ராஜா முத்துப்பாண்டி: கபடி வீரராக தொடங்கி காமன்வெல்த் வெள்ளி வரை - கோவில்பட்டி வீரரின் பயணம்

ராஜா முத்துப்பாண்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜா முத்துப்பாண்டி
'கபடியில் இருந்து பளுதூக்கல்': காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் பிபிசி தமிழுக்கு பேட்டி
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர் தீப்பெட்டி கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சுரேஷ்குமார் மற்றும் ராஜா முத்துப்பாண்டி என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த ராஜா முத்துப்பாண்டிதான் தற்போது வெள்ளிப்பதக்கம் வென்றவர்.

கபடி விளையாட்டு வீரர்

2018ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 6வது இடத்தில் இருந்த ராஜா முத்துப்பாண்டி இம்முறை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறுகிறார் பளுதூக்கும் வீரர் ராஜா.

கிளாஸ்கோ நகரில் இருந்து பிபிசி தமிழிடம் பேசிய ராஜா, ''நான் வெயிட்லிஃப்டிங் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிறது. இது என்னுடைய இரண்டாவது காமன்வெல்த் போட்டி. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தை பிடித்தேன். அந்த முறை என்னால் பதக்கம் வாங்க முடியாமல் போய் விட்டது.

அதன் பின்னர் எனக்கு தொடர்ந்து சில அறுவை சிகிச்சை நடந்ததால் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. ஆனால் நான் விடா முயற்சியுடன் தொடர்ந்து பயிற்சி செய்து கம்பேக் கொடுத்தேன்.'' என்றார்

ராஜா முத்துப்பாண்டி மற்றும் அவருடைய சகோதரர் சுரேஷ்குமார் இருவரும் தொடக்கத்தில் கபடி விளையாட்டில் ஆர்வம் செலுத்திய நிலையில், பின்னர் பளுதூக்கும் விளையாட்டுக்கு அவர்களின் ஆர்வம் சென்றது.

''கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காமன்வெல்த் போட்டிக்காக தீவிர பயிற்சி செய்ததன் விளைவாக இன்று வெள்ளி பதக்கம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் தங்க பதக்கம் பெற்று விடுவேன் என நினைத்துதான் போட்டியில் கலந்து கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. ஆரம்பத்தில் நான் கபடி வீரர், பள்ளி காலங்களில் முக்கிய அணிகளுக்காக விளையாடி உள்ளேன். எங்கள் ஊரில் வெயிட்லிஃப்டிங் ஜிம் உள்ளது என தெரிந்ததற்கு பிறகு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பளுதூக்கும் விளையாட்டை அங்கிருந்து தொடங்கி விளையாடி வருகிறேன்'' என்றார்

''இதற்கு முன் சர்வதேச வீரர்களுடன் விளையாடியுள்ளேன். ஆனால் காமன்வெல்த் போட்டி என்பதால் கொஞ்சம் அழுத்தம் இருந்தது.'' என்றார் அவர்.

தாய் கூறியது என்ன?

ராஜா முத்துப்பாண்டியின் பெற்றோர்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, ராஜா முத்துப்பாண்டியின் பெற்றோர்

பிபிசி தமிழிடம் பேசிய ராஜாவின் தாய் பேச்சியம்மாள், ''பட்ட கஷ்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. கபடி விளையாடிக் கொண்டிருந்த என் மகன் உடலை வலிமையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஊரில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றான். அங்குள்ள பயிற்சியாளர்கள் பளு தூக்கும் பயிற்சி கொடுத்ததால் இன்று அவன் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளான். ராஜாவுக்கு பளுதூக்கும் போட்டியில் சிறு வயதில் இருந்தே அதிக ஆர்வம் உண்டு. அவனின் ஆர்வத்தை கண்டு நாங்களும் கஷ்டத்தை பார்க்காமல் கூலி வேலை செய்து அந்தப் பயிற்சிக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தோம்'' என தெரிவித்தார்.

பளு தூக்குதலில் ராஜா முத்துப்பாண்டி வென்ற பதக்கங்கள்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பளு தூக்குதலில் ராஜா முத்துப்பாண்டி வென்ற பதக்கங்கள்.

வெள்ளி பதக்கம் வென்ற ராஜாவுக்கு முதன் முதலில் பயிற்சியாளராக இருந்த சொர்ண முத்து பிபிசி தமிழிடம் பேசுகையில், ''சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பல வீரர்கள் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்றுள்ளனர். அந்த வகையில் எனது மாணவர் ராஜா காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கோவில்பட்டி பகுதியில் ஏராளமான பளு தூக்கும் வீரர்கள் உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜிம் அமைக்க வேண்டும் என்று பலமுறை நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அவ்வாறு அமைக்கப்பட்டால் ஏராளமான வீரர்கள் பயன்பெறுவார்கள். பதக்கங்களை வெல்வார்கள்'' என்றார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு