மெஸ்ஸி புகழ் பாடும் ரசிகர்கள்: அர்ஜென்டினாவை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்த எழுச்சிமிகு தருணங்கள்

அர்ஜென்டினாவின் அடுத்தடுத்த எழுச்சியால் மெஸ்ஸியை தோளில் சுமக்கும் அணி வீரர்கள்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்க வாய்ப்புள்ள இந்தத் தொடரில், பல ஆட்டங்களில் மெஸ்ஸி கிட்டத்தட்ட கண்ணீருடன் காணப்பட்டார்.
    • எழுதியவர், டேரியோ ப்ரூக்ஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

"லியோ தனது கடைசி இலக்கை எட்ட, அர்ஜென்டினாவே, உன்னை இருமுறை சாம்பியனாக பார்க்க விரும்புகிறேன்!"

இந்த 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் அர்ஜென்டினா ரசிகர்களின் முழக்கமாக இது மாறியுள்ளது. அணியின் ஆதரவாளர்கள் தாங்கள் செல்லும் இடமெல்லாம், குறிப்பாக கடினமான தருணங்களில், தங்கள் அணிக்கு உற்சாகமூட்ட இதைப் பாடி வருகின்றனர்.

இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா பல கடினமான சூழல்களை எதிர்கொண்டுள்ளது.

அவற்றில் மிகச் சமீபத்திய நெருக்கடி, கடந்த புதன்கிழமை நடந்த அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்டது. அதில் 85வது நிமிடம் வரை அர்ஜென்டினா பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.

பின்னர், என்சோ ஃபெர்னாண்டஸ் அற்புதமான கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அந்த கோல், அட்லான்டா மைதானத்தில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்களைப் பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. அதன் தாக்கம் மைதானத்தின் உள்ளேயும் எதிரொலிக்க, ரசிகர்களின் தொடர் உற்சாகம் மற்றும் ஆதரவுடன், அதிவேகமாக அடுத்தடுத்த தாக்குதல்களை அர்ஜென்டினா நடத்தியது.

இறுதியில், 92வது நிமிடத்தில், லௌடாரோ மார்டினெஸ் அணியை இறுதிச் சுற்றுக்குக் கொண்டு செல்ல வித்திட்ட வெற்றிக்கான கோலை அடித்து, அர்ஜென்டினா அணிக்கு பரபரப்பான கம்பேக் ஒன்றைக் கொடுத்தார்.

அந்த வெற்றியுடன், அர்ஜென்டினா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்வதற்கான முயற்சியில் ஞாயிற்றுக் கிழமை ஸ்பெயினை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது.

அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி, அரையிறுதிப் போட்டி முடிந்ததும் தனது அணியைப் பாராட்டிப் பேசினார். அப்போது அவர், "நாங்கள் தனித்துவமானவர்கள். இது ஆணவமல்ல, இது மன உறுதி. இந்த வீரர்கள் செய்தது வியப்பூட்டுவதாக இருந்தது" என்று கூறினார்.

மெஸ்ஸியின் கோல்களும், அவரைச் சுற்றியுள்ள ஆட்டமும் அர்ஜென்டினாவை மற்றொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெஸ்ஸியின் கோல்களும், அவரைச் சுற்றியுள்ள ஆட்டமும் அர்ஜென்டினாவை மற்றொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளன

இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும், இதுவரை எட்டு கோல்களை அடித்துள்ள லியோனெல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, நெருக்கடியான சூழல்கள் அனைத்திலுமே தனது மீண்டு வரும் திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளது.

கால்பந்து விளையாட்டில் அர்ஜென்டினாவின் முக்கிய அங்கங்களாக கருதப்படும் ஆர்வம் மற்றும் உறுதிப்பாட்டை இந்தப் போட்டிகள் வெளிப்படுத்தியுள்ளன.

அதேவேளையில், லியோனெல் மெஸ்ஸி தனது ஓய்வுக்கு முன்பு வெல்ல விரும்பும் கடைசி உலகக் கோப்பை கனவை நனவாக்க, அணியில் இருக்கும் மற்ற 25 வீரர்களும் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள் என்பதையும் இது காட்டியுள்ளது.

கால்பந்தில் அர்ஜென்டினாவின் தீரத்தைக் காட்டிய தருணங்கள்

குரூப் சுற்றில் மூன்று எளிய வெற்றிகளைத் தொடர்ந்து, பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனியின் அர்ஜென்டினா அணி மிகவும் கடினமான சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியது.

அவர்களுக்கான முதல் சவால், 2026 உலகக் கோப்பைத் தொடரின் ஆச்சர்யமூட்டும் அணியாகத் திகழ்ந்த கேப் வெர்டேவுக்கு எதிராக வந்தது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடந்த அந்தப் போட்டி, வழக்கமான நேர முடிவில் 1-1 என்று டிராவில் முடிந்தது.

பின்னர், கூடுதல் நேரத்தின் முதல் பகுதியின் தொடக்கத்தில், லிசாண்ட்ரோ மார்டினெஸ் அர்ஜென்டினாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், தங்களது முதல் உலகக் கோப்பையில் விளையாடிய கேப் வெர்டே அணி சுமார் 10 நிமிடங்கள் கழித்து பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து அடித்த ஒரு சிறப்பான ஷாட் மூலம் ஆச்சர்யமூட்டும் வகையில் கோல் அடித்து சமன் செய்தது.

அர்ஜென்டினா ரசிகர்கள் மெஸ்ஸியுடன் ஒரு பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அர்ஜென்டினா ரசிகர்கள் மெஸ்ஸியுடன் ஒரு பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அர்ஜென்டினா மிகுந்த ஆற்றலுடன் தொடர்ந்து தாக்குதல் நடத்தவே, அந்த அழுத்தம் இறுதியாக பலன் கொடுத்தது. ஒரு கார்னர் கிக்கில் இருந்து வந்த ஹெட் ஷாட், கேப் வெர்டே வீரர் ஒருவராலேயே கோலுக்குள் திருப்பிவிடப்பட்டு, அர்ஜென்டினாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எகிப்துக்கு எதிராக அர்ஜென்டினா மற்றொரு வியத்தகு மீள்வருகையை நிகழ்த்தியது.

எகிப்து அணி 79வது நிமிடம் வரை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அப்போது க்யூட்டி ரொமேரோ அடித்த கோல் அர்ஜென்டினா ஆட்டத்தை டிரா செய்யக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா சக்திவாய்ந்த தாக்குதல் ஆட்டத்தின் மூலம் மேலும் முன்னேறிச் சென்று, 83வது நிமிடத்தில் லியோனெல் மெஸ்ஸி அற்புதமான கோல் ஒன்றை அடித்து போட்டியை சமன் செய்தார்.

ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கிச் செல்வது போலத் தோன்றியது. ஆனால், 93வது நிமிடத்தில், என்சோ ஃபெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடித்து, அந்தக் குறிப்பிடத்தக்க கம்பேக்கை கொடுத்தார்.

அவரது கடைசி நேர கோல் ஒரு பரபரப்பான போட்டியின் முடிவைத் தீர்மானித்தது. இருப்பினும் சில நடுவர் முடிவுகள் குறித்த சர்ச்சைகளும் அந்தப் போட்டியைச் சூழ்ந்திருந்தன.

ஒவ்வொரு வெற்றியிலும், அர்ஜென்டினாவின் கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக மெஸ்ஸி திகழ்ந்து வருகிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வொரு வெற்றியிலும், அர்ஜென்டினாவின் கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக மெஸ்ஸி திகழ்ந்து வருகிறார்

காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மீண்டும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. ஆட்டம் கூடுதல் நேரத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. இருப்பினும், 67வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் டான் என்டோய் சமன் செய்யும் கோலை அடித்ததால், ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா ரசிகர்கள் தங்கள் அணிக்கு உரத்த குரலில் ஆதரவளித்த நிலையில், 112வது நிமிடத்தில் ஜூலியன் ஆல்வாரெஸ் ஓர் அற்புதமான கோலை அடித்து அர்ஜென்டினாவை மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.

ஒன்பது நிமிடங்கள் கழித்து, லௌடாரோ மார்டினெஸ் மற்றொரு கோலை அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்து, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறச் செய்தார்.

அர்ஜென்டினாவின் நான்காவது பரபரப்பான மீள் எழுச்சி அரையிறுதிப் போட்டியில் நிகழ்ந்தது. அங்கு கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடங்களில் லௌடாரோ மார்டினெஸ் வெற்றியைத் தீர்மானிக்கும் கோலை அடித்து, அணிக்கு மற்றுமொரு மறக்க முடியாத வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

இந்த ஒவ்வொரு பரபரப்பான வெற்றிக்குப் பிறகுமான கொண்டாட்டங்கள் ஒரு சிறப்புப் பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகின்றன.

அர்ஜென்டினா வீரர்கள், தங்களது வெற்றியையும் இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் தங்களை வழிநடத்திய கேப்டன் லியோனெல் மெஸ்ஸியையும் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு