ஆமதாபாத் விமான விபத்தை படம்பிடித்த சிறுவன் ஊரை விட்டு வெளியேறியது ஏன்?

ஆர்யன் அசாரி, ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா

பட மூலாதாரம், Pavan Jaishwal

படக்குறிப்பு, ஆர்யன் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன்
    • எழுதியவர், ராக்ஸி காக்டேகர் சாரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

17 வயதான ஆர்யன் இப்போது குஜராத்தின் சாபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த 2025 ஜூன் 12 அன்று ஆர்யன் ஆமதாபாத் வந்தடைந்த சில நிமிடங்களிலேயே, ஒரு விமானம் வானில் பறந்து செல்வதைக் கண்டார்.

ஆர்யன் அந்த விமானத்தை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார், ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். ஆர்யனின் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோதான், இந்த விபத்தின் ஒரே முக்கியமான காட்சி ஆதாரமாக மாறியது.

விபத்து நடந்த அடுத்த நாள், அதாவது 2025 ஜூன் 13 அன்று, பிபிசி குஜராத்தி ஆர்யனைக் கண்டறிந்து அவரை நேர்காணல் செய்தது. இந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஆர்யன் இப்போது தனது கிராமத்தில் வசித்து வருகிறார்; ஆனால், தற்போதும் கூட அவர் விமானங்களை வீடியோ எடுப்பதற்கு அவர் இப்போது அச்சப்படுகிறார்.

ஆர்யன் தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் சாபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில்தான் தனது 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், இப்போது கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு தயாராகி வருகிறார்.

பிபிசி குஜராத்தி ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், கடந்த ஓராண்டில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆர்யன் பேசியுள்ளார். மேலும், தனது பகுதியில் தனக்குக் கிடைத்துள்ள ஒரு புதிய பட்டப்பெயரைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார். இப்போதெல்லாம் அவருடைய நண்பர்களும் சுற்றியுள்ள மக்களும் அவரை 'வீடியோ பாய்' என்றே அழைக்கிறார்கள்.

திருமண நிகழ்ச்சியோ அல்லது கல்லூரி விழாவோ, அவர் எடுத்த வீடியோவைப் பார்த்த பிறகு மக்கள் கேட்கும் முதல் கேள்வி, "இந்த வீடியோவை எப்படி எடுத்தாய்?" என்பதுதான்.

மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட ஆர்யன் குறைவாகவே பேசுவார். அவருக்குத் தனது மொபைல் போனில் விதவிதமான வீடியோக்களை எடுப்பதில் அதிக ஆர்வம் உண்டு. வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம், சிறியதோ அல்லது பெரியதோ, எந்தவொரு நிகழ்வையும் அவர் தனது போனில் வீடியோவாகப் பதிவு செய்வது அவரது பழக்கம்.

இந்த ஆர்வத்தின் காரணமாகவே, அவர் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா ஏஐ 171 விமானத்தின் வீடியோவையும் அன்று தனது மொபைலில் பதிவு செய்திருந்தார்.

விமான விபத்தின் காணொளி எவ்வாறு படமாக்கப்பட்டது?

ஆர்யன் அசாரி, ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா
படக்குறிப்பு, ஆமதாபாத் விமான விபத்துச் சம்பவம் ஆர்யனின் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டது
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிபிசி குஜராத்தி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், விபத்து நடந்த போது தான் மேகானினகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்ததாக ஆர்யன் கூறினார்.

"நானும் என் சகோதரியும் அப்போதுதான் கிராமத்திலிருந்து பேருந்தில் வந்திருந்தோம். நான் வெளியே மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தேன், என் சகோதரி மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்தாள். அப்பா அப்போது வேலைக்குச் சென்றிருந்தார். நாங்கள் காலையில் கிளம்பி, மதியம்தான் இங்கு வந்தோம். நான் சுற்றியுள்ள கட்டடங்களை என் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தேன்" என்றார்.

ஆர்யனின் வீடு விமான நிலைய ஓடுபாதைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. அவர்களின் வீட்டிற்குப் பின்னால் ஒருபுறம் விமான நிலைய ஓடுதளமும், மறுபுறம் ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளான ஐஜி வளாகமும் உள்ளன.

விபத்து குறித்து விவரிக்கும் ஆர்யன், "விமான நிலைய ஓடுதளத்திலிருந்து ஒரு விமானம் புறப்படுவதை நான் பார்த்தேன். ஆர்வத்தின் காரணமாக அதை எனது மொபைலில் வீடியோ எடுக்கத் தொடங்கினேன். விமானம் சற்றே மேலே ஏறியது, பின்னர் திடீரென கீழே இறங்கியது. மீண்டும் ஒருமுறை மேலே எழும்பி, பின்னர் முன்னோக்கிச் சென்று அப்படியே கீழே விழுந்தது. விழுந்த அடுத்த கணமே பயங்கரமாகத் தீப்பிடித்தது, சில நொடிகளில் புகை மண்டலமாக மாறியது. இதைப் பார்த்ததும் நான் மிகவும் பயந்துவிட்டேன்."

விமானம் விபத்துக்குள்ளானதை பார்த்தவுடன், ஆர்யன் உடனே தனது சகோதரி நீலம் அசாரியிடம் ஓடிச்சென்று விஷயத்தைக் கூறியுள்ளார். அவரது சகோதரி வெளியே வந்து பார்த்தபோது, அந்த இடமே புகையால் சூழ்ந்திருந்தது.

இதுகுறித்து பிபிசி குஜராத்தியிடம் பேசிய நீலம், "நான் உடனடியாக என் தந்தைக்கு போன் செய்தேன். அவர் சிறிது நேரத்திலேயே வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் எங்களுக்கு ஆறுதல் கூறி, பயப்படத் தேவையில்லை என்று கூறினார்" என்றார்.

இப்போது அனைவரும் ஆர்யனை 'வீடியோ பாய்' என்று அழைக்கிறார்கள். இருப்பினும், இந்த வீடியோ வெளிவந்த பிறகு முதன்முதலில் பிபிசி குஜராத்திதான் ஆர்யனைத் தொடர்பு கொண்டது.

இதுபற்றி ஆர்யன் கூறுகையில், "வீடியோ வைரலான பிறகு, முதலில் இந்திய விமான நிலைய ஆணையத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் வந்தனர். அவர்கள் என்னிடம் வீடியோ குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர், அதன்பிறகு பிபிசி குஜராத்தி குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டனர்" என்றார். இதன் பிறகு ஆர்யனின் வீடியோ மிக வேகமாக வைரலாகி, அவர் ஒரே இரவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆர்யனின் தந்தை மகன்பாய் அசாரி பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனம் அவன் மீது அளவுக்கு அதிகமாக இருந்தது. செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிப் பேசி அவன் மிகவும் சோர்வடைந்துவிட்டான். அவனுக்கு யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. அதனால், அதனால் நாங்கள் அவரை கிராமத்திற்கு அழைத்து வந்தோம்" என்றார்.

இருப்பினும், கிராமத்திலும் ஆர்யன் மிகவும் பிரபலமானார். "எல்லோரும் அவரை 'வீடியோ பாய்' என்றுதான் அழைப்பார்கள்" என்று நீலம் கூறினார்.

ஆர்யன் தற்போது ஏன் விமானம் பறப்பது போன்ற வீடியோக்களை எடுப்பதில்லை?

ஆர்யன் அசாரி, ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா

பட மூலாதாரம், Pavan Jaishwal

படக்குறிப்பு, நண்பர்களும் அவனைச் சுற்றியுள்ளவர்களும் ஆர்யனை 'வீடியோ பாய்' என்று அழைக்கிறார்கள்

ஆர்யன் கூறுகையில், "எல்லோரும் என்னிடம், 'நீ பிரபலமாகிவிட்டாய்' என்று கூறினார்கள். என்னுடைய ஆசிரியர்களும் நான் மிகவும் நல்ல காரியம் செய்திருப்பதாகக் கூறினர். நான் ஊடகங்களுக்கு உதவியிருக்கிறேன் என்றும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு எனது வீடியோ உதவியாக இருக்கிறது என்றும் கூறினர். இதையெல்லாம் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் அதே சமயம் இந்த விபத்து எனக்கு மிகுந்த மனவருத்தத்தையும் தந்தது" என்றார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் விமானங்களின் வீடியோக்கள் எதையும் எடுக்கவில்லை. அதுகுறித்து அவர் பேசுகையில், "நான் இப்போது இந்த விமானத்தை வீடியோ எடுத்தால், மீண்டும் அது உடைந்து விழுந்து மக்கள் இறந்துவிடுவார்களோ என்ற பயம் எனக்குள் இருக்கிறது. அதனால் தான் நான் இப்போது விமானங்களை வீடியோ எடுப்பதில்லை" என்று தன் அச்சத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும், ஆர்யன் வேறு பல நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்களைத் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.

அவருடைய மொபைல் போனில் கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ, அவர் ஆமதாபாத்திலிருந்து தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பிய பயணத்தைப் பற்றியதாகும். அதில் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள பசுமையான காட்சிகளையும், கடந்து செல்லும் வாகனங்களையும் அவர் படம்பிடித்திருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், "சமீபத்தில் நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன், அங்கு எல்லாரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் நான் எடுத்த வீடியோவைப் பற்றியே கேள்விகளைக் கேட்டு, நான் பெரிய பிரபலமாகிவிட்டதாகக் கூறினர். வேறு யாரும் செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன் என்பதை உணரும்போது, ​​இதையெல்லாம் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு