You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துபை - இஸ்ரேல் விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல் - இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் தெளிவாகாத விஷயங்கள்
துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை பயணிகள் விமானம் ஒன்று புதன் கிழமை காலை செளதி அரேபியாவில் திடீரென அவசர நிலை காரணமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களும், சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறும் பயணிகளும் கூறியுள்ளனர்.
இரு விமானிகள் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் 'சண்டை'க்குப் பிறகே அவசரக்கால அலாரம் ஒலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் பயணித்த இஸ்ரேலிய பயணி ஒருவர், விமானக் குழுவினர் உதவி கேட்டதாகவும், அதன் பிறகு பயணிகள் விமானிகளில் ஒருவரைக் கட்டுப்படுத்தி, அவரைக் கட்டிப் போட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், சௌதி அரேபியாவில் இருந்து இஸ்ரேலிய பயணிகளை தாய்நாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இதுவரை தெரிய வந்த தகவல்கள் என்ன? இன்னும் தெளிவாகாத விஷயங்கள் யாவை?
இதுவரை நமக்குத் தெரிந்தவை
- புதன் கிழமையன்று (செப்டம்பர் 30), துபையில் இருந்து டெல் அவிவுக்கு சென்ற ஃப்ளைதுபை விமானமான FZ103, புறப்பட்டு சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு சௌதி அரேபியாவுக்கு திருப்பிவிடப்பட்டது.
- விமானம் திடீரென திசை மாற்றப்பட்டு வேகமாகக் கீழிறங்கியதைத் தொடர்ந்து, அவசரக்கால சிக்னல் அனுப்பப்பட்டது. பின்னர் கடத்தல் எச்சரிக்கையும் செயல்படுத்தப்பட்டது. வெறும் இரண்டு நிமிடங்களில் விமானம் சுமார் 17,000 அடி உயரத்தை இழந்து வேகமாகக் கீழ்நோக்கி வந்தது.
- விமான சேவை நிறுவனமான ஃப்ளைதுபை தெரிவித்துள்ளதன்படி, அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் அவர்கள் இருக்குமிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமானம் உள்ளூர் நேரப்படி காலை 08:44 மணிக்கு தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
- அந்த விமானத்தின் கேப்டனும் முதல் அதிகாரியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக விமான நிலையத்தைச் சொந்தமாக வைத்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
- விமானத்தின் காக்பிட்டில் ஒரு பைலட் கத்தியால் குத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானத்தின் பின்புறத்தில் இருந்த வேறு இரண்டு விமானிகள் முன்பகுதிக்கு வந்து விமானத்தைத் தரையிறக்க உதவியதாக பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய ஒரு பயணி கூறியுள்ளார். எனினும், இது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
- விமானத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதில் தலையிட்டு விமானத்தை இயக்கி பாதுகாப்பாகத் தரையிறக்கிய பின்புறத்தில் அமர்ந்திருந்த இரு விமானிகளில் ஒருவர் பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் மற்றொருவர் ஐரோப்பியர் என்றும் பயணிகளில் ஒருவரான அல்மோ இத்தாலி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதில் ஐரோப்பியர் எனக் கூறப்பட்ட விமானி குறிப்பாக எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று இத்தாலி தெளிவாகக் குறிப்பிடவில்லை.
இன்னும் தெளிவாகத் தெரியாதவை
- விமானிகள் இடையே ஏற்பட்ட, வெளிப்படையாகத் தோன்றும் இந்தத் தாக்குதலின் நோக்கம் என்ன, கேப்டன், முதல் அதிகாரி ஆகிய விமானிகளுக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரம் என்ன என்பவை குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
- இதில் தொடர்புடையவர்களின் பெயர்கள் அல்லது எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பவை தெரிய வரவில்லை. இதில் காயமடைந்த விமானிகள், விமானத்தை தரையிறக்கிய பிற விமானிகள் ஆகியவர்களின் விவரங்களும் தெரிய வரவில்லை.
- ரத்தத்தையும் ஒரு கத்தியையும் பார்த்ததாக விமானத்தில் சம்பவத்தைக் கண்டதாகக் கூறும் சாட்சிகள் கூறியுள்ளனர். ஆனால் தாக்கியது யார், தாக்கப்பட்டது யார் அல்லது துல்லியமாக இதில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்ன என்பவை குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
- காவல்துறை, அவசர மீட்பு சேவைகள் அல்லது விசாரணை அதிகாரிகளிடம் இருந்து அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
- காக்பிட்டில் என்ன நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் ரிலீஃப் பைலட்டுகள் விமானத்தை நிலைப்படுத்தி சௌதி அரேபியாவில் தரையிறக்கியதாகவும் பயணி அல்மோக் இத்தாலி கூறுகிறார்.
இந்த விமானத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை. முன்னதாக, விமானம் தரையிறங்கிய தபூக் விமான நிலையத்தைச் சொந்தமாக வைத்துள்ள நிறுவனம், கேப்டனும் முதல் அதிகாரியும் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு