டிரம்பை விஞ்சி உலகிலேயே அதிக ஊதியம் பெறும் தலைவருக்கு 60% ஊதிய உயர்வு - சிங்கப்பூர் அரசு கூறுவது என்ன?

    • எழுதியவர், டெஸ்ஸா வோங்
    • பதவி, பிபிசி நியூஸ், ஆசிய டிஜிட்டல் செய்தியாளர், சிங்கப்பூர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகின் அதிக ஊதியம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம் உட்பட, அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பிற உயர் பதவியில் உள்ளவர்களின் ஆண்டு ஊதியத்தை உயர்த்தப் போவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

இதனால், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியத்தில் 1.4 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் (சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) உயர்வு ஏற்படவுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் கிடைக்கும் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

சிறந்த திறமையாளர்களை ஈர்க்க அமைச்சர்களின் ஊதியத்தை உயர்த்துவது அவசியம் என்று வோங் கூறினார். அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவது ஊழலைத் தடுக்கும் என்று அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

ஆனால், வேலைப் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்துக் கவலை நிலவும் சிங்கப்பூரில், அரசின் இந்த நடவடிக்கை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, உலகின் மிக அதிக ஊதியம் பெறும் தலைவராக வோங் திகழ்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஊதியம் எவ்வளவு?

தற்போது 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் ஆண்டு ஊதியம் பெறும் அவர், இனி 60 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வுடன் 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலர் (2.8 மில்லியன் அமெரிக்க டாலர்) ஊதியத்தைப் பெறவுள்ளார்.

அடுத்தபடியாக ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ சுமார் 7,19,000 அமெரிக்க டாலரும், சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் 606,000 டாலரும் ஊதியமாகப் பெறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆண்டுக்கு 4,00,000 அமெரிக்க டாலரும், பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் 2,30,000 டாலரும் ஊதியமாகப் பெறுகின்றனர்.

ஊதிய உயர்வுக்கு சிங்கப்பூர் பிரதமர் கூறும் காரணம் என்ன?

சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம் பெரும்பாலான குடிமக்களின் வருமானத்தை விட மிக அதிகமாக இருப்பதால், அது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை செவ்வாய்க்கிழமை வோங் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், வணிகத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை அரசியல் பதவிக்கு போட்டியிடச் சம்மதிக்க வைப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் வாதிட்டார்.

இவர்கள் பெறும் வருமானத்திற்கு இணையான ஊதியத்தை அரசால் வழங்க முடியாவிட்டாலும், தங்கள் தொழில் வாழ்க்கையைக் கைவிட்டு அரசியலில் இணைவதற்குத் தேவையான நிதி சார்ந்த தடைகளைத் தேவையற்ற வகையில் அதிகமாக வைத்திருக்கவில்லை என்று அவர் கூறினார்.

"மொத்தத்தில், திறமையான சிங்கப்பூர் குடிமக்களை முன்வரச் செய்யவும், சிங்கப்பூருக்காக மிகச் சிறந்த அணியை உருவாக்கவும் இது எனக்கும் எதிர்காலப் பிரதமர்களுக்கும் சிறந்த வாய்ப்பை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

அமைச்சர்களுக்கு ஊதிய உயர்வு

தற்போது, ​​அமைச்சர்களின் அடிப்படை ஊதியத் தொகுப்பு சுமார் 1.1 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உள்ளது. புதிய ஊதியத் திட்டத்தின் மூலம், அது சுமார் 1.2 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயரும். ஆனால், செயல்திறன் அடிப்படையில் ஊதியம் அதிகரிக்கப்படுவதால், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் இந்த அமைச்சர்களில் பெரும்பாலோர் அதைவிட அதிகமான தொகையை அதாவது சுமார் 1.35 மில்லியன் சிங்கப்பூர் டாலர் பெறுவார்கள் என்று வோங் கூறினார்.

வேலையின்மை விகிதம், வருமான வளர்ச்சி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி ஆகியவற்றில் நாடு குறிப்பிட்ட இலக்குகளை அடைகிறதா என்பதைப் பொறுத்தே அவர்களின் ஊதியத் தொகுப்பின் ஒரு பகுதி தீர்மானிக்கப்படுகிறது.

ஊதிய உயர்வுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

சிங்கப்பூர் அமைச்சர்களின் அதிக ஊதியம் குறித்த விவகாரம், சுதந்திரம் பெற்றது முதல் நாட்டை வழிநடத்தி வரும் ஆளும் 'பீப்பிள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி' (PAP) மீதான விமர்சனங்களுக்கு நீண்டகாலமாக ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

2011-ல் நடைபெற்ற முக்கியமான பொதுத் தேர்தலில், பல தசாப்தங்களிலேயே மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தை அக்கட்சி பெற்றது. அமைச்சர்களின் ஊதியம் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் மீதான வாக்காளர்களின் அதிருப்தி இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில், அரசாங்கம் அமைச்சர்களின் ஊதியத்தைக் குறைத்தது.

வோங்கிற்கு முந்தைய பிரதமரான லீ சியன் லூங், 2007-ஆம் ஆண்டில் தனது ஊதிய உயர்வுத் தொகையைச் சில ஆண்டுகளுக்குத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அமைச்சர்களுக்கான ஊதிய முறை சிறப்பாகச் செயல்படுவதற்கும், அது லஞ்சம் வாங்கும் எண்ணத்தைக் குறைப்பதற்கும் சான்றாக, ஊழலற்ற நிர்வாகத்தை அரசாங்கம் பல ஆண்டுகளாகச் சுட்டிக்காட்டி வருகிறது (உண்மையில், 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பின் வருடாந்திர ஊழல் தொடர்பானகுறியீட்டில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது).

ஆனால், சராசரி வருமானம் இத்தகைய தொகைகளை விட மிகக் குறைவாக உள்ள ஒரு நாட்டில், இந்த விவகாரம் தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது; சமீபத்திய அறிவிப்பும் இதற்கு விதிவிலக்கல்ல.

வேலை இழப்புகள், புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் குறித்த கவலைகள் நிலவும் சூழலில், இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு மக்களின் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொள்ளாத செயல் என்று கூறி, செவ்வாய்க்கிழமை இணையத்தில் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த காலாண்டில் சிங்கப்பூரில் வேலை இழப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளன.

இருப்பினும், நாட்டை வழிநடத்த "மிகச்சிறந்த திறமையாளர்கள்" தேவை என்பதால் இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறி, இதை ஆதரித்தவர்களும் இருந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு