You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் யார்? புதிய தகவல்கள்
அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேக நபர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக எதிர்வினையாற்றியதாக எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் எஃப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
வெள்ளை மாளிகைக்கு அருகே அமைந்த தெருக்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக முதல்கட்டமாக ரகசிய சேவை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
ரகசிய சேவை செய்தி தொடர்பாளர் அந்தோணி குக்லியால்மி இது தொடர்பாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசுகையில், "17வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ என்.டபிள்யூ அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் களத்தில் உள்ள அதிகாரிகளுடன் உறுதி செய்து வருவதாகவும்" தெரிவித்திருந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் யார்?
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் 21 வயதான நசைர் பெஸ்ட் எனத் தெரியவந்துள்ளது. இவர் ரகசிய சேவை பிரிவுக்கு முன்னரே அறியப்பட்டவர் என்று பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் தெரிவிக்கிறது.
2025 ஜூலையில் வெள்ளை மாளிகையை அணுக முயன்றபோது பெஸ்ட் கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் மன நல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த தாக்குதலுக்கான நோக்கம் பற்றி தெரியவில்லை. அவர் எந்த ஆயுதத்தை பயன்படுத்தினார் என்பதும் உறூதியாக தெரியவில்லை. காயமடைந்த மற்றொரு நபர் யார், சந்தேக நபர் சுட்டதால் அவர் காயமடைந்தாரா அல்லது அதிகாரிகள் சுட்டதால் காயமடைந்தாரா என்பது தெரியவில்லை.
பத்திரிகையாளர்கள் கேட்டது என்ன?
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை வெள்ளை மாளிகை அருகே இருந்த பத்திரிகையாளர்கள் உறுதிபடுத்தினர். 20 முறை வரை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக சில பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு காணொளியில் ஏபிசி நியூஸ் செய்தியாளர் செலினா வாங் செய்தி பதிவு செய்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் மறைந்து கொள்வதற்காக பதுங்குவதைக் காண முடிகிறது.
"ஒரு டஜன் எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உடனடியாக நாங்கள் செய்தியாளர் சந்திப்பு அறைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டோம். தற்போது அங்கு தான் இருக்கிறோம்," என செலினா வாங் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சுற்றி அமைந்துள்ள தெருக்கள் அனைத்தும் காவல்துறையால் மூடப்பட்டன. காவல்துறையினர், ஊடகத்தினர், வேடிக்கை பார்க்க வந்தவர்கள் எனப் பலரும் அங்கு குழுமியிருந்தனர்.
வெள்ளை மாளிகையை சுற்றியும் ஆயுதமேந்திய அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தளர்த்தப்பட்டன.
சந்தேக நபரும் பொதுமக்களில் ஒருவரும் என 2 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டது.
இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சந்தேக நபர் கவலைக்கிடமான நிலையிலும் காயமடைந்த இன்னொரு நபர் மோசமான நிலையிலும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ரகசிய சேவை அதிகாரிகளை நோக்கிச் சுட்டதாகவும் அவர்கள் பதிலுக்குச் சுட்டதில் காயமடைந்ததாகவும் சிபிஎஸ் செய்தி கூறுகிறது. பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் யாரும் சிகிச்சை தேவைப்படும் நிலையில் இல்லை என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது 15 முதல் 30 முறை துப்பாக்கிச் சூடு கேட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் கொல்லப்பட்டதாக ரகசிய சேவை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ரகசிய சேவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்ன?
இது தொடர்பாக ரகசிய சேவை வெளியிட்ட அறிக்கையில், "சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் 17வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் இருந்த நபர் தனது பையில் இருந்து ஆயுதத்தை எடுத்து சுட ஆரம்பித்தார்.
ரகசிய சேவை அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இறந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார்.
அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் நடைபெற்றபோது அதிபர் வெள்ளை மாளிகையில் தான் இருந்தார். ஆனால் பாதுகாப்பின் கீழ் உள்ளவர்களோ அல்லது வேறு எந்தப் பணிகளும் பாதிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றபோது தெரிவிக்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு