சௌதி மீது ஹூத்தி தாக்குதலால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி - மெக்கா ஒப்பந்தம் பற்றி ஊடகங்கள் கேள்வி

பட மூலாதாரம், TUR Presidency/Murat Cetinmuhurdar/Anadolu via Getty Images
- எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சௌதி அரேபியா மீதான ஹூத்திகளின் தாக்குதல்கள் குறித்துப் பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன; அண்மையில் கையெழுத்தான மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் காரணமாக பாகிஸ்தான் ஒரு பிராந்தியப் போருக்குள் இழுத்துச் செல்லப்படுமா என்ற கேள்வியையும் அவை எழுப்பியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுள் ஏதேனும் ஒரு உறுப்பினர் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் அனைத்து உறுப்பினர் நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் செப்டம்பர் 8 அன்று எச்சரித்திருந்தார்.
எந்தவொரு 'தூண்டப்படாத ஆக்கிரமிப்பு' நிகழ்ந்தாலும் அல்லது ஏமன் மோதல் சௌதி அரேபியாவுக்குப் பரவினாலும் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஜியோ நியூஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவாஜா ஆசிஃப், ஒப்பந்தத்தின் விதிகள் தொடர்பாக 'எந்தவிதமான குழப்பமும் இல்லை' என்று குறிப்பிட்டதாகச் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இது தொடர்பாக எந்தச் சந்தேகமும் இருக்க வேண்டாம்... நாங்கள் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள்; தேவைப்பட்டால் அதன்படி செயல்படுவோம்" என்றார்.
இருப்பினும், தற்போதைய சூழல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்று பாகிஸ்தான் நம்புவதாகவும் கவாஜா ஆசிஃப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்கிறதா?

பட மூலாதாரம், Madoka Ikegami-Pool/Getty Images
இதற்கிடையே, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் ஒன்றுக்கு முக்கியத்துவம் அளித்து 'தி நியூஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹூத்திகளின் தாக்குதல்களை நிறுத்தத் தனது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு இரான் நாட்டுக்கு பாகிஸ்தான் வழியாக சௌதி அரேபியா ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாகப் பெயரிட விரும்பாத வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி கூறுகிறது.
இதற்கிடையே, பதிலடி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகச் சௌதி அதிகாரிகள் ரியாத் நகரில் பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் மூத்த ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதாகப் பாகிஸ்தானிய வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏமனுக்குள் தங்களது படைகளை அனுப்புவதில்லை என்றும், எந்தவொரு பதிலடி நடவடிக்கையும் சௌதி நிலப்பரப்பிலிருந்தே தொடங்கப்படும் என்றும் மூன்று தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
எனினும், செப்டம்பர் 10-ஆம் தேதி பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சஜாத் ஹைதர் கான் இந்தச் செய்தியை மறுத்ததுடன், இது முற்றிலும் 'அடிப்படையற்றது' என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கான், "தற்போது எந்தவொரு தரப்புடனும் இதுபோன்ற ஒரு தீர்மானம் அல்லது விவகாரம் குறித்துப் பாகிஸ்தான் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை" என்றார்.
மெக்கா ஒப்பந்தம் என்பது "முதன்மையாகப் பிராந்தியப் பாதுகாப்பைத் தற்காப்பு மூலம் உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும்" என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
உள்ளூர் ஊடகங்களின்படி, இந்த ஒப்பந்தம் இன்னும் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில்தான் இருப்பதாகவும், முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு "மேலும் காலம் தேவைப்படும்" என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுவது என்ன?
மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகள் என்ன என்பது குறித்து பாகிஸ்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று செப்டம்பர் 10 அன்று அந்நாட்டு நாளிதழ்கள் கோரிக்கை விடுத்தன.
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பதற்றத் தணிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பல நாளிதழ்கள் வலியுறுத்தின.
'தி நேஷன்' நாளிதழ் வெளியிட்ட செய்தியில், கவாஜா ஆசிஃப்பின் எச்சரிக்கை "கவனமாகக் பரிசீலிக்கத் தகுந்தது" என்று குறிப்பிட்டது.
"சௌதி பாதுகாப்பிற்கான பாகிஸ்தானின் அர்ப்பணிப்பு நீண்ட காலமானதுதான்; ஆனால், பாகிஸ்தானின் பொறுப்புகள் எந்தச் சூழலின் கீழ் பொருந்தும் என்பது குறித்த 'திடமான விளக்கத்தை' இஸ்லாமாபாத் அளிக்க வேண்டும்" என்று அந்த நாளிதழ் எழுதியது.
"எந்தவொரு ராணுவத் தலையீட்டின் தன்மையும், கூட்டமைப்பின் 'முடிவெடுக்கும் முறைகளும்' மற்றும் எந்தவொரு பொறுப்புகளும் 'சாத்தியமான தாக்கங்களும்' தெளிவுபடுத்தப்பட வேண்டும்."
"முஸ்லிம் உலகின் பல்வேறு நாடுகளுடனான உறவுகள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் ஆகியவற்றுடன் தனது கூட்டாளிகள் மீதான பொறுப்புகளையும் பாகிஸ்தான் சமநிலையில் பராமரிக்க வேண்டும்" என்று அந்த நாளிதழ் வலியுறுத்தியது.
இதேபோல், 'டெய்லி டைம்ஸ்' நாளிதழ் பாதுகாப்பு அமைச்சரின் கருத்துகளைச் சுட்டிக்காட்டி எழுதியுள்ள தலையங்கத்தில், "ஹூத்திகளின் ஏவுகணைத் தாக்குதல்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஒரு சோதனையாக மாறியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது.
"மூன்று நாடுகளுக்கு இடையேயான மெக்கா ஒப்பந்தம் குறித்த எந்தவொரு முடிவையும் மற்றொரு சுற்று ஏவுகணைகள் தடம்புரளச் செய்வதற்கு முன்பு இது தெளிவுபடுத்தப்பட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் எடுத்த முடிவையும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. "அப்போது சௌதி அரேபியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய அதேவேளையில், சௌதி தலைமையில் ஏமனில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில் இணைய இஸ்லாமாபாத் மறுத்துவிட்டது" என்று அது நினைவூட்டியுள்ளது.
"மெக்கா ஒப்பந்தமானது அந்த முந்தைய கொள்கையை நீக்குவதற்குப் பதிலாக, அதை மேலும் தெளிவுபடுத்துவதாக இருக்க வேண்டும்."
பாகிஸ்தான் ஏன் சங்கடமான சூழலில் உள்ளது?

பட மூலாதாரம், AL MASIRAH/Handout via Reuters
"சௌதி, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்தியப் பாதுகாப்பில் அதிக பொறுப்பை ஏற்க முற்படும்போது, போர்களில் ஈடுபடுவதற்கான திறனை அதிகரிப்பதை விட, போர்களைத் தடுப்பதற்கான திறனை அது குறிப்பதாக இருக்க வேண்டும்" என்று 'டெய்லி டைம்ஸ்' எழுதியுள்ளது.
'பாகிஸ்தான் டுடே' நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "ஹூத்திகளின் தாக்குதல்கள் பாகிஸ்தானை மீண்டும் ஒருமுறை நேரடியாக ஒரு சங்கடமான நிலையில் தள்ளியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது.
அந்த நாளிதழின்படி, "சௌதி அரேபியா மெக்கா ஒப்பந்தத்தை செயல்படுத்துமாறு இதுவரை கோரவில்லை... ஒருவேளை அது அவ்வாறு கோரினால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்."
மேலும் அந்த நாளிதழ் கூறுகையில், "இதுவரை கூட்டமைப்பின் அமைச்சக மற்றும் ராணுவக் குழுக்களின் ஒரே ஒரு கூட்டம்தான் நடந்துள்ளது. ஏதேனும் ஒரு கூட்டு நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன" என்றது.
"இரான் உடனான மோதலின் போது அமெரிக்கா எதைச் சாதிக்கத் தவறியதோ, அதைச் சாதிக்கக்கூடிய ஒரு பிராந்தியப் பாதுகாப்பு கட்டமைப்பை இந்த மூன்று நாடுகளின் கூட்டமைப்பால் உருவாக்க முடியுமா என்பதுதான் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும்" என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டது.
இதற்கிடையே, சௌதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவுக்கு உருது நாளிதழான 'எக்ஸ்பிரஸ்' ஆதரவு தெரிவித்துள்ளதுடன், 'சமநிலை அவசியம்' என்றும் வலியுறுத்தியுள்ளது.
"சௌதி அரேபியாவுடனான உறவுகள் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானவை, ஆனால் பிராந்தியத்தில் மோதல்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கான ராஜதந்திரப் பங்கை இஸ்லாமாபாத் ஆற்ற வேண்டும்" என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































