காணொளி: அமெரிக்கா - இரான் ஒப்பந்தத்தில் அரபு நாடுகளுக்கு உள்ள கவலை என்ன?
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் மத்திய கிழக்கில் நிலவிவந்த பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. எனினும் அமெரிக்கா, இரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளன. பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டால், அது இரு நாடுகளுக்கும் இடையே புதிய உறவுகளுக்கு வழிவகுக்கும்.
ஆனால், இது பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு முன்னுரிமைகள் இனியும் அமெரிக்காவையே சார்ந்திருக்குமா? ஏனெனில், இந்தப் போரின்போது வளைகுடா அரபு நாடுகள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தன. மேலும், அவற்றின் உள்கட்டமைப்பு பலவீனங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்தச் சூழலில், இரான் தொடர்பான மோதலில் அமெரிக்கா, அரபு நாடுகளின் நம்பிக்கையை இழந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. போருக்குப் பிறகு அமைதிக்கான விலையை வளைகுடா நாடுகள் செலுத்த வேண்டிய நிலை உருவாகுமா? இந்த காணொளியில் பார்க்கலாம்.
வளைகுடா நாடுகளின் கவலை
அமெரிக்கா, இரான் இடையிலான பேச்சுவார்த்தைகள், இரானுக்கு அதிக சலுகைகளையும் செயல்பாட்டு சுதந்திரத்தையும் வழங்கக்கூடும் என்று பாரசீக வளைகுடா அரபு நாடுகள் அஞ்சுகின்றன. இது, பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கை மேலும் அதிகரிக்க செய்யும் என்று அவை கருதுகின்றன.
இரான், அமெரிக்கா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைத் தெளிவாக நிறுத்துவது குறித்து எந்த உறுதியான குறிப்பும் இடம்பெறவில்லை. இதுவே வளைகுடா நாடுகளின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
ஏனெனில், சமீபத்திய போரின்போது வளைகுடா நாடுகள் மீது ஏவப்பட்டவை இதே பாலிஸ்டிக் ஏவுகணைகள்தான். போரின்போது இரானின் ஏவுகணைத் திறனை அழிப்பது டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், தனது பாரிஸ் பயணத்தின் போது அந்த நிலைப்பாட்டில் டிரம்ப் சற்றே மென்மையான போக்கை காட்டினார்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியின் பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் இணைப் பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் கிரேக் இது பற்றி பேசுனார். "இரானின் ஏவுகணைத் திட்டம் இன்னும் அரபு வளைகுடா நாடுகளுக்கு கடுமையான பாதுகாப்பு சவாலாகவே உள்ளது. அதே நேரத்தில், இரானின் ஏவுகணைக் களஞ்சியத்தை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற கோரிக்கை, வெற்றிகரமான ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு தடையாக இருக்கலாம் என்பதை அந்த நாடுகளின் தலைமைத்துவம் நன்கு உணர்ந்துள்ளது" என்றார்.
வாஷிங்டனில் உள்ள மத்திய கிழக்கு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் வளைகுடா நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களின் கருத்துப்படி, இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், அதன் பிரதிநிதி ஆயுதக் குழுக்கள், அணுசக்தித் திட்டம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை போன்ற முக்கிய விவகாரங்கள் இன்னும் வளைகுடா நாடுகளுக்கு பெரிய சவாலாகவே உள்ளன.
ஆனால், போர் நீடித்தால் அது இந்த நாடுகளின் மீது பொருளாதார மற்றும் பாதுகாப்பு அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
300 பில்லியன் டாலர் நிதி
அமெரிக்கா, இரான் ஒப்பந்தத்தில், இரானின் மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக 300 பில்லியன் டாலர் நிதி உருவாக்கும் முன்மொழிவும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பங்கேற்ற அல்லது ராணுவத் தளங்களை வழங்கிய பிராந்திய நாடுகளிடமிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று இரான் ஏற்கனவே கோரியுள்ளது.
அதேவேளை, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற வளைகுடா நாடுகளும், இரானின் ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இதன் விளைவாக, வளைகுடா நாடுகள் போரின் விலையை மட்டுமல்ல, போருக்குப் பிறகு ஏற்படும் அமைதிக்கான விலையையும் செலுத்த வேண்டிய கடினமான சூழல் உருவாகி வருகிறது.
இதுவரை வளைகுடா நாடுகள் சந்தித்த மொத்த சேதம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. வாஷிங்டனில் உள்ளமத்திய கிழக்கு நிறுவனத்தின் (Middle East Institute) அமைப்பின் ஆராய்ச்சியாளரும் விரிவுரையாளருமான ஹசன் ம்னைம்னே இந்தச் சூழலை ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார். அவரின் கருத்துப்படி, "வளைகுடா நாடுகள் தற்போது ஏற்பட்டுள்ள இழப்புகளைவிட, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன. 300 பில்லியன் டாலர் நிதி முன்மொழிவையும் இந்தக் கோணத்திலேயே பார்க்கலாம். வளைகுடா நாடுகள் இந்த நிதியில் பங்களித்தால், அது இரானுக்கு வழங்கப்படும் உதவியாக அல்ல; மாறாக ஒரு முதலீடாகக் கருதப்படும். இத்தகைய பொருளாதார கூட்டாண்மை, பிராந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் இரானின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்" என்றார்.
ஹோர்மூஸின் முக்கியத்துவம்
மறுபுறம், "மறுகட்டமைப்புக்காக முன்மொழியப்பட்ட இந்த நிதி அரசியல் விவாதங்களை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், முதலில் தாக்குதலுக்குள்ளானவை வளைகுடா நாடுகள்தான்; இப்போது அதே நாடுகளிடமே மறுகட்டமைப்புக்கான செலவை ஏற்குமாறு கேட்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தலாம். இருப்பினும், உண்மை நிலை இதைவிட மிகவும் சிக்கலானது" என ஆண்ட்ரியாஸ் கிரேக் கூறுகிறார்.
ஹோர்மூஸ் நீரிணையின் முக்கியத்துவம், பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கை அதிகரிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். பேச்சுவார்த்தைகளின்போது அழுத்தம் கொடுக்கும் கருவியாக இந்தக் கடல் வழித்தடத்தை இரான் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது வளைகுடா நாடுகளுக்கு பெரும் கவலையாக உள்ளது. ஏனெனில், அவற்றின் முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி இந்தக் கடல் வழித்தடத்தையே பெரிதும் சார்ந்துள்ளது. அதேவேளை, சவுதி அரேபியா, குழாய் வழித்தடங்கள் மற்றும் செங்கடல் (Red Sea) வழியாக ஏற்றுமதி செய்வதன் மூலம், ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவது அல்லது போக்குவரத்து தடைபடுவது போன்ற அபாயங்களிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) ஃபுஜைரா துறைமுகம் வழியாக ஓரளவு மாற்று ஏற்றுமதி வசதிகள் உள்ளன. ஆனால், கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் மாற்று வழித்தடங்கள் மிகவும் குறைவாக இருப்பதால், அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளன.
எனவே, ஹோர்மூஸ் நீரிணை எப்போதும் திறந்தும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவது வளைகுடா நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



