மே 31இல் நிகழும் நீல நிலவு என்றால் என்ன? - இது ஏன் தனித்துவமானது?

    • எழுதியவர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

மே 31, 2026 அன்று தலையை உயர்த்தி வானத்தைப் பாருங்கள். கருநீல வானில் ஒரு வெள்ளித் தட்டு போல முழு நிலா தென்படுகிறதா? அதுதான் மே மாதத்தின் இரண்டாவது பௌர்ணமி. இதற்கு ஒரு வித்தியாசமான பெயர் உண்டு. 'புளூ மூன் (நீல நிலவு)'.

நீல நிலவுதான், ஆனால் நீலமாகத் தெரியாது. ஐரோப்பாவில் நீல நிறம் அரிது. எனவே அரிதான, இயல்புக்கு மாறானதைக் குறிக்க நீல நிறத்தைப் பயன்படுத்துவார்கள். கோபத்திற்கு சிவப்பு, உண்மைக்கு வெள்ளை என்று கூறுவது போலத்தான் இதுவும். ஒரே மாதத்தில் இருமுறை பௌர்ணமி வருவது அரிதான நிகழ்வு. இதைச் சுட்டும் வகையில் மாதத்தில் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை 'நீல நிலவு' என்பார்கள்.

அரிது என்றாலும், 'வாராது வந்த மாமணி'யைப் போல எப்போதாவது ஒரு மாதத்தில் இரு பௌர்ணமி நிகழ்வது எப்படி?

நிலவு பூமியைச் சுற்றி வரும்போது எப்போதும் சீரான வேகத்தில் நகர்வதில்லை என்பதில் இருந்து இது தொடங்குகிறது.

சூரியன் ஒரு பக்கத்திலும், பூமி நடுவிலும், நிலவு எதிர்ப் பக்கத்திலும் என்ற அமைவு வரும்போது முழுநிலவு ஏற்படுகிறது. இந்தக் கணத்தில் இந்த மூன்று வான்பொருட்களின் மையங்களும் ஒரு தளத்தில் (plane) இருக்கும். அதுதான் முழுநிலவு.

நிலவை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்?

நிலவு பூமியைச் சுற்றி 27.3 நாட்களில் ஒரு முழு சுற்று சுற்றிவிடும். ஆனால் ஒவ்வொரு 27.3 நாட்களுக்கும் நமக்கு ஒரு முழுநிலவு ஏற்படுவதில்லை.

நிலவு தனது 360 டிகிரி பயணத்தை முடிக்கும்போது, பூமி தனது சுற்றுப்பாதையில் சற்று நகர்ந்திருக்கும். எனவே நிலவு ஒரு சுற்று சுற்றி முடிக்கும்போது, முழு நிலவுக்குத் தேவையான சூரியன்-பூமி-நிலவு சமதள அமைவும் நகர்ந்திருக்கும். சூரியனுக்கு எதிர்ப்புறமான நிலைக்குச் செல்ல நிலவு சற்று கூடுதலாகப் பயணிக்க வேண்டும். அந்தக் கூடுதல் பயணம் சுழற்சியை சராசரியாக 29.53 நாட்களுக்கு நீடிக்கிறது. அதாவது 29 நாட்கள், 12 மணிநேரம், 44 நிமிடங்கள்.

மேலும், நிலவு பூமியைச் சரியான வட்டப்பாதையில் சுற்றுவதில்லை. அது நீள்வட்டப் பாதையில் (elliptical orbit) சுற்றுகிறது. இந்த நீள்வட்டப் பாதையில் அதன் வேகம் ஒரே மாதிரி இருக்காது. பூமிக்கு அருகில் இருக்கும்போது — அண்மைப்புள்ளிக்கு (perigee) அருகே — நிலவு வேகமாக நகரும். பூமியிலிருந்து தொலைவில் இருக்கும்போது — தொலைப்புள்ளிக்கு (apogee) அருகே — நிலவு மெதுவாக நகரும்.

முழுநிலவு அண்மைப்புள்ளி அருகில் ஏற்பட்டால், நிலவு மீண்டும் சூரியன்–பூமி சமதளத்தை விரைவாக அடையும். முழுநிலவு தொலைப்புள்ளி அருகே ஏற்பட்டால், அதற்கு அதிக நேரம் தேவைப்படும்.

இதனால் தொடர்ந்து வரும் இரண்டு முழுநிலவுகளுக்கு இடையிலான இடைவெளி மாறுபடும். மிகக் குறைந்த இடைவெளி சுமார் 29.18 நாட்களாக இருக்கலாம். மிக அதிக இடைவெளி சுமார் 29.93 நாட்களாகக் கூடலாம்.

முக்கால் நாள் அளவிலான இந்த வேறுபாட்டைப் பொருட்படுத்த வேண்டுமா என்று நமக்குத் தோன்றும். ஆனால் இந்தச் சிறிய வேறுபாடுகள்தான் நாட்காட்டிகளிலும் பண்பாட்டிலும் நிலவை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன.

இந்தோ-அரேபிய எண்கள் (Indo-Arabic numerals) எளிமையான கணக்கீட்டுக்காக உலகம் முழுவதும் பரவின. அதைப் போலவே இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் நாம் தினசரி பயன்படுத்தும் ஜனவரி, பிப்ரவரி போன்ற கிரகோரியன் நாட்காட்டி பொதுவான வழக்கத்தில் உள்ளது. ஆனால் இது ஏதோ இயற்கையாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை அல்ல. ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்தின் வரலாறுதான் இதற்கு முக்கியக் காரணம்.

எனவேதான் எத்தியோப்பியா, இரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் தங்களுடைய தனித்த நாகரிக நாட்காட்டிகளை இன்னும் குடிமைப் பயன்பாட்டிற்கு வைத்திருக்கின்றன. இருந்தாலும் பன்னாட்டுத் தொடர்புகளில் கிரிகோரியன் நாட்காட்டிதான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கிரிகோரியன் நாட்காட்டி பழைய ரோமானிய நாட்காட்டியில் இருந்து உருவானது.

ஆரம்பக்கால ரோமானியர்கள் 304 நாட்கள் கொண்ட ஒழுங்கற்ற ஆண்டைப் பயன்படுத்தினர். அது பத்து மாதங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடங்கியது. அந்த மாதம் போர்த் தெய்வமான மார்ஸ் (Mars) பெயரில் அழைக்கப்பட்டது.

பின்னர் வந்த மாதங்களின் பெயர்கள் லத்தீன் எண்களில் இருந்து வந்தவை. செப்டம்பர் என்பது செப்டம் (septem), அதாவது ஏழு. அக்டோபர் என்பது ஆக்டோ (octo), அதாவது எட்டு. நவம்பர் என்பது நவம் (novem), அதாவது ஒன்பது. டிசம்பர் என்பது டிசெம் (decem), அதாவது பத்து.

செவிவழிச் செய்திகளின்படியே நுமா பொம்பிலியஸ் என்ற மன்னர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களை ஆண்டின் இறுதியில் சேர்த்தார். பின்னர் ஜனவரி ஆண்டின் துவக்கமாக மாறியது. இதனால் எண் அடிப்படையிலான மாதங்கள் இரண்டு இடங்கள் பின்னோக்கி நகர்ந்தன. ஆனால் பெயர்கள் மாறவில்லை. இதன் தொடர்ச்சியாக "ஏழு" என்று பொருள் தரும் செப்டம்பர் ஒன்பதாவது மாதமாக மாறியது. "பத்து" என்று பொருள் தரும் டிசம்பர் பன்னிரண்டாவது மாதமாக மாறியது.

கிமு 46ஆம் ஆண்டில் ஜூலியஸ் சீசர் இந்த ஒழுங்கற்ற முறையை சீர்திருத்தினார். பழைய சந்திர அடிப்படையிலான காலக் கணிப்பு முறையை மாற்றி, சூரிய அடிப்படையிலான நாட்காட்டி முறையை அறிமுகப்படுத்தினார். ஆண்டுக்கு 365 நாட்கள் நிர்ணயிக்கப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கூடுதல் நாள் சேர்க்கப்பட்டது.

சீசர் கொலை செய்யப்பட்ட பிறகு, அவரை நினைவுகூரும் வகையில் குவிண்டிலிஸ் (Quintilis) மாதம் ஜூலை ஆனது. பின்னர் கிமு 8ஆம் ஆண்டில் செக்ஸ்டிலிஸ் (Sextilis) மாதம் ஆகஸ்ட் ஆனது. அகஸ்டஸ் பேரரசரைப் போற்றுவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது.

அகஸ்டஸ் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒரு நாளை எடுத்துக் கொண்டு ஆகஸ்ட் மாதத்தை 31 நாட்களாக்கினார் என்ற கதை மிகவும் பிரபலமானது. ஆனால் அது வரலாற்று உண்மை அல்ல. அகஸ்டஸ் காலத்திற்கு முன்பே மாதங்களின் நாள் அமைப்பு பெரும்பாலும் நிலைபெற்றுவிட்டது.

ஆனால் ஜூலியன் நாட்காட்டியில் ஒரு சிறிய சிக்கல் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் சேர்ப்பது, உண்மையான சூரிய ஆண்டைவிட சற்று அதிகமாக இருந்தது. காலப்போக்கில் நாட்காட்டியும் பருவங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் போயின.

இதனால் 1582ஆம் ஆண்டில் போப் 13ஆம் கிரிகோரி (Pope Gregory XIII) திருத்தம் செய்தார். சூரிய ஆண்டுடன் நன்றாகப் பொருந்தும் வகையில் நாட்காட்டி மாற்றப்பட்டது. அதுவே இன்று பயன்பாட்டில் உள்ள கிரிகோரியன் நாட்காட்டி.

'நீல நிலவு' என்ற பெயர் எப்படி வந்தது?

வானியல் பார்வையில், பருவங்கள் என்றால் இரவுபகல் சமநிலைகள் (equinox) மற்றும் அயனநிலைகள் (solstice) இடையிலான கால இடைவெளிகள் ஆகும்.

வட அரைக்கோளத்தில், மார்ச் மாத இரவுபகல் சமநிலையில் இருந்து ஜூன் அயனநிலை வரை வசந்த காலம். ஜூன் அயனநிலையில் இருந்து செப்டம்பர் இரவுபகல் சமநிலை வரை கோடைக்காலம். இதுபோல ஆண்டில் நான்கு வானியல் பருவங்கள் உள்ளன.

சூரிய ஆண்டு சுமார் 365.24 நாட்கள் நீளமாக இருப்பதால், ஒவ்வொரு பருவமும் சுமார் 91.3 நாட்கள் நீளமாக இருக்கும்.

முழுநிலவுகளுக்கு இடையிலான சராசரி இடைவெளி 29.53 நாட்கள் என்பதால், ஒரு பருவத்தில் பொதுவாக மூன்று முழுநிலவுகள் வரும்.

ஆனால் நிலவின் வேகம் மாறுவதால் சில நேரங்களில் நான்கு முழுநிலவுகள் வரலாம்.

இடைக்கால ஐரோப்பாவில் இது ஒரு சிக்கலை உருவாக்கியது. தேவாலய விழாக்களின் தேதிகளைக் கணக்கிடும் பணியைத் துறவிகள் மேற்கொண்டிருந்தனர். ஓர் ஆண்டில் 13 முழுநிலவுகள் வருவது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றியது. அது பலரால் அசுபமாகக் கருதப்பட்டது.

அப்படிப்பட்ட ஆண்டில், ஒரு பருவத்தில் நான்கு முழுநிலவுகள் இருந்தால், அந்தப் பருவத்தின் மூன்றாவது முழுநிலவுக்கு "நீல நிலவு" என்று பெயர் வழங்கப்பட்டது. இது நிலவின் காட்சித்தோற்ற நிறத்தைக் குறிக்கவில்லை.

பல நூற்றாண்டுகளாக "once in a blue moon" என்ற ஆங்கிலச் சொற்றொடர் அரிதாக நிகழும் ஒன்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நடக்காத ஒன்று அல்லது மிகவும் அபூர்வமான ஒன்று என்ற பொருளில் அது பயன்படுத்தப்பட்டது.

பதின்மூன்று முழுநிலவுகள் கொண்ட ஆண்டும் அரிதானதே. வழக்கமான கால ஒழுங்கில் இருந்து விலகிய ஆண்டாக அது கருதப்பட்டது. அந்த அரிதான நிகழ்வுக்கான பெயராக நீல நிலவு அமைந்தது.

பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு குடிபுகுந்தனர். அங்கே அமெரிக்காவில் இந்தக் கதைக்குப் புதிய திருப்பம் கிடைத்தது.

ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறியபோது தங்கள் மரபுகளையும் எடுத்துச் சென்றனர். அதே நேரத்தில் அங்கிருந்த "முதல் மக்கள்" (First Peoples) எனப்படும் செவ்விந்திய சமூகங்களின் காலக்கணிப்பு அறிவும் தாக்கம் செலுத்தியது.

அமெரிக்க பூர்வகுடிகள் பருவங்களையும் நிலவின் சுழற்சியையும் கவனித்து காலத்தைப் புரிந்துகொண்டனர். உதாரணமாக, ஜனவரி மாத குளிர்காலத்தில் முழுநிலவு தோன்றும்போது, கிராமங்களுக்கு வெளியே பசியால் ஓநாய்கள் ஊளையிடும். எனவே சில பழங்குடியினர் அந்த முழுநிலவை "வுல்ஃப் மூன்" என்று அழைத்தனர். இதேபோல மே மாதத்தில் மலர்கள் மலர்ந்தபோது வரும் முழுநிலவு "ஃபிளவர் மூன்" என்று அழைக்கப்பட்டது.

இந்தக் கட்டத்தில் அச்சிடப்பட்ட அல்மனாக்கள் (almanacs), ஐரோப்பிய மரபுகளையும் பழங்குடி அறிவையும் ஒன்றாகக் கலந்தன. ஒவ்வொரு முழுநிலவுக்கும் பருவத்தைக் குறிக்கும் பெயர்கள் வழங்கப்பட்டன.

  • ஜனவரி — வுல்ஃப் மூன்
  • பிப்ரவரி — ஸ்னோ மூன்
  • மார்ச் — வார்ம் மூன்
  • ஏப்ரல் — பிங்க் மூன்
  • மே — ஃபிளவர் மூன்
  • ஜூன் — ஸ்ட்ராபெரி மூன்
  • ஜூலை — பக் மூன்
  • ஆகஸ்ட் — ஸ்டர்ஜன் மூன்
  • செப்டம்பர் — ஹார்வெஸ்ட் மூன்
  • அக்டோபர் — ஹன்டர்ஸ் மூன்
  • நவம்பர் — பீவர் மூன்
  • டிசம்பர் — கோல்ட் மூன்

இந்தப் பெயர்கள் பின்னர் அமெரிக்க பொதுப் பண்பாட்டின் ஒரு பகுதியாகின. எனவே ஒவ்வொரு முழுநிலவுக்கும் பெயர் தேவைப்பட்டது. ஒரு பருவத்தில் நான்கு முழுநிலவுகள் வந்தால், கூடுதலாக வந்த மூன்றாவது முழுநிலவு நீல நிலவு என்று அழைக்கப்பட்டது. இப்படித்தான் நீல நிலவு என்னும் கருத்துரு உருவானது.

பின்னர் இந்தச் சொல்லின் பொருள் மீண்டும் மாறியது. 1937ஆம் ஆண்டில் வெளியான மெய்ன் ஃபார்மர்ஸ் அல்மனாக் (Maine Farmers' Almanack) என்ற அல்மனாக், ஒரு பருவத்தில் நான்கு முழுநிலவுகள் இருந்தால், அந்தப் பருவத்தின் மூன்றாவது முழுநிலவையே நீல நிலவு என்று குறிப்பிட்டது.

ஆனால் பின்னர் ஒரு பிரபல வானியல் எழுத்தாளர் இந்த விளக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டார். ஒரு நாட்காட்டி மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவுதான் நீல நிலவு என்று அவர் விளக்கினார்.

இந்தத் தவறான விளக்கமே பின்னர் பிரபலமடைந்தது. இன்று பொதுவாக மக்கள் நீல நிலவு என்று சொன்னால், ஒரு கிரிகோரியன் நாட்காட்டி மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவைத்தான் குறிக்கிறார்கள்.

ஒரே மாதத்தில் இரு முழுநிலவு

இது ஏன் சாத்தியமாகிறது? ஒரு மாதத்தில் இரு முழுநிலவு அரிதாக ஏற்படுவது ஏன்?

கிரிகோரியன் நாட்காட்டியில் மாதங்கள் சம நீளமுடையவை அல்ல. சில மாதங்கள் 28 நாட்கள். சில 30 நாட்கள். சில 31 நாட்கள்.

ஆனால் தொடர்ந்து வரும் இரண்டு முழுநிலவுகளுக்கு இடையிலான இடைவெளி 29.18 நாட்களில் இருந்து 29.93 நாட்கள் வரை அமையக்கூடும்.

இதனால் 31 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது நாளில் ஒரு முழுநிலவு வந்தால், அதே மாத இறுதியில் இன்னொரு முழுநிலவு வர வாய்ப்பு இருக்கும்.

அப்படிப்பட்ட இரண்டாவது முழுநிலவுக்கே இன்று நீல நிலவு என்று பெயர் வழங்கப்படுகிறது.

வரும் மே 31 அன்று இப்படித்தான் இரண்டாவது முழுநிலவு ஏற்படுகிறது. மே ஒன்றாம் தேதி முதல் முழுநிலவு. அதே மாதம் மே 31 அன்று இன்னொரு முழுநிலவு வருகிறது. இதுவே நவீன பொருளில் நீல நிலவு.

இந்த முழுநிலவு ஒரு மைக்ரோமூன் (Micromoon) ஆகவும் இருக்கும். அப்போது நிலவு பூமியில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கும். அதனால் அது வழக்கத்தைவிட சற்று சிறியதாகத் தோன்றும். வெறும் கண்களால் இந்த வேறுபாட்டைப் பிரித்தறிய முடியாது.

இதனால் ஒரு விஷயம் தெளிவாகிறது. இந்த நவீனப் பொருளில் நீல நிலவு என்பது மெய்யான வானியல் நிகழ்வு அல்ல. மனிதர்கள் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட நாட்காட்டி முறைக்குள் நிலவின் இயக்கத்தைப் பொருத்திப் பார்த்ததில் உருவான பண்பாட்டுக் கருத்து.

இந்த உண்மை இந்திய நாட்காட்டிகளைப் பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.

கிரிகோரியன் நாட்காட்டியில் மாதங்கள் வரலாற்றுக் காரணங்களால் உருவான செயற்கை காலப் பிரிவுகள். ஆனால் இந்திய சந்திர–சூரிய நாட்காட்டிகளில் (lunisolar calendar), மாதங்கள் நேரடியாக நிலவின் சுழற்சியோடு தொடர்புடையவை.

சில மரபுகளில் ஒரு பூர்ணிமா (Pūrṇimā) முதல் அடுத்த பூர்ணிமா வரை ஒரு மாதம் கணக்கிடப்படுகிறது (பூர்ணிமாந்தா எனப்படும்). மற்ற சில மரபுகளில் ஒரு அமாவாசை (Amāvāsya) முதல் அடுத்த அமாவாசை வரை ஒரு மாதம் கணக்கிடப்படுகிறது (அமாந்தா எனப்படும்).

இஸ்லாமிய சந்திர நாட்காட்டிகளிலும் மாதங்கள் பிறைத் தோற்றத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட நாட்காட்டி முறைகளில் ஒரே மாதத்திற்குள் இரண்டு முழுநிலவுகள் வர முடியாது. ஏனெனில் மாதத்தின் வரையறையே நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. எனவே நவீன கிரிகோரியன் பொருளில் நீல நிலவு அங்கு நிகழ முடியாது.

ஆனால் வேறு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு சந்திர ஆண்டு சுமார் (29.5 x 12) 354 நாட்கள் மட்டுமே. சூரிய ஆண்டு சுமார் 365.25 நாட்கள். இரண்டுக்கும் சுமார் 11 நாட்கள் வேறுபாடு உள்ளது.

இந்த வேறுபாடு தொடர்ந்து சேர்ந்து கொண்டே போனால், பருவங்களும் திருவிழாக்களும் இடம் மாறத் தொடங்கும். இதைத் தவிர்க்க இந்திய சந்திர–சூரிய நாட்காட்டிகளில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கூடுதல் மாதம் சேர்க்கப்படுகிறது. இதுவே அதிக மாதம் (adhika māsa).

அப்படிப்பட்ட ஆண்டில் 13 மாதங்களும் 13 முழுநிலவுகளும் இருக்கும்.

இந்தக் கூடுதல் மாதம், சமூக மற்றும் சடங்கு மரபுகளில் தனித்த இடத்தைப் பிடித்தது. சில மரபுகளில் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கப்பட்டது. முற்காலத்தில் இந்தியாவின் சில இடங்களில் அந்த மாதத்தில் வாடகை அல்லது வட்டி வசூலிக்கப்படவில்லை.

தமிழ் மரபில் 'நீல நிலவு' இருக்கிறதா?

ஆனால் தென்னிந்தியாவில் நாம் பயன்படுத்தும் நாட்காட்டி வித்தியாசமானது. வியப்பானது.

தமிழ் மற்றும் மலையாள சூரிய நாட்காட்டிகளில் மாதங்கள் சூரியன் வான்வழியில் (ecliptic) 30 டிகிரி நகர எடுக்கும் காலத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.

பூமியின் சுற்றுப்பாதை நீள்வட்டமானதால், சூரியனின் தோற்ற இயக்கம் ஒரே வேகத்தில் இருக்காது. அதனால் எல்லா மாதங்களும் ஒரே நீளமுடையவை அல்ல. சில மாதங்கள் 28 நாட்களாக இருக்கலாம். சில 32 நாட்கள் வரை நீளலாம்.

இங்கே ஒரு மாதத்திற்குள் இரண்டு முழுநிலவுகள் வருவது சாத்தியமாகிறது.

அப்படிப்பட்ட மாதம் தமிழ் மரபில் மலமாதம் (malamādam / malamāsa) என்று அழைக்கப்பட்டது. "மலம்" என்ற சொல்லுக்கு அசுத்தம் என்ற பொருள் உண்டு. பெயரே அந்த மாதத்தைப் பற்றிய சமூக மனப்பான்மையைச் சொல்கிறது.

புதிய முயற்சிகளைத் தொடங்குவது, திருமணங்கள் நடத்துவது, சுப நிகழ்வுகளை நடத்துவது போன்றவற்றை அந்த மாதத்தில் பலர் தவிர்த்தனர்.

உதாரணமாக, 2026 ஜூன்–ஜூலை காலத்திற்கு ஒத்த தமிழ் சூரிய மாதமான ஆனியில் 32 நாட்கள் உள்ளன. நீண்ட சூரிய மாதமாக அமைவதால் இந்த மாதத்தில் இரண்டு அமாவாசை நிகழும் — இதுவும் மலமாதம் (சிலர் விஷ மாதம் எனவும் கூறுவார்). அதேபோல 2027 ஆகஸ்ட்–செப்டம்பர் காலத்திற்கு ஒத்த ஆவணி மாதத்திலும் இரண்டு முழுநிலவு ஏற்படும். இதுவும் மலமாதம்.

அதாவது 32 நாட்கள் கொண்ட மாதத்தில் இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை நிகழும்.

அதனால் "ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவுகள்" என்ற கருத்து இந்திய சிந்தனைக்கு முற்றிலும் அந்நியமானது என்று சொல்ல முடியாது. ஆனால் அதன் பின்னுள்ள நாட்காட்டி தர்க்கம் முற்றிலும் வேறுபட்டது.

இந்தியாவில் முழுநிலவு வெறும் வானியல் நிகழ்வு மட்டுமல்ல. அது சமயம், சமூக வாழ்க்கை, வேளாண்மை, திருவிழா, பண்பாடு ஆகியவற்றுடன் ஆழமாக இணைந்துள்ளது.

தமிழ் விழாவான தைப்பூசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாள் தமிழ்ச் சூரிய மாதமான தை மாதத்தின் (ஜனவரி நடு - பிப்ரவரி நடு) முழுநிலவில் வருகிறது. இது தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

சரத் பூர்ணிமா (Sharad Purnima) வட இந்தியாவில் முக்கியமான திருவிழா. ஆஷ்வின் (Ashwin) மாதத்தில் (செப்டம்பர்/அக்டோபர்) நிகழும் முழுநிலவு. இந்த முழுநிலவு இரவில் பால் பாயசம் தயாரித்து நிலவொளியில் வைப்பது வழக்கம். அந்த இரவில் நிலவொளிக்குச் சிறப்பு ஊட்டச்சத்து அல்லது அமிர்தத் தன்மை உள்ளது என்று பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. ஆண்டில் ஏற்படும் முழுநிலவுகளில் இதுதான் மிகவும் பிரகாசமான முழுநிலவு என்ற கருத்தும் உள்ளது.

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவிலின் சிலைகள் மரத்தால் செய்யப்பட்டவை. இந்த மரச் சிலைகள், கோவிலின் முக்கிய தெய்வங்கள். ஆஷாட மாதத்தில் இரண்டு முழுநிலவுகள் வரும்போது, அதிகமாசத்தில் இந்தச் சிலைகள் புதுப்பிக்கப்படுகின்றன.

புத்த பூர்ணிமா (Buddha Purnima), வைசாக மாத முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. புத்த மத மரபில் இது மிக முக்கியமான நாள்.

சமண மரபுகளிலும் முழுநிலவு நாட்களுக்கு முக்கியத்துவம் உண்டு.

தமிழ் மரபிலும் முழுநிலவுக்குத் தனித்த இடம் உள்ளது. சங்க இலக்கியங்களில் கார்த்திகை மாத முழுநிலவு இரவில் பெண்கள் வீட்டு முன்றில்களில் அகல் விளக்குகள் ஏற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய சோழ நாட்டில் மழை வேண்டி நடத்தப்பட்ட இந்திர விழா அல்லது மழை விழா, ஊத்திரை மாத (சித்திரை) முழுநிலவில் தொடங்கியதாக இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. இந்த விழா ஒரு மாதம் நீடித்தது. மழைத் தெய்வமான இந்திரனை வேண்டி இசை, நடனம், வழிபாடு ஆகியவை நடத்தப்பட்டன.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பிற்காலத் தமிழ் இலக்கியங்களிலும் இந்த விழா குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரை பௌர்ணமி தமிழ் மரபில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

இந்தியாவில் மிகப்பெரிய பழங்குடிச் சமூகங்களில் ஒன்று சந்தாலிகள் (Santal). அவர்களின் 'சோராய்' (Sohrae) மாத முழுநிலவு (இது சூரிய சந்திர நாட்காட்டியில் கார்த்திகை பூர்ணிமாவுக்கு ஒத்திருக்கிறது) நாளில் ஒரு பெரும் புனிதப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள புனிதமான லுகுபுரு (Luguburu) மலைகளுக்குச் செல்வார்கள். அங்கே உள்ள குகை ஒன்றில் தங்களின் மூதாதை வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். மத்திய இந்தியாவின் ஓராவோன் (Oraon) மற்றும் முண்டா (Munda) பழங்குடிச் சமூகங்களின் பழமையான மதமான ஆதி-தர்மத்தில் (Ādi-dharma), பாத்ரபத (Bhādra) மாதத்தின் முழுநிலவு (ஆகஸ்ட் நடு – செப்டம்பர் நடு) அவர்களின் மூன்று முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும்.

வரும் மே 31 அன்று இரண்டாவது ஃபிளவர் மூன் வானில் தோன்றும்போது, அமெரிக்காவில் பலர் அதை நீல நிலவு என்று அழைப்பார்கள்.

அமெரிக்கர்கள் பயன்படுத்தும் நாட்காட்டி மரபில் அது சரியான பெயரே. ஆனால் இந்தியா, தென் கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் இந்த முழுநிலவுக்கு எந்தச் சிறப்புப் பெயரும் இருக்காது.

அன்றும் நிலவு தனது பாதையில் வழக்கம் போலச் செல்லும். அதற்கு வுல்ஃப் மூன் என்றும் தெரியாது, நீல நிலவு என்றும் தெரியாது, பூர்ணிமா என்றும் தெரியாது. அந்தப் பெயர்கள் எல்லாம் மனிதர்கள் வைத்தவை.

வானியல் இயக்கம் இயற்கையின் நிகழ்வு. அதற்கான பொருள் மனிதப் பண்பாட்டின் உருவாக்கம்.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு