ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்: இறுதி உயிலில் எழுதியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)
கடந்த 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில், பெர்லின் ஜெர்மனியின் தலைநகரமாக இருந்தது என்பதைவிட போர்க்களமாக மாறியிருந்தது எனச் சொல்வது சரியாக இருக்கும்.
சோவியத் பீரங்கிகள் இரவும் பகலும் நகரத்தைத் தாக்கிக் கொண்டிருந்தன. தெருக்கள் இடிபாடுகளால் நிரம்பியிருந்தன, தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன, நாஜி ஜெர்மனியின் கடைசி பாதுகாப்பு அரண்கள் இடைவிடாத தாக்குதலால் நொறுங்கிக் கொண்டிருந்தன.
வரலாற்றாசிரியர் ஜோக்கிம் ஃபெஸ்டின் கூற்றுப்படி, "சோவியத் படைகள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தமது பிடியை இறுக்கியது. இந்தக் குழப்பத்திற்கு மத்தியில், ரீச் சான்சலரி தோட்டத்திற்குக் கீழே, அடால்ஃப் ஹிட்லர் தனது நிலத்தடி வளாகமான ஃப்யூரர் பங்கரில் தங்கியிருந்தார். மேற்புறத்தில் நாஜி ஜெர்மனி சிதைந்து கொண்டிருந்தது, தரைக்கு அடியில், தனது கான்கிரீட் பதுங்கு குழியில் ஹிட்லர் தனது முடிவு நெருங்கிவிட்டதை ஏற்க முடியாத நிலையில் இருந்தார்."
ஜோக்கிம் ஃபெஸ்ட், தனது 'இன்சைட் ஹிட்லர்ஸ் பங்கர்' என்ற நூலில், அந்தச் சூழலை "அதிகரித்து வரும் எதார்த்தமற்ற தன்மை" கொண்டது என விவரிக்கிறார். அங்கு ராணுவ விளக்கங்கள் களத்தில் இருந்த உண்மைகளைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக நடைமுறையில் சாத்தியமற்ற எதிர்த் தாக்குதல்கள் பற்றிய ஹிட்லரின் கற்பனைகளையே பிரதிபலித்தன.
"ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்ட, செயலில் இல்லாத படைகளுக்கு ஹிட்லர் தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார்," என்று ஜோக்கிம் ஃபெஸ்ட் தனது 'இன்சைட் ஹிட்லர்ஸ் பங்கர்' என்ற நூலில் அந்தச் சூழலை விவரித்து எழுதியுள்ளார்.
தகர்ந்த ஹிட்லரின் மாயை
சோவியத் படைகள் பெர்லினின் புறநகர்ப் பகுதிகளுக்குள் நுழைந்தபோதும், ஜெனரல் ஃபெலிக்ஸ் ஸ்டெய்னர் தலைமையிலான எதிர்த் தாக்குதல் அந்த முற்றுகையை உடைத்துவிடும் என்ற இறுதி நம்பிக்கையை ஹிட்லர் இறுகப் பற்றிக் கொண்டிருந்ததாகவும், அந்த மாயை ஏப்ரல் 22ஆம் தேதி தகர்ந்ததாகவும் ஹெச்.ஆர்.டிரெவர்-ரோப்பர் எழுதியுள்ளார்.
ஹெச்.ஆர்.டிரெவர்-ரோப்பர் எழுதி 1947ஆம் ஆண்டில் வெளியான 'தி லாஸ்ட் டேஸ் ஆஃப் ஹிட்லர்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதன்படி, "ஸ்டெய்னரின் படைகளால் இனி எங்கும் நகர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தபோது, ஹிட்லர் கடும் கோபத்தில் வெடித்தார். அவர் தனது தளபதிகள் துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியதோடு, அவர்கள் திறமையற்றவர்கள் எனக் கடுமையாகச் சாடினார்."
பின்னர் "அந்தக் கோபம் வேறொன்றாக மாறியது. போரில் தோல்வி ஏற்பட்டுவிட்டதாக அவர் அறிவித்தார். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த அறிக்கை விரக்தியைவிட மேலான ஒன்றை வெளிப்படுத்தியது. ஜெர்மானிய மக்கள் தோல்வி அடைந்திருந்தால், அவர்கள் தங்களை பலவீனமானவர்கள் எனக் காட்டிவிட்டார்கள், எனவே அவர்கள் உயிர் வாழத் தகுதியற்றவர்கள் என்று ஹிட்லர் கூறியதாக" ஹெச்.ஆர்.டிரெவர்-ரோப்பர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அந்தத் தருணத்தில் இருந்து ஹிட்லர் ஒரு தேசத்தின் தலைவனாகச் செயல்படவில்லை, மாறாகத் தான் நியாயமானது என்று நம்பிய ஒரு முடிவுக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினார் என்று ஹெச்.ஆர்.டிரெவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
"ஜெர்மனியின் ராணுவ நிலைமை நம்பிக்கையற்றதாக இருந்தது. அதன் நகரங்கள் இடிபாடுகளாகக் கிடந்தன, லட்சக்கணக்கானோர் இறந்திருந்தனர். இத்தகைய சூழ்நிலையில், பிற தலைவர்கள் சரணடைந்து பேச்சுவார்த்தை நடத்துவதையோ அல்லது தப்புவதையோ பற்றிச் சிந்தித்து இருப்பார்கள். ஆனால், ஹிட்லர் இவையிரண்டையுமே நிராகரித்தார்" என்று எழுதுகிறார் ஃபெஸ்ட்.
அவரைப் பொறுத்தவரை, சரணடைதல் என்பது ஒரு நடைமுறைத் தோல்வியாக மட்டுமில்லை, தார்மீக ரீதியிலான தோல்வியாகவும் இருந்தது. அதிகாரம், போராட்டம், விதி ஆகியவற்றைப் பற்றி ஹிட்லர் நம்பியிருந்த அனைத்துக்கும் அது முரண்பாடாக இருந்தது. ஏப்ரல் 29ஆம் தேதியின்று எழுதப்பட்ட தனது கடைசி அரசியல் உயிலில் இந்த நிலைப்பாட்டை அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.
"நான் ஒருபோதும் சரணடைவதைப் பற்றிச் சிந்தித்தது இல்லை. எதிரிகளின் கைகளில் சிக்குவதைவிட என் வாழ்க்கையை முடித்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன்."
எனவே, இது இறுதிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல, தோல்வியை அழிவுக்குச் சமமாகக் கருதிய ஹிட்லரின் தர்க்கரீதியான பார்வையின் விளைவு என்று ஹெச்.ஆர்.டிரெவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக்கும் மேலாக ஹிட்லர் தனிப்பட்ட ரீதியிலான அவமானத்திற்கு அஞ்சியதாக டிரெவர்-ரோப்பர் குறிப்பிடுகிறார். அவரது கூற்றுப்படி, ஏப்ரல் 28ஆம் தேதி, இத்தாலிய தலைவர் பெனிட்டோ முசோலினி சுட்டுக் கொல்லப்பட்டு, பின்னர் அவரது உடல் பொதுமக்கள் முன்னிலையில் தொங்கவிடப்பட்ட சம்பவம், ஹிட்லரின் மனநிலையை 'ஆழமாக பாதித்தது'.
"எந்த விலை கொடுத்தேனும் பிடிபடாமல் இருக்க வேண்டுமென்ற ஹிட்லரின் மனநிலையை முசோலினியின் மரணம் மேலும் உறுதிப்படுத்தியது," என்று ஃபெஸ்ட் எழுதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஹிட்லரின் கடைசி அறிக்கை
"ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரத்தில், அந்தப் பதுங்கு குழி மிகவும் இருள்மயமாகக் காட்சியளித்ததாக" டிரெவர்-ரோப்பர் விவரித்துள்ளார்.
ஹிட்லரின் காதலி ஈவா பிரவுன், அவரது முக்கிய அதிகாரிகளில் ஒருவரான ஜோசப் கோயபெல்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், மார்ட்டின் போர்மேன் மற்றும் எண்ணிக்கையில் குறைந்து வந்த ராணுவ மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் குழு என மிகச் சிலரே அந்த பங்கரில் இருந்தனர்.
"அங்கு கையிருப்பில் இருந்த பொருட்கள் குறைந்து கொண்டிருந்தன. வெளி உலகுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. சோவியத் படைகள் சில நூறு மீட்டர் தூரத்தில் நெருங்கியிருந்தன. அந்த பங்கரில், மேலே இருந்த எதார்த்தத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட, காலம் உறைந்து போனது போலத் தோன்றும் சூழல் நிலவியது" என ஃபெஸ்ட் தனது நூலில் விவரிக்கிறார்.
அங்குள்ள சூழல் மிகவும் அழுத்தமாக இருந்ததாகவும், ஈரமான சிமென்ட், வியர்வை, டீசல் புகையின் வாசனை நிரம்பி இருந்ததாகவும் நேரில் கண்டவர்கள் நினைவு கூர்ந்ததாகத் தனது நூலில் டிரெவர்-ரோப்பர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சிலர் ஒரு சவப்பெட்டியில் வாழ்வதைப் போன்ற உணர்வை விவரித்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.
இவற்றுக்கு மத்தியில், "ஹிட்லரின் நிலைமை வெளிப்படையாகவே மோசமடைந்தது. அவரது கைகள் நடுங்கின, அவரது நகர்வுகள் நிலையற்றவையாக இருந்தன. அவர் மிகவும் 'சோர்வாகவும், தனது வயதைக் கடந்த முதிர்ச்சியுடனும்' காணப்பட்டார்" என்று அங்கு நிலவிய சூழலை விளக்கியுள்ளார் டிரெவர்-ரோப்பர்.

பட மூலாதாரம், Alamy
அவரது இறுதி நாட்கள், "மனமுறிவு மற்றும் தொடர்ச்சியான சுய-நியாயப்படுத்தல் ஆகியவற்றின் கலவையால்" நிரம்பியிருந்ததாக டிரெவர்-ரோப்பர் குறிப்பிடுகிறார். தமது தோல்வியை ஏற்றுக் கொண்ட போதிலும், ஹிட்லர் அதற்குப் பொறுப்பேற்க மறுத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஏப்ரல் 29 அன்று, ஹிட்லர் தனது கடைசி அரசியல் மற்றும் தனிப்பட்ட உயிலை எழுதினார். இந்த ஆவணம், அவரது மரபை நியாயப்படுத்துவதாகவும், அதை வடிவமைப்பதற்கான ஓர் இறுதி முயற்சியாகவும் அமைந்தது.
அதில், அவர் போருக்கான தனது பொறுப்பை மறுத்ததுடன், அதற்கு "சர்வதேச யூதர்களையே" குற்றம் சாட்டினார். மேலும், முழுமையான தோல்வியை எதிர்கொண்ட நிலையிலும் தனது சித்தாந்த நம்பிக்கைகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அந்த உயிலில் ஒரு பகுதியில், "1939இல் நானும் அல்லது ஜெர்மனியில் வேறு எவரும் போரை விரும்பினோம் என்பது உண்மையல்ல. யூத வம்சாவளியைச் சேர்ந்த மற்றும் யூத நலன்களுக்காகப் பணியாற்றிய சர்வதேச அரசியல்வாதிகளால் மட்டுமே அது விரும்பப்பட்டு தூண்டப்பட்டது," என்று அவர் கூறியுள்ளார்.
ஹிட்லர் இந்தப் போர் தொடங்குவதற்குத் தான் காரணமாக இருந்தது பற்றிச் சிந்திக்கவோ, தனது யூத எதிர்ப்பு செயல்களைப் பற்றிய சுயபரிசோதனையைச் செய்யவோ, தவறுகளை ஒப்புக்கொள்ளவோ தனது வாழ்வின் இறுதி நேரங்களில்கூட முயலவில்லை என்பதை இது காட்டுவதாகக் கூறுகிறார் ஃபெஸ்ட். மேலும் அவரது எழுச்சிக்கும் ஜெர்மனியின் அழிவுக்கும் காரணமாக இருந்த யூத எதிர்ப்பு சித்தாந்தத்தையே அவர் இறுதி வரை அழுத்தமாகக் கடைபிடித்ததை அவரது இறுதி உயில் காட்டுகிறது.
அந்த உயிலில், அவரது மரணத்திற்குப் பிறகும் நாஜி அரசு தொடர்வதற்கான வழிமுறைகள் மற்றும் ஏற்கெனவே சரிந்து கொண்டிருந்த ஆட்சிக்கு வாரிசுகளை நியமிப்பது போன்றவையும் அடங்கியிருந்தன.
வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தபோதிலும், அவரது கண்ணோட்டம் மாறாமலே இருந்தது. இறப்பதற்கான தனது முடிவையும் அவர் தனது உயிலில் தெளிவுபடுத்தினார்: "பதவி நீக்கம் அல்லது சரணடைதலின் அவமானத்தில் இருந்து தப்புவதற்காக, நானும் என் மனைவியும் மரணத்தைத் தேர்வு செய்கிறோம்."
தங்களது இறப்புக்குப் பிறகு என்ன செய்யப்பட வேண்டும் என்பதற்கான துல்லியமான அறிவுறுத்தல்களையும் ஹிட்லர் வழங்கினார்.
"நான் எனது அன்றாடப் பணிகளில் பெரும்பகுதியைச் செய்த இடத்தில், எங்கள் உடல்கள் உடனடியாக எரிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஃபெஸ்ட் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதன்படி, இதுவொரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்துகிறது.
"ஹிட்லரின் தற்கொலை உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதை அவரது இறுதி உயில் காட்டுகிறது. அது, தோல்வியை ஏற்க மறுத்த, அவரது வாழ்நாள் நிலைப்பாட்டிற்கு இசைவான, திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவு."

பட மூலாதாரம், Getty Images
ஹிட்லர் – ஈவா பிரவுன் திருமணம்
அதே நாளில், ஹிட்லர் தனது காதலி ஈவா பிரவுனை திருமணம் செய்தார். அந்தத் திருமணம், பதுங்கு குழியில், ஒரு சிறிய அதிகாரியால் நடத்தப்பட்டது. அதுவொரு சுருக்கமான, கிட்டத்தட்ட நம்ப முடியாத தருணமாக இருந்ததாக ஃபெஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.
"ஈவா பிரவுன் பல ஆண்டுகளாக ஹிட்லருடன், பெரும்பாலும் பொது மக்களின் பார்வையில் இருந்து மறைந்தே வாழ்ந்து வந்தார். இறுதி நாட்களில், தப்பிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவர் ஹிட்லருடன் பங்கரிலேயே தங்குவதைத் தேர்வு செய்தார்."
அவரது இந்த முடிவு தனிப்பட்ட விசுவாசத்தின் வெளிப்பாடு என்று எழுதியுள்ள ஃபெஸ்ட், "தப்புவது சாத்தியமாக இருந்தபோதிலும், அவர் ஹிட்லரை கைவிட மறுத்துவிட்டார்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களது திருமணத்தைத் தொடர்ந்து ஒரு சிறிய கொண்டாட்டம் நடைபெற்றது, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான ஒரு கடைசி முயற்சியாக அது இருந்தது, ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பதை இருவரும் அறிந்து இருந்ததற்கான ஒரு முன்னோட்டமாகவும் அது அமைந்தது என்று டிரெவர்-ரோப்பர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 30, 1945 அன்று ஹிட்லர் தனது இறுதித் தயாரிப்புகளை மேற்கொண்டார்.
தனது உடலை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கினார். அது எதிரிகளின் கைகளில் சிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார். இறந்த பிறகும் அவமானப்பட நேரிடும் என்ற தனது அச்சத்தின் காரணமாக, சடலங்களை எரிக்க வேண்டுமெனக் கூறினார்.
சயனைடு மாத்திரைகளின் செயல்திறனை உறுதி செய்வதற்காக, ஹிட்லர் அவற்றைத் தனது வளர்ப்பு நாய் பிளாண்டி மீது பரிசோதித்ததாக டிரெவர்-ரோப்பர் பதிவு செய்துள்ளார். "அந்தச் செயல் மருத்துவ ரீதியாகவும், கிட்டத்தட்ட உணர்ச்சியற்றதாகவும் இருந்தது. இருப்பினும், தனது மரண முறையைத் தானே கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவரது உறுதியை அது வெளிப்படுத்தியதாக" டிரெவர் எழுதியுள்ளார்.
நண்பகல் வாக்கில், ஹிட்லர் பங்கரில் இருந்தவர்களிடம் விடைபெற்றார்.
டிரெவரின் கூற்றுப்படி, சாட்சிகள் அந்தத் தருணத்தை அமைதியானதாக விவரித்தனர். அங்கு பெரிய உரைகளோ, நாடகத்தனமான சைகைகளோ இல்லை, சுருக்கமான கைகுலுக்கல்கள் மட்டுமே இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சடலங்கள்
ஏப்ரல் 30ஆம் தேதி பிற்பகல் 3:30 மணியளவில், ஹிட்லரும் ஈவா பிரவுனும் ஒரு தனி அறைக்குச் சென்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பது, பல்வேறு சாட்சியங்களின் வாக்குமூலங்களில் இருந்து, டிரெவர்-ரோப்பர் விவரித்துள்ளார்.
அதன்படி, "ஈவா பிரவுன் சயனைடை உட்கொண்டதாகவும், ஹிட்லர் சயனைடை உட்கொண்டதுடன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும்" நம்பப்படுகிறது.
"சிறிது நேரம் கழித்து உதவியாளர்கள் அறைக்குள் நுழைந்தபோது, அவர்கள் இருவரும் இறந்துகிடந்தனர். ஹிட்லர் ஒரு சோஃபாவில் சரிந்து அமர்ந்திருந்தார், அவரது அருகில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. ஈவா பிரவுன் அவருக்கு அருகில் இருந்தார்.
அவர்களது சடலங்கள் மேற்புறத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரீச் சான்சலரி தோட்டத்தில், ஒரு குண்டுவீச்சுக் குழியில் வைக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன."
ஜோக்கிம் ஃபெஸ்டின் கூற்றுப்படி, சோவியத் குண்டுவீச்சின் தொடர்ச்சியான அச்சுறுத்தலின் கீழ், அந்த நிகழ்வு அவசரமாகவும் முழுமையடையாமலும் நடத்தப்பட்டது. எந்தவொரு உடல் தடயமும் எஞ்சியிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கான ஒரு செயலாகவே அது மேற்கொள்ளப்பட்டது என்று அவர் விவரிக்கிறார்.
ஹிட்லரின் மரணம் அவரது குணத்திற்கு ஏற்றதாகவே இருந்ததாக டிரெவர்-ரோப்பர் எழுதியுள்ளார். "அதுவொரு துணிச்சலான செயல் அல்ல, எதார்த்தம், பொறுப்பு அல்லது விளைவுகளை ஏற்க மறுப்பதன் எதிர்வினை," என்கிறார்.
ஹிட்லர் மரணித்த சில நாட்களிலேயே பெர்லின் சோவியத் படைகளிடம் வீழ்ந்தது. 1945ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி, ஜெர்மனி நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தது.
ஹிட்லரின் தற்கொலை பெரும்பாலும் ஒரு நாடகத்தனமான முடிவாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அது அவர் வாழ்ந்த விதத்துடன் முற்றிலும் ஒத்துப்போவதாக ஃபெஸ்ட் தனது நூலில் எழுதியுள்ளார்.
அது அவரது ஆட்சியை வரையறுத்த, முழுமையான அதிகாரம், தோல்வியைச் சகித்துக்கொள்ள இயலாமை, கட்டுப்பாட்டின் மீதான வெறி போன்ற அதே குணாதிசயங்களைப் பிரதிபலித்தது. ஹிட்லரின் இறுதிச் செயல் அவரது சிந்தனையின் தர்க்கரீதியான முடிவு என்று ஃபெஸ்ட் குறிப்பிடுகிறார்.
"வரலாற்றின் மிகவும் அழிவுகரமான ஆட்சிகளில் ஒன்று சரிந்தபோது, பெர்லினின் இடிபாடுகளில், அதன் தலைவர் தன்னை மாற்றிக் கொள்ளவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ, தோல்வியை ஏற்றுக்கொள்ளவோ இல்லை. மாறாகத் தனது அழிவையே தேர்ந்தெடுத்தார்" என்று ஃபெஸ்ட் எழுதுகிறார்.
ஐரோப்பாவை மறுவடிவமைத்த நாஜி ஆட்சி, அதன் தலைவர் மறைந்தவுடன் கிட்டத்தட்ட உடனடியாகவே சரிந்தது. ஆனால், அது நிகழ்த்திய இனப்படுகொலைகள், பேரழிவுகளின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் நீடித்தது.
முக்கிய குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































