காணொளி: யார் இந்த சோனம் வாங்சுக்? அவரது பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, யார் இந்த சோனம் வாங்சுக்?
காணொளி: யார் இந்த சோனம் வாங்சுக்? அவரது பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 21வது நாளில் காவல்துறையால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது எடை சுமார் 8.5 கிலோ குறைந்துவிட்டதாக காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

யார் இந்த சோனம் வாங்சுக்?

1966ஆம் ஆண்டு லடாக்கின் உலேடோக்போ கிராமத்தில் பிறந்த வாங்சுக், 9 வயது வரை பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே தனது தாயாரிடம் கல்வி கற்றார். பிறகு ஸ்ரீநகர் பள்ளியில் ஆங்கிலம் புரியாமல் சிரமப்பட்ட அவர், 12 வயதில் யார் துணையுமின்றி தனியாக டெல்லி சென்று கேந்திரிய வித்யாலயாவில் சேர்ந்தார்.

பொறியியல் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், சிவில் இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்ற தந்தையின் விருப்பத்திற்கு மாறாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை தேர்வு செய்தார். இதனால் அவரது தந்தை கல்விச் செலவை ஏற்க மறுக்கவே, 19 வயதில் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து, 2 மாதங்களிலேயே தனது 3 ஆண்டு கல்விக்கான கட்டணத்தைச் சம்பாதித்தார்.

1988இல் செக்மால் என்ற இயக்கத்தை நிறுவி, லடாக்கின் பள்ளிக் கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். 10ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதத்தை 5 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயர்த்தினார். பின்னர் Himalayan Institute of Alternatives, Ladakh என்ற மாற்று வழிக் கல்வி நிறுவனத்தையும் தொடங்கினார்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள, "பனி ஸ்தூபி" எனும் புதுமையான தொழில்நுட்பத்தை வாங்சுக் உருவாக்கினார். இது 30 மில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும் திறன் கொண்டது. இந்த சேவைகளுக்காக 2018இல் ராமன் மகசேசே விருது பெற்றார்.

2025 அக்டோபரில் லடாக்கில் அமைதியின்மையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு 170 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். லடாக்கிற்கு முழு மாநில அந்தஸ்து கோரி இதற்கு முன்பும் இவர் பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.

'3 இடியட்ஸ்' படத்தில் ஆமிர் கான் நடித்த 'புன்சுக் வாங்சுக்' கதாபாத்திரம் தன்னால் ஈர்க்கப்பட்டது என்ற பேச்சை வாங்சுக் மறுக்கிறார். "நான் புன்சுக் வாங்சுக் அல்ல, நான் சோனம் வாங்சுக். நான் நிஜ வாழ்வில் பணியாற்றுகிறேன்" என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆமிர் கானும், படம் எடுக்கும்போது சோனம் பற்றி தனக்குத் தெரியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு