செல்போன் தகராறு காரணமா? மகன், தந்தை மலை உச்சியில் இருந்து கீழே விழும் வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை

பட மூலாதாரம், UGC
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், விவரக் குறிப்புகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்
மகாராஷ்டிராவின் சாம்பாஜிநகர் மாவட்டத்தின் வாலுஜ் பகுதியை ஒட்டிய டிஸ்கோனில் அமைந்துள்ள கவாட்யா மலையில் ஆகஸ்ட் 21 அன்று நிகழ்ந்த துயரமான சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் முரளிதர் தாமோதர் சாந்த்குடே, அவரது மனைவி சங்கீதா சாந்த்குடே மற்றும் அவர்களது மகன் குணால் முரளிதர் சாந்த்குடே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காவல்துறை வழங்கும் முதல்கட்ட தகவல்களின்படி, ஒரு கைப்பேசியால் ஏற்பட்ட குடும்பத் தகராறு ஒன்றைத் தொடர்ந்து குணால் சாந்த்குடே தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் காவட்யா மலை உச்சியில் விளிம்பிற்குச் சென்றுள்ளார்.
இளைஞர் ஒருவர் மலையிலிருந்து குதிக்க முயன்று வருகிறார் என்று தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர், உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அந்த இளைஞரிடம் பேசி அவரைப் பின்வாங்க வைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
கூடுதலாக, ஒரு தற்காப்பு முயற்சியாக மலையின் அடிவாரத்தில் பாதுகாப்பு வலை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. எனினும் குணால் தொடர்ந்து தான் நின்றிருந்த நிலையை மாற்றிக் கொண்டே இருந்ததால் மீட்பு நடவடிக்கைகள் இடையூறுகளைச் சந்தித்தன.
இதற்கிடையே குணாலின் தந்தையான முரளிதர் சாந்த்குடே சம்பவ இடத்திற்கு வந்தார். மலை விளிம்பிலிருந்து தனது மகனை இழுத்து காப்பாற்றுவதற்கு அவர் முயன்றார். இந்த முயற்சியில் அவர் சமநிலையை இழந்து தனது மகனுடன் மலை உச்சியில் இருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தார்.
இந்தச் சமபவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞரின் தாய் சங்கீதா அதிர்ச்சிக்கு உள்ளானார். முதல்கட்ட தகவல்களின்படி, தனது கணவரும் மகனும் பள்ளத்தாக்கில் விழுந்ததைக் கண்ட சங்கீதா அவரும் அதில் குதித்தார். சம்பவ இடத்திலே மூவரும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் பற்றி மூத்த காவல்துறை அதிகாரி ரமேஷ்வர் கடே கூறுகையில், "ஆகஸ்ட் 21 அன்று கவாட்யா மலையில் ஒரு நபர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையும் தீயணைப்புத் துறையும் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த இளைஞரை சமாதானப்படுத்த முயன்றனர்.

பட மூலாதாரம், UGC
அவரைப் பாதுகாக்க கீழே வலை ஒன்றும் விரிக்கப்பட்டது. எனினும் அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டே இருந்தார். அந்தத் தருணத்தில் அவருடைய தந்தையும் அங்கு வந்தார். அவரைக் காப்பாற்ற முயன்றபோது இருவரும் பள்ளத்தாக்கில் விழுந்தனர்.
இதனைக் கண்ட தாயும் கீழே குதித்தார். அவரைக் காப்பாற்ற காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்." என்றார்.
அந்த மலையின் உயரம் தோராயமாக 400 முதல் 500 அடி வரை இருக்கும் எனக் கூறும் கடே, "ஒரு கைப்பேசியால் ஏற்பட்ட தகராறில் ஒட்டுமொத்த குடும்பமுமே உயிரிழக்க நேர்ந்தது." என்று குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. டிஸ்கோன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இந்தச் சம்பவத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சஞ்சய் ஜாதவ் கூறுகையில், "இளைஞர் ஒருவர் மலை விளிம்பில் சுமார் மூன்று மணி நேரமாக அமர்ந்திருந்தார், திரும்பி வருமாறு காவல்துறையும் உள்ளூர் மக்களும் விடுத்த கோரிக்கைக்கு செவி மடுக்க மறுத்துவிட்டார்" என்கிறார்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், "18 வயதான இளைஞர் ஒருவர் மலை உச்சியின் விளிம்பில் அமர்ந்து கொண்டார். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் அவர் திரும்பி வருவதற்கு தயாராக இல்லை. நான் காவல்துறையுடன் அந்த இடத்தில் இருந்தேன். எந்த சமாதானங்களையும் அந்த இளைஞர் கேட்கும் நிலையில் இல்லை. அவர் தான் நிற்கும் இடத்தை மாற்றிக் கொண்டே அவரது தாயுடன் பேசிக் கொண்டிருந்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என அவரது தாய் கெஞ்சிக் கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் கேட்கும் நிலையில் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக அவருடன் பேசி கீழே வர வைக்க முயன்றோம். இறுதியில் அவருடைய தந்தையும் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவருடைய தந்தையால் அவரிடம் பேசி பாதுகாப்பாக அழைத்து வர முடியும் என நினைத்தோம். ஆனால் சில நிமிடங்களில் இளைஞனை இழுத்து காப்பாற்ற தந்தை முயன்றார். அந்த மோதலில் இருவரும் கீழே விழுந்தனர். சிறிது நேரத்தில் அவரது தாயும் கீழே விழுந்தார்." என்றார்.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
- சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
- மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
(बीबीसीसाठी कलेक्टिव्ह न्यूजरूमचे प्रकाशन.)
































