ஒரு சாதாரண குடும்பம் இந்திய ரசிகர்களை வசீகரித்தது எப்படி? 'த்ரிஷ்யம்' மாயாஜாலம் செய்த கதை

த்ரிஷ்யம், பேமிலி த்ரில்லர், இந்தியர்களை கவர்ந்தது எப்படி?
படக்குறிப்பு, மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் நாயகன் ஜார்ஜ் குட்டியின் குடும்பம்
    • எழுதியவர், யாசிர் உஸ்மான்
    • பதவி, பிபிசி நியூஸ் இந்தி திரைப்பட வரலாற்றாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிரபலமான கலாசாரம் மற்றும் மீம்களின் உலகில், அக்டோபர் 2 என்ற தேதிக்கு மற்றொரு அர்த்தமும் உண்டு - அதுதான் 'த்ரிஷ்யம்'.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு 2022 இல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கத் தொடங்கியபோது, பார்வையாளர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற கேள்வி பலமுறை எழுப்பப்பட்டது.

ஓடிடி தளங்கள் வளர்ச்சியின் தாக்கம், பார்வையாளர்களின் மாறுபட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் நீண்டகாலப் பெருந்தொற்று ஆகியவை திரைப்படத்துறைக்கு நெருக்கடியை கொடுத்திருந்த நிலையில், தியேட்டர்களுக்குப் பார்வையாளர்களை ஈர்த்ததன் மூலம் திரையரங்குகளை மீண்டும் உயிர்ப்பித்த முக்கியப் படம் 'த்ரிஷ்யம் 2' ஆகும்.

₹345 கோடி வசூலுடன், அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய படமாக 'த்ரிஷ்யம் 2' திகழ்ந்தது.

ஒரு சாதாரண குடும்பத்தின் இந்த அசாதாரண கதையில் என்ன மாயம் இருக்கிறது? இந்த சஸ்பென்ஸ் புதிருக்குள் மக்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகிறார்கள்?

இந்தக் கேள்விக்கான விடை சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத் திரையுலகில் தொடங்கிய முழுமையான கதையில்தான் பொதிந்துள்ளது.

தனித்துவமான திரைக்கதை

மலையாளத் திரைப்படமான 'த்ரிஷ்யம்' 2013-இல் வெளியானது. எழுத்தாளரும் இயக்குநருமான ஜீத்து ஜோசப், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை 'ஜார்ஜ் குட்டி' என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

இந்தக் கதாபாத்திரத்தோடும், படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையோடும் பார்வையாளர்கள் தங்களை மிகவும் நெருக்கமாகத் தொடர்புபடுத்திக் கொண்டனர். இதன் விளைவாக, அதுவரை வெளியான மலையாளத் திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக 'த்ரிஷ்யம்' உருவெடுத்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பின்னர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய இந்திய மொழிகளிலும், இலங்கை, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இப்படம் வெற்றிகரமாக மறுஆக்கம் (Remake) செய்யப்பட்டது. த்ரிஷ்யம் திரைப்படம் தமிழில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியாகி, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து இந்தக் கதை உலகளாவிய பார்வையாளர்களை எளிதில் கவர்ந்தது.

நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் ஜூலை 31, 2015 அன்று வெளியான இதன் இந்திப் பதிப்பும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திப் பதிப்பில் அஜய் தேவ்கன் 'விஜய் சல்கோன்கர்' ஆகவும், தபு 'ஐஜி மீரா தேஷ்முக்' ஆகவும் நடித்திருந்தனர்.

எந்த மொழியாக இருந்தாலும் 'த்ரிஷ்யம்' படத்தின் உண்மையான நாயகன் அதன் திரைக்கதைதான். "கண்ணால் பார்ப்பதெல்லாம் உண்மையல்ல" என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான திரைக்கதை அது.

நமக்குக் காட்டப்படுவதை நாம் அப்படியே நம்புகிறோம்; அங்கிருந்துதான் 'த்ரிஷ்யம்' படத்தின் கதைக்களம் தொடங்குகிறது. விஜய் (அதாவது மலையாளத்தில் ஜார்ஜ் குட்டி) தடயங்களை அழிக்கவில்லை, மாறாக மற்றவர்களின் நினைவுகளைத் தனக்குச் சாதகமாக மாற்றியமைத்தார்.

"இனி அவர் சிக்கிக்கொள்வார்!" என்று பார்வையாளர்கள் நினைக்கும் போதெல்லாம், திரைக்கதை அவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களை அளிக்கிறது. கதாபாத்திரங்களின் எளிமையுடன் கூடிய அசாத்தியமான விறுவிறுப்புதான் இந்தப் படத்தை இத்தனை சிறப்புமிக்கதாக மாற்றுகிறது.

புதிய வகை ஃபேமிலி த்ரில்லர்

த்ரிஷ்யம், பேமிலி த்ரில்லர், இந்தியர்களை கவர்ந்தது எப்படி?
படக்குறிப்பு, தமிழில் கமல் - கவுதமி நடிப்பில் வெளியான பாபநாசம்

திரைத்துறையிலும் ஓடிடி (OTT) தளங்களிலும் 'த்ரில்லர்' என்பது பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்பட வகைமையாகக் கருதப்படுகிறது. கொலை, மர்மம், காவல் துறை விசாரணை மற்றும் குற்ற பின்னணிகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பஞ்சமே இல்லை.

ஆனால், த்ரில்லர் திரைப்படங்கள் பொதுவாகக் 'குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படங்களாகக்' கருதப்படுவதில்லை. ஒரு சராசரி இந்தியக் குடும்பம் ஒன்றாக அமர்ந்து பார்க்கத் தயங்கும் வகையில், அவற்றில் பெரும்பாலும் வன்முறை, அநாகரிக உரையாடல்கள் அல்லது ஆபாசக் காட்சிகள் இடம் பெற்றிருப்பதுண்டு.

ஆனால், இந்தக் கணிப்பைத் தலைகீழாக மாற்றி, 'ஃபேமிலி த்ரில்லர்' என்னும் புதிய வகைமையை 'த்ரிஷ்யம்' உருவாக்கியது.

பார்வையாளர்களைத் தொடர்ச்சியான அதிர்ச்சியில் வைத்திருப்பதே ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் மிகப்பெரிய சவாலாகும். ஆனால், 'த்ரிஷ்யம்' இந்த விதியையும் உடைத்தெறிந்தது. குற்றத்தைச் செய்தது யார் என்பதைத் தெரிந்துகொள்வது இதில் பெரிய சுவாரசியமல்ல; ஏனெனில் அது பார்வையாளர்களுக்கு முன்பே தெரியும்.

இந்தக் குடும்பம் தப்புமா? ஜார்ஜ் குட்டியின் திட்டம் எங்காவது தவறிவிடுமா? என்பதில் தான் அந்த விறுவிறுப்பே அடங்கியிருக்கிறது. அதாவது, மர்மத்தை மறைப்பதை விட, அது எங்கே வெளியாகிவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்குவதே இப்படத்தின் முதன்மைத் தளமாக உள்ளது.

இதில் அதிகம் கவனிக்கப்படாத மற்றொரு அம்சம் என்னவென்றால், இதன் முதன்மைக் கதாபாத்திரம் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்ற பிறகும் நிம்மதியடைவதில்லை.

ஒரு சாதாரண த்ரில்லர் படத்தில், ரகசியம் வெளியாகிவிடும் என்ற பயம் பார்வையாளர்களுக்குத் த்ரில்லாக இருக்கும். ஆனால் 'த்ரிஷ்யம்' திரைப்படத்திலோ, அந்தப் பயமே கதாபாத்திரங்களுக்குப் பெரிய உளவியல் சுமையாக மாறுகிறது. இந்தத் நுட்பமான வேறுபாடே, இப்படத்தைச் வெறும் சஸ்பென்ஸ் கதையாக மட்டுமின்றி, ஒரு அழுத்தமான உளவியல் கதையாகவும் உயர்த்துகிறது.

ஒரு திரைப்படம் மனதில் நிலைத்து நிற்க நல்ல கதை மட்டும் போதாது; பார்வையாளர்களுடனான உணர்வுப்பூர்வமான பிணைப்பும் அவசியம்.

அந்தப் பிணைப்பு 'த்ரிஷ்யம்' படத்தில் மிகவும் வலுவாக உள்ளது. இது அளப்பரிய செல்வாக்கோ, பணபலமோ அல்லது அரசியல் பின்னணியோ கொண்டவர்களின் கதை அல்ல; மாறாக, ஒரு சாதாரண குடும்பம் எதிர்பாராத அசாத்தியச் சிக்கலில் மாட்டி தவிக்கும் கதை.

இந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பே, பார்வையாளர்களை இந்தக் கதையோடும் அதன் கதாபாத்திரங்களோடும் ஆழமாக ஒன்றிணைய வைக்கிறது.

இந்தக் கதை ஏன் இத்தனை 'இந்தியத் தன்மையோடு' உணரப்படுகிறது?

த்ரிஷ்யம், பேமிலி த்ரில்லர், இந்தியர்களை கவர்ந்தது எப்படி?

'த்ரிஷ்யம்' மாபெரும் வெற்றி பெற்றதற்கான மிக முக்கியக் காரணம், அது ஏதோ ஒரு இந்திய மொழியில் எடுக்கப்பட்ட படம் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்தியச் சமூகத்திலும் கலாசாரத்திலும் ஆழமாக வேரூன்றிய ஒரு கதை என்பதே ஆகும். இருப்பினும், இதில் உள்ள உணர்வுகள் அனைவரும் தங்களை உடனடியாகத் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.

இந்தியச் சமூக அமைப்பில் குடும்பத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது. பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் வெறும் பிள்ளைகள் மட்டுமல்ல; அவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் கண்ணியம் ஆகியவையே பெற்றோரின் முதன்மை அடையாளங்களாக இருக்கின்றன.

இத்தகைய சூழலில், தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு தந்தை சட்டத்தையே எதிர்த்துப் போராடுவதைக் கதையில் பார்க்கும்போது, பார்வையாளர்கள் உணர்வுபூர்வமாக அவருடன் ஒன்றிணைந்து விடுகிறார்கள்.

இந்தத் த்ரில்லர் திரைப்படத்தில் பிரமாண்டமான நவீனக் கருவிகளோ, ஆபத்தான சண்டைக் காட்சிகளோ அல்லது வழக்கமான மசாலாப் படங்களின் கவர்ச்சியோ எதுவுமில்லை. ஜார்ஜ் குட்டி (மலையாள த்ரிஷ்யம் நாயகன்) பெரும் பணக்காரரோ அல்லது அதிகாரமிக்க நபரோ அல்ல.

அவர் ஒரு காவல்துறையோ, துப்பறிவாளரோ அல்லது அதிரடி நாயகனோ கிடையாது; நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு சாதாரண கேபிள் டி.வி ஆபரேட்டர்.

தினமும் காலையில் நமது தெருவில் நாம் காணும், பால் வாங்கி வரும், குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு அக்கம் பக்கத்தினரைச் சிரித்த முகத்துடன் பேசி வரவேற்கும் அதே சராசரி மனிதர்.

காவல்துறையை விட இரண்டு அடிகள் முன்னதாகச் சிந்திக்கும் அவரது கூர்மையான மூளையே அவரது பலம். அவர் தன் மனைவியையும் மகள்களையும் காப்பாற்றுவது மட்டுமின்றி, தனது திட்டத்திலும் அவர்களை ஒருங்கிணைக்கிறார். ஒரு பெரும் ஆபத்து வரும்போது, அந்த குடும்பமே ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்று, பரஸ்பர நம்பிக்கையோடு எதிர்கொள்கிறது.

அதேவேளையில், 'த்ரிஷ்யம்' பார்வையாளர்களிடம் ஒரு தர்மசங்கடமான அறநெறி சார்ந்த கேள்வியையும் முன்வைக்கிறது – 'ஜார்ஜ் குட்டி செய்தது சரியா, தவறா?'

இந்த மனப் போராட்டத்தை படம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறது. ஒரு கொலையோடு தொடங்கும் திரைப்படம், இறுதியில் குடும்பத்தின் பிணைப்பைப் பற்றியதாக மாறுகிறது. இது காவல்துறைக்கும் ஒரு தந்தைக்கும் இடையிலான போராட்டம் என்றாலும், பார்வையாளர்களின் மனம் அந்தத் தந்தையின் பக்கமே நிற்கிறது.

'த்ரிஷ்யம்' படத்தின் வெற்றி ஒருவேளை இந்தக் கேள்வியில்தான் அடங்கியிருக்கிறதோ என்னவோ – "உங்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலை வந்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?"

இந்த ஒரு கேள்விதான், இப்படத்தை வெறும் குற்றப்பின்னணி கொண்ட த்ரில்லராக மட்டும் நிறுத்தாமல், ஒரு முழுமையான குடும்பத் திரைப்படமாக உயர்த்தியிருக்கிறது.

சினிமாதான் வெற்றியின் ஆயுதம்!

'த்ரிஷ்யம்' படத்தின் மிக அழகான பல அடுக்குகளில் ஒன்று, அதன் முதன்மைக் கதாபாத்திரத்திற்கு சினிமா மீதிருக்கும் தீவிர காதலாகும். இங்கு நாயகன் ஒரு மகா சினிமா வெறியர். ஜார்ஜ்குட்டி தனது வாழ்க்கைப் பாடங்களைக் கல்லூரியிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை; மாறாகத் திரைப்படங்கள் மூலமே கற்றுக்கொள்கிறார். இது 'த்ரிஷ்யம்' கதைக்கு ஒரு சுவாரசியமான பரிமாணத்தை அளிக்கிறது.

தீவிர அறிவுஜீவிகளால் பெரும்பாலும் 'வெறும் பொழுதுபோக்கு' அல்லது 'மனதை லேசாக்க' என்று ஒதுக்கப்படும் வணிகத் திரைப்படங்களை, தன் நாயகனின் மிகப்பெரிய பலமாக மாற்றுகிறது 'த்ரிஷ்யம்'.

திரைப்படங்கள் மூலமாகவே அவர் மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்கிறார்; காவல்துறையின் விசாரணை முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறார்; ஒரு குற்றத்திற்குப் பிறகு விசாரணை எப்படி நகரும் என்பதைத் துல்லியமாக ஊகிக்கிறார்.

ஒவ்வொரு முறையும் புதிய நகர்வுகளும் புதிய காய்களும்!

த்ரிஷ்யம், பேமிலி த்ரில்லர், இந்தியர்களை கவர்ந்தது எப்படி?
படக்குறிப்பு, 2015 ஜூலை 10 அன்று மும்பையில் நடைபெற்ற நிஷிகாந்த் காமத் இயக்கத்தின் 'த்ரிஷ்யம் 1' திரைப்படத்தின் சுவரொட்டி மற்றும் பாடல் வெளியீட்டு விழாவின்போது, பாலிவுட் நடிகர்கள் தபு, அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், இஷிதா தத்தா மற்றும் குழந்தை நட்சத்திரம் மிருணாள்.

'த்ரிஷ்யம்' என்பது நகர்வுகளும் செக்மேட்களும் நிறைந்த புதிய மனரீதியிலான சதுரங்கப் போராகும்; இதில் ஒவ்வொரு முறையும் சதுரங்கக் காய்களும் பந்தயத்தின் களமும் மாறிக்கொண்டே இருக்கும். முதல் பாகத்தின் அதே விறுவிறுப்பை 'த்ரிஷ்யம் 2' திரைப்படத்திலும் மீட்டெடுப்பதே அதன் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இந்தப் படமும் அதற்கு மிகச் சரியாகப் பதிலளித்தது. இந்த முறை, "கடந்த காலத்தை ஒருபோதும் முற்றிலும் புதைத்துவிட முடியுமா?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. சடலத்தை மறைப்பது முதல் அதை இறுதியாக அப்புறப்படுத்துவது வரையிலான திரைக்கதை, பார்வையாளர்களை உறையச் செய்யும் த்ரில்லராக அமைந்தது.

ஆனால், 'த்ரிஷ்யம் 3' வரும்போது நிலைமை முற்றிலும் மாறியது.

மலையாளத் திரைப்படமான "த்ரிஷ்யம் 3" 2026 மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகப் படம் மாபெரும் வெற்றி பெற்ற போதிலும், முதல் இரண்டு பாகங்கள் பெற்ற விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெறத் தவறிவிட்டது என்று திரை விமர்சகர்கள் கருதினர்.

மலையாளத்தில் வெளியான 'த்ரிஷ்யம் 3' குறித்து 'மிட்-டே' நாளிதழ் எழுதுகையில், "முதல் பார்வையில், மூன்றாம் பாகத்தின் திருப்பங்களும் நகர்வுகளும் முந்தைய பாகங்களைப் போல அத்தனை சிக்கலானதாகவோ அல்லது ஈர்க்கக் கூடியதாகவோ தெரியவில்லை. ஆனால் அதுதான் இதன் முக்கியப் புள்ளியே! முந்தைய படங்களைப் போல அல்லாமல், 'த்ரிஷ்யம் 3' திரைப்படத்தில் ஜார்ஜ்குட்டி கதையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.

அதேவேளையில், 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ், ஜீத்து ஜோசப்பின் இந்த சூப்பர்ஹிட் வரிசையில் "த்ரிஷ்யம் 3 தான் பலவீனமான பகுதி" என்று விமர்சித்தது.

அஜய் தேவ்கனின் இந்தி 'த்ரிஷ்யம்' படத்தின் முதல் இரண்டு பாகங்களும், ஜீத்து ஜோசப்பின் அசல் மலையாளப் படத்தின் கதையை அப்படியே தழுவி எடுக்கப்பட்டவையாகும்.

அதன்பிறகு, இந்தி பதிப்பான "த்ரிஷ்யம் 3" திரைப்படத்தின் கதை மாற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாயின. திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அஜய் தேவ்கனும் இதை உறுதிப்படுத்தினார். "த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்" முற்றிலும் புதிய திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இது ஏற்கனவே உள்ள கதையில் செய்யப்பட்ட சிறு மாற்றங்கள் அல்ல; மலையாள பதிப்பில் இருந்து இந்தி பதிப்பு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.

மிக முக்கியமாக, "த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்" இந்தத் தொடரின் கடைசித் திரைப்படமாக இருக்கும். எந்தவொரு நல்ல கதைக்கும் அது எங்கே முடிய வேண்டுமோ என்ற ஒரு புள்ளி உண்டு.

வெற்றி பெற்ற படம் என்ற காரணத்திற்காகத் தேவையின்றி கதையை இழுத்தடிக்காமல், சரியான நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்ததற்காகவும் 'த்ரிஷ்யம்' நினைவுகூரப்பட வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு