கோவை மாநகராட்சிக்கு ரூ.2,300 கோடி இழப்பு ஏற்பட்டதா? தணிக்கை அறிக்கை கூறும் முறைகேடு குற்றச்சாட்டுகள்

கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மேற்கொண்ட சிறப்புத் தணிக்கையில், ரூ.2,300 கோடி அளவுக்கு மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை.
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மேற்கொண்ட சிறப்புத் தணிக்கையில், ரூ.2,300 கோடி அளவுக்கு மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஊடகங்களில் வெளியாகியிருப்பதுடன், நிதியிழப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மிகவும் அதிகமாக இருப்பது பேசுபொருளாகி, அலுவலக, அரசியல் வட்டாரங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதும், அதன் பின்னணியும்...

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய மாநகராட்சியாக கோவை உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 2026–2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவு அறிக்கையில் மாநகராட்சியின் வருவாய் ரூ.4,915.50 கோடியாகவும், செலவு ரூ.5,041.71 கோடியாகவும், ரூ.126.21 கோடிக்கு பற்றாக்குறையாகவும் இருக்குமென்று கணக்கிடப்பட்டிருந்தது.

முதல் முறையாக முதல்வர் கையில் நகராட்சி நிர்வாகத் துறை

தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை, முதல்வரான விஜய் தன் வசம் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு பல்வேறு மாநகராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் நிதி கையாளப்பட்டது தொடர்பாக உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை விசாரணைகளை மேற்கொள்ளத் துவங்கியது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 2021–2026 இடையிலான ஐந்து ஆண்டுகளில், நிதி கையாளப்பட்டது தொடர்பாக சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில பிரிவுகளில் மட்டும் சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதல்கட்ட அறிக்கை ஆகஸ்டில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் 2021–2026 இடையிலான ஐந்தாண்டுகளில், நிதி கையாளப்பட்டது தொடர்பாக சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, கோவை மாநகராட்சியில் 2021–2026 இடையிலான ஐந்து ஆண்டுகளில், நிதி கையாளப்பட்டது தொடர்பாக சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 419 பக்கங்கள் கொண்ட அந்த சிறப்புத் தணிக்கை அறிக்கையை, கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி. தியாகராஜன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கியுள்ளார். அதில் சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை, பராமரிப்பு பணிகள், எல்.இ.டி. விளக்கு கொள்முதல், என்.யு.எல்.எம்./ வெளிக்கொணர்வு முகமை, குறைந்த விலைப்புள்ளி கொள்முதல், பருவகாலப் பணிகள் ஆகிய 7 இனங்களில் மட்டும் 5 ஆண்டுகளில் ரூ.2,300 கோடி மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தணிக்கை அறிக்கையை தியாகராஜன், பிபிசியிடம் பகிர்ந்தார். அதில் இடம் பெற்றுள்ள தணிக்கைக் குறிப்புகளின்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பதில் நடந்த முறைகேடுகளாலும், முறையாக வசூல் பணிகள் நடக்காததாலும் சொத்து வரியில் மட்டும் ரூ.2,053 கோடி, மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை உள்ளிட்ட வணிக கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, குடியிருப்புக்கான சொத்து வரி விதிக்கப்பட்டிருப்பது, வீட்டுக் குடிநீர் இணைப்பை வணிகப் பயன்பாட்டுக்கு வழங்கியது, நிதிக் குழு பரிந்துரையை மீறி சொத்துவரியை தள்ளுபடி செய்தது, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள சொத்து வரியை வசூல் செய்யாமல் இருப்பது, மொபைல் போன் டவர்களுக்கு வரி நிர்ணயிக்காதது, காலியிட வரி வசூல் செய்யாதது என்பது போன்ற முறைகேடுகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த 2022ஆம் ஆண்டில் சொத்து வரியை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அந்த வரி உயர்வை வரி வசூலிப்புக்கான மென்பொருளில் (UTIS) பதிவேற்றி, வேறுபாட்டுத் தொகையுடன் சேர்த்து வசூலிக்காததன் காரணமாக ரூ.1,194 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. பல்வேறு பெரிய நிறுவனங்கள் வழக்கைக் காரணம் காட்டி வரி கட்டாமல் இருப்பதும் நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடக்கழிவு மேலாண்மைப் பணியை மேற்கொள்ளும் 'சதர்ன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட்' என்ற ஒப்பந்த நிறுவனத்தால் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 2 வாகன எடை மேடைகள் அமைக்க அதிக மதிப்பில் விலைப் பட்டியல் தயாரித்தது, 18% ஜிஎஸ்டி கூடுதலாக வழங்கியது, டெண்டர் விதிகளை மீறி, அந்த நிறுவனத்திற்கு காலநீட்டிப்பு வழங்கி, கூடுதலாக ரூ.55 கோடி கொடுத்தது உள்படப் பல்வேறு காரணங்களால் திடக்கழிவு மேலாண்மையில் மட்டும் ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது அறிக்கை.

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டப் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பழைய மாநகராட்சிப் பகுதிகளில் 24x7 குடிநீர் விநியோகிக்க சூயஸ் நிறுவனத்திடம் முதல் கட்டப் பணிக்கு ரூ.646 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்குப் பல்வேறு காலகட்டங்களில் வழங்கிய முன்பணத்தை வட்டியுடன் மாநகராட்சி திரும்பப் பெறாத வகையில் ரூ.47.92 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் நிறுவனம் தோண்டிய குழிகளை மாநகராட்சி நிதியில் மூடி சாலையைச் சீரமைத்ததில் ஏற்பட்ட இழப்பு ஒரு கோடியே 87 லட்ச ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர்த்து, ஒப்பந்தப் புள்ளியில் உள்ள தெருவிளக்குகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக பட்டியல் தயாரித்து இரு ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கிய வகையில் ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் தெரு விளக்கு மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யாமலே, கே.சி.பி. என்ற நிறுவனத்துக்கு ரூ.9.25 கோடி வழங்கியதில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதிருந்த துறை அமைச்சர் வேலுமணி மீது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் ரூ.100 கோடிக்கு டெண்டர் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதிலும் இந்த நிறுவனம் முறைகேடுகளில் தொடர்புடைய முக்கிய நிறுவனமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அப்போது டெண்டர் விதிகளை மீறி கே.சி.பி. நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நிறுவனத்துக்கு திமுக ஆட்சியிலும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது அறிக்கை மூலமாக வெளியில் தெரிய வந்துள்ளது.

காகிதம் மற்றும் எழுதுபொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகப் பதியப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு கம்ப்யூட்டர்கள் வாங்கியதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. "தூய்மைப் பணிக்கு ஜே.சி.பி, டிப்பர், லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ள கணக்கை ஆய்வு செய்தபோது, அந்த வாகனங்களின் பதிவு எண்கள் 'பரிவாஹன்' தளத்தில் சோதிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டிருந்த பல வாகனங்களின் பதிவு எண்கள், ஸ்கூட்டர்கள், கார்கள் மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தின் பெயரில் இயங்கும் பஸ்களின் எண்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி போலி வாகனங்களைக் கணக்குக் காட்டியதில் ரூ.1.80 கோடி இழப்பு" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பைக் கிடங்கு தீயணைப்புப் பணிக்கு உணவு, பானங்கள் வாங்கிய செலவு ரூ.27.51 லட்சம்

2024 ஆம் ஆண்டில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டபோது, டீ, காபி, ஸ்நாக்ஸ், தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வாங்கியதற்கு ரூ.27.51 லட்சம் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டபோது, தேநீர், காபி, தின்பண்டங்கள், தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வாங்கியதற்கு ரூ.27.51 லட்சம் செலவானதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும்விட, 2024 ஆம் ஆண்டில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டபோது, தேநீர், காபி, தின்பண்டங்கள், தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வாங்கியதற்கு ரூ.27.51 லட்சம் செலவானதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் ஒரேயொரு கேன்டீனில் மட்டும் ரூ.18.85 லட்ச ரூபாய்க்கு உணவு வாங்கியது உள்படப் பல்வேறு உணவகங்களிலும் வாங்கப்பட்ட பில்கள் அனைத்துமே கையால் எழுதப்பட்டுள்ளன. எதற்குமே ஜிஎஸ்டி பில் இல்லை. தீயை அணைக்கும் பணியில் எவ்வளவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர், அவர்களில் எவ்வளவு பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்பது குறித்த எந்தப் பதிவேடும் பராமரிக்கப்படவில்லை என்கிறது அறிக்கை.

மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல்வேறு செலவுக் கணக்கு தொடர்பான ஆவணங்களைத் தங்களால் கண்டறிய முடியவில்லை என்றும், ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை என்றும் உள்ளாட்சி நிதித் தணிக்கை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிதியிழப்புக்கு மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் போன்ற அதிகாரிகளே பொறுப்பு என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களிடம் இத்தொகையை வசூலிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

இவற்றில் சில ஒப்பந்தங்கள், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு, திமுக ஆட்சியிலும் தொடர்ந்துள்ளன. ஆனால் பெரும்பாலான முறைகேடுகள், திமுகவின் 5 ஆண்டுக்கால ஆட்சியில் நடந்துள்ளதாக சிறப்புத் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை காந்திபுரத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாக ஒப்பந்ததாரர் சங்கத்தினர், கோவைக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜயிடம் சமீபத்தில் புகார் அளித்திருந்தனர்.

தியாகராஜன்
படக்குறிப்பு, தியாகராஜன்

இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் நடந்த உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் சிறப்புத் தணிக்கையில் ரூ.2,300 கோடி நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள தகவல், கோவையில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது குறித்த கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன. இதில் அதிகாரிகளே அதிகமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறுகிறார், இந்தத் தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கிய தியாகராஜன்.

பிபிசியிடம் பேசிய அவர், ''அதிமுக ஆட்சியில் நடந்த டெண்டர் ஊழல், பணி நியமன முறைகேடு தொடர்பான ஆதாரங்களை திமுக தலைவர் ஸ்டாலினிடம் நாங்கள் நேரடியாகக் கொடுத்தோம். அதை வைத்து பரப்புரை செய்த ஸ்டாலின், 'ஊழல் செய்தவர்களை எல்லாம் சும்மா விடமாட்டோம்' என்றார். ஆனால் ஆட்சி மாறிய பிறகு, வழக்கு மட்டும் பதியப்பட்டது. வேலுமணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக திமுக ஆட்சியில் ஊழலும் முறைகேடும் இரட்டிப்பானது'' என்றார்.

''இந்த முறைகேடுகள் தொடர்வதற்கு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே இது தொடர்கிறது. முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பெயரளவிலான இழப்பீட்டை அவர்களிடம் இருந்து வசூலித்துவிட்டு, அவர்களை ஓய்வு பெற அனுமதித்து விடுவதால் அடுத்தடுத்து அதிகாரிகள் துணிச்சலாக இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இரு திராவிட ஆட்சிகளிலும் இதுதான் நடந்தது'' என்றார் தியாகராஜன்.

ஆனால் தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு, சிறப்புத் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதால்தான் இந்த முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் தியாகராஜன் தெரிவித்தார். ஏழு பிரிவுகளில் மட்டும் நடந்த தணிக்கையிலேயே ரூ.2,300 கோடி இழப்பு என்று கணக்கிடப்பட்டுள்ளதால், பொறியியல் பிரிவு, கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளில் தணிக்கை நடந்தால் இந்த மதிப்பு மேலும் எகிறும் என்கிறார் அவர்.

''ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, திமுக ஆட்சிக்கு முன்பு, இடையிலிருந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், மாநகராட்சி மன்றமே இல்லாத காலத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்தன. அதுபற்றி திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இதில் திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் பெரும் பலன் பெற்றனர். மீண்டும் திமுக அல்லது அதிமுக ஆட்சி வந்திருந்தால் இந்த முறைகேடு இப்போதும் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. அதனால் தமிழக அரசு சிறப்புக்குழு அமைத்து, இந்த அதிகாரிகளிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கையை எடுத்து பணி நீக்கமும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் தியாகராஜன்.

தற்போது முதல்வரிடமே இந்தத் துறை இருப்பதால் இப்போதாவது இத்தகைய முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தும் தியாகராஜன், நிதியிழப்பு முறைகேடு பற்றித் தெரிந்தவுடன் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், முறைகேட்டில் தொடர்புடைய ஒப்பந்த நிறுவனங்களை ப்ளாக் லிஸ்ட் செய்ய வேண்டுமென்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் வழக்கு தாக்கல் செய்த பிறகே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் கே.எஸ். கந்தசாமி, கே. விஜயகார்த்திகேயன் ஆகியோர் மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நவம்பர் 12 அன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, கடந்த திமுக ஆட்சியில் இதையும்விட ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை, தணிக்கை அறிக்கை வெளிப்படுத்துகிறது. அதனால் அவர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு விசாரணை நடத்தி, தொடர்புடைய ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்'' என்றார் தியாகராஜன்.

அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யப்படுமா?

கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுகவைச் சேர்ந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி. கணபதி ராஜ்குமார்.
படக்குறிப்பு, கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுகவை சேர்ந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி. கணபதி ராஜ்குமார்.

இந்தச் சிறப்புத் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில், திமுக ஆட்சியில் பொறுப்பில் இருந்த அமைச்சர், மாநகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரின் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ''நிதியிழப்பைப் பொருத்தவரை, அதில் முறைகேடு, ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தால் அரசே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளிக்கலாம். ஆனால் பெரும்பாலும் நிதியிழப்புகளை ஊழலாக அரசு கருதுவதில்லை. இப்போது பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் கருதி புகார் கொடுத்திருப்பது போல் அரசே புகார் அளிப்பது அவசியம். அப்போதுதான் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யும்'' என்றார்.

''ஆனால் இந்த விஷயத்தில் அப்படி புகார் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. ரூ.2300 கோடிக்கு நிதி இழப்பு என்பது, பெரிய தொகையாகத் தெரிகிறது. அதில் ஊழலின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதை அறிவதற்கு, சிறப்புத் தணிக்கை அறிக்கையை முழுமையாகப் படிக்க வேண்டும். படித்தால் மட்டுமே அதில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு, பின்பு புகார் அளிக்க முடியும்'' என்றார்.

பொருள் வாங்காமலும், வேலையே செய்யாமலும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு தலா ரூ.10 கோடி வழங்கப்பட்டிருப்பதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பற்றியே தனது கவனத்துக்கு வந்ததாகக் கூறிய ஜெயராம் வெங்கடேசன், மற்ற விஷயங்களையும் முழுமையாகப் படித்த பின்பே, ஊழல் புகாருக்கான முகாந்திரம் இருக்கிறதா என்பதை அறிய முடியுமென்றும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை ஒப்பந்ததாரர்கள் மறுப்பதுடன், தணிக்கை அறிக்கையில் டெண்டர் விதிமுறைகளே தெரியாமல் நிதி முறைகேடு என்று சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் உதயகுமார் இதற்கு விளக்கமளிக்க மறுத்துவிட்டார். தெரு விளக்கு மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யாமலே கே.சி.பி நிறுவனத்துக்கு ரூ.9.25 கோடி வழங்கி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை அதன் நிர்வாகி மறுத்தார்.

பிபிசியிடம் பேசிய கே.சி.பி. நிறுவன நிர்வாகி சந்திரபிரகாஷ், ''எல்இடி விளக்குகளை மாநகராட்சி விலைக்கு வாங்கவில்லை. இது பிஓடி (Build–Operate–Transfer) முறை போன்றது. ஒப்பந்த நிறுவனம் சி.எல்.எஃப்-க்கு பதிலாக எல்இடி விளக்கைப் பொருத்தும். அதற்கு முதலில் 25% தொகை விடுவிக்கப்படும். எல்இடி விளக்கை ஒப்பந்த நிறுவனம் 10 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். இந்த விளக்குகளால் மாநகராட்சிக்கு மின் கட்டணம் சேமிக்கப்படும். அதனால் அடுத்தடுத்து 25 சதவிகிதத் தொகை 3 கட்டங்களாக விடுவிக்கப்படும். பத்தாண்டுக்கு பின்பு அந்த விளக்குகள் மாநகராட்சி வசம் முழுமையாக ஒப்படைக்கப்படும். இப்படி டெண்டர் விதிமுறையே தெரியாமல் எம்.புக்கை வைத்து பொருள் வாங்காமல் பணம் கொடுத்ததாகக் கூறுவதே தவறானது'' என்றார்.

பிபிசியிடம் பேசிய அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ''அதிமுக ஆட்சிக்கு சற்றும் சளைக்காத வகையில்தான், திமுக ஆட்சியிலும் உள்ளாட்சி அமைப்புகளில் ஊழலும், முறைகேடும் நடந்தது என்பது உண்மைதான். அதிலும் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளைக் காப்பாற்றுவதில் திமுக அரசு தீவிரமாக இருந்ததையும் மறுக்க முடியாது'' என்றார்.

419 பக்கங்கள் கொண்ட அந்த சிறப்புத் தணிக்கை அறிக்கையை, கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி. தியாகராஜன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கியுள்ளார்.
படக்குறிப்பு, 419 பக்கங்கள் கொண்ட அந்த சிறப்புத் தணிக்கை அறிக்கையை, கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி. தியாகராஜன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கியுள்ளார்.

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அளித்துள்ள சிறப்புத் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்படுமா என்று கேட்பதற்காக, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாகங்களின் ஆணையர் மதுசூதன் ரெட்டி, கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது, யாரிடம் இருந்தும் பதில் பெற முடியவில்லை.

திமுக ஆட்சியில் இந்த முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் நிலையில், அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அமைச்சராக இருந்த கே.என். நேருவை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரிடமும் பதில் பெற முடியவில்லை.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுகவை சேர்ந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி. கணபதி ராஜ்குமார், ''உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் மேலோட்டமாக ஒரு முறைகேட்டைச் சுட்டிக்காட்ட மாட்டார்கள். அதில் தவறு நடந்திருப்பதற்கு முகாந்திரம் இருக்கும். ஆனால் இந்தத் தணிக்கை அறிக்கையைப் பார்க்கும்போது, முழுக்க முழுக்க தவறு செய்திருப்பது அதிகாரிகள் என்று அப்பட்டமாகத் தெரிகிறது'' என்றார்.

மேலும், ''அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்து கோவை மாநகராட்சியில் சில ஒப்பந்த நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. அவற்றுக்கும், வேறு சில ஒப்பந்த நிறுவனங்களுக்கும் இந்த முறைகேடுகள், நிதி இழப்புகளில் அதிக தொடர்பு இருப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் தவறு செய்த அதிகாரிகளைத் தண்டிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மிக முக்கியமாக சில ஒப்பந்த நிறுவனங்களை ப்ளாக் லிஸ்ட்டில் சேர்த்து மாநகராட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு