ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பால் இந்தியா மீது வங்கதேசம் கோபம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP via Getty Images
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் ஊடகங்களுடன் நேரடியாகப் பேச அனுமதிக்கப்பட்டதற்கு வங்கதேசம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"அந்த நிகழ்ச்சியின் மூலம், ஷேக் ஹசீனாவும் அவரது கூட்டாளிகளும் வங்கதேச அரசையும் அந்நாட்டு மக்களையும் ஏளனம் செய்துள்ளனர்" என்று வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
இந்த இணையவழிச் செய்தியாளர் சந்திப்பில் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவு அவரது வீடு தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வங்கதேச அவாமி லீக் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "வங்கதேசத்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமான ஷாகிப் அல் ஹசனின் இல்லத்தின் மீது கொடூரமான பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுடன் இந்த உலகப் புகழ்பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
"செய்தியாளர் சந்திப்புக்கு முன்பாக, இந்தச் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்டால், நீதித்துறையைப் பயன்படுத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று பிஎன்பி , ஜமாஅத்-இ-இஸ்லாமி மற்றும் என்சிபி ஆகிய கட்சிகள் தேசிய ஊடகங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தன" என்றும் அவாமி லீக் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்தை உருவாக்குவது என்ற பெயரில் கட்சித் தொண்டர்களுக்கு எதிராக நடந்து வரும் படுகொலைகளின் மற்றொரு உதாரணம் இத்தாக்குதல் என்று கூறியுள்ள அவாமி லீக், இதை பாசிசம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5, 2024 அன்று பதவியிலிருந்து இருந்து அகற்றப்பட்டதில் இருந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார்.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையவழி மூலம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் நேரடியாகப் பதிலளிப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆகஸ்ட் 5ஆம் தேதியை முன்னிட்டு வங்கதேசத்தில் பல அரசு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வேளையில், அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
வங்கதேசம் கடும் எதிர்ப்பு

வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கதேசம்-இந்தியா இருதரப்பு உறவுகளைச் சீரமைப்பதில் இந்நிகழ்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அரசு ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. இருப்பினும், இத்தகைய பொது நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து டாக்கா ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது" என்று கூறியுள்ளது.
புதன்கிழமை மாலையில், டெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டு செய்தியாளர்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் ஷேக் ஹசீனா இணையவழியில் உரையாற்றினார்.
அதன்பின், தான் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பப் போவதாக அவர் அறிவித்தார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் தாயகம் திரும்புவேன் என்று கூறிய அவர், குறிப்பிட்ட தேதியைத் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, இரவு 11 மணியளவில், வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் முகநூல் பக்கத்தில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், "ஜூலை புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவை வங்கதேச மக்கள் கொண்டாடும் நாளில், இந்திய மண்ணில் ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்பு நடந்துள்ளது. இது வங்கதேசத்தின் இறையாண்மை மீதான தாக்குதல் மற்றும் ஜூலை புரட்சியின் தியாகிகளை இழிவுபடுத்தும் செயலாகும்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "ஜூலை புரட்சியின் உணர்வை ஏந்தியுள்ள இந்நாட்டு மக்கள், நமது தேசம் இனி ஒருபோதும் பாசிசத்தின் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்பாது என்றும், வங்கதேசம் ஒருபோதும் யாருக்கும் விசுவாசமான அல்லது பாதுகாக்கப்பட்ட நாடாக மாறாது என்றும் உறுதியளித்துள்ளனர். இனப்படுகொலைக்குக் காரணமான (ஷேக்) ஹசீனாவுக்கும், அவரது மாஃபியா கும்பலுக்கும் வங்கதேச அரசியலில் மீண்டும் இடம் கிடைக்காது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இறையாண்மை, சமத்துவம், பரஸ்பர மரியாதை, ஒருவரின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொருவர் தலையிடாமை மற்றும் தேசிய கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான, பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் முன்னோக்கிச் செல்லும் உறவைப் பேண வங்கதேசம் விரும்புகிறது" என்றும் வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பாகவும் அந்த அறிக்கையில் ஏமாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வங்கதேசத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே 2013-ஆம் ஆண்டில் கையெழுத்தான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் கீழ், தண்டனை பெற்ற குற்றவாளி (ஷேக்) ஹசீனாவை நாடுகடத்துமாறு வங்கதேசம் விடுத்த தொடர் கோரிக்கைகளுக்கு இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வராதது துரதிர்ஷ்டவசமானது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
"மாறாக, அவர் ஊடகங்களில் பகிரங்கமாகப் பேசுவதற்கு வாய்ப்பளிப்பது இந்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதுடன், வங்கதேசத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான இருதரப்பு உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கும் மிகவும் பாதகமானது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு
முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் பதில் கோரினர்.
புதன்கிழமை நடைபெறவுள்ள ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்பு குறித்து இந்தியாவுக்கு உள்ள நிலைப்பாடு என்னவென்று அவரிடம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து வங்கதேசம் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது.
அதற்குப் பதிலளித்த செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "அந்த நிகழ்வு ஒரு தனியார் அமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அங்கு தெரிவிக்கப்படும் எந்தவொரு கருத்துகளையோ அல்லது அறிக்கைகளையோ இந்திய அரசு ஆதரிக்கவில்லை, மேலும் அவற்றுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறினார்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக, வங்கதேசப் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர், இந்தியாவிற்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் திரிவேதியிடம் இதுகுறித்துப் பேசி, இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரியிருந்தார்.
அவர், "பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட, தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய எவரும் இந்திய மண்ணைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகளை வெளியிடவோ அல்லது வங்கதேசத்திற்குள் நிலைத்தன்மையை பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவோ மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதில் இந்தியா ஒத்துழைக்கும் என்று வங்கதேசம் எதிர்பார்க்கிறது" என்று கூறியிருந்தார்.
மேலும், "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டெல்லியில் இருந்து எந்தவொரு அரசியல் அறிக்கையையும் வெளியிடவோ அல்லது எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவோ கூடாது" என்றும் தெரிவித்திருந்தார்.
வங்கதேசத்தில் ஹசீனாவின் செய்திகளுக்குத் தடை

பட மூலாதாரம், ANI
பிபிசி பங்களாவின் செய்தியின்படி, செய்தியாளர் சந்திப்பு குறித்த அவாமி லீக்கின் அறிவிப்பைத் தொடர்ந்து, நீதிமன்றத் தடையைச் சுட்டிக்காட்டி அவர்களின் அறிக்கைகளை செய்தியாக வெளியிட வேண்டாம் என்று வங்கதேச அரசு ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தத் தகவலை வங்கதேச அரசாங்கத்தின் பிரதமரின் தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆலோசகரான முனைவர் ஜாஹீத் உர் ரஹ்மான் தெரிவித்தார்.
டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் முகமது அமீனுல் இஸ்லாம் கூறுகையில், ஷேக் ஹசீனாவின் 'வெறுக்கத்தக்க' கருத்துகளைப் பரப்புவதற்குத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது என்றும், இந்தத் தடை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்திருந்தார்.
இடைக்கால அரசாங்கத்தின் போது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அதன் பதிவை இடைநீக்கம் செய்ததால், இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியால் போட்டியிட முடியாமல் போனது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஷேக் ஹசீனாவின் 'வெறுப்புப் பேச்சுகளை' பரப்புவதற்குத் தடை விதித்தது.
செவ்வாய்க்கிழமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முனைவர் ஜாஹீத் உர் ரஹ்மான், ஷேக் ஹசீனாவின் அறிக்கை தொடர்பான செய்திகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று வங்கதேச அரசு ஊடகங்களை எச்சரிக்கிறது என்றார்.
மேலும், "அவர் மீண்டும் பேசுவார். அவர் நாளை பேசுவார் என்று யாராவது செய்தி வெளியிட்டிருந்தால், யாராவது அதை முன்கூட்டியே அறிவித்தால் அல்லது பிரசுரித்தால், அது நிச்சயமாக நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். இது தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றும் அவர் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























