மும்பை கேப்டனாக மீண்டும் ரோஹித்: மாலை 5.45 மணிக்கு அறிவிப்பு ஏன்? ரசிகர்கள் சுவாரஸ்ய பதிவு

மும்பை கேப்டனாக மீண்டும் ரோஹித்: மாலை 5.45 மணிக்கு அறிவிப்பு ஏன்? ரசிகர்கள் சுவாரஸ்ய பதிவு
    • எழுதியவர், தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

2027 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, கடந்த வாரம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டார். அந்த அணியிடம் இருந்து அர்ஷ்தீப் சிங்கை மும்பை இந்தியன்ஸ் வாங்கியிருந்தது.

ரோஹித் சர்மா கடைசியாக 2023 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்புவகித்தார். அந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது.

2024 சீசனுக்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை பரிமாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக அவரை கேப்டனாக நியமித்தது.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்டியா தலைமையில் அடுத்த மூன்று சீசன்களில் சீரான ஆட்டத்தையும் வெளிப்படுத்தத் தவறியது.

2024 சீசனில் கடைசி இடத்தைப் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 2025 சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி இரண்டாவது குவாலிஃபையரில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோற்றது. 2026 சீசனில் அந்த அணி ஒன்பதாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ,

கேப்டன் பதவிக்குப் பரிசீலிக்கப்பட்ட பெயர்கள்

ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, மிட்செல் சாண்ட்னர் போன்றவர்களின் பெயரும் கேப்டன் பொறுப்புக்கான பரிசீலனையில் இருந்ததாக கிரிக்கின்ஃபோ இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
படக்குறிப்பு, 2024 சீசனில் ரோஹித்துக்குப் பதிலாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, மிட்செல் சாண்ட்னர் போன்றவர்களின் பெயரும் கேப்டன் பொறுப்புக்கான பரிசீலனையில் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், 39 வயதான ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது 20ஆவது சீசனில் விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரோஹித் சர்மா மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக காலம் கேப்டனாக இருந்தவர் என்ற சிறப்பை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். அவர் தலைமையில் 163 போட்டிகளில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 93 வெற்றிகளையும் 70 தோல்விகளையும் பெற்றுள்ளது.

2013, 2015, 2017, 2019 , 2020 ஆகிய ஐந்து சீசன்களில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை ஐபிஎல் கோப்பையை வென்றது.

ரோஹித் சர்மா தலைமையில் புதிய அத்தியாயம்

2011 ஆம் ஆண்டுமுதலே ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓர் அங்கமாக உள்ளார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, மகேந்திர சிங் தோனியுடன் ரோஹித் சர்மா
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2011ஆம் ஆண்டு முதலே ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓர் அங்கமாக உள்ளார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

"2011 ஆம் ஆண்டு ரோஹித்தை ஏலத்தில் எடுத்தோம். அப்போதிலிருந்தே அவர் எங்கள் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் ஓர் அங்கமாகிவிட்டார். இளம் வீரராக எங்கள் அணியில் இணைந்த ரோஹித்தை இன்றும் நினைவுகூர்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராகவும், சாம்பியனாகவும், கேப்டனாகவும், சிறந்த குடும்பத் தலைவராகவும் அவர் வளர்ந்திருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது." என்று கூறியுள்ளார் அவர்.

ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமானவர் என்பது தனக்குத் தெரியும் என்றும் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

"மும்பை இந்தியன்ஸ் அணியின் 20-ஆவது சீசனைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், ரோஹித் மீண்டும் அணியை வழிநடத்துவது எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான தருணம். அவர் எங்களுக்கு ஏராளமான இனிய நினைவுகளைத் தந்துள்ளார். இந்தப் புதிய அத்தியாயம் அவருக்கும், அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் மீது அன்பு கொண்டுள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மேலும் பல பெருமையான தருணங்களைத் தரும் என்று நம்புகிறேன்." என்றார் அவர்.

"ரோஹித், நாங்கள் அனைவரும் உங்களுக்காகக் குரல் கொடுக்கிறோம்!" என்றும் அவர் தெரிவித்தார்.

'என் வாழ்வின் முக்கிய அங்கம் மும்பை இந்தியன்ஸ்'

மும்பை இந்தியன்ஸ் அணி தன் வாழ்க்கையின் முக்கியமான ஓர் அங்கம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, 2013 சீசனில் சச்சினுடன் ரோஹித் சர்மா

ரோஹித்துக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் சிறப்பானது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.

"மும்பை இந்தியன்ஸ் அணியின் 20 ஆவது சீசனில் நீலமும் தங்கமும் கலந்த சீருடையுடன் அணியை ரோஹித் வழிநடத்தவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரவிருக்கும் சீசன் குறித்து ரோஹித்துடன் நாங்கள் நடத்திய ஆலோசனைகளில், ஒன்றாக இணைந்து எதைச் சாதிக்க முடியும் என்பது குறித்த உற்சாகமும் லட்சியமும் வெளிப்பட்டன." என்றார் அவர்.

"ரோஹித் சர்மாவின் அனுபவமும் தலைமைப் பண்பும், நாங்கள் உருவாக்கி வரும் வலுவான அணியும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் விளையாடுவதுடன், அவர்களுடன் மேலும் பல மறக்க முடியாத நினைவுகளை உருவாக்க விரும்புகிறோம்" என்றும் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி தன் வாழ்க்கையின் முக்கியமான ஓர் அங்கம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

"மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவதை நான் எப்போதும் பெருமையாகக் கருதிவந்துள்ளேன். வரவிருக்கும் சீசன் குறித்து நீதா அம்பானி, ஆகாஷ் அன்பானி ஆகியோருடன் நடத்திய ஆலோசனைகள் உற்சாகமளித்தன. ஓர் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி சாதிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.

"20-ஆவது சீசனையும், அதில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். எங்கள் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பல தருணங்களை உருவாக்க விரும்புகிறேன். எங்களுக்கே உரிய பாணியில் விளையாடுவது, ஒன்றிணைந்து போட்டியிடுவது, ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் அணுகுவது ஆகியவற்றில்தான் கவனம் செலுத்துவோம்" என்றார்.

மாலை 5.45 மணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதன் பின்னுள்ள சுவாரஸ்யம்

மும்பை கேப்டனாக மீண்டும் ரோஹித்: மாலை 5.45 மணிக்கு அறிவிப்பு ஏன்? ரசிகர்கள் சுவாரஸ்ய பதிவு

நவம்பர் 27 அன்று மாலை சரியாக 5:45 மணிக்கு, ஐபிஎல் 2027 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்!

இதில் '5' என்பது மும்பை இந்தியன்ஸ் வென்ற சாம்பியன் பட்டங்களையும் '45' என்பது சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண்ணையும் குறிப்பதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2023 நவம்பர் 27 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் ( நவம்பர் 27) ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு