பர்கத்துல்லா போபாலி: சுதந்திரமடைவதற்கு முன்பே நாடு கடந்த இந்திய அரசின் பிரதமராக இருந்த இவர் யார்?

- எழுதியவர், மிர்சா ஏபி பைக்
- பதவி, பிபிசி உருது, புது டெல்லி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்று பொதுவாக ஜவஹர்லால் நேருவின் பெயரே குறிப்பிடப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே நாடு கடந்து செயல்பட்ட இரண்டு இடைக்கால அரசுகள் அமைக்கப்பட்டிருந்தன.
1915-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் நாடு கடந்த இடைக்கால அரசின் பிரதமராக மௌலானா பர்கத்துல்லா போபாலி இருந்தார். தற்போது, அவரது பெயரில் இயங்கி வரும் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது தொடர்பான முன்மொழிவு குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடியவரும், ஆப்கானிஸ்தானில் நாடு கடந்த முதல் இடைக்கால அரசை அமைத்தவருமான மௌலானா பர்கத்துல்லா போபாலி, அமெரிக்காவில் மரணப்படுக்கையில் இருந்தபோது, "என் வாழ்நாள் முழுவதும் எனது நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டேன். எனது வாழ்க்கையை என் நாட்டின் நலனுக்காக கழித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார்.
அவர் மேலும், "என் வாழ்நாளில் அதன் பலனை என்னால் காண முடியவில்லை என்பது எனக்கு வருத்தம்தான். ஆனால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உண்மையான நோக்கத்துடனும் உறுதியுடனும் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்ததில் நான் திருப்தி அடைகிறேன். முழு நம்பிக்கையுடன் எனது நாட்டின் எதிர்காலத்தை அவர்களின் கைகளில் ஒப்படைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் அவரது பெயரில் இயங்கி வரும் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கான முன்மொழிவு பலரையும் அதிருப்தியடையச் செய்தது. சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.
பர்கத்துல்லாவின் வாழ்க்கை மற்றும் அவரது சர்வதேச நடவடிக்கைகள் குறித்து பார்ப்பதற்கு முன்பு, இந்த சர்ச்சையைப் புரிந்துகொள்வது முக்கியம்.
பெயர் மாற்றத்துக்கு எதிராக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் போராட்டம் நடத்தினர். சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் குறித்து உள்ளூர் செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

பட மூலாதாரம், BBC/Midhat
முன்னாள் மேயர் தீப்சந்த் யாதவ் பிபிசியிடம் கூறுகையில், "இது மக்களுக்காக அதிகமாகப் பணியாற்றுவதைவிட, பெயர்களை மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டும் மனநிலையின் விளைவு" என்றார்.
பர்கத்துல்லா ஒரு முஸ்லிம் என்பதற்காக மட்டுமே இந்த முன்மொழிவு கொண்டுவரப்பட்டது வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.
இந்த நிலை மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் பிற பகுதிகளிலும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அவர், "முகலாயர் காலத்தில்தான் ராமாயணம் எழுதப்பட்டது. கில்ஜி ஆட்சிக் காலத்தில்தான் ஜயாசி-யின் பத்மாவத் எழுதப்பட்டது. இதையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்களை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை" என்றார்.
பர்கத்துல்லா யார்?

பட மூலாதாரம், M.Irfan
1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கிளர்ச்சிக்குப் பிறகு, பர்கத்துல்லாவின் பெற்றோர் உத்தரப் பிரதேசத்தின் பதாயூனில் இருந்து போபாலுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு பர்கத்துல்லா பிறந்தார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய எம். இர்ஃபானின் கூற்றுப்படி, அவர் 1858 அல்லது 1859-ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆனால், பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் ஹசன் கான் கூறுகையில், கலிஃபோர்னியாவின் சாக்ரமென்டோவில் உள்ள அவரது கல்லறையில் அவர் 1927-ஆம் ஆண்டு தனது 60-வது வயதில் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர் 1867-ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
வரலாற்றாசிரியர் அஷர் காதவாய், பர்கத்துல்லா பிறந்ததாகக் கூறப்படும் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார்.
அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய அபு நஸ்ர் சையத் அகமது போபாலிக்கு பர்கத்துல்லா எழுதிய கடிதத்தில், மோச்சி சமூகத்தினர் வசித்த பகுதியில் ஹகீம் காதிர் அலி கானின் வீட்டில் தான் பிறந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
அங்கேயே அவர் குழந்தைப் பருவத்தை கழித்தார். அவருடைய தொப்புள் கொடி அங்கேயே புதைக்கப்பட்டது.
பர்கத்துல்லா தனது ஆரம்பக் கல்வியை மதரஸா சுலைமானியாவில் பெற்றார். பின்னர் பாரசீகம், அரபுமொழி, இறையியல், அறநெறியியல் மற்றும் தத்துவம் ஆகியவற்றைப் படித்தார்.
மசூதியில் தங்கியிருந்தபோது பாரசீக மொழியையும், சுலைமானியாவில் அரபுமொழி மற்றும் சமயக் கல்வியையும் கற்றார்.
அரபு மொழியில் அவர் சிறந்த புலமை பெற்றார். ஆனால், ஆங்கிலம் தெரியாமல் இஸ்லாமுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் திறம்படப் பணியாற்ற முடியாது என்பதை விரைவில் உணர்ந்தார்.
கல்வியை முடித்த பிறகு, அதே மதரஸாவில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ஷா வலியுல்லா மற்றும் ஜமாலுதீன் ஆஃப்கானியின் தாக்கம்

பட மூலாதாரம், M Irfan
ஷா வலியுல்லா தஹ்லவியின் புகழ்பெற்ற நூலான ஹுஜ்ஜத்துல்லாஹ் அல்-பாலிகா பர்கத்துல்லாவிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
19-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சிந்தனையாளரான ஜமாலுதீன் ஆஃப்கானி போபாலுக்கு வந்துச் சென்ற பிறகு, ஒருநாள் பர்கத்துல்லா திடீரென போபாலை விட்டு வெளியேறினார்.
அவர் முதலில் ஜபல்பூருக்குச் சென்று அங்கு ஆங்கிலம் கற்றதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், பர்கத்துல்லா எழுதிய கடிதம் ஒன்றில், முதலில் பம்பாய்க்குச் (மும்பை) சென்று அங்கு முறையான ஆங்கிலக் கல்வியைப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு அவர் இங்கிலாந்து சென்றார்.
அவரது கல்வி மற்றும் பயணச் செலவுகளை யார் ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இங்கிலாந்தில் அவரை மிகவும் கவர்ந்த விஷயங்களில் ஒன்று அந்நாட்டு மக்களின் செழிப்பாகும்.
"விக்டோரியா மகாராணி இந்தியாவின் மகாராணியாகவும் இருந்தார். ஆனால், இந்திய மக்கள் ஏழ்மையில் இருந்தனர். அதேவேளையில், இந்தியாவில் இருந்து பாய்ந்த செல்வத்தின் மூலம் பிரிட்டன் செழிப்புடன் இருந்தது" என்று அவர் கூறுவது உண்டு.
இங்கிலாந்தில் புதிய பயணம்
இங்கிலாந்தில் கோபால கிருஷ்ண கோகலேவின் உரைகளை பர்கத்துல்லா கேட்டார். ஆனால், பின்னர் கோகலேவின் மிதவாத அரசியல் கொள்கைகளிலிருந்து விலகினார்.
சுதந்திரமான இந்தியா என்ற கனவு அவரது மனதில் உருவெடுக்கத் தொடங்கியது.
இரானில் பிறந்த பேராசிரியர் ஆகா மிர்சா சாஸ்திரியின் கூற்றுப்படி, ஆங்கிலத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பர்கத்துல்லா ஜெர்மன், பிரெஞ்சு, துருக்கிய மற்றும் ஜப்பானிய மொழிகளைக் கற்றார்.
அவர் அரபி கற்பிக்கத் தொடங்கியதுடன், செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதினார்.
அவரது வாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருந்தது.
பழைய வீடு ஒன்றில் வசித்த அவர், சில சமயங்களில் பல நாட்கள் உணவின்றியும் இருந்தார்.
அப்துல்லா குவில்லியமைச் சந்தித்தல்

பட மூலாதாரம், Abdullah Quilliam Society
அரபு மொழியில் அவருக்கு இருந்த புலமை அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து, லிவர்பூலில் உள்ள ஓரியண்டல் கல்லூரியில் கற்பிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இந்தக் காலகட்டத்தில் வில்லியம் ஹென்றி குவில்லியம் இஸ்லாமுக்கு மதம் மாறி, அப்துல்லா குவில்லியம் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பின்னர் இங்கிலாந்தின் முதல் முஸ்லிம் மதத் தலைவர்களில் ஒருவராக அவர் அறியப்பட்டார்.
துருக்கியின் கலீஃபா அவரை இங்கிலாந்தின் "ஷேக்-உல்-இஸ்லாம்" என்று அறிவித்தார்.
அவர் தனது வீட்டையே மசூதியாகவும் மதரஸாவாகவும் மாற்றி, அதற்கு "முஸ்லிம் இன்ஸ்டிட்யூட்" என்று பெயரிட்டார்.
அங்கிருந்து தி கிரசன்ட் மற்றும் இஸ்லாமிக் வேர்ல்ட் என்ற இதழ்கள் வெளியிடப்பட்டன.
அப்துல்லா குவில்லியமின் அழைப்பின் பேரில் பர்கத்துல்லாவும் அந்த அமைப்பில் இணைந்தார். அவர் அரபு மற்றும் துருக்கிய மொழிகளைக் கற்பிக்கத் தொடங்கியதுடன், இதழ்களின் வெளியீட்டுப் பணிகளிலும் உதவினார்.
இந்த இதழ்களின் மூலம் பர்கத்துல்லா இங்கிலாந்தில் இருப்பதை போபால் மக்கள் முதன்முறையாக அறிந்துகொண்டனர்.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் ஆதரவாளர்

பட மூலாதாரம், hasratmohanitrust
இந்தியாவின் சுதந்திரத்துக்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமை மிகவும் அவசியம் என்று பர்கத்துல்லா நம்பினார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் கவிஞருமான ஹஸ்ரத் மொஹானிக்கு அவர் எழுதிய கடிதத்தில், சுதந்திர இந்தியா குறித்து தனது பார்வையை விளக்கியிருந்தார்.
உலகில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் என்றும், அவர்களின் முன்னேற்றம் இந்திய முஸ்லிம்களின் மேம்பாட்டுடன் தொடர்புடையது என்றும் அவர் எழுதினார்.
ஆப்கானிஸ்தானின் முதல் நாடு கடந்த அரசு
1915-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, இந்தியா, துருக்கி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த கூட்டு தூதுக்குழு காபூலுக்கு சென்றது. அங்கு ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர் அமீர் ஹபிபுல்லா கானைச் சந்தித்தது.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 1915-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி நாடு கடந்த இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
ராஜா மகேந்திர பிரதாப் அதன் தலைவராகவும், பர்கத்துல்லா பிரதமராகவும் நியமிக்கப்பட்டனர்.
மௌலானா உபைதுல்லா சிந்தி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில், இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பட்டு கடித இயக்கமும் (Silk Handkerchief Movement) நடைபெற்று வந்தது.
காதர் கட்சியும் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியதும்
பின்னர் பர்கத்துல்லா அமெரிக்காவுக்குச் சென்று, காதர் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரானார். அந்த அமைப்பின் இதழைத் தொகுத்ததுடன், அதன் தலைமைப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார்.
1919-ஆம் ஆண்டு அமீர் ஹபிபுல்லா கான் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரது மகன் அமானுல்லா கான் பர்கத்துல்லாவை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அழைத்தார்.
இருவரும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான உத்தியை வகுக்க முயன்றனர்.
சுவாரஸ்யமாக, இரண்டாவது நாடு கடந்த அரசு சுபாஷ் சந்திர போஸால் 1943-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது.
பர்கத்துல்லா மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் பயணங்களில் பல ஒற்றுமைகள் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
இருவரும் முதலில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றனர். காபூலில் உள்ள பாபர் தோட்டத்தில் சில காலம் தங்கிய பின்னர், ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்குப் பயணம் செய்தனர்.
லெனினுக்கு வழங்கப்பட்ட கைத்தடி

பட மூலாதாரம், Getty Images
பின்னர் ரஷ்யப் புரட்சி நடைபெற்று முடிந்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பிரதிநிதியாக பர்கத்துல்லா ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டார்.
பத்திரிகையாளர் இக்பால் மசூத்தின் கூற்றுப்படி, பர்கத்துல்லா முதலில் லியோன் டிராட்ஸ்கியையும் பின்னர் விளாடிமிர் லெனினையும் சந்தித்தார்.
அவரது வாழ்க்கை வரலாற்றில், இந்தியா-ரஷ்யா நட்புறவுக்கான ஆரம்பகால கட்டமைப்புக்காக அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு லெனினுக்கு வழங்கப்பட்ட சந்தனக் கைத்தடி இந்தியர்களால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், அது "முகமது ஹாதி" என்ற நபரால் அனுப்பப்பட்டது தெரியவந்தது. பின்னர், முகமது ஹாதி வேறு யாருமல்ல, பர்கத்துல்லாவே என்பது கண்டறியப்பட்டது.
பிரிட்டிஷ் உளவாளிகளை ஏமாற்றுவதற்காக அவர் இந்தப் பெயரைப் பயன்படுத்தியதாகவும், இந்தத் தகவலை ராஜா மகேந்திர பிரதாப் பின்னர் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
லெனினுடனான சந்திப்பு
1919-ஆம் ஆண்டு மே மாதம், பர்கத்துல்லா தலைமையிலான இந்தியத் தூதுக்குழு லெனினைச் சந்தித்தது. இந்தக் குழுவில் ராஜா மகேந்திர பிரதாப், மௌலவி அப்துல் ரப் மற்றும் புராட்டஸ்டன்ட் ஆசார்யா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
ராஜா மகேந்திர பிரதாப் எழுதியதன்படி, தான் ரஷ்ய அரசின் விருந்தினராக இருந்தபோது, ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்த பர்கத்துல்லாவைச் சந்தித்தார்.
பர்கத்துல்லா ரஷ்யர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியிருந்தார்.
நேரு - பர்கத்துல்லா சந்திப்பு

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் ஆட்சியாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பிறகு நாடு கடந்த அரசு கலைக்கப்பட்டது.
ஆனால், போல்ஷெவிக் புரட்சியின் கருத்துகளை முஸ்லிம் உலகில் பரப்ப வேண்டும் என்று பர்கத்துல்லா விரும்பினார். இந்த முயற்சிக்கு லெனின் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.
1922-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பர்கத்துல்லா ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்றார். அவரது சிகிச்சைக்காக சான் பிரான்சிஸ்கோவிலிருந்து 1,000 டாலர்கள் அனுப்பப்பட்டன.
ராஜா மகேந்திர பிரதாப்பும் அவரைச் சந்திக்க வந்தார்.
1927-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பர்கத்துல்லா கலந்துகொண்டார்.
அங்கு ஜவஹர்லால் நேருவைச் சந்தித்தார். தனது சுயசரிதையிலும் நேரு இந்தச் சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார்.
கடைசிப் பயணம்
இதன் பிறகு பர்கத்துல்லா மூன்றாவது மற்றும் இறுதி முறையாக அமெரிக்காவுக்குச் சென்றார். இந்தியாவின் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்தபடி, தொடர்ந்து பல நாடுகளுக்குப் பயணம் செய்தார்.
இறுதியில் அவர் சான் பிரான்சிஸ்கோவில் உயிரிழந்தார்.
பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் ஹசன் கானின் கூற்றுப்படி, சாக்ரமென்டோவில் உள்ள அவரது கல்லறையில் அவர் இறந்த தேதி 1927-ஆம் ஆண்டு செப்டம்பர் 20 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































