இல்லை.
இரு நாடுகளும் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பைத் தொடர்ந்தன, மேலும் சீனாவின் மீதான ரஷ்யாவின் பொருளாதாரச் சார்பு தொடர்ந்து வளர்ந்தது.
சீனா-அமெரிக்க சந்திப்பைக் கண்காணித்து வந்த ரஷ்யா

பட மூலாதாரம், Evan Vucci - Pool/Getty Images
சீனா மற்றும் அமெரிக்கா இடையே 'பிரித்தாளும் சூழ்ச்சி' உத்தியை ரஷ்யா கடைப்பிடிக்காது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
"சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏதேனும் ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தால் அல்லது எட்டப்படப் போகிறது என்றால், அது எங்களது சீன நண்பர்களின் நலனுக்கு உகந்தது. மேலும் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைவோம்" என்று அவர் கூறினார்.
"சீனா-ரஷ்யா உறவுகள், பாரம்பரிய ராணுவ மற்றும் அரசியல் கூட்டணியை விட ஆழமானவை மற்றும் வலுவானவை. இது ஒரு புதிய உறவாகும். இது மற்ற எந்த காரணியையும் விட, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்" என்று லாவ்ரோவ் கூறினார்.
இந்நிலையில், புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் நேரம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இது புதினின் வழக்கமான பயணம் என்றும், பெரிய ராணுவ அணிவகுப்போ அல்லது பிரமாண்டமான வரவேற்பு விழாவோ எதிர்பார்க்கப்படவில்லை என்றும் வட்டாரங்கள் கூறியதாக செளத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரே மாதத்தில் இரண்டு நாடுகளின் தலைவர்களை சீனா வரவேற்பது இதுவே முதல் முறை என்றும் செளத் சீனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் கலாசார அறிஞரும், நடப்பு விவகாரங்கள் வர்ணனையாளருமான ஹுவாங் விகுவோ, சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகளில் பல்வேறு வகையான அதிகாரப் போட்டிகள் நடந்து வருவதாகவும், டிரம்பின் சீனப் பயணம் சீனா-ரஷ்யா உறவுகளைப் பாதிக்காது என்றும் நம்புகிறார்.
"மேலோட்டமாகப் பார்க்கும்போது, அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரிகளாகத் தோன்றுகின்றன, ஆனால் அமெரிக்கா, ரஷ்யா-யுக்ரேன் போரில் ஒரு பங்கை வகிக்க விரும்புகிறது மற்றும் தன்னை அமைதி ஏற்படுத்தும் ஒரு நாடாகக் காட்டிக்கொள்ள நினைக்கிறது'' என்றார்.
இந்த மூன்று நாடுகளில், தற்போது சீனாவிடமே 'அதிகப்படியான சாதகமான அம்சங்கள்' இருப்பதாக அவர் கருதுகிறார்.
மேலும், "டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பதற்றமடைந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதையும், சற்றே குறைவான மோதல் போக்கைக் கொண்ட உறவைப் பேணுவதையும் நாம் காண்கிறோம்" என்று ஹுவாங் வெய்குவோ கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
டிரம்பின் வருகை
மறுபுறம், டிரம்ப் தனது சீனப் பயணத்தை முடித்த பிறகு, செப்டம்பர் மாதத்தில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஷி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.
ஷி ஜின்பிங் இந்த ஆண்டு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வார் என்பதை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
டிரம்பின் சீனப் பயணம் முடிந்து 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்குள் புதினின் சீனப் பயணம் குறித்த செய்தி வெளியானது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் சீனப் பயணம் குறித்த ஊடகச் செய்திகளை ரஷ்ய அதிபர் மாளிகை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், புதினின் சீனப் பயணத்தின் போது அதுகுறித்த நேரடித் தகவல்களைப் பெற நம்புவதாகவும் அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாக மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - சீனா தலைவர்களுக்கிடையே சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிய இரு தரப்பு கருத்துகளை இந்த சந்திப்பின்போது பரிமாறிக் கொள்வார்கள் என்றார் அவர்
"உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பு, இயல்பாகவே ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளின் கவனத்தையும் ஈர்க்கும்" என்று பெஸ்கோவ் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































