தொகுதி மறுவரையறை மசோதா: ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் சோனியா, ராகுல் காந்தி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுவதற்காக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் சென்னை செல்கின்றனர் (கோப்புப் படம்)
படக்குறிப்பு, (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அரசியல் பரபரப்பு நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சமாதானப்படுத்தும் முயற்சியாகச் சென்னை வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழ்நாட்டின் நலனையும் தமிழ்மக்களின் நலனையும் முதன்மையாகக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு முடிவையும் திமுக எடுத்துள்ளதாக கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த பாதையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'பார்க்கலாம்' என்று மட்டும் கூறினார்.

ராகுல் காந்தியும் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துத் தகவல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காகத் தான் சென்னை செல்வதாக அவர் கூறியுள்ளார்.

சென்னையில் ஸ்டாலினைச் சந்தித்த பிறகு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பையில் சரத் பவாரையும் சந்திக்கவுள்ளனர்.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அறிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல், எம்.ஏ. பேபி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் இரண்டு விமானங்களில் சென்னைக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பார்கள். அதன்பிறகு சரத் பவாரைச் சந்திப்பதற்காக மும்பை செல்வார்கள்" என்று எழுதியுள்ளார்.

ராகுல் காந்தி கூறியது என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா: ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் சோனியா, ராகுல் காந்தி

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் சென்னைக்குச் சென்று மு.க. ஸ்டாலினைச் சந்திக்கவுள்ளோம். தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடமும் திமுகவிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

''மக்களவையின் இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்தியாவில் ஜனநாயகத்தை அழித்துவிடும். பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் புதிதாக வரைவதற்கு இது தடையற்ற வாய்ப்பை வழங்கும்.''

"ஸ்டாலின் எப்போதும் தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக உறுதியாக நின்று வந்துள்ளார். தேசிய நலன், தமிழ்நாட்டின் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக நாம் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்," என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு ஸ்டாலினின் பதில்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

ராகுல் காந்தியின் பதிவுக்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுக ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அங்கீகரித்ததற்காக ராகுல் காந்திக்கு மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் நலனையும் தமிழ்மக்களின் நலனையும் முதன்மையாகக் கருத்தில் கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாதையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் வரலாறு தங்களை எட்டப்பர்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு