You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரானின் 90 இலக்குகள் மீது தாக்குதல் - அமெரிக்கா
மத்திய கிழக்கில் அமெரிக்கா- இரான் மோதல் காரணமாக 2வது நாளாக பதற்றம் நிலவுகிறது. பல்வேறு வளைகுடா நாடுகளும் தங்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்துவதாக தெரிவித்துள்ளன.
மறுபுறம், இரான் மீது மீண்டும் பலத்த தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், இரண்டாம் நாள் தாக்குதலில் இரானின் 90 இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.
தற்போதைய மோதல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இரான் ஒருவர் மீது ஒருவர் கடும் விமர்சனங்களையும் வைத்துள்ளன.
ஹோர்மூஸில் மூன்று கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக எனக் கூறி இரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது. எனினும், எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு இரான் இதுவரை நேரடியாக பொறுப்பேற்கவில்லை .
முதல் நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரானின் 80 இலக்குகள் குறிவைக்கப்படதாக அமெரிக்கா தெரிவித்தது. இதற்கு பதில் நடவடிக்கையாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை இரான் குறிவைத்தது.
இந்நிலையில், இரண்டாவது நாளாகவும் தாக்குதல் தொடர்கிறது.
இரானின் தெற்குப் பகுதிகளான சிரிக் மற்றும் பந்தர் அப்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த இரு துறைமுக நகரங்களும் உலகின் முக்கிய கடல் வர்த்தக வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை அருகே அமைந்துள்ளன. மொத்தம் இரானின் 90 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இரானின் சபஹர் துறைமுக பகுதியில் வெடிப்பு ஏற்பட்ட காணொளிகளும் வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்கு பிறகு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், நேற்று இரான் கப்பல்கள் மீது நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலுக்கான பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது மீண்டும் நடந்தால், அதைவிடக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு