விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி

பட மூலாதாரம், ANI
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
இரவு 10 மணி வரையிலான தகவல்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திமுக 60 இடங்களிலும், அதிமுக 45 இடங்களிலும் முன்னிலை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"சிறப்பான செயல்பாட்டை நிகழ்த்திய தவெகவுக்கு வாழ்த்துகள்" என மோதி கூறியுள்ளார்.

தவெக வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் வேளையில், அக்கட்சித் தலைவர் விஜய் பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து அடையாறில் உள்ள தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டிற்கு சென்றார். குடும்பத்தினரை சந்தித்த விஜய், பின்னர் அந்த வீட்டின் பால்கனி வழியே, வெளியே கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். இதனைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கம் வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்ற அவர், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சென்ற விஜய்க்கு, சாலையில் கூடியிருந்த அக்கட்சித் தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், வி.எஸ். பாபு, ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட பல தவெக தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பட மூலாதாரம், ANI
தலைவர்கள் நிலை என்ன?
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். அவர் 82612 வாக்குகளைப் பெற்றார். இரண்டாம் இடம் வந்த திமுகவின் நல்லசிவம் அவரைவிட 16620 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். அதிமுக வேட்பாளர் பிரபு மூன்றாம் இடத்தையே பெறமுடிந்தது.
தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆனந்த் 13027 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சத்தியநாரயணனை வீழ்த்தியுள்ளார். இங்கு திமுக வேட்பாளருக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.
தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் மோகனை விட 17302 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
மயிலாப்பூர் தொகுதியில் தவெகவின் வெங்கடரமணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களத்தில் உள்ள கட்சிகள்
பிராந்தியக் கட்சிகள் தலைமையிலான இரண்டு முக்கிய கூட்டணிகள் களத்தில் உள்ளன. ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணி, மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான கூட்டணி.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி மூலம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், ராமதாஸ் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி 75,064 வாக்குச் சாவடிகளில் ஒரே கட்டமாக நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து நடைபெற்ற வாக்குப்பதிவில், இதுநாள் வரையில் இல்லாத அளவாக 85.10% வாக்குகள் பதிவாகியிருந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































