மூன்று சிறுமிகள் வெளியிட்ட வீடியோவால் சீரடைந்த கிராமச்சாலை
மகாராஷ்டிராவை சேர்ந்த நேஹா காக்ரே, மானசி பவார் மற்றும் ஜோத்ஸ்னா முக்னே ஆகிய மாணவிகள், சாலையில் இருந்த பள்ளங்கள் குறித்த காணொளியைப் பதிவு செய்தனர். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இவர்கள் ராய்காட் மாவட்டத்தின் கர்ஜத் பகுதியில் உள்ள கண்ட்பே கிராமத்தில் ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களைப் போன்ற மாணவிகள், அருகிலுள்ள கிராமங்களில் இருந்து தினமும் சில கிலோமீட்டர் நடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.
மலையேற்றத்துக்குச் செல்வோரின் தொடக்கக் கிராமமான கொண்டிவாடேவுக்குச் செல்லும் சாலை குறித்து அவர்கள் காணொளி ஒன்றைப் பதிவு செய்தனர்.
"நாங்கள் நண்பர்கள் அனைவரும் சாலையில் நடந்து சென்றுகொண்டே புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துக்கொண்டிருந்தோம். நானும் ஜோத்ஸ்னாவும் சாலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மானசி, "நான் உங்களை வீடியோ எடுக்கிறேன்" என்று கூறி அதை எடுத்தார்." என்றார் நேஹா காக்ரே.
காணொளி வைரலானதைத் தொடர்ந்து நிர்வாகமும் இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. இந்த மாணவிகளை அவர்களின் குடும்பத்தினரும் கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.
தங்கள் கிராமத்தின் சாலைகள் மட்டுமின்றி, அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று இந்த மாணவிகள் விரும்புகின்றனர்.
இந்த வீடியோ வைரலான பிறகு, மகாராஷ்டிராவின் மற்ற கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், கிராமப்புறப் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த மூன்று மாணவிகளும் விரும்புகின்றனர்.
செய்தியாளர்: ஜான்வி மூலே
ஒளிப்பதிவு&படத்தொகுப்பு: ராகுல் ரன்சுபே
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



