காலமானார் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா - அஞ்சலி செலுத்திய திரைப் பிரபலங்கள் கூறியது என்ன?

பாரதிராஜா

பட மூலாதாரம், KV MANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ் சினிமாவின் "இயக்குநர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.

இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், "சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்" என அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் , திரைத்துரையினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர்.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்ட பதிவில், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் மறைவால் மிகுந்த துயரமடைந்ததாக கூறியுள்ளார்.

"கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நேரில் அஞ்சலி

முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

பட மூலாதாரம், TNDIPR

சென்னை நீலாங்கரையில் முதலமைச்சர் விஜய் வீட்டுக்கு அருகில் இயக்குநர் பாரதிராஜா வீடு உள்ளது. இன்று அதிகாலை பாரதிராஜா மறைந்ததை தொடர்ந்து முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளபதிவு ஒன்றில்,"திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்." என முதலமைச்சர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் "தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்." எனவும் முதலமைச்சர் விஜயின் இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா வீட்டில் நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

பட மூலாதாரம், MK Stalin

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திரைமொழியில் தனிமொழி பேசி தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா என திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பாகிவிட்ட பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் அவருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. சினிமா ரசிகர்களின் மனங்களில், தமிழ் மக்களின் மனங்களில் என்றும் அவர் வாழ்வார் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதி ராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர். பாரதிராஜா என கூறியுள்ளார். "என் இனிய தமிழ் மக்களே" என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் இமயம், பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில், பாரதிராஜா ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். வாழையடி வாழையாக அவரது வழி வந்த இயக்குநர்களும், திரைக்கலைஞர்களுமே அதற்குச் சாட்சி என அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பாரதி ராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்

"இரட்டை ஜடை" - குஷ்புவின் நினைவுகள்

பாரதிராஜாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் இதை தெரிவித்தார்.

நமது அன்புக்கும், மதிப்புக்கும் உரிய இயக்குநர் ஜாம்பவான் பாரதிராஜா நம்முடன் இல்லை என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழ்சினிமாவில் அவரது திரைப்படங்கள் மைல்கல்களாக இருந்ததாகவும், திரைப்படத் தயாரிப்புக்கு ஒரு பாடமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தன்னை எப்போதும் இரட்டை ஜடை போட்டு ஒரு படம் எடுக்கவேண்டும் என கூறி வந்ததாகவும் அது நிறைவேறாத கனவாகவே இருந்ததாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா ஆன்மா சாந்தியடைய வேண்டியுள்ள நடிகை ரேவதி தான் ஒரு நடிகராக இருப்பதற்கு காரணம் பாரதிராஜாதான் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் திசையையும், மொழியையும் மாற்றிய படைப்பாளர் பாரதிராஜா என்று இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''எளிய மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அசலான கலை வடிவமாக உயர்த்திக் காட்டியவர். மண்ணின் மணத்தையும் மனிதர்களின் உண்மையையும் திரையில் நிலைநிறுத்திய மகத்தான கலைஞருக்கு அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

'16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர் பாரதிராஜா.

தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியவராக அறியப்படுபவர் பாரதிராஜா. "ஸ்டுடியோவுக்குள் நடந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படத்தை கொடுத்தவர்" என திரைத்துறையினரால் சுட்டிக்காட்டப்படுகிறார்.

கதாநாயகன் என்றால் அழகானவன் என்பதை மாற்றி நாயகனுக்கு கோவணம் கட்டி வெற்றிலை போடும் சப்பாணியாக மாற்றிக் காட்டியவர். 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவில் பின்னாளில் உச்ச நட்சத்திரமாக மாறிய கமல் ஹாசன், ரஜினி காந்த் என இருவரின் திரைவாழ்விலும் முக்கியமானதாக மாறியது.

'பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா' பேசுகிறேன் என தன் குரலால் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், "கல்லுக்குள் ஈரம்" என்ற திரைப்படத்தின் மூலம், முழு நீளப் படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னத்தின் "ஆய்த எழுத்து" திரைப்படத்திலும், "பாண்டிய நாடு", "குரங்கு பொம்மை", "எங்க வீட்டுப் பிள்ளை", "திருச்சிற்றம்பலம்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அனைத்து தலைமுறைக்குமான ரசிகர்களை பெற்றார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

பாரதிராஜாவாக மாறிய சின்னச்சாமி

பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம். அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தாயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தம்மாள். 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி.

இயக்குநர் பாரதிராஜா அவரது ஊரிலேயே சிறிது காலம் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு, சினிமாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் சென்னைக்கு சென்றார். மேடை நாடகம், பெட்ரோல் பங்க் வேலை என பணிபுரிந்து கொண்டே சினிமாத் துறையில் நுழைய கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

முதன் முதலில், இயக்குநர் பி புல்லையாவிடம் உதவி இயக்குனராக பாரதிராஜா பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து, பிரபலக் கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

இளையராஜாவுடன் நட்பு

பாரதிராஜா

பட மூலாதாரம், KV MANI

பாரதிராஜாவுக்கு படிக்கும் போதே நடிக்கும் ஆர்வம் வந்தது. நாடகங்கள் பார்த்து வளர்ந்தவர், நாடகம் போடும் அளவுக்கு கதை எழுதினார். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளராக வேலை கிடைத்தது. ஊர் ஊராக சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து அறிக்கை தயார் செய்யும் வேலை.

அப்படி ஒரு முறை பண்ணைபுரம் சென்ற போது அங்கு இசை வாசிக்கும் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் ஆனார்கள். கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை வாசிக்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சென்றவர்கள், பாரதிராஜாவின் நாடகத்திற்கு இசை வாசிக்க மதுரை சென்றார்கள். இதற்கிடையில் தான் இயக்குநராகும் கனவுடன் சென்னைக்கு புறப்பட்டார் பாரதி ராஜா.

16 வயதினிலே உருவானது எப்படி?

உதவி இயக்குநராக பணியாற்றிய பாரதிராஜாவின் திறமையை அறிந்த தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார். முத்துராமன் கதாநாயகன், ஜெயலலிதா கதாநாயகி, வி.குமார் இசையமைப்பாளர் என்று முடிவாகி படத்திற்கு 'சொந்த வீடு' என்று பெயர் சூட்டப்பட்டது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதா படத்தில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்ததால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

அதன் பிறகு கே.ஆர்.ஜி.யின் அலுவலகத்துக்கு பைனான்சியராக வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்த போது 'மயிலு' என்கிற கதையை பாரதிராஜா சொல்லி இருக்கிறார். அந்த கதை எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. அதற்கு '16 வயதினிலே' என்று பெயர் வைத்து கமல், ரஜினி, ஸ்ரீதேவி, காந்திமதி நடிப்பில் நிவாஸ் ஒளிப்பதிவில் படமாக்க முடிவு செய்தார்.

இதற்கிடையில் இவர்களின் நட்பு வட்டத்தில் இருந்த 'அன்னக்கிளி' செல்வராஜ், கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்திடம் உதவியாளராக இருந்தார். பஞ்சு அருணாச்சலம் தயாரித்த 'அன்னக்கிளி' படத்திற்கு இளையராஜாவை அறிமுகம் செய்து இசையமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் செல்வராஜ்.

தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 'அன்னக்கிளி' படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து இளையராஜா புகழ் பெற்றார். உடனே தனது நண்பர் இளையராஜாவை '16 வயதினிலே' படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கினார், பாரதிராஜா.

1977 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியான '16 வயதினிலே' படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து, வசூலில் சாதனை படைத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார்.

காணொளிக் குறிப்பு,

பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள்

பதினாறு வயதினிலே (1977), சிகப்பு ரோஜாக்கள் (1978), கிழக்கே போகும் ரயில் (1978), நிறம் மாறாத பூக்கள் (1979), நிழல்கள் (1980), அலைகள் ஓய்வதில்லை (1981), புதுமைப் பெண் (1983), மண்வாசனை (1983), ஒரு கைதியின் டைரி (1984), முதல் மரியாதை (1985), கடலோரக் கவிதைகள் (1986), வேதம் புதிது (1987), ஆராதனா (1987), கொடி பறக்குது (1989), புது நெல்லு புது நாத்து (1991), நாடோடி தென்றல் (1992), கிழக்குச் சீமையிலே (1993), கருத்தம்மா (1995) உள்ளிட்ட திரைப்படங்கள் பாரதிராஜாவின் மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்களாகும்.

பாரதிராஜாவால் அறிமுகமானோர் பட்டியல் பெரிது

இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகளின் பட்டியல் மிகப் பெரிது. அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் பெரும் செல்வாக்கு செலுத்தினர். கார்த்திக், ராதா, ராதிகா, சுதாகர், ருக்மணி உள்ளிட்ட பலரையும் இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தியுள்ளார்.

விருதுகளும், மரியாதைகளும்

இந்திய அரசு இயக்குநர் பாரதிராஜாவிற்கு 2004-ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கவுரவப்படுத்தியது.

இயக்குநர் பாரதிராஜாவின் "சீதாகொகா சிலுகா" திரைப்படத்திற்காக 1982-ஆம் ஆண்டு தேசிய விருதும், "முதல் மரியாதை" திரைப்படத்திற்காக 1986-ஆம் ஆண்டு தேசிய விருதும், "கருத்தம்மா" திரைப்படத்திற்காக 1995-ஆம் ஆண்டு தேசிய விருதும், "அந்தி மந்தாரை" திரைப்படத்திற்காக 1996- ஆம் ஆண்டு தேசிய விருதும், "கடல் பூக்கள்" திரைப்படத்திற்காக 2001-ஆம் ஆண்டு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

"கிழக்கே போகும் ரயில்" திரைப்படத்திற்காக 1978-ஆம் ஆண்டின் 'ஃபிலிம்பேர்' விருது கிடைத்தது

"16 வயதினிலே" திரைப்படத்திற்காக 1977-ஆம் ஆண்டிலும், "புதிய வார்ப்புகள்" திரைப்படத்திற்காக 1979-ஆம் ஆண்டிலும், "அலைகள் ஓய்வதில்லை" படத்திற்காக 1981-ஆம் ஆண்டிலும், "ஈர நிலம்" திரைப்படத்திற்காக 2003-ஆம் ஆண்டிலும் "தமிழ்நாடு அரசின் மாநில விருதும்", தமிழ்நாடு அரசின் "கலைமாமணி" விருதும் பெற்றார்.

'சீதாகொகா சிலுகா' திரைப்படத்திற்காக 1981-ஆம் ஆண்டுஆந்திரபிரதேச அரசிடம் இருந்து "நந்தி விருது" பெற்றார்.

துயரத்தைத் தந்த மகனின் மரணம்

பாரதி ராஜா

பட மூலாதாரம், THENI ESWAR

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா 2025ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். தமிழ் திரையுலகில் நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர் என பல நிலைகளில் பணியாற்றியிருந்த மனோஜ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

மகனின் மரணத்திற்குப் பின்னர் உடல்நலம் குன்றியிருந்த பாரதிராஜா கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தார். சமீப நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் பார்த்தனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு