You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சிக்மா' மூலம் இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய் தந்தை பற்றிக் கூறியது என்ன?
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படம் நாளை (அக்டோபர் 2) வெளியாகிறது.
ஜேசன் சஞ்சய் சமீப காலங்களில் அளித்துள்ள நேர்காணல்களில், 'பார்க்க விஜய் போலவே இருக்கிறார், பேசுகிறார்' என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
விஜயின் திரைப்படப் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க, ஜேசன் தோன்றும் பல 'ரீல்ஸ்' காணொளிகளைப் பார்க்க முடிகிறது.
"என்னை மக்கள் எப்படி அடையாளப்படுத்துகிறார்கள் என எனக்கு நன்றாக தெரியும். 'சிக்மா' பார்க்க வருபவர்கள் அதற்காகவே வரலாம், ஆனால் 5 நிமிடங்களுக்குப் பிறகு அதை வெறும் திரைப்படமாகவே பார்ப்பார்கள். இத்திரைப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைக் கொண்டே எனது அடையாளத்தை நான் உருவாக்க வேண்டும்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஜேசன் சஞ்சய்.
பொதுவாக தான் ஊடக வெளிச்சத்தை விரும்பாத ஒரு நபர் என்று கூறும் ஜேசன் சஞ்சயின் சமூக ஊடகப் பக்கங்களில் அவரைக் குறித்த தகவல்கள் அதிகமாக இல்லை.
12 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பெரும்பாலான பதிவுகள் 'சிக்மா' திரைப்படம் குறித்தே உள்ளன. ஆனால், 'சிக்மா' ஒரு இயக்குநராக அவரது முதல் படைப்பு அல்ல.
'ஜோசப் விஜயின் மகன்'
ஜோசப் விஜய்- சங்கீதாவின் மகனான ஜேசன் சஞ்சய், முதன்முதலாக திரையில் தோன்றியது 2009ஆம் ஆண்டில் வெளியான 'வேட்டைக்காரன்' திரைப்படத்தில். அதில் ஒரு பாடலில், விஜயுடன் சில நொடிகள் தோன்றியிருப்பார்.
"அந்தப் பாடல் குறித்து எனக்கு பெரிதாக எந்த நினைவும் இல்லை. நான் அவர்கள் கொடுத்த உடையை அணிந்தேன், அவர்கள் 'ஆக்ஷன்' என்று சொன்னதும், ஓடிச் சென்று என் அப்பாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன். அப்போது எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதுதான் இருக்கும்," என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார் ஜேசன் சஞ்சய்.
ஜேசன் சஞ்சய்க்கு, திவ்யா சாஷா என்ற தங்கை உள்ளார், அவர் 'தெறி' (2016) திரைப்படத்தில் ஓரிரு நிமிடங்கள் விஜயுடன் இறுதிக் காட்சியில் தோன்றியிருப்பார்.
'வேட்டைக்காரன்' திரைப்படத்துக்கு முன்னர், ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த முதல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'நட்சத்திர தூதர்களில்' ஒருவராக விஜயும் இருந்தார். அப்போது, சிஎஸ்கே அணி விளையாடிய ஒரு ஐபிஎல் போட்டிக்கு, தனது மகன் ஜேசன் சஞ்சயுடன் வந்திருந்தார் விஜய். கிரிக்கெட் வீரர் தோனியுடன் இருவரும் இருக்கும் அந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றது.
அதன் பிறகு, ஜேசன் சஞ்சய் பொதுவெளியில் தோன்றியது என்பது மிகக் குறைவு.
கனடா நாட்டில் உள்ள 'டொராண்டோ திரைப்படப் பயிற்சிப் பள்ளி'; (Toronto Film School) எனும் கல்வி நிறுவனத்தில் அவர் 'திரைப்பட உருவாக்கத்தில்' டிப்ளமோ பயின்றதாக, நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கல்வி நிறுவனத்தில் பயின்றுகொண்டிருக்கும்போது தான், 'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் அவர் கூறியிருப்பார்.
"அப்போது எனக்கு 18, 19 வயது தான், வாழ்க்கையில் என்ன செய்வது என அப்போது நான் முடிவு செய்யவில்லை. எனது தந்தை மூலமாகவே அந்த வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த வாய்ப்பை மறுத்ததில் எனக்கு இப்போது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவ்வளவு சிறிய வயதில் ஒரு நாயகனாக திரையில் தோன்றுவது குறித்து எனக்கு தயக்கம் இருந்தது".
அதேபோல, பிரிட்டனில் திரைக்கதை தொடர்பான இளங்கலைக் கல்வியும் அவர் பயின்றுள்ளார்.
ஒரு இயக்குநராக ஜேசன் சஞ்சயின் முதல் படைப்பு என்பது 'ஜங்ஷன்' எனும் குறும்படம், அது 2018ஆம் ஆண்டில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருந்தார் ஜேசன் சஞ்சய்.
அதன் பிறகு அவரது குறிப்பிடத்தக்க படைப்பு என்பது 2023ஆம் ஆண்டு, ஏப்ரலில் வெளியான 'புல் தி ட்ரிகர்' என்ற 13 நிமிட குறும்படம். அது பிரிட்டனில் படமாக்கப்பட்டு, ஜேசன் சஞ்சயின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
"பிரிட்டனில் இளங்கலைக் கல்வி பயின்று கொண்டிருந்தபோது,திரைப்படங்கள் மீதான எனது பேரார்வத்தை பின்தொடர முடிவு செய்தேன்....'புல் தி ட்ரிகர்', இதுவொரு 'மர்டர் மிஸ்டரி' வகை குறும்படம்," என அந்தக் காணொளி குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜேசன் சஞ்சய்.
அந்தக் குறும்படம் யூடியூப் தளத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன் அது தொடர்பான ஒரு முறையான பட்டப்படிப்பை படிக்குமாறு தந்தை விஜய் தன்னை ஊக்குவித்ததாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார் ஜேசன் சஞ்சய்.
"அவர் என்னிடம், 'நீ போய் இந்தப் படிப்பைப் படி, அப்போதுதான் உனக்கு எது பிடிக்கும், எது உனக்குச் சரியாக வரும், உண்மையில் உனக்கு இந்த திரைத்தொழில் பிடிக்குமா என்பது புரியும். இதன் மூலம் உன்னைப் பற்றி உனக்கே ஒரு புரிதல் கிடைக்கும்' என்று சொன்னார்" என்று ஜேசன் கூறியிருந்தார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் திரைப்படம்
'புல் தி ட்ரிகர்' குறும்படம் வெளியாகி சில மாதங்களிலேயே 'லைக்கா' நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. கோலிவுட்டில் லைக்கா நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, விஜய் நடித்த 'கத்தி' (2014) என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு நவம்பரில், ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார், தமன் இசையமைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைக்கா நிறுவனம். சந்தீப் கிஷன் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட, 'ஜேசன் சஞ்சய் 01' என்றே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
"எனது முதல் திரைப்படத்தில் துல்கர் சல்மான் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். அவரைச் சந்தித்து, கதையையும் விவரித்தேன். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஜேசன் சஞ்சய்.
தந்தை பற்றி ஜேசன் சஞ்சய்
கடந்த மே மாதம் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அதற்கு முன்னதாக, விஜயின் மனைவி சங்கீதா கடந்த வருடம் டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். (பின்னர் அந்த மனுவை ஆகஸ்ட் மாதம் அவர் திரும்பப் பெற்றார்.)
இந்த விமர்சனங்களுக்கு நடுவே, ஜூலை மாதம் முதல்முறையாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார் ஜேசன் சஞ்சய்.
அப்போது தொகுப்பாளர், 'ஹாலிவுட்டில் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைத்து, ஒரு இந்திய நடிகரை அழைத்துச் செல்ல முடியுமென்றால் யாரை அழைத்துச் செல்வீர்கள்' என ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.
"முதலில் என் நினைவுக்கு வருவது என் அப்பா தான்" என அதற்கு சஞ்சய் பதில் அளித்தது பலராலும் இணையத்தில் பகிரப்பட்டது.
'சிக்மா' திரைப்படத்துக்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல நேர்காணல்களை அளித்து வருகிறார் ஜேசன் சஞ்சய். அனைத்து நேர்காணல்களிலும், விளம்பர நிகழ்வுகளிலும் 'விஜய்' குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
"என் தந்தை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எனும்போது கவனமாக பேச வேண்டிய பொறுப்பு உள்ளது. பிரபல நடிகர் மற்றும் முதலமைச்சரின் விஜயின் மகன் என்பதைக் கடந்து, ஜேசன் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துள்ளான் என மக்கள் நினைக்க வேண்டும் என்பதே என் ஆசை" என ஜேசன் சஞ்சய் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு