காணொளி: தாய்லாந்து பாரில் நேரிட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழப்பு
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பார் ஒன்றில் ஏற்பட்ட தீயால் குறைந்தது 27 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இதுவரை தெரியவந்தது என்ன?
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் ச்சாட்டுசக்( Chatuchak ) மாவட்டத்தில் உள்ள பார் ஓன்றில் திங்களன்று நள்ளிரவில் தீ ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்தில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; இருப்பினும், இச்சம்பவத்தில் ஒன்பது ஆண்களும் 18 பெண்களும் உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; இவர்களில் எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீயை நேரில் பார்த்தவர்கள் இந்த சம்பவம் குறித்து ஊடகங்களிடம் விவரித்தனர்.
தீக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக பேங்காக் ஆளுநர் ச்சாட்சார்ட் சிட்டிபுண்ட் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் புகையைச் சுவாசித்ததாலேயே உயிரிழந்திருக்கக்கூடும் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக பாங்காக்கின் பேரிடர் மேலாண்மைத் துறையின் இயக்குநர் சூரியச்சாய் ரவிவான் தெரிவித்தார். எனினும், இதனை உறுதிப்படுத்த கூடுதல் விசாரணை தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விரகுல் ( Anutin Charnvirakul) பேசினார்.
தாய்லாந்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது இது முதல் முறையல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாங்காங்கிற்கு தெற்கில் உள்ள நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட தீயில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல், 2009-ல் இரவுவிடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 66 பேர் கொல்லப்பட்டனர். முந்தைய விபத்துகளுக்குப் பிறகு தீ மற்றும் மின் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவை பெரும்பாலும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



