டாக்ஸிக் விமர்சனம்: மற்றொரு 'கேஜிஎஃப்' வெற்றியை கொடுத்தாரா யாஷ்?

பட மூலாதாரம், kvn.productions/insta
- எழுதியவர், ஜி.ஆர். மகரிஷி
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'டாக்ஸிக்' படத்தின் மூலம் யஷ் மீண்டும் கதாநாயகனாக திரையில் தோன்றியுள்ளார்.
யாஷுடன் கியாரா அத்வானி மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக்' படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா?
ராயா (யாஷ்), கங்கா (நயன்தாரா) இருவரும் உடன்பிறப்புகள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் வளர்கின்றனர். 1947-ஆம் ஆண்டில், போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் ராயா ஒரு மாஃபியா டானாக மாறுகிறார்.
சர்க்கஸில் பணியாற்றும் நாடியாவை (கியாரா) ராயா சந்திக்கிறார். அவர் மற்றொரு டானின் மகள். இதை விரும்பாத அந்த டான் ராயா மற்றும் நாடியாவை பிரிக்க முயற்சிக்கிறார்.
இந்தச் சூழலில் கங்காவுக்கு என்ன நடந்தது? அதன்பிறகு நாடியாவின் மகன் ராயாவின் வாழ்க்கைக்குள் எப்படி வந்தான்? இதுதான் மீதமுள்ள கதை.

பட மூலாதாரம், kvn.productions/insta
பிரமாண்டமான தயாரிப்புத் தரத்திலும், அதிகமான ஆக்ஷன் காட்சிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ள 'டாக்ஸிக்' படத்தில் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று இல்லை. அது தான் கதையும் திரைக்கதையும்.
அங்குதான் உணர்வுகள் இல்லாமல் போய்விட்டன. ஒரு கட்டத்தில், யார் யாரை கொல்கிறார்கள் என்பதே புரியவில்லை.
முதல் ஒரு மணி நேரம் முழுவதும் யாஷின் ஸ்டைலான நடிப்பும், அவரது கதாபாத்திரத்துக்கான பில்டப்புமே நிறைந்திருக்கிறது.
கியாரா அத்வானி தன்னைத்தானே வெடிக்கச் செய்யும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. இது பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
அதன்பிறகு பல்வேறு காட்சிகள் வருகின்றன. வசனங்களைவிட துப்பாக்கிச் சத்தங்களே அதிகமாகக் கேட்கின்றன.
நயன்தாரா போன்ற சிறந்த நடிகை இருந்தபோதிலும், அவரது கதாபாத்திரத்துக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லை. நல்ல உணர்வுப்பூர்வமான காட்சிகள் இல்லை. அவரும் துப்பாக்கியையோ சிகரெட்டையையோ பிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.
மற்றொரு குறை என்னவென்றால், யாரும் வில்லனாகத் தெரியாததால், உண்மையான ஹீரோ யாரை எதிர்த்து போராடுகிறார் என்பதே அவருக்குத் தெரியவில்லை. பல்வேறு ஆயுதங்களுடன் சிலர் வருகிறார்கள்.
ஹீரோ அவர்களை தொடர்ந்து சுட்டு, துண்டு துண்டாக வெட்டுகிறார். போலி துப்பாக்கிகளுக்கும் சிவப்பு நிற பெயிண்ட்டுக்கும் (ரத்தம்) செலவிடப்பட்ட பட்ஜெட் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்கும் என்று சொன்னால், அது மிகையாகாது.
படத்தின் மூலக்கதையில் உணர்வுகளுக்கு இடம் இருந்தபோதிலும், இயக்குநர் அந்தப் பாதையைத் தேர்வு செய்யவில்லை. யாஷின் ஸ்டைலான பில்டப்பை மட்டுமே நம்பியிருக்கிறார்.
ஆதரவின்றி வளர்ந்த சகோதரி மீதான உணர்வுகளை காற்றில் விட்ட இயக்குநர், இரண்டாம் பாதியில் தந்தை - மகன் இடையேயான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.
அதற்குள் காலம் கடந்துவிட்டது. இரண்டு மணி நேரம் மெதுவாக நகரும் கதையைப் பொறுத்துக்கொண்ட பார்வையாளர்கள் அதற்குள் சோர்வடைந்துவிடுகின்றனர்.
மேலும், படத்தில் பதினெட்டு வயது மேற்பட்டோருக்கான பல காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சில இடங்களில் வரும் வசனங்களும் செயற்கையாக இருக்கின்றன.

பட மூலாதாரம், geetu_mohandas
கேஜிஎஃப் படத்தில் வன்முறை அதிகமாக இருந்தபோதிலும், திரைக்கதையின் வேகம் அதில் இருந்த அடிப்படை உணர்வை பாதிக்காமல் வைத்திருந்தது.
அப்படியான அனுபவத்தை எதிர்பார்த்தவர்களுக்கு 'டாக்ஸிக்' பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
3 மணி நேரம் 15 நிமிடங்கள் கொண்ட படத்தின் நீளம் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது.
பல இடங்களில் யாஷின் நடிப்பு நன்றாக இருப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில்.
நயன்தாரா, கியாரா மற்றும் ருக்மிணி ஆகியோர் இடம்பெறும் காட்சிகளில் திரை இருப்பும் சிறப்பாக உள்ளது. கேமரா மற்றும் பின்னணி இசை ஓரளவுக்கு நன்றாக உள்ளன. ஆனால், எடிட்டர் பார்வையாளர்களை ஏமாற்றிவிட்டார் .
இது ஒரு கற்பனைக் கதை என்பது உண்மைதான். இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் எங்கும் காண முடியாதவர்கள். அனைவரும் வேற்றுக்கிரகவாசிகளைப் போல இருக்கிறார்கள்.
"என்ன நடக்கிறது என்று யாருக்காவது புரிகிறதா?" என இப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. பல காட்சிகளில் பார்வையாளர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது.
சிறப்பு அம்சங்கள்:
1. யாஷின் நடிப்பு
2. சண்டைக் காட்சி
எதிர்மறை அம்சங்கள்:
1. படத்தின் நீளம்
2. உணர்வுகள் இல்லாதது
3. அர்த்தமில்லாத கதைகளும், சம்பவங்களும்
4. அதீத வன்முறை
(இக்கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


























