மேற்கு வங்கம்: மமதா பானர்ஜியின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

    • எழுதியவர், ருப்சா சென்குப்தா
    • பதவி, பிபிசி வங்க மொழி சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இந்திய அரசியலின் வரலாற்றில் பல வலிமையான பெண் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில், ஜெயலலிதா, மாயாவதி, மமதா பானர்ஜி ஆகிய மூன்று பெயர்கள் தனித்து நிற்கின்றன. இந்தத் தலைவர்கள் வலுவான பிராந்திய தளங்களில் இருந்து தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தாலும், பிற்காலத்தில் தேசிய அளவிலான அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.

உறுதிப்பாடு, வலிமையான தலைமைத்துவம், தங்களுக்கு வாக்களித்த மக்களுடனான நெருங்கிய பிணைப்பு ஆகியவற்றின் மூலம் இவர்கள் சக்திவாய்ந்த அரசியல் ஆளுமைகளாக உருவெடுத்தனர்.

ஒரு காலகட்டத்தில் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த அரசியல் களத்தில், இவர்கள் தங்கள் தனித்துவமான முத்திரையைப் பதித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய வலிமையின் அடையாளங்களாகத் திகழ்ந்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா மறைந்த பிறகும், அண்மைய ஆண்டுகளில் மாயாவதியின் அரசியல் செல்வாக்கு சற்று குறைந்திருக்கும் சூழலிலும், இந்திய அரசியல் களத்தில் எஞ்சியிருக்கும் ஒரே முக்கிய பெண் தலைவராக மமதா பானர்ஜி கருதப்பட்டார்.

அவர்கள் விட்டுச் சென்ற அரசியல் மரபை முன்னெடுத்துச் செல்பவராகவே அவர் பெரும்பாலும் பார்க்கப்பட்டார். இருப்பினும், அண்மையில் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, வலிமையான பெண் தலைவர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 207 இடங்களைக் கைப்பற்றி பிரமாண்டமான வெற்றியைப் பதிவு செய்தது. மமதா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியிலேயே சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். தனது கோட்டையாகக் கருதப்படும் பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில், சுவேந்து அதிகாரி அவரை 15,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்தத் தேர்தல் முடிவு, இந்திய அரசியல் களம் எவ்விதமாக மாறி வருகிறது என்பது குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது. மமதா பானர்ஜியின் அரசியல் செல்வாக்கு குறைந்து வருகிறதா என்பது குறித்துப் பலரும் தற்போது விவாதித்து வருகின்றனர்.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த இடதுசாரி முன்னணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துதான் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அது இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்பட்டது.

இந்தத் தோல்விக்குப் பிறகும்கூட, அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மமதா பானர்ஜி, தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. செவ்வாய்க் கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "நாங்கள் தோல்வியடையவில்லை. நான் எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்," என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

'அம்மா', 'பெஹன் ஜி', 'தீதி'

"அம்மா", "பெஹன் ஜி", "தீதி" என்பவை இந்திய அரசியலில் செல்வாக்கு மிக்க மூன்று பெண் தலைவர்களுக்கு மக்களால் அன்புடன் சூட்டப்பட்ட பிரபலமான பெயர்கள். நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராகத் திகழ்ந்த இந்திரா காந்தி முதல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பின்னர் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுசேதா கிருபளனி வரை, இந்தியாவின் அரசியல் பயணத்தில் பெண்கள் எப்போதுமே முக்கியப் பங்கை வகித்து வந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை, மிகக் கடினமான காலகட்டங்களில் இந்திரா காந்தி வழிநடத்தினார். நாடு விலைவாசி உயர்வு (பணவீக்கம்), வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தது.

எதிர்க்கட்சிகளிடம் இருந்து அவர் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர், சீனாவுடனான பதற்றங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய 'நெருக்கடி நிலை' காலம் போன்ற சில முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின.

இத்தனை சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்ட போதிலும், அவர் தன்னை ஒரு வலிமையான தலைவராக நிரூபித்துக் காட்டினார். மேலும், எதிர்காலத்தின் பல பெண் அரசியல் தலைவர்களுக்கு உத்வேகமாகவும் திகழ்ந்தார்.

மறுபுறம், சுசேதா கிருபளனி தனது வலிமையான நிர்வாகத் திறனுக்கும் உறுதியான முடிவுகளுக்கும் பெயர் பெற்றிருந்தார். உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, தொழிலாளர் இயக்கங்களையும் நிர்வாகம் சார்ந்த சிக்கல்களையும் அவர் மிகச் சிறப்பாகக் கையாண்டார். இதன் விளைவாக, ஒரு திறமையான, வலிமையான தலைவர் என்ற நற்பெயரைப் பெற்றார்.

இந்திய அரசியலின் பரந்த தளத்தில், பல பெண் தலைவர்கள் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். ஆயினும், மாநில அளவிலான அரசியலில், ஜெயலலிதா, மாயாவதி, மமதா பானர்ஜி ஆகிய மூன்று பெயர்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.

இந்த மூன்று தலைவர்களும் முற்றிலும் மாறுபட்ட பின்னணிகளில் இருந்து வந்தவர்கள். இருப்பினும், தத்தம் மாநிலங்களில் வலுவான அரசியல் ஆதரவுத் தளத்தை அவர்களால் கட்டமைக்க முடிந்தது.

காலப்போக்கில், மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்ற இவர்கள், தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளாக உருவெடுத்தனர்.

ஜெயலலிதாவின் அரசியல் பயணம் மிகவும் வியக்கத்தக்க ஒன்று. தென்னிந்திய திரையுலகில் ஒரு நட்சத்திரமாகத் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், பிற்காலத்தில் ஒரு வலிமையான அரசியல் தலைவராக உயர்ந்தார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான்கு முறை பதவி வகித்த அவரை, அவரது ஆதரவாளர்கள் அன்புடன் "அம்மா" என்று அழைத்தனர்.

மக்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், கடுமையான நிர்வாகத்தைக் கடைபிடிப்பதிலும் அவர் பெயர் பெற்றிருந்தார். இது அடித்தட்டு மக்களுடனான வலுவான பிணைப்பை உருவாக்கிக்கொள்ள அவருக்குப் பெரிதும் உதவியது.

இருப்பினும், அவரது அரசியல் பயணத்தில் சர்ச்சைகளும், அவர் மீதும் அவருக்கு நெருக்கமான சகாக்கள் மீதும் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும் இருக்கவே செய்தன. 2016ஆம் ஆண்டு அவர் காலமானார். தமிழக அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக அவரது மறைவு கருதப்பட்டது.

இந்தியாவின் தலித் அரசியல் களத்தில் மாயாவதி ஒரு முதன்மையான தலைவராகத் திகழ்கிறார். எளிய பின்னணியில் இருந்து வந்த அவர், உத்தர பிரதேசத்தின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். மக்கள் அவரை அன்புடன் "பேஹன் ஜி" என்று அழைக்கின்றனர்.

இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்த அவரை, பஹுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்ஷி ராம், பிற்காலத்தில் தனது வாரிசாகத் தேர்வு செய்தார். அவர் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக நான்கு முறை பதவி வகித்துள்ளார்.

அவரது அரசியல் பெரும்பாலும், 'அடையாள அரசியல்' சார்ந்ததாகவே அமைந்திருந்தது. இதன் மூலம் அவர் ஒரு வலுவான வாக்காளர் தளத்தை உருவாக்கினார். இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் தலைவர்கள் கட்சியை விட்டு விலகுதல், தேர்தல் தோல்விகள், கட்சி அமைப்பு பலவீனமடைதல் போன்ற பல்வேறு சிக்கல்களை அவரது கட்சி எதிர்கொண்டு வருகிறது.

ஜெயலலிதா, மாயாவதி ஆகியோரைப் போலவே, மமதா பானர்ஜியும் மிகுந்த ஈர்ப்புத்தன்மையும் பரந்துபட்ட மக்கள் ஆதரவையும் கொண்ட ஒரு தலைவராகவே பார்க்கப்படுகிறார். அவரது ஆதரவாளர்களால் அன்புடன் "தீதி" என்று அழைக்கப்படும் இவர், மேற்கு வங்க அரசியலில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

வலுவான பிராந்திய தலைமைத்துவம், அரசியல் பயணம், ஆட்சி நிர்வாக பாணி ஆகிய அம்சங்களில் பிற இரு தலைவர்களுடனும் இவர் ஒரு சில ஒற்றுமைகளைப் பகிர்ந்துகொண்டாலும், அரசியல் மற்றும் தலைமைத்துவத்தை அணுகும் விதத்தில் இவரிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

குறையத் தொடங்கிய மமதா பானர்ஜியின் செல்வாக்கு

ஜெயலலிதா, மாயவதி, மமதா பானர்ஜி ஆகியோர் தங்கள் அரசியல் கட்சிகளை, பெரும்பாலும் தங்களையே மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்புகளாக மாற்றியமைத்தனர்.

காலப்போக்கில், அவர்களே தங்கள் கட்சிகளின் முதன்மையான முகங்களாகவும் அடையாளமாகவும் உருவெடுத்தனர். பெரும்பாலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் ஓர் அரசியல் சூழலில், அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், நலத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், வலிமையான அரசியல் செய்திகளை முன்வைப்பதன் மூலமும் அவர்கள் தங்களுக்குரிய தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொண்டனர்.

ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அதேபோல மாயாவதிக்கு கன்ஷி ராம் வழிகாட்டியாக அமைந்தார். ஆனால், மமதா பானர்ஜியின் அரசியல் வளர்ச்சிக்குப் பக்கபலமாக அமையக்கூடிய அத்தகைய அரசியல் 'காட்ஃபாதர்' யாரும் அவருக்கு இருக்கவில்லை.

மாயாவதியின் அரசியல் பெரும்பாலும் சாதி அடையாளத்தை, குறிப்பாக தலித் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யவதையே மையமாகக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் தலைமைத்துவம், அவரது வலிமையான ஆளுமையாலும், மக்களுக்கான நலத் திட்டங்களில் அவர் செலுத்திய கவனத்தாலும் வடிவமைக்கப்பட்டது.

மமதா பானர்ஜியின் அரசியல் வளர்ச்சி சற்று மாறுபட்டதாக அமைந்தது. பொது மக்களுக்கான நலத் திட்டங்களுடன் சேர்த்து, போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் வாயிலாகவே அவர் படிப்படியாக வளர்ந்தார். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக நீடித்த இடதுசாரி அரசின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 2011-ஆம் ஆண்டில் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றார். அன்று முதல், சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடையும் வரை அவர் தொடர்ந்து ஆட்சியில் நீடித்தார்.

இந்த மூவரின் பரந்த அளவிலான தாக்கம் குறித்துப் பேசிய, ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் உமேஷ் குமார், "ஜெயலலிதா, மாயாவதி, மமதா பானர்ஜி ஆகியோரின் தலைமைத்துவம், இந்திய அரசியலின் பொருளையும் நடைமுறையையும் மறுக்க முடியாத வகையில் உருமாற்றியுள்ளது. இவர்களின் முக்கியத்துவம் என்பது வெறுமனே பெண் தலைவர்களாக அரசியலில் இடம் பெற்றிருப்பதில் மட்டுமே அடங்கியிருக்கவில்லை.

மாறாக, கட்சியைக் கட்டமைத்தல், தேர்தல் அணிதிரட்டல், நிர்வாகம் ஆகிய துறைகளில் தனித்துவமான உத்திகளைக் கையாள்வதன் மூலம், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இவர்கள் எவ்வாறு நிறுவனமயமாக்கினார்கள் என்பதில்தான் இவர்களுடைய உண்மையான முக்கியத்துவம் அடங்கியுள்ளது," என்று விளக்கினார்.

மேலும் பேசிய அவர், "வலிமையான அரசியல் அமைப்புகளைக் கட்டமைப்பதன் மூலமும், ஆழமாக வேரூன்றியிருந்த எதிர்க்கட்சிகளை எதிர்த்துத் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலமும், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலமும், இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாகவே நிலவி வந்த ஆண்களின் ஆதிக்கத்திற்கு இவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சவால் விடுத்தனர்," என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், மமதா பானர்ஜியின் அரசியல் பயணம், மற்ற இரு தலைவர்களின் பயணத்துடன் ஒப்பிடுகையில் சில முக்கியமான வேறுபாடுகளையும் கொண்டுள்ளது. அவரது ஆக்ரோஷமான அரசியல் பாணி, சாமானிய மக்களுடனான வலுவான பிணைப்பு, எளிமையான வாழ்க்கை முறை குறித்த பிம்பம் ஆகியவை அவருக்கு மக்கள் ஆதரவைப் பெற்றுத்தர உதவின. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அவர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களைப் பணியமர்த்துவதிலும், நகராட்சிப் பணிகளுக்கான நியமனங்களிலும் ஊழல் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பான முறைகேடுகள் குறித்தும், அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இத்தகைய விவகாரங்கள் அக்கட்சுயின் பொது பிம்பத்தைப் பெரிதும் பாதித்துள்ளன. எதிர்க்கட்சிகள், அவரது அரசாங்கம் 'சமாதானப்படுதும் அரசியலைச்' செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளன. அதே வேளையில், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பல நிகழ்ந்திருப்பது, சட்டம் ஒழுங்கு நிலை குறித்துத் தீவிரமான கவலைகளை எழுப்பியது.

இந்தக் காரணங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, பொது மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்க வழிவகுத்துள்ளன. அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளில், பொது மக்களின் இந்த ஆத்திரமே முக்கியப் பங்கு வகித்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மமதாவின் அரசியல் எதிர்காலம்?

மமதா பானர்ஜியின் சமீபத்திய தேர்தல் தோல்வி, அவரது அரசியல் வாழ்க்கையின் முடிவைக் குறிக்கிறதா என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

கொல்கத்தாவில் உள்ள சமூக அறிவியல் ஆய்வுகளுக்கான மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொய்துல் இஸ்லாம் இதுகுறித்துப் பேசியபோது, "ஒரு பெண் முதலமைச்சராக மமதாவின் தோல்வி, நிச்சயமாக அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக் காலமாக, தேசிய கட்சிகளில் ஷீலா தீட்சித், வசுந்தரா ராஜே போன்ற முதலமைச்சர்களை நாம் கண்டுள்ளோம்.

ஆனால், மாநில அளவிலான அரசியலில், ஜெயலலிதா, மாயாவதி, மமதா போன்ற வலிமையான பெண் தலைவர்கள் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களில் ஜெயலலிதா காலமானார். தேர்தல் தோல்விக்குப் பிறகு மாயாவதியால் மீண்டும் வலிமையாக எழுந்து வர இயலவில்லை. மமதாவின் விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்று கூறினார்.

மமதாவை, ஜெயலலிதா, மாயாவதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் மூவருமே மிகவும் மையப்படுத்தப்பட்ட மாநில அளவிலான தலைமைத்துவ அமைப்புகளின் அங்கமாகத் திகழ்ந்தார்கள் என்றுதான் கூறவேண்டும் என்கிறார் டெல்லியைச் சேர்ந்த அரசியல் பொருளாதார நிபுணர் முனைவர் ரோஹித் ஜோதிஷ்.

அதோடு, "அத்தகைய அமைப்புகளில், கட்சி நிர்வாகத்தின் மீதும் உள்ளூர் அரசியல் கட்டமைப்புகளின் மீது செலுத்தப்படும் இறுக்கமான கட்டுப்பாட்டின் மூலமாகவே அதிகாரம் கட்டமைக்கப்பட்டு இருந்தது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விரிவாகப் பேசிய அவர், "மமதா பானர்ஜியின் விஷயத்தில், அவர் இப்போது எதிர்கொண்டுள்ள போட்டியின் தன்மை தற்போது மாறியுள்ளது. கடந்த காலத்தில், மேற்கு வங்க அரசியல் பெரும்பாலும் வலிமையான உள்ளூர் வலைப்பின்னல்களையே பெரிதும் சார்ந்திருந்தது.

இந்தக் கட்டமைப்புதான் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், அரசு வளங்களை விநியோகிக்கவும் உதவின. இந்தக் கட்டமைப்புகள் நிலையாக இருந்த காலம் வரை, மமதாவோ அல்லது அவருக்கு முன்பிருந்த இடதுசாரித் தலைவர்களோ அரசியல் ரீதியாக வலிமையுடன் திகழ முடிந்தது," என்றார்.

முனைவர் ரோஹித் ஜோதிஷின் கூற்றுப்படி, இப்போது நிலைமை மாறிவிட்டது. "அந்தச் சமநிலை குலைந்திருப்பதை இப்போது காண்கிறோம். தற்போது, வலிமையான தேசிய அளவிலான கட்சிகள் மாநில அரசியலுக்குள் நுழைந்து வருகின்றன. இது போட்டியைக் கூடுதலாக வெளிப்படையானதாகவும், மிகவும் கடுமையானதாகவும் மாற்றியுள்ளது.

இது தமிழ்நாட்டில் ஜெயலலிதா எதிர்கொண்ட எதிர்ப்பின் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதேபோல, மாயாவதியின் விஷயத்திலும் அவருக்கு எதிரான எதிர்ப்பு பெரும்பாலும் நிலையான உள்ளூர் கூட்டணிகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது," என்று அவர் கூறினார்.

மமதாவின் தேர்தல் தோல்வியை ஒரு தனிப்பட்ட தோல்வியாகத் தான் கருதவில்லை என்று கூறும் ரோஹித் ஜோதிஷ், "மாறாக, இத்தகைய வலிமையான, மையப்படுத்தப்பட்ட மாநில அளவிலான தலைமைத்துவங்கள் இப்போது மிகக் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகின்றன என்பதையே இந்தத் தோல்வி உணர்த்துவதாகவும்." கூறினார்.

முனைவர் உமேஷ் குமாரும், "தற்போதைய தேர்தல் முடிவு, கடுமையான அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான சவால்கள் இருப்பதைக் காட்டுவதாக" கூறுகிறார்.

மேலும், "ஆட்சிக்கு எதிரான வலுவான மனநிலை நிலவுகிறது. அதாவது மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்தனர். மமதா பானர்ஜியின் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது சில வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக வந்த செய்திகளும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்," என்கிறார் அவர்.

அதோடு, பாஜக தனது வியூகத்தை மாற்றியிருப்பதாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். "அது உள்ளூர் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தியது. வாக்குச் சாவடி மட்டத்தில் வலுவாகச் செயல்பட்டது மற்றும் தொகுதி மட்டத்தில் தனது பிரசாரத்தை மேம்படுத்தியது. இந்த அனைத்துக் காரணிகளும் ஒன்று சேர்ந்து திரிணாமூல் காங்கிரஸின் தோல்விக்கு உதவின."

இப்படிப்பட்ட நிலைமையில், இவையனைத்தும் மமதா பானர்ஜியின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

"கடந்த 2004 மற்றும் 2006-க்கு இடையில் தோல்விகளைச் சந்தித்த பிறகு, அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாகப் பலரும் நினைத்தார்கள். ஆனால், 2006-க்குப் பிறகு, சிங்கூர்-நந்திகிராம் இயக்கத்தின் மூலம் அவர் ஒரு வலுவான மறுபிரவேசத்தைச் செய்து காட்டினார்," என்கிறார் மொய்துல் இஸ்லாம்.

அதேபோல, "2026-இல் மமதா மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளார். அவர் இப்போது ஆட்சியில் இல்லாததால், அவருக்கு அவகாசம் இருக்கிறது. இந்த நேரத்தை அவர் எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பது முக்கியம். ஆனால், அவர் இதற்கு முன்பும் தோல்விகளுக்குப் பிறகு மீண்டு வந்துள்ளார். எனவே, அவர் தனது கட்சியைப் புனரமைப்பாரா, ஓய்வெடுப்பாரா அல்லது மீண்டும் ஆட்சிக்கு வர முயல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்." என்று விளக்கினார் மொய்துல் இஸ்லாம்.

முனைவர் ரோஹித் ஜோதிஷும் இதேபோன்ற கருத்தைப் பகிந்துகொண்டார். அவர், "ஜெயலலிதா மற்றும் மாயாவதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மமதாவின் வீழ்ச்சி நிரந்தரமானது என்று நான் நினைக்கவில்லை. அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நம்புவதற்கு வலுவான காரணம் எதுவுமில்லை," என்று தெரிவித்தார்.

மமதா பானர்ஜியே தோல்வியை ஏற்க மறுத்துவிட்டார். அவர் தெளிவாக, "நாங்கள் போராடி வெல்வோம்" என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு