'போலி வேலை நேர்காணல் மோசடியால் என் சேமிப்புப் பணத்தை இழந்தேன்' - லிங்க்ட்இன் வழியே என்ன நடந்தது?

'வேலை நேர்காணல் மோசடியில் எனது சேமிப்பை இழந்தேன்' - புதிய வேலைவாய்ப்பு மோசடி எப்படி நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜோ டைடி
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வேலை தேடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் போலியான நேர்காணல் கருவிகளைப் பதிவிறக்கம் செய்யும்படி ஏமாற்றுவதற்காக, வேலை தேடுபவர்களை மோசடிக்காரர்கள் குறிவைத்து வருகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவர், போலியான ஆட்சேர்ப்பு அதிகாரி ஒருவர் மூலம் லிங்க்ட்இனில் தொடர்புகொள்ளப்பட்டார். வேலைக்கான நேர்காணல் நடைமுறையில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, பார்ப்பதற்கு சாதாரணமானதாக இருந்த ஆவணத்தை அவர் பதிவிறக்கம் செய்தார். ஆனால், அது தீங்கிழைக்கும் மென்பொருளாக இருந்தது.

சில மணி நேரங்களுக்குள், ஹேக்கர்கள் அவரது கிரிப்டோகரன்சி கணக்குகளில் இருந்த 18,000 பவுண்டுகள் சேமிப்பைத் திருடினர்

"கணிசமான தொகையை இழந்திருப்பது மிகவும் மோசமான உணர்வை ஏற்படுத்துகிறது. எனது மோசமான எதிரிக்குக்கூட இப்படியொரு நிலை ஏற்படுவதை நான் விரும்பமாட்டேன்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர் கூறினார்.

கடும் போட்டி நிலவும் வேலைவாய்ப்புச் சந்தை

வேலைவாய்ப்பு தளங்களான லிங்க்ட்இன் மற்றும் இன்டீட், கடந்த சில மாதங்களில் வேலைவாய்ப்பு மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளன.

லிங்க்ட்இன் வெளியிட்ட தரவுகளில், ஜென் ஸி தலைமுறை வேலை மோசடிகளுக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதை குறிப்பிடும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

"இளம் தொழில் வல்லுநர்கள்தான் வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு அதிகம் இலக்காகின்றனர் (32%). ஆனால், வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் கடும் போட்டி காரணமாக, கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் (32%) மோசடியின் அறிகுறிகளைப் புறக்கணிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று அந்தத் தரவு தெரிவிக்கிறது.

இதுகுறித்து பிபிசி கேட்டபோது, போட்டி அதிகமாகவும் வேலைவாய்ப்புகள் குறைவாகவும் இருக்கும் சூழலில், "பல இளைஞர்கள் சந்தேகத்துடன் அணுக முடியாத நிலையை உணர்கின்றனர். ஏனெனில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்" என்று லிங்க்ட்இன் தெரிவித்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வேலைவாய்ப்பு மோசடிகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து தனது இணையதளத்தில் ஆலோசனைகளையும் லிங்க்ட்இன் வழங்கியுள்ளது. உதாரணமாக, அந்த நிறுவனம் உண்மையானதா, வேலைவாய்ப்பு அறிவிப்பு உண்மையானதா என்பதைச் சரிபார்ப்பதுடன், தொடர்புகொள்வதற்கு முன்பு முழுமையாக ஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

ஹேக்கர்களால் தனது சேமிப்பை இழந்த அந்த நபர், ஏற்கெனவே தனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, புதிய வேலை தேடுவதாக லிங்க்ட்இனில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

அப்போது, ஒரு போலியான ஆட்சேர்ப்பு அதிகாரி அவருக்கு ஒரு வேலைவாய்ப்பை முன்வைத்தார். அந்த வேலை குறித்து காணொளி அழைப்பு மூலம் பேசிய பிறகு, வழக்கமான தொழில்நுட்பத் திறன் மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கான வழிமுறைகள் கூகுள் ஷீட் ஆவணத்தில் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், அந்த ஆவணத்தில் தீங்கிழைக்கும் மென்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பணியை முடித்த பிறகு, அந்த நபர் தூங்கச் சென்றார். காலையில் எழுந்தபோது, தனது ஆன்லைன் வேலட்டில் இருந்த சேமிப்பு முழுவதும் காலியாகியிருந்ததைக் கண்டார்.

"எனது கணினியில் இருந்த அனைத்தையும் அழித்துவிட்டு, எனது அனைத்து கடவுச்சொற்களையும் மாற்றினேன். ஆனால், உணர்வுபூர்வமாகவும் மனதளவிலும் நான் மிகவும் சோர்ந்து போயிருந்தேன்" என்று அவர் கூறினார்.

"ஹேக்கர்கள் மீதும், என்னைப் பற்றியும் கோபமும் நம்ப முடியாத அதிர்ச்சியும் கலந்த உணர்வு ஏற்பட்டது. அவர்கள் என்னை எப்படிப் பிடித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் வரை நான் குழப்பத்திலேயே இருந்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

கடும் போட்டி நிலவும் வேலைவாய்ப்புச் சந்தை

பட மூலாதாரம், Getty Images

போலி ஆட்சேர்ப்பு அதிகாரிகள் மற்றும் தீங்கிழைக்கும் செயலிகள்

'ஹாவ் ஐ பீன் ஸ்குவாட்டெட்' என்ற இணையப் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம், இந்தத் தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பதை ஆய்வு செய்தது. அவர்களின் கூற்றுப்படி, புதிய வகை வேலைவாய்ப்பு மோசடிகளைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது.

"இது மோசமாக எழுதப்பட்ட மின்னஞ்சல் அல்லது சந்தேகத்திற்கிடமான இணைப்புக் கோப்பைக் கொண்ட ஒரு மோசடி அல்ல. இந்த நபர் உண்மையான வேலை நேர்காணல் நடப்பது போலத் தோன்றிய ஒரு செயல்முறையின் வழியே அழைத்துச் செல்லப்பட்டார். உண்மையான கூகுள் பக்கங்களிலும், உண்மையான கூகுள் கணக்கில் உள்நுழைந்த நிலையிலும் நேர்காணல் நடத்தப்பட்டது. அவர் நிறுவுமாறு கேட்கப்பட்ட மென்பொருளும் முறையான செயலிகளைப் போலவே டிஜிட்டல் கையொப்பமிடப்பட்டிருந்தது" என்று அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஜக்ஷின் டி பிரிக்ஜாஜ் தெரிவித்தார்.

இதேபோன்ற தாக்குதல்கள் வேலைவாய்ப்பு தளமான இன்டீட் மூலமாகவும் நடத்தப்பட்டதாக சிலர் தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடிகளைத் தவிர்ப்பது குறித்து இன்டீட் நிறுவனம் ஜூலை மாதத்தில் ஆலோசனைகளையும் வெளியிட்டிருந்தது.

வேலை நேர்காணல் குறித்த பதற்றத்தையும், புதிய வேலை கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பையும் பயன்படுத்தி, போலியான 'இன்டீட் இன்டர்வியூ'' செயலி அல்லது 'மைஇன்டர்வியூ என்ற செயலி போன்ற தீங்கிழைக்கும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுமாறு மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான மால்வேர்பைட்ஸ் தெரிவித்துள்ளதன்படி, போலியான ஆட்சேர்ப்பு அதிகாரிகள், "இன்டீட் செயலியை நிறுவி உங்கள் நேர்காணலை முடிக்கவும்" அல்லது "செயலியை நிறுவிய பிறகு ஊதியம் தொடர்பான ஒப்பந்தம் கிடைக்கும்" போன்ற செய்திகளைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

இந்தத் தீங்கிழைக்கும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்தவுடன், ஹேக்கர்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகி, அவற்றைப் பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறிக்கவோ அல்லது நிதி மோசடிகளில் ஈடுபடவோ முடியும்.

"இன்டீட் தளத்தின் மூலம் நடத்தப்படும் நேர்காணல்கள் முழுவதுமாக இணைய உலாவியிலேயே நடைபெறும். அதற்காக எந்தவொரு சிறப்பு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை" என்று இன்டீட் சமீபத்தில் இணையத்தில் தெரிவித்தது.

"நேர்காணலில் பங்கேற்க ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு வேலை தேடுபவரிடம் கேட்கப்படும் எந்தவொரு செய்தியும் உண்மையானது அல்ல" என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு