You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்க்கரை விலை உயர பெட்ரோலில் எத்தனால் கலப்பதே காரணமா?
உங்க ஊர்ல சர்க்கரை விலை என்ன? இதுதான் தற்போது சமூக ஊடகங்கள், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அதிகமாக பேசப்படும் விஷயமாக உள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதன் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவரப்படி, சில்லறை சந்தையில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ.55.70.
ஒரு மாதத்துக்கு முன்பு இது ரூ.48.18 ஆகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி ரூ.46.30 ஆகவும் இருந்தது.
சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி, இதற்கு முன்பு சர்க்கரை விலை இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை.
பிரேசிலுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
சர்க்கரை ஆலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கேதன் படேல் இதுகுறித்துப் பேசியபோது, "2025-26 சர்க்கரை உற்பத்தி ஆண்டில், 32 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 30 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
அதே நேரத்தில், நாட்டின் சர்க்கரை கையிருப்பும் குறைந்திருந்தது." என்றார்.
பிபிசி குஜராத்திக்கு அவர் அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு அதிகப்படியான மழை பெய்ததால் கரும்பு பயிர் பாதிக்கப்பட்டது.
மேலும், உத்தரப்பிரதேசத்தில் அதிக மகசூல் தரக்கூடிய CO-0238 ரக கரும்பு நோயால் பாதிக்கப்பட்டது.
இதனால் கரும்பு உற்பத்தியும், கரும்பிலிருந்து சர்க்கரையைப் பிரித்தெடுக்கும் அளவும் குறைந்தது.
அதாவது, நூறு கிலோ கரும்பில் இருந்து கிடைக்கும் சர்க்கரையின் அளவு 12 கிலோவுக்கும் கீழ் சென்றது. இதனால், எதிர்பார்த்ததைவிட சர்க்கரை உற்பத்தி குறைந்தது" என்றார்.
பிசி குஜராத்தியிடம் அவர் மேலும் பேசும்போது, "2024-25 நிதியாண்டின் இறுதியில் இருந்த கையிருப்பு வெறும் 50 முதல் 50.5 லட்சம் டன்களாக மட்டுமே இருந்தது. இதனால், 2025-26ஆம் ஆண்டு குறைவான தொடக்கக் கையிருப்புடன் தொடங்கியது. உற்பத்தியும் எதிர்பார்த்ததைவிட சற்று குறைவாக இருந்தது." என்று விளக்கினார்.
மேலும் அவர், "விலை மேலும் உயரும் என்ற அச்சத்தில் மக்கள் பதற்றத்துடன் அதிக அளவில் சர்க்கரை வாங்குவதாகத் தெரிகிறது. ஒருபுறம் கையிருப்பில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது, பண்டிகைக் காலமும் வந்துவிட்டது, மழை குறித்த கவலையும் இருக்கிறது. மறுபுறம், தேவை அதிகமாக உள்ளது. இதன் விளைவாக விலை உயர்ந்துள்ளது." என்றார்.
தற்போதைய சர்க்கரை நிலவரம் குறித்து அரசாங்கத்தின் கருத்தை அறிய, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபென் பாம்பானியாவை தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் பிபிசி தொடர்புகொள்ள முயன்றது. அதற்கு உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஆனால், ஜூலை 28 அன்று வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பில், நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதோடு, சில வர்த்தகர்கள் சர்க்கரையைப் பதுக்கி வைப்பதும், உண்மையான சர்க்கரை பரிமாற்றம் இல்லாமல் ஊக வணிகத்தில் ஈடுபடுவதும், சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக அரசு கூறியுள்ளது.
நாட்டின் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான சர்க்கரை கையிருப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், பண்டிகைக் காலமும் வருவதால் இந்த காலகட்டத்தில் சர்க்கரை விலை பொதுவாக உயர்வதாக கூறுகிறார் கேதன் படேல்.
"தற்போது விலை ரூ.50க்கும் அதிகமாக இருந்தாலும், உண்மையில் இந்தப் பருவத்தில் சர்க்கரை விலை பொதுவாக ரூ.38 முதல் ரூ.42 வரைதான் இருக்கும். அக்டோபர் மாதத்தில் இருந்து புதிய சர்க்கரை சந்தைக்கு வரும். எனவே, விலை குறையும்" என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், சுரேந்திரநகரை சேர்ந்த முன்னணி சர்க்கரை வர்த்தகர் தன்ராஜ் கைலா பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "தற்போது சந்தையில் சர்க்கரைத் தட்டுப்பாடும் இல்லை, அதிகப்படியான கையிருப்பும் இல்லை. நிலைமை அன்றாடத் தேவைக்கு ஏற்றதாக உள்ளது. அதாவது, சந்தைக்கு வரும் சர்க்கரை உடனடியாக விற்பனையாகிறது" எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த இறக்குமதியைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், மாசுபாட்டைக் குறைக்கவும் என கூறி பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.
பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை 10 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு 2018இல் முடிவு செய்தது.
இந்த இலக்கை 2030-க்குள் எட்ட வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தியா அதை 2025 ஜூலையிலேயே எட்டியது.
ராய்ட்டர்ஸ் தகவலின்படி, 2025-26 சர்க்கரை உற்பத்தி ஆண்டில் 30 லட்சம் டன் சர்க்கரை எத்தனால் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம். கரும்புச் சாற்றைத் தவிர, சர்க்கரைப் பாகு, ஏ-ஹெவி மொலாசஸ், பி-ஹெவி மொலாசஸ், சி-ஹெவி மொலாசஸ் ஆகியவற்றில் இருந்தும் எத்தனால் தயாரிக்க முடியும். ஒரு செய்தியின்படி, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த எத்தனாலில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கரும்பில் இருந்து பெறப்படுகிறது.
பெரிய சர்க்கரை ஆலை ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிட விரும்பாமல் பிபிசி குஜராத்தியிடம் பேசினார். அப்போது அவர், "பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் ஒரு முக்கியமான திட்டம். இது சர்க்கரை ஆலைகளுக்கு பணப் புழக்கத்தை வழங்குகிறது. ஆனால், சர்க்கரை உற்பத்திக்குத்தான் எப்போதும் முதலிடம் என்று அரசு தெளிவாகக் கூறியுள்ளது" என்றார்.
எத்தனால் உற்பத்திக்காக திருப்பிவிடப்பட்ட சர்க்கரையால்தான் தற்போது நாட்டில் சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்ட முடியாது" என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு